Sunday 28 August 2022

அளம் - புத்தக மதிப்புரை


கணவன் மனைவி இருவரில் பொருளீட்டும்பொருட்டு மனைவி பிரிந்து சென்றாலோ, குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காத பொறுப்பற்ற ஊதாரியாய் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, கணவன் மீதி வாழ்க்கையைத் தொடர, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிக் கரையேற்ற மிகவும் சிரமப்படுவான். அதுவே கணவனின் துணையும் ஆதரவும் இல்லாத சூழலில் வாழ நேர்ந்தால், மனைவியானவள் குடும்பத்துக்கே அச்சாணியாய் இருந்து எப்பாடு பட்டாவது குழந்தைகளை வளர்த்துக் கரை சேர்த்து விடுவாள். அப்படி கரை சேர்க்குமுன் அவள் படும் பாடுகளும் நடத்தும் போராட்டங்களும்தான் எத்தனையெத்தனை!!!! 

சின்னச்சின்ன கவலைகள் வந்தாலும் உடைந்து போவார்கள், தானும் பயந்து துவண்டு பிறரையும் பயத்துக்கு உள்ளாக்குவார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். ‘பொசுக் பொசுக்கென’ அழுது தீர்ப்ப்பார்கள். ஆகவே, மலரினும் மெல்லியர் பெண்கள் எனக்கூறப்படுவதுண்டு. அப்படி மென்மையான பெண்கள்தான், வாழ்வில் விழும் அடிகளால் கெட்டிப்பட்டு, வலிமையானவளாகவும் பொறுப்பானவளாகவும் மாறுகிறாள். அதுவும், அசாதாரணமான சூழ்நிலைகளில் “அடுத்து என்ன செய்ய?” என கணவன் கலங்கி நிற்கும் சமயங்களில், “பாத்துக்கலாங்க.. சமாளிப்போம்” என அவள் கூறும் வார்த்தைகளில் கணவனுக்கு புதுத்தெம்பே அல்லவா வந்து விடுகிறது!.

ஆண் இல்லாவிட்டாலும் பெண் ஓய்ந்து உட்கார்ந்து விடுவதில்லை. குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கப்போராடுகிறாள், ‘பொம்பள வளத்த புள்ளதானே?’ என்றொரு சொல் தன் பிள்ளைகளின் மேல் விழுந்து விடக்கூடாதென பிள்ளைகளை, முக்கியமாகப் பெண்பிள்ளைகளை அடைகாத்து வளர்க்கிறாள். அவளில்லாவிட்டால் குடும்பம் நிச்சயமாக இருண்டுதான் போய்விடுகிறது. நாளொரு பாடு, பொழுதொரு போராட்டமென தினந்தினம் செத்துப்பிழைக்கும் அப்பெண்களின் பிரதிநிதியான சுந்தராம்பாள் மற்றும் அவளது மூன்று மகள்களின் கண்ணீர்க்கதையை “அளம்” நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி.

கப்பலில் வேலை செய்து சம்பாதித்து வருவதாகச்சொன்ன பொன்னையன் நாவலின் இறுதி வரி வரை திரும்பி வரவேயில்லை. வேலைக்குச் சேர்த்து விட்ட இடத்திலிருந்து காணாமல் போய் விடுகிறான். கோயில்தாழ்வு ஊரிலிருக்கும்போதும் குடும்பத்துக்காகச் சம்பாதிக்காமல் வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் ஆகவே அவன் இருந்தாலும் இல்லாமற்போனாலும் உழைத்தாக வேண்டிய பொறுப்பு சுந்தராம்பாளுக்குத்தான். கஷ்டத்தையும் கண்ணீரையுமே சொத்தாகக் கொண்டிருக்கும் அவர்களை இயற்கைச்சீற்றமும் தன் பங்குக்குச் சோதிக்கிறது. எழ நினைக்கும்போதெல்லாம் அடித்து உட்கார வைக்கிறது. வீடு, ஆடு மாடுகள்,  விளைந்து நிற்கும் பயிர் என எல்லாவற்றையும் நந்தன, மன்மத வருடங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தில் பறிகொடுத்து நிற்கிறார்கள். புயல் வீசும் அத்தியாயத்தை வாசிக்கும்போது, “கஜா” புயல் நினைவுக்கு வந்தது.

இரண்டு முறை திருமணம் செய்து கொடுத்தும் விதவையாய்த் தாய்வீட்டுக்கே மறுபடி மறுபடி வந்து சேரும் வடிவாம்பாள், மகிழ்வாய் ஆரம்பித்த மணவாழ்வு கணவன் வேறு திருமணம் செய்து கொண்டதால் கருகி விட, மூன்று குழந்தைகளுடன் தாய்வீட்டுக்குத் திரும்பும் இரண்டாவது மகளான ராசாம்பாள், கல்யாணமாகாத கடைசிப்பெண் அஞ்சம்மாள் என அவர்களது குடும்பமே நிலைகுலைந்து போகிறது. அவர்களது அயராத உழைப்பை மட்டுந்தான் விதியால் பறிக்கவியலவில்லை. சுப்பையன் சிங்கப்பூரில் எங்கோ இருக்கிறான் என்ற நம்பிக்கையிலேயே நாட்களை ஓட்டுகிறார்கள். என்றாவது ஒரு நாள் அவன் திரும்பி வரக்கூடும், தங்களைத் தேடுவான் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதால் கோயில்தாழ்வை விட்டு வெளியூருக்குப் பிழைக்கப்போகாமல் எல்லாச் சோதனைகளையும் தாங்கிக்கொண்டு அங்கேயே இருப்பது நெகிழ வைக்கிறது என்றாலும், குடும்பத்தின் மேல் அக்கறை கொள்ளாத ஒருத்தனுக்காக இவ்வளவு சிரமங்களைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 

வாட்டும் வறுமையில் வயிற்றுப்பாட்டைக்கழிக்க அன்றாடங்காய்ச்சியான அவர்கள் படும் பாடுகள் அநேகம். இயற்கையும் அவர்கள் மேல் கருணை கொண்டு, மின்னிக்கிழங்கு, கொட்டிக்கிழங்கு, கார கொட்டிக்கிழங்கு, அதலை விதைகள், தொம்மட்டிக்காய்களும் பழங்களும் என அள்ளி வழங்கி அரைவயிற்றுக்காவது பசியைத்தீர்க்கிறது. உப்பளத்தில் வேலைக்குச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு உப்பளத்தை வாங்குகிறார்கள். ஆண் துணையற்ற அக்குடும்பத்துக்கு அந்த உப்பளம்தான் இறுதியில் துணையாகிறது. அதில் விளையும் உப்பில் அவர்களது கண்ணீர் கலந்து இன்னும் கரிக்கலாம், யார் கண்டது?

நாவலில் நெடுக வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளின் வட்டார வழக்கு இடையோடுகிறது. அத்துடன், நெய்தல் நிலமான அப்பகுதிகள் மற்றும் உப்பளங்களின் நிலவியல் அமைப்பை மிகவும் அழகாகவும், அந்த எளிய பெண்களின் போராட்டத்தை யதார்த்தமான தனது எழுத்தால் அழுத்தமாகவும் இந்த வாழ்வியல் நூலில் பதிவு செய்துள்ளார் தமிழ்ச்செல்வி..

நூல்: அளம்
ஆசிரியர்: சு. தமிழ்ச்செல்வி
வெளியீடு: ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

1 comment:

கோமதி அரசு said...

கதை விமர்சனம் அருமை.

//ஆண் துணையற்ற அக்குடும்பத்துக்கு அந்த உப்பளம்தான் இறுதியில் துணையாகிறது. அதில் விளையும் உப்பில் அவர்களது கண்ணீர் கலந்து இன்னும் கரிக்கலாம், யார் கண்டது?//

இந்த வரியை படிக்கும் போது மனம் கனத்து போகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails