Thursday 4 August 2022

“வேணுவன மனிதர்கள்” - புத்தக மதிப்புரை


பிஞ்சுப்பிராயத்திலிருந்து பழுத்து உதிரும் காலம் வரை வாழ்வில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம், எத்தனையோ பேர் நம்மைச் சந்திக்கிறார்கள், சிறு பொழுதே சந்தித்துப்பிரிபவர்கள் முதல் அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்க நேர்பவர்கள் முதல் எத்தனையோ பேருடன் பழகினாலும் ஒரு சில மனிதர்கள் தம் தடத்தை லேசாகவோ அழுத்தமாகவோ நம் நினைவுகளில் பதிய வைத்து விடுகிறார்கள். அப்படி தன் நினைவில் பதிந்தவர்களை திரு. நாறும்பூ நாதன் அண்ணாச்சி இந்த வேணுவன மனிதர்களில் ரத்தமும் சதையுமாக உலவ விட்டிருக்கிறார்.

கிணற்றில் விழுந்த பொருட்களைத் துழாவி எடுக்கும் பாதாளக்கரண்டி அதற்கு முன் எப்போதோ விழுந்த பொருட்களையும் சேர்த்து தேடியெடுத்துத்தரும். அதைப்போல், இந்த மனிதர்களைப்பற்றி வாசிக்கையில் நாம் எப்போதோ சந்தித்த மனிதர்களிடம் போய் நிற்கிறது நமது நினைவுத்தடம். அவ்வகையில் இந்நூலும் ஒரு பாதாளக்கரண்டியே. காது கேட்காத, வாய் பேச இயலாத குருவம்மா அப்படித்தான் எங்கள் அம்மை வீட்டில் ஒத்தாசைக்கு வந்து போய்க்கொண்டிருந்த கிட்னம்மாவை ஞாபகப்படுத்தினார். காது கேட்காதே தவிர திக்கித்திக்கி ஓரளவு பேசுவார், எதிராளியின் உதடு அசைவுகளைக் கூர்ந்து கவனித்து ஓரளவு புரிந்து கொள்வார். எம்.ஜி.ஆர் படங்களென்றால் உயிர், பார்த்து விட்டு வந்து மறுநாள் வீட்டுக்காரியங்கள் பார்த்துக்கொண்டே அம்மைக்கும் எங்களுக்கும் கதை சொல்வார்.

பிரியமாய்ப் பழகி பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல் மனதில் ஒட்டிக்கொண்ட இன்னொருவர் “பாஞ்சாலி ஆச்சி’. தினமும் வீட்டுக்கு வருவார், ஆர்ப்பாட்டமாய் நுழைந்து உற்சாகமாய்ப்பேசி கலகலக்க வைத்து விட்டுச் செல்வார். வீட்டில் காய்த்த கொய்யாக்காய்கள், பழங்களை மடி நிறையக் கட்டிக்கொண்டு வருவார். சிறுபிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அவற்றைக் கொடுத்து ரசிப்பார். சில சமயம், வாசலில் வரும்போதே, அம்மையைப்பார்த்து “ஏ பிள்ள… சரஸோதில(சரஸ்வதி) புதுப்படம் போட்ருக்கான், வா, ரெண்டாம்ப்ளே போலாம்” எனக்கேட்டபடி ஆர்ப்பாட்டமாய் நுழைவார். வருகிறாயா? என்றெல்லாம் கேட்பது அவரது அகராதியிலேயே கிடையாது, கைப்பிடியாக இழுத்துக்கொண்டு போய் விடுவார். எல்லோரையும் குசலம் விசாரித்தபடி எல்லோருடனும் இணக்கமாக இருக்க எண்ணிய அவரை சேது ஆச்சி என்றும் சொல்லலாம்.

ஒரு காலத்தில் போட்டோ கிராபர்களுக்கு விசேஷ வீடுகளில் இருந்த வரவேற்பையும், அந்தக்கால ஃபிலிம் காமிராக்களையும், பற்றி திருச்சிற்றம்பலம் அண்ணாச்சியைப் பற்றிய கட்டுரையில் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர். இப்போதெல்லாம் “கேண்டிட் போட்டோகிராஃபி” மிகவும் பிரபலமான ஒன்று. அந்தக்காலத்திலேயே கலைநயத்துடன் எடுக்கப்பட்ட அவ்வகைப் போட்டோக்களின் மூலம் மட்டுமல்ல, வேணுவன மனிதர்களில் இடம் பெற்றதன் மூலமாகவும் காலத்துக்கும் நின்று பேசப்படுவார்.

புனைவுகளில் வேறு பெயர்களில் நிழலாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் பலரை அவர்களின் நிஜத்தோடு நம்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். அவர்களில், நம் அடுத்த வீடுகளில் தினசரி பார்க்க வாய்க்கக்கூடிய எம்.ஜி.ஆர். சங்கரன், கல்யாணி அக்கா, பொன்னையா வாத்தியார், முத்தம்மாள், சிவஞான மாமா, சிகைக்கலைஞர் மகேந்திரன், சூரியன் முதல், கான்சர் வந்து படாதபாடு படும் ஆம்ஸ், தன் நகையேயானாலும் ஏலத்துக்கு வந்தபின் தனக்குச் சொந்தமில்லாத நகையைக் கையில் போடுவதும் தப்பு என்றெண்ணும் அறவுணர்வு கொண்ட அங்கயற்கண்ணி, சிறைப்பட்டிருக்கும் தோழர்களின் குடும்பங்கள் பசியில் வாடாவண்ணம் ஆதரித்த சங்கரப்ப நைனா, சலவைத்தாளை சரட்சரட்டென எண்ணி செலவு செய்ய புது ரூபாய்க்கட்டுகளையே கேட்டு வாங்கும், “சீதேவிய காலடிப்பக்கம் போட்டிருக்கீகளே” என அங்கலாய்க்கும் முத்துக்காளை, பால்யத்தைக் கிராமங்களில் கழிக்க நேர்ந்த ஒவ்வொருவரும் தனது விளையாட்டுத் தோழமையாகக் கண்டிருக்கக்கூடிய சாக்கடை முருகனாக இருந்து தற்போது சாத்தூர் முருகராக இருப்பவர், சவத்து மூதி போன்ற வசவுகளையே கை அசைவுகளில் விளக்கி விடும் பர்வதத்தக்கா வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடம்.
எல்லாக் குடும்பங்களிலும், வேலையிடங்களிலும் பொறுப்பான ஒரு ஏமாளி இருப்பார். பிறர் செய்யத்தயங்கும், அஞ்சும் வேலைகளை நாலு நல்ல வார்த்தை சொல்லி இவர் மேல் சுமத்தி விட்டு, அவர்கள் ஒதுங்கி விடுவார்கள். வேறு வழியில்லாமல் செய்ய நேர்ந்தாலும், தன் மேல் நிஜமான பரிவு காட்டுபவர்களிடம் இளகி விடுபவர்கள் உண்டு.. பொறுப்பு கணேசனைப்போல். ரசிகன் என்ற நிலையைத்தாண்டி, எம்.ஜி.ஆரை ஆராதிக்கும் உபாசகனாகவே இருக்கும் தங்கராசு, மது மயக்கத்தில் தெருவாசிகளுக்குத் தொல்லை கொடுக்கும்போது அவரைத் திசை திருப்பி, நைச்சியமாய் அமைதிப்படுத்த ஒரு எம்.ஜி.ஆர். பாடல் போதும். “சந்திரன்” ரொம்பச்சுருக்கமாகச் சொல்லி விட்டாரோ எனத்தோன்ற வைக்கும் பகுதி. அணிந்துரையில் வண்ணதாசன் ஐயாவே சொல்லியிருப்பது போல் ஒரு நாவலாக விரியக்கூடிய சாத்தியக்கூறுகள் அதற்கு அதிகம். காவிரியைக் குறுமுனி கமண்டலத்தில் அடைத்தது போல் நூலாசிரியரும் சுருக்கி விடாமல் என்றாவது நாவலாகப் பெருகச்செய்வார் என எதிர்பார்ப்போமாக.

குழந்தைகளை வழிக்குக்கொண்டுவர வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்ற நடைமுறை பள்ளிகளில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் இக்காலப் பிள்ளைகளுக்கு, அந்தக்காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பதுண்டு என்ற செய்தியே புதுமையாகத் தோன்றும். ஆனால், ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வி மீது மட்டுமல்லாமல் ஒழுக்கத்திலும் அக்கறை கொண்டிருந்த காலம் அது. ‘கண்ணு முழிய மட்டும் விட்டுட்டு தோல உரிச்சுருங்க’ என பெற்றவர்களே ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த சமயம். அப்படியிருந்தும், தன்னிடம் கற்கும் மாணவனை அடித்து விட்டதற்காக, கலங்கி அழும், இறைவனிடம் மன்றாடும், தன்னையே அடித்துத்துன்புறுத்திக்கொள்ளும் அன்னத்தாய்கள் அபூர்வப்பிறவிகள்தான். தன்னிடம் பயிலும் பிள்ளைகள் எல்லோருமே தன் மகவுகள்தான் என்றெண்ணும் தாயுள்ளமல்லவா அது.

சுகாவின் எழுத்துகளை வாசிக்கும் அனைவருக்குமே “டவுன் மீனாட்சி” பரிச்சயப்பட்டவர்தான். நெல்லை ஜங்க்ஷன் மற்றும் டவுனில் எந்தெந்தக் கடைகளில் எந்தெந்த சாப்பாட்டு அயிட்டம் நன்றாக இருக்கும் என்ற அரிய தகவல்களைக் குவலயத்திற்கு அறியச்செய்வதில் இவரது பங்கு அளப்பரியது. இவர் அள்ளித்தெளித்திருக்கும் பட்டியலை அறியும்போது, இவ்வளவு கடைகளை எப்படித்தெரிந்து வைத்திருக்கிறாரென்று நூலாசிரியருக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சரியம் வரும். நெல்லை டவுனில் தெற்கு ரத வீதியிலிருக்கும் மாரியம்மன் விலாசின் புகழ் பெற்ற ‘திருப்பாகம்’ என்ற இனிப்பு இவர் சொல்லி நூலாசிரியர் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானது. ருசியும் அபாரம். இலக்கியம் படிக்காவிட்டாலும் மனிதர்களைப் படித்திருக்கும் மீனாட்சி முத்தாய்ப்பாகச் சொன்னதுதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது. அத்தியாயங்களில் வரவில்லைதான் எனினும் நம்பிக்கை ஒளிவிடுகிறது அரசு அண்ணன் என்னும் ஒளிக்கீற்று. 

“ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ மனிதர்கள் வந்து போயிருப்பார்கள், அவர்களை நினைவூட்டவே இந்த நூல்” என நூலாசிரியர் கூறுவதைப்போல் அனைவரது வாழ்விலும் மனிதர்கள் வந்து போகிறார்கள்தான், ஆனால் ஏதோ ஒரு வகையில், நினைவில் தடமாய் தடயங்களாய் நின்று விடுகிறார்கள் அழியாமல்.

நூலாசிரியர் :திரு. இரா. நாறும்பூ நாதன்.
வெளியீடு; சந்தியா பதிப்பகம்.
விலை: Rs.140/-

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails