பொக்கே அல்லது பொக்கா என்ற ஜப்பானியச்சொல்லுக்கு "மங்கிய" என்று அர்த்தம். புகைப்படக்கலையில் இச்சொல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஒளிப்படத்தில் சம்பந்தப்பட்ட சப்ஜெக்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது, அதை மட்டும் மையப்படுத்தி அதைச்சுற்றியுள்ள பகுதிகள் சற்றே மங்கலாக தெளிவில்லாமல் வரும்படி செட்டிங்க்ஸ் அமைத்து படம் எடுக்கப்படுவதுண்டு. அவ்வாறு தெளிவில்லாமல் வரும் பிற பகுதிகள், அதாவது out of focus areaதான் பொக்கா அல்லது பொக்கேயை உருவாக்குகிறது. உதாரணத்திற்கு இடுகையின் ஆங்காங்கே ஒரு சில படங்களை இணைத்திருக்கிறேன்.
ஹாலிவுட் பொக்கா (Bokah)
இந்த பொக்காவையும், depth of field எனப்படும் படத்தின் ஆழத்தையும் பெரும்பாலானோர் குழப்பிக்கொள்வதுண்டு. பின்புலத்திலிருந்து வேறுபட்டு கருப்பொருள் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதைசுட்டுவது depth of field. தெளிவற்ற பின்புலத்திலின் மங்கிய தோற்றம், அது ஒளியை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பவற்றை (visual quality of the out of focus area)Bokah அடிப்படையாகக் கொண்டது. கருப்பொருளிலிருந்து பின்புலம் எவ்வளவு மென்மையாக அதே சமயம் அழகுடன் மங்கலாகியிருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே பொக்காவின் தரம் அளக்கப்படுகிறது. அவ்வாறு மங்கலாகும் பகுதிகளில் பிரதிபலிக்கும் ஒளியை காமிராவின் லென்ஸ் உள்வாங்கி, வட்ட வடிவங்களில் பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பு சம்பந்தமாக, உலகெங்குமுள்ள ஒளிப்படக்கலைஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. சிலருக்கு அது தெளிவான பிசிறில்லாத வட்டமாக இருக்க வேண்டும். சிலரோ, அதன் வடிவம் எப்படியிருந்தாலும் சரி, பின்புலத்தின் மங்கிய தரம் மேம்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வர். ஏனெனில், லென்ஸின் சுருங்கி விரியும் பகுதியான diaphragm நேரான ப்ளேடுகளால் ஆனதாக இருந்தால் எண்கோண வடிவ பொக்கேயும், வளைவான ப்ளேடுகளால் ஆனதாக இருந்தால் தெளிவான வட்ட வடிவ பொக்கேயும் உருவாகும். லென்ஸ் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதில் அடிப்படையே தவிர பிற காரணிகள் ஏதும் கிடையாது. ஆகவே வடிவத்தை சிலர் கணக்கில் கொள்வதில்லை.
ஒளிப்படங்களில் பொக்கே என்பது கருப்பொருளின் மீதான கவனத்தை இன்னும் குவியச்செய்வதாக, மென்மையான ஒளிவட்டங்களைக் கொண்டதாக அமைந்தால் அவை சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு அமைபவை க்ரீம் ச்சீஸ் பொக்கே என அழைக்கப்படுகின்றன. அன்றி கவனத்தைச் சிதறச்செய்யும் விதமாக ஒழுங்கற்ற வடிவங்களும், கீறல்களும் கோடுகளுமாக ஒளிச்சிதறல்களோடு அமைபவை அவ்வளவு ரசிக்கப்படுவதில்லை. ஒரு லென்ஸ் எத்தனை பிளேடுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அதிகபட்ச அபர்சர் அளவு என்ன என்பதைப்பொறுத்து பொக்கேயின் தரம் லென்ஸுகளுக்குத் தக்கவாறு வித்தியாசப்படும். F1.4 அல்லது 2.8 அபர்ச்சர் அளவு கொண்ட லென்ஸை உபயோகித்து எடுக்கப்படும் ஒளிப்படம் நல்ல தரமான பொக்கேயைக்கொண்டிருக்கும்.
க்ரீமி ச்சீஸ் பொக்கே..
நமது கண்ணின் கருவிழியின் நடுவிலிருக்கும் பாப்பாவோடு (pupil) காமிராவின் அபர்ச்சரை ஒப்பிட்டால், அது எப்படி இயங்குகிறது? ஒளியை எவ்வாறு உள்வாங்குகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதிக வெளிச்சம் உட்புகும்போது pupil சுருங்கி தேவையான ஒளியை மட்டும் கண்ணுக்குள் அனுப்புகிறது. குறைவான வெளிச்சத்தில் நன்கு விரிந்து முடிந்த மட்டும் ஒளியை உள்வாங்குகிறது. இதேதான் காமிராவிலும் நடக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் தெளிவான பொக்கா வடிவங்களை உருவாக்க காமிராவில் என்ன அளவுகளை(settings) அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை எளிதாக முடிவெடுக்கலாம்.
கருப்பொருளுக்கும் பின்புலத்துக்குமான தூர இடைவெளியும் பொக்கேயின் தரத்தை நிர்ணயிக்கிறது. இடைவெளி அதிகமாக இருந்தால், பின்புலம் முழுவதுமாக மங்கலாகி பொக்கே சீராக noise எனப்படும் இரைச்சல்கள் இல்லாமல் ஒரே நிறத்தில் உருவாகும். இதை cream cheese bokeh என அழைப்பார்கள். இவ்வாறான பொக்கே பொதுவாக portrait மோடில் எடுக்கப்படும் படங்களிலும், குறைந்த f number அபர்ச்சரிலும் உபயோகிக்கப்படுகிறது.
F number அதிகரிக்கும்போதோ, பின்புலத்துக்கும் கருப்பொருளுக்குமுள்ள தூர இடைவெளி அதிகமாக இல்லாதபோதோ, பின்புலம் ஓரளவு மங்கலாகி, வெளிச்சப்புள்ளிகள் மென்மையான ஒளிவட்டங்களைத்தோற்றுவிக்கும். இதை ஹாலிவுட் பொக்கே எனக் குறிப்பிடுவர். இதில்தான் நாம், ஒளியுடன் விளையாடி விரும்பிய வடிவங்களையும் வண்ணங்களையும் உருவாக்கலாம். இது மிகவும் எளிது. லென்ஸின் முன் விரும்பிய வடிவங்கள் வெட்டப்பட்ட அட்டைத்துண்டுகளைப் பொருத்தினால் போதும். அதன் பின் வழக்கம்போல் படமெடுக்க வேண்டியதுதான். சுலபமாக இருப்பது போல் தோன்றுகிறது அல்லவா?.. சந்தையில் கிடைக்கும் Bokeh Masters Kitஐ வாங்கிப்பயன்படுத்தினால் மிகவும் எளிதுதான். அமேசானில் மூவாயிரத்துச்சொச்சம் விலைக்கு கிடைக்கிறது.
ஆனால், எல்லோராலும் அப்படி முதலீடு செய்ய இயலாதே. என்ன செய்வது?.. தன் கையே தனக்குதவி. ச்சார்ட் பேப்பர், காகிதம் வெட்டும் கத்தி, கத்தரிக்கோல், ஸ்கேல், காம்பஸ் சகிதமாக அரைமணி நேரம் செலவிட்டால் போதும். வீட்டில் நாமே எளிய முறையில் செய்து கொள்ளலாம்.
லென்ஸை ச்சார்ட் பேப்பரில் நெட்டுக்குத்தாக நிறுத்தி அதன் வட்ட வடிவத்தை பென்ஸிலால் அடையாளமிட்டுக்கொள்ளவும். அதன்பின் அதிலிருந்து சற்றே பெரிய வட்டமாக வெட்டிக்கொள்ளவும். சுமார் 3mm அதிக சுற்றளவு இருந்தால் போதும். இப்போது, அந்த வட்டத்தின் நடுப்புள்ளியைக் கண்டறிந்து, 3cm விட்டத்திற்கு ஒரு துளையை வெட்டிக்கொள்ளவும். உள்வட்டத்திற்கும் வெளி வட்டத்திற்கும் நடுவே உள்ள பகுதியில், அதே 3 செ.மி உயரம் வருமாறு, உள்வட்டத்தின் இருபுறமும், அதன் அளவுக்கு இணையாக நெடுக்கோடு ஒன்றை காகிதம் வெட்டும் கத்தியால் கீறிக்கொள்ளவும். இதன் வழியாகத்தான் நாம் வடிவங்கள் வெட்டப்பட்ட காகிதத்துண்டை செருகி லென்ஸின் முன் அனுப்பப்போகிறோம். ஆகவே கவனமாக வெட்டவும். பின் அதே 3 செ.மீ உயரமும், 10 செ.மீ நீளமும் கொண்ட இன்னொரு நீள்செவ்வகத்துண்டையும் வெட்டிக்கொள்ளவும். இந்த நீள் செவ்வகத்துண்டை இழுப்பதற்கு வசதியாக, இருபுறமும் ஒரு செ.மீ விட்டுவிட்டு மீதியுள்ள இடத்தில் இதயம், பூ, விளக்கு, ஸ்மைலி, என விரும்பிய வடிவங்களை வரைந்து மிகக்கவனமாக ஒரு சிற்பிக்கே உரிய லாவகத்துடன் கோடுகளின் மேல் கத்தியைச்செலுத்தி வெட்டவும். லென்ஸின் நன்கு விரியத்திறந்த diaphragm அளவுக்கே இந்த வடிவங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் வடிவங்களின் வெளியில் ஒளி சிதறாமல், நாம் வெட்டிய வடிவங்களின் ஊடே மட்டும் ஒளி வந்து வடிவத்தை உருவாக்கும். சொந்த அனுபவத்தில், 3 அல்லது 5 மி.மீ அளவில் வெட்டப்பட்டவை சிறப்பான ரிசல்ட்டைக்கொடுத்தன. பொதுவாக, வெட்டப்படும் அளவுக்கேற்ப ஹாலிவுட் பொக்கே வடிவங்களும் சிறிதாகவோ பெரிதாகவோ கிடைக்கும்.
இப்போது, லென்ஸை காமிராவில் மாட்டிக்கொண்டு, லென்ஸின் நுனியிலிருந்து அது காமிராவின் AF/MF பட்டனைத்தொடும் வரையிலான தூரத்தை அளந்து கொள்ளவும். அதேபோல் லென்ஸின் சுற்றளவையும் அளந்து கொள்ளவும். இந்த அளவுகளை சார்ட் பேப்பரில் குறித்துக்கொண்டு வெட்டினால் ஒரு செவ்வக வடிவத்துண்டு கிடைக்கும். இப்போது வெட்டிக்கொண்ட செவ்வகத்துண்டையும், வட்டத்துண்டையும் ஒன்றுடன் ஒன்று பொருத்தினால் உருளை வடிவத்தில் லென்ஸின் உறை போன்று கிடைக்கும். ஒட்டுவதற்கு cello tape அல்லது கறுப்பு இன்சுலேஷன் டேப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான். இப்போது நம் bokeh maekers kit உபயோகிக்கத்தயாராகி விட்டது.
விழாக்காலங்களில் கடைகளில் rice lights விற்பனைக்கு வரும், மல்ட்டி கலர், சிங்கிள் கலர்களில் ஒன்றிரண்டு என வாங்கி வைத்துக்கொண்டால் விரும்பும்போது கை கொடுக்கும். வீட்டு வார்ட்ரோபிலிருந்து சட்டை மாட்ட உபயோகிக்கும் ஒரு ஹேங்கரை அபேஸ் செய்து கொண்டு அதில் இந்த சீரியல் லைட்டை சற்று நீள நீளமாகவும் பரத்தினாற்போலவும் தொங்க விட்டுக்கொள்ளவும். வீட்டு சுவற்றில் ஆணி, ஹூக் ஏதேனுமிருப்பின் அதில் தொங்க விட்டுக்கொள்ளவும். வாசல் அல்லது ஜன்னல் பக்கம் போன்ற அதிக வெளிச்சம் வரும் பகுதிகளைத்தவிர்த்து, எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொங்க விட்டுக்கொள்ளலாம். பின் அதிலிருந்து குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து மீட்டர் தூரத்தில் உயரமான ஸ்டூல் அல்லது சிறிய மேசையைப் போட்டுக்கொள்ளவும். வீட்டில் கொஞ்சம் தடிமனாக ஏதேனும் புத்தகமிருப்பின் அதை தூய வெள்ளைக்காகிதம் கொண்டு சுற்றி அதை மேசையின் மேல் வைக்கவும். இதன் மேல்தான் நாம் சப்ஜெக்டை வைத்து படமெடுக்கப்போகிறோம்.
இப்போது நாம் வடிவங்களை உருவாக்கி வைத்திருக்கும் நீள்காகிதத்துண்டை, காகித உருளையில் பொருத்தி, வேண்டிய வடிவம் மட்டும் முன்புறமுள்ள துளையில் தெரியுமாறு செய்யவும். பின் இதை காமிராவில் பொருத்திக்கொள்ளவும். காகித உருளையானது லென்ஸின் மேல் எளிதில் நகருமாறு, அதே சமயம் தளர்ந்து விழாவண்ணம் இருக்க வேண்டும். படமெடுக்கும்போது, ஷேக் ஆவதைத்தவிர்க்க காமிராவை ட்ரைபாடில் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திடமான மேற்பரப்பிலும் வைத்துக்கொள்ளலாம். சப்ஜெக்டும் காமிராவும் ஒரே நேர்கோட்டில் வருமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். சப்ஜெக்டை தனிப்படுத்திக்காட்ட விரும்பினால் அதன் மேல் ஃபோகஸ் லைட்டின் வெளிச்சம் விழுமாறு அமைத்துக்கொள்ளவும். இதற்கு, வீட்டிலிருக்கும் LED விளக்குகள் எதுவாயினும்..உதாரணமாக, மேசை விளக்கு, எமர்ஜென்ஸி விளக்கு, அவ்வளவு ஏன்?.. ஒரு சமயம் மொபைலின் Flash lightம் ஃபோகஸ் கொடுக்க உபயோகித்தேன்.
காமிராவில் AF/MF என இருக்கும் செட்டிங்கில் முதலில் ஆட்டோ ஃபோகஸில் வைத்துக்கொண்டு சப்ஜெக்டை நோக்கி, காமிராவின் க்ளிக் பட்டனை half press செய்தால் சப்ஜெக்ட் தானாகவே ஃபோகஸ் ஆகி, பின்புலம் மங்கத்தொடங்கும். இதில் பின்புறமிருக்கும் rice lightsன் ஒளியும் மங்கி மென்மையான வடிவங்களாக மாறத்தொடங்குவதைக்காணலாம். சரியான வடிவம் அமைந்து விட்டால் க்ளிக் செய்து அதைப் பத்திரப்படுத்தவும். சில சமயங்களில் ஃபோகஸ் கலைந்து விடாமல் காகித உருளையை லேசாக பட்டும் படாமல் நகர்த்தியோ, திருப்பியோ வடிவத்தை உருவாக்க வேண்டியிருக்கும். சரியாக வெட்டப்படாத வடிவம் சிறப்பாக பொக்கேயை உருவாக்காது. தேவைப்பட்டால் paper stripஐ சேதப்படாமல் உருவி படத்தை சீரமைக்கவும்.
இந்த வகை போட்டோகிராபிக்கு aperture mode பரிந்துரைக்கப்படுகிறது. வெறுமனே விளக்குகளின் வடிவங்களை மட்டும் உருவாக்குவதானால் இது சிறந்ததுதான். ஆனால், subjects with bokeh உருவாக்க, manual mode மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதிலுமே மிகவும் குறைந்த எண்ணில் ஷட்டர் ஸ்பீட், மற்றும் f6 அபர்ச்சர் செட் செய்து எடுத்தேன். 50mm F1.4 அல்லது 1.7 lens அல்லது 70-200mm F2.8 lens சிறப்பான பொக்கேயை உருவாக்குகிறது. Zoom lensஐ உபயோகித்து அதன் அதிக பட்ச focal lenthல் படம் பிடித்தபோது அட்டகாசமாக அமைந்தது. பொதுவாக லென்ஸின் அதிக பட்ச lengthல் எடுக்கும்போது கொஞ்சம் பெரிதாகவும், மொத்தையாகக் கிடைக்கும்.
மிகவும் குறைந்த பட்ச நீளத்தில் எடுக்கும்போது உருவங்கள் சுமாராக வந்தன. தேவைக்கேற்ப ஒளிவட்டங்களின் இடைவெளியை அமைத்துக்கொண்டு படங்களை எடுத்துத்தள்ளலாம். காஃபிக்கோப்பையிலிருந்து சிந்துவது, ஸ்மைலிகள் பறப்பது போன்ற சிறப்புக்காட்சிகளை எடுக்க ட்ரைபாடின் உயரத்தை சற்று கூட்டியோ குறைத்தோ அல்லது நகர்த்தியோ விரும்பியவாறு அமைத்துக்கொண்டு எடுக்கலாம்.
1 comment:
நல்ல கட்டுரை. முயற்சி செய்ய வேண்டும்.
Post a Comment