Monday, 12 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 4 (கட்டடங்கள்)

பொதுவாகவே மால்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சில கட்டடங்களைப் படமெடுப்பது பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டிருந்தால் அங்கே மொபைலோ, டியெஸ்ஸெல்லாரோ.. எந்த வகை காமிராவையும் உபயோகிக்காமலிருத்தல் நலம். அவ்வாறன்றி, காரணமேதுமில்லாமல் சில இடங்களில் செக்யூரிட்டிகள் வெறுமனே தடை செய்வார்கள். அங்கிருக்கும் அலங்காரப்பொருட்களொடு நாம் படமெடுத்துக்கொள்ள தடையிருக்காது. ஆனால், அவற்றை மட்டும் படமெடுக்க தடையுண்டு. இவ்வாறான சமயங்களில் நான் பெரும்பாலும் அப்பொருளிலிருந்து சற்றுத்தூரத்தில் குறிப்பிட்ட கோணத்தில் ரங்க்ஸை நிறுத்தி வைத்து, அப்பொருளை மட்டும் படமெடுப்பேன். பார்ப்பவர்களுக்கு அவர் அப்பொருளுடன் படமெடுத்துக்கொள்வது போன்ற தோற்றமயக்கம் அது :-)

வாஷியின் ரயில் நிலையத்திலிருந்து சற்று தூரத்திலிருந்த செண்டர் ஒன் என்ற மால் புதுப்பிக்கப்பட்டு சிட்டி செண்டர் எனப் புதுப்பெயர் சூட்டிக்கொண்டுள்ளது. பழைய மாலிலிருந்த ஒரு சில உள்ளமைப்புகள் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக கண்ணாடியால் வேயப்பட்ட கூம்புப்பகுதி அப்படியே மறு உபயோகத்திலுள்ளது. சூரிய வெளிச்சம் நன்கு உட்புகுவதால் இங்கே மின்சார விளக்குகள் குறைவாகவே  பயன்படுத்தப்படுகின்றன.





ஆற்றுக்கால் பகவதி கோவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தினருகே உள்ளது. இங்கே பெண்கள் மட்டும் பங்கு கொள்ளும் பொங்காலை வைபவம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

மஹாராஷ்டிர மக்கள் "ஆடி" காருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் என்ன தெரியுமா? 

"பாங்டி வாலி gaadi". பாங்டி என்ற மராட்டி சொல்லுக்கு வளையல் என்று அர்த்தம். நான்கு வளையல்கள் பின்னிப்பிணைந்திருப்பது போன்ற அடையாளப்படத்தால் 'ஆடி'க்கு அப்பெயர் வாய்த்தது :-)


நவிமும்பைப் பகுதியிலிருக்கும் சில  வானளாவிய கட்டடங்கள்.


உலகில் மிகவும் பிசியான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமானநிலையம் இந்த வருடம் ஜனவரி 20 ம் தேதியன்று புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளது. அன்று ஒரே நாளில் 24 மணிநேரத்தில் 980 விமானங்கள் இந்த விமானநிலையத்திற்கு வந்து, சென்றுள்ளன. இதற்கு முன் கடந்த வருடம்(2017) டிசம்பர் 6 ம் தேதி ஒரே நாளில் 974 விமானங்கள் வந்து சென்றதே இந்த விமான நிலையத்தின் சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனையை மும்பை விமான நிலையமே முறியடித்துள்ளது.
(தகவல் உதவி- சகோதரர் அரவிந்தன்)

மும்பையின் "சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலைய"த்தின் தூணழகு.


மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தின் நேர் எதிரே சுரங்கப்பாதையின் மறு முனையில் அமைந்திருக்கும் "கேனான்" என்ற துரித உணவுக்கடை பாவ்பாஜி, வடாபாவ் போன்றவற்றுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. முழுவதும் பெண்களால் நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படும் இக்கடையில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் காத்திருந்து உணவுப்பண்டங்களை வாங்கிச்செல்வதே இதன் தரத்திற்கு சான்று.
தமிழ்த்திரைப்படங்களில் ஹீரோ அல்லது ஹீரோயின் சென்னை வந்து விட்டார்கள் என்பதைச் சொல்ல, இயக்குநர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைக் காண்பித்தாலே புரிந்து கொள்ளலாம். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சென்னையின் பெருமை மிகு அடையாளங்களில் இதுவும் ஒன்று.

இந்தியாவின் தென் கோடியாம் கன்னியாகுமரியின் சங்கிலித்துறையும் மண்டபமும். இங்குதான் வங்காள விரிகுடா, இந்தியப்பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கின்றன. இந்தச்சிறப்பு காரணமாகவே இவ்விடத்தில் நீத்தாருக்கான நீர்க்கடன் செலுத்துதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் மக்கள் வந்து கடலில் தீர்த்தமாடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து விட்டுச் செல்வர். அலையின் வேகம் இங்கே அதிகமாக இருப்பதால் தீர்த்தமாடுபவர்களின் பாதுகாப்புக்காக நாற்புறமும் சங்கிலி கட்டப்பட்டு அதன் காரணமாக இந்த நீர்த்துறையானது "சங்கிலித்துறை" எனப்பெயர் கொண்டது.


தேசப்பிதா மஹாத்மா காந்தியின் நினைவாக கன்னியாகுமரியில் எழுப்பப்பட்டிருக்கும் மண்டபம். இங்கே அவரது அஸ்தியின் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த அக்டோபர் 2-ம் தேதியன்று நடுப்பகல் 12 மணிக்கு சூரிய ஒளி அஸ்திக்கலசம் வைக்கப்பட்டிருக்கும் மாடத்தின் மேல் விழுவது இக்கட்டிடக்கலையின் சிறப்பு. அப்படி சூரிய ஒளி விழுவதைக்காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காத்திருந்து பார்த்துச் செல்வர்.

பெங்களூரின் லால்பாக்-தாவரவியல் பூங்காவிலிருக்கும் கண்ணாடி மாளிகை. நாற்புறமும் திறந்திருக்கும் இம்மாளிகையில் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய தினங்களில் நடைபெறும் மலர்க்கண்காட்சி மிகவும் புகழ் வாய்ந்தது. ஆகாயத்தின் கீழ் மலரும் அத்தனை பூக்களும் இக்கண்காட்சியில் இடம் பெறுவது கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. 

JustBooks clc.  நாடு முழுவதும் 11 கிளைகளைக்கொண்ட இந்த சங்கிலித்தொடர் நூலகத்திற்கு மும்பையில் மட்டுமே நான்கு கிளைகள் உள்ளன. எந்தக்கிளையில் வேண்டுமானாலும் புத்தகத்தைப் பெற்று வாசிக்கலாம், வாசித்து முடித்ததும் எந்தக்கிளையில் வேண்டுமானாலும் திருப்பிக்கொடுக்கலாம் என்பது இதன் முக்கியமான அம்சம். குழந்தைகளுக்கான புத்தகங்களிலிருந்து எல்லா வயதினரும் விரும்பும் வெவ்வேறு வகையான புத்தகங்களும் ஒரே கூரையின் கீழ் வாசிக்கக் கிடைக்கிறது. ஃபேஸ்புக்கில் Justbooks clc என்ற பெயரிலேயே இயங்கி வரும் இந்த நூலகத்திலிருந்து புத்தகங்களைப் பெற்று வாசிக்க விரும்பினால் அவர்களின் ஃபேஸ்புக் தளமான இங்கே https://www.facebook.com/JustBooksCLC சென்றும் ஆர்டர் செய்யலாம்.


சென்னையின் மெரீனா கடற்கரையில் மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கும் இரு முதல்வர்களின் நினைவிடம்.

மயிலையின் கபாலீஸ்வரர் கோவிலுக்கருகே, பாரதீய வித்யா பவனுக்கெதிரே அமைந்திருக்கும் புகழ்பெற்ற கற்பகாம்பாள் மெஸ். அடை அவியல், கீரை வடை, ரவா தோசை, ஃபில்டர் காபி என நாவை ஜொள்ளில் மூழ்கச்செய்யும் பதார்த்தங்கள் இங்கே பிரபலம்.

பத்மநாபபுரம் கோட்டையின் தென்பகுதியிலிருக்கும் சாளரம். அந்தக்காலத்தில் மஹாராஜா ராஜ்ய பரிபாலனம் செய்தபோது, இந்த பலகணியில் நின்றுதான், மக்களுக்குத் தரிசனம் தந்து, அவர்களது குறைகளைக் கேட்டு ஆவன செய்வார்   எனப்படுகிறது.

இராமேஸ்வரம் ரயில் நிலையம்.

வானம் தொடும் மாடிகள் அமைக்கும் வரை ஓயமாட்டோமென்று வஞ்சினம் உரைத்தாரோ!! தலை சுற்றுமுன் தரைக்கு வருவோம்.

திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோவிலின் புதுப்பிக்கப்பட்ட ஸீ த்ரூ தேர் நிலையம். வெயில், மழையிலிருந்து பாதுகாப்பு+ தேரின் அழகை யாவரும் கண்டு களிக்க ஏதுவாக கண்ணாடியால் வேயப்பட்டிருக்கிறது. பழமையைப் பாதுகாக்கிறது புதுமை.


நாகர்கோவிலின் இதயப்பகுதியான மணிமேடை. 1893 ல் திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாளின் வருகையின் நினைவாக நாகர்கோவிலின் மையப்பகுதியில் இந்த மணிமேடை கட்டப்பட்டது. இது இங்கிலாந்தைச் சார்ந்த ஹோஜியோர்ஃப் மற்றும் எஸ்.ஹோர்ஸ்லி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகர்கோவிலுக்கு வந்த ஐரோப்பிய மிஷனரி அருட்திரு டதி என்பவரால், திருவிதாங்கூர் மஹாராஜாவிற்கு கோபுரத்தில் உள்ள கடிகாரம் வழங்கப்பட்டது. நாகர்கோவிலின் ஒரு முக்கிய அடையாளமான இது தற்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதை சாி செய்ய நிபுணர் இல்லாததால் இந்த கடிகாரம் தற்போது மணி அடிப்பதில்லை. மணிமேடையின் முன் மேற்குப் பார்த்த முகமாக நாகர்கோவில் மண்ணின் மைந்தரான, திரு. என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் உருவச்சிலை அமைக்கப்பெற்றுள்ளது.
வள்ளியூர் ரயில் நிலையம்.

தொடரும்..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails