Monday, 19 February 2018

மொபைல் க்ளிக்ஸ் 5 (கலைப்பொருட்கள்)

வசிக்குமிடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதன் அடுத்தபடி, அதை அழகுற அலங்கரிப்பதுவுமாகும். கிராமங்களில் மண்குடிசையில் வசித்தாலும் தினமும் இருமுறை, வாசலையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கிச் சுத்தம் செய்து, கோலமிட்டு, சாயங்காலங்களில் வாசற்புறத்திலிருக்கும் துளசி மாடப்பிறையிலும் வீட்டினுள்ளும் விளக்கேற்றி, ஊதிவத்தியும் ஏற்றி வைப்பர். கோவிலுக்குள் நுழைந்த தெய்வீக உணர்வை அது தரும். தவிர,  வாரத்துக்கொருமுறை சாணமிட்டு மெழுகி தரையைப் பளிங்கு போல் வழுவழுவென ஆக்கி வைப்பர். மார்போனைட் டைல்ஸோ, மண்தரையோ.. எதுவாக இருப்பினும், தினமும் பெருக்கித்துடைத்து, ஒட்டடையின்றி சுவர்கள் மிளிர, பொருட்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டால் அழகுதான். "சுத்தம் சோறுபோடும்.. சுகாதாரம் குழம்பு ஊற்றும்"

இந்தப்பிள்ளையார் எங்கள் வீட்டின் முகப்பில் இருப்பவர். தினம் தூபதீபமும் வெள்ளிக்கிழமைதோறும் கூடுதலாக மலர்மாலையும் பெற்றுக்கொள்பவர்.

இந்த கருடர் மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் இருக்கிறார். மூக்கழகர் :-)

இவரை ஒரு பயணத்தின்போது மதுரையில் பிடித்தேன். ஹோட்டல் அறையை அலங்கரித்தவர் இப்போது இந்த வலைப்பூவையும்..


ஆடம்பரமான பங்களாக்களில் மட்டுமல்ல, சாதாரண வீடுகளிலும் ஒரு ஓவியம், ஒரு சிறிய சிற்பம் அல்லது பொம்மை, வாடாமலர்கள் அல்லது வாசம் வீசும் மலர்களை ஏதாவதொரு இடத்தில் அலங்காரமாக வைத்துப்பாருங்கள். அந்த அறையின் முகமே மாறியிருக்கும். ஒரே மாதிரியான வீட்டு அலங்காரத்தைப் பார்த்துப்பார்த்து போரடித்தால், அறையின் சோபா, மேசை அலங்காரம் போன்றவற்றை இடம் மாற்றி வைத்துப்பாருங்கள். அது மனதுக்கு ஓர் புத்துணர்வு தரும் என மனவள வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு கலைப்பொருட்களை வாங்குவதும் அவற்றைக்கொண்டு வீட்டை அலங்கரிப்பதும் பிடித்தமான பொழுதுபோக்கு. வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்லுந்தோறும் அந்தந்த இடங்களின் சிறப்பான பொருட்களை வாங்கி வருவர். வெளிநாட்டுப்பொருட்களை நாம் விரும்புவது போல், நம் தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டிப்பொம்மை, போன்றவற்றை வெளிநாட்டவர் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். கன்னியாகுமரியில் அலங்கார மணிமாலைகளையும், சங்கு, சிப்பி மற்றும் தென்னை நெட்டியால் செய்த கைவினைப்  பொருட்களையும் அவர்கள்தான் அதிக விலை கொடுத்தாவது வாங்கிச்செல்கின்றனர்.

மதுரைப் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் ரிசப்ஷன் பகுதியில் அருள் பாலித்துக்கொண்டிருந்தவர். பணங்காசு நடமாடும் பகுதிகளில் விரும்பி வாசம் செய்வார்.
சென்னைப்பயணத்தின்போது மண்பாத்திரம் தேடியலைந்தபோது கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் பகுதியில் கிடைத்தது. அங்கிருந்த கலைப்பொருட்களைக் கண்டு அகமகிழ்ந்து, டெரகோட்டாவில் ஏதாவது ஒரு பொருள் வாங்கிக்கொள்ளலாமா என யோசித்தபோது, "ஆசையே துன்பத்திற்குக் காரணம், என்னதான் பொதிந்து கொண்டுசென்றாலும் மும்பை செல்வதற்குள் உடைந்துவிடக்கூடும்" என என் அறிவுக்கண்ணை படாலெனத் திறந்தவர். 

அதிக விலை கொடுத்து சுவரோவியம், அலங்காரப்பொருட்கள் போன்றவற்றை வாங்கித்தான் வீட்டை அலங்கரிக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் குழந்தைகள் வரைந்த அழகிய ஓவியம், மற்றும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்தால் ஏற்படும் திருப்தியும் பெருமையும் விலைமதிப்பில்லாதது. அவ்வாறு சுவரோவியங்களை மாட்டும்போது நல்ல நிழல்விழாத, நல்ல ஒளியமைப்புள்ள இடத்தில் மாட்டினால் அந்த அறைக்கே ஒரு தனியழகு வந்து விடும். சிலர், ஓவியங்களின் மீது வெளிச்சம் விழுமாறு சிறப்பான சுவர்விளக்குகளையும் மாட்டி வைப்பர். சரியான கோணத்திலும் அளவிலும் ஒளி விழும்போது மிளிரும் வண்ணத்துடன் பொலியும்.

ஒரு சென்னைப்பயணத்தின்போது, ஹோட்டலின் சுவர்களில் வால்பேப்பராக ஒட்டப்பட்டிருந்த இந்தியக்கலாச்சாரம் சம்பந்தப்பட்ட படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று.
ஆசையை ஒழி என எனக்கு புத்தர் அறிவுறுத்தியபோது அருகிலிருந்த இரட்டையர். அடுத்த பயணத்தில் கூட்டிக்கொண்டு செல்வதாக வாக்களித்ததும் முகங்களில் புன்சிரி. மண்குதிரையானாலும் டெரகோட்டா குதிரையை நம்பலாம் என குளம்பால் அடித்து சத்தியம் செய்தனர். "ஊர் உலகமெல்லாம் சுற்றித்திரிந்து காவல்புரியும் அய்யனாரின் வாகனமாக்கும் நாங்கள். உங்களைப்போன்ற மனிதர்கள்தான் எங்களை தோட்டத்தில் அலங்காரமாக நிற்க வைத்து விடுகிறீர்கள்" என ஒரே அங்கலாய்ப்பு.

என் வீட்டு வாசலில் ஷூரேக்கின் மேல் வைக்கப்பட்டிருக்கும் மலர் அலங்காரம். காலணிகள் கொண்டு வரும் எதிரெண்ணெங்களை இம்மாதிரியான அலங்காரம் வீட்டினுள் நுழைய விடாமல் அழித்து விடுவதாக நம்பப்படுகிறது.

தற்காலங்களில், வீட்டின் முன்னறையில் அல்லது வீட்டு முன்வாசல் முற்றத்தில் ஒரு வெண்கல உருளி அல்லது மண்பாண்டத்தில் நீர் நிரப்பி, அதில் பூக்களையும் ஏற்றி வைத்த மெழுகு அல்லது அகல் விளக்குகளையும் மிதக்க விடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அக்காலங்களில் வீட்டின் முன் அல்லிக்குளம் அமைக்கப்பட்டதன் மரூஉ எனவும் இதைக்கொள்ளலாம். இன்னும் சிலர் அந்த நீரில் காசுகளையும் போட்டு வைப்பர். தீபத்தில் அக்னி, நீரில் வருணன், பாண்டத்தில் ப்ருத்வி, காற்றில் வாயு, சுற்றுப்புறத்தில் ஆகாயம் என பஞ்சபூதங்களும் இதில் வழிபடப்படுவதாகவும், அவை வீட்டினுள் எதிரெண்ணெங்கள் புகுவதைத் தடுத்து, நல்லெண்ணங்களைப் பரப்புவதாகவும் சொல்லப்படுகிறது. ஆன்மீக நோக்கில் இல்லையெனினும் அழகு நோக்கில் கொண்டால், வாசலில் மணம் வீசும் மலர்களைக் காணுந்தோறும், அவற்றின் சுகந்தத்தை நுகருந்தோறும் மனம் கொள்ளும் களியுணர்வைச் சொல்ல வார்த்தைகள்தான் உண்டா!!

சென்னைப்பயணத்தின்போது கிடைத்த தேசப்பிதா..
குத்துவிளக்குகளின் கொண்டை எனச்சொல்லப்படும் தலைப்பகுதியில் தெய்வத்திருவுருவங்கள், மதச்சின்னங்கள், அன்னம், தாமரை போன்றவை அமைக்கப்படுவது ஒரு தனியலங்காரமாக இருக்கும். இந்த விநாயகர் விளக்கு மதுரையில் காணக்கிடைத்தது.

பொருளீட்டும்பொருட்டு வெளியுலகிற்குச் சென்று அன்றாடம் பல்வேறு போராட்டங்களைச்  சந்தித்து விட்டு வந்து , அக்கடா என நிம்மதியாய்க் கால் நீட்டி உட்கார நாம் நாளின் இறுதியில் வீட்டுக்குத்தான்  வருகிறோம். அப்படி நிம்மதியைத் தரும் வீட்டைக் கொஞ்சம் அலங்கரித்து வைத்தால் கண்ணுக்கும் மனதுக்கும் சுகம்.

தொடரும்..

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

அலைபேசி மூலம் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails