Thursday, 1 February 2018

முப்பெரும் நிகழ்வுகள் - பூரண சந்திர கிரகணம் 2018

.31-1-2018 அன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்துக்கு வழக்கமான சந்திர கிரகணத்தை விட   கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இன்றைய தினம் நீல நிலா தினம், சூப்பர் மூன், சந்திர கிரகணம் மூன்றும் ஒரே நாளில் நிகழ்கின்றன. ஒரு மாதத்தில் இரண்டாவது முறை பௌர்ணமி வருவதை ப்ளூ மூன் என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். 

நீல நிலா எனச் சொல்லப்படுவதால் பொதுமக்கள் சரியான புரிதலின்றி அன்றைய தினம் தோன்றக்கூடிய சந்திரன் நீல நிறத்தில் இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அன்றைய தினம் சந்திரன் வழக்கமான நிறத்திலேயே தோன்றுவதுதான் யதார்த்தம்.

//சில சமயம் ஒரே வருடத்தில் இரண்டு நீல நிலவுகள் கூட வருவதுண்டாம். கடைசியாக இந்நிகழ்வு 1999-ம் வருடம் நிகழ்ந்தது. ஜனவரியில் இரண்டு பௌர்ணமிகள் வந்த காரணத்தால் வருடத்தின் மிகக்குறைந்த நாட்கள் கொண்ட பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமியே இல்லாமல் போய் விட்டது. பதிலாக மார்ச் மாதத்தில் மீண்டும் இரண்டு பௌர்ணமிகள் வந்தன. இப்படிப்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகள் 19 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்குமென்று சொல்லப்படுகிறது. அடுத்த இரட்டை நீல நிலவுகளை இனிமேல் 2018-ல் காணலாம்.// என முந்தையதொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி வருடத்தின் முதல் நீலநிலவைக் கண்டு விட்டோம். இவ்வருடத்தில் காணப்போகும் அடுத்த நீலநிலவுக்காகக் காத்திருப்போம்.

நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது சற்று அரிதானது. இதற்கு முன்னதாக 1866 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி நீல நிலா தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு 152 ஆண்டுகள் கழித்து இன்றைய தினத்தில்தான் இப்படியொரு நிகழ்வு நடைபெற்றது. இதற்குப் பிறகு 2028 டிசம்பர் 31 ஆம் தேதி இதே போன்ற நிகழ்வு நடைபெறும்.

இன்றைய தினத்தின் இன்னொரு சிறப்பாகக் கருதப்படுவது சூப்பர் மூன் எனச் சொல்லப்படும் தினத்தில் சந்திர கிரகணம் வருவதாகும். இன்று புவிக்கு மிக அருகில் நிலவு இருந்ததால் 40%பெரிதாகவும் 30%கூடுதல் பிரகாசத்துடனும் திகழ்ந்தது. இப்படி நிகழ்வதை சூப்பர் மூன் என அழைப்பார்கள். இப்படிப்பட்ட தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு எனச் சொல்லப்படுகிறது. உண்மையில் 30-ம் தேதியன்றுதான் பூமிக்கு மிக அருகில்.. அதாவது, 3 லட்சத்து 58 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. 31-ம் தேதி அன்று 3 லட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவு இருந்தது. ஆகவே இன்று சூப்பர் மூன் தினம் எனச் சொல்லமுடியாது. எனினும் புவிக்குக் கிட்டத்தட்ட மிக அருகில் நிலவு வரும் தினம் என்ற அளவில் இது சிறப்பானதே.

சூரியனை பூமி சுற்றி வருகிறது. பூமியை நிலா சுற்றுகிறது. அப்படிச்சுற்றி வரும்போது, ஏதாவதொரு தினத்தில் சூரியன்- பூமி -நிலா ஆகியவை கிட்டத்தட்ட ஒரே நேர் கோட்டில் வரும். அப்படி, நேர் கோட்டில் வரும்போது நிலாவை சூரியனிடமிருந்து ஏறத்தாழ மறைக்கும் விதமாக இடையில் புவி இருக்கும் தினத்தைப் பௌர்ணமி என்கிறோம்.

இந்தச் சமயங்களில் புவியின் நிழல் 14 லட்சம் கிலோ மீட்டருக்கு கூம்பு வடிவத்தில் நீளும். ஆகவே சூரிய வெளிச்சம் முழுமையாக நிலாவுக்குக் கிடைக்காது. பெரும்பான்மையான சமயங்களில் புவியின் நிழலைத் தொடாமல் சில கோணங்கள் விலகி நிலவு சென்றுவிடும். ஏனெனில் நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருப்பதால் நிழலைத் தொடாமல் நிலவு மேலேயே கீழேயோ சென்றுவிடும்.

புவியின் நிழலுக்குள் வந்து சூரியனின் நேரடிப் பார்வையில் இருந்து நிலா முழுமையாக மறைக்கப்படும் சற்று அரிய நிகழ்வை முழு சந்திர கிரகணம் என்கிறோம். இந்த முழு சந்திர கிரகணம் ஒரே ஆண்டில் அதிக முறை நிகழாது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் பௌர்ணமி சீரான இடைவெளிகளில் வரும். ஆனால் எல்லா பௌர்ணமிகளிலும் சந்திர கிரகணம் நிகழ்வதில்லை.

முழு கிரகணம் தோன்றும் போது நிலவில் நிறமாற்றம் ஏற்படுவதென்பது வளிமண்டல மாசு அளவைப் பொறுத்தது. சூரிய ஒளி ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இதில், ஊதா, நீலம் போன்ற நிறங்கள் புவியின் காற்று மண்டலத்தால் ஈர்க்கப்பட்டு விட, ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களுக்கான அலைகள் மட்டும் சந்திரனில் விழுகின்றன. ஆகவே சந்திரன் சிவப்பு நிறமாய்க் காட்சி தருகிறது. இதை ரெட் மூன் அல்லது ப்ளட் மூன் என அழைப்பார்கள்.

கிரகணத்தின் போது மாசு காரணமாக வளி மண்டலத்தில் அதிக துகள்கள் இருந்தால் சூரிய வெளிச்சத்தை அது சிதறடித்துவிடும். அப்போது சிவப்பு நிறக் கூறு அதிகமாக இருக்கும். அவை நிலவில் விழுவதால் நிலவு சற்று ஆழமான சிவப்பு நிறத்தில் தோன்றும். மாசு குறைவாக இருந்தால் சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தெரியும். எனவே வளிமண்டல மாசுபாட்டையும் இதனை வைத்துக் கண்டறிய முடியும். கிரகணம் நீடிக்கும் வரை மட்டுமே இந்த நிற வேறுபாடு இருக்கும். கிரகணம் முடிந்ததும், நிலவு தனது வழக்கமான பளீரென்ற பால் வண்ணத்தில் பிரகாசிக்கும். பாதி கிரகணம் முடிந்திருக்கும்போது வெண்மதி நாணிச் சிவந்திருப்பது போல் செவ்வண்ணம் கலந்து காட்சியளிப்பது கண் கொள்ளாக்காட்சி. ஒளிப்பட ஆர்வலர்கள் தவற விடக்கூடாத காட்சியும் கூட.

தகவல் கொடை: இணையம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails