Tuesday 13 February 2018

அன்புடன் வாழ்த்துகள்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-14ம் தேதி வந்து விட்டால் போதும். உலகத்துக்கே பரபரவென ஜூரம் வந்து விடும்.. அது வேறொன்றுமில்லை, அதுதான் காதல் ஜூரம். ஜூரம் முற்றி ஜன்னி வந்தாற்போல் பிதற்றவும் ஆரம்பித்து விடுவார்கள். வருடம் முழுவதும் தேக்கி வைத்திருந்த அன்பை பிரியமானவரின் மீது ஒரே நாளில் பொழிந்து விடும் நோக்கில், வாழ்த்து அட்டைகள், மலர்கள், நகைகள் இன்னபிற பரிசுப்பொருட்கள் என்று அவரவர் சக்திக்கேற்றபடி பரிசளிப்பதுண்டு. எத்தனை கொடுத்தாலும் ஒற்றை ரோஜாவுக்கீடாகுமா என சிலர் முடித்துக்கொள்வதுமுண்டு. கொடுக்கப்படும் பொருளை வைத்தா அன்பை அளப்பது? அன்பின் பிரம்மாண்டம் கொடுக்கும் மனதிலல்லவா இருக்கிறது. எத்தனை சுரந்தாலும் வற்றாத அமுதமடியல்லவா அது. 





வேலண்டைன் எனும் துறவியின் உண்மையான தியாகத்தை மதிக்கும் முகமாக, அன்பைப்பரப்பும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, தன் பாதையிலிருந்து விலகி, வியாபார மயமாகிக்கொண்டிருக்கிறது. மேற்கு நாடுகளின் நாகரிகத்தாக்கத்தால் இந்தியாவில் தற்சமயம் கடைப்பிடிக்கப்படும், அன்னையர், தந்தையர், மகள், மகன், தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட சித்தி, கொண்டான் கொடுத்தான் போன்ற தினங்களின் வரிசையில் காதலர் தினமும் ஒன்று. பெரும்பாலும் தனிக்குடித்தனமாகவோ, அல்லது வீட்டிலிருந்து வெளியேறி தனியாகவோ வசிக்கும் மக்கள் வருடத்திற்கொரு முறை குடும்பத்தினரைச் சந்தித்து அளவளாவுவதற்கு ஒரு தினத்தை நிர்ணயித்துக்கொண்டதை, கார்ப்பரேட் உலகம் வியாபாரமயமாக்கியது. அதன் பொருட்டே பரிசுப்பொருட்களின் சந்தை ஆன்லைனிலும் விரிவடைந்து தன் ஆக்டோபஸ் கரங்களால் உலகெங்குமிருந்து காசை வாங்கி தன் கல்லாவை நிறைத்துக்கொண்டிருக்கிறது.



ஆனால், கூட்டுக்குடும்பத்தின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள, குடும்பத்திலிருந்து பொருள்வயிற் பிரிந்து தனிக்குடித்தனமாக வாழ்ந்தாலும் தன் வேரை மறக்காத, தன் குடும்பத்தின் மூத்த குடிகளை மதித்து வணங்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மோகத்தில் ஆழ்ந்துள்ளது வேதனையே. 



வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டம் பிப்ரவரி-14 தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தினமும், ரோஜா தினம், சாக்லெட் தினம், டெடி பியர் தினம், என ஒவ்வொரு தினமாகக் கொண்டாடப்பட்டு, 14-ம் தினத்தன்று காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தினத்துக்கும் அந்தந்த தினத்துக்கான பரிசுப்பொருட்களை மக்கள் தமக்குள் பரிமாறிக்கொண்டு  இருப்பதைக் கண்டு, பெருமூச்சு விடும் பக்கத்து வீட்டுத்தாத்தாவுக்கு, "கொள்ளுத்தாத்தா தினம்" என ஒரு தினம் அனுசரிக்கப்படாமை குறித்து பெரும் விசாரமுண்டு. "எங்களுக்குண்ணு ஒரு நாள ஒதுக்கிட்டா எங்களுக்குத் தக்கன, ஒரு பாக்கு இடிக்கப்பட்ட உரலோ,.. ஒரு பல்செட்டோ கிஃப்ட் குடுத்துக்கிடுவோம். எங்க சிறுப்பக்காலத்துல இதெல்லாம் ஒண்ணும் இல்லாமப் போச்சு. இதொண்ணையும் நம்ம ஊருக்குக் கொண்டுட்டு வரணும்ன்னு ஒரு மனுசனுக்காது தோணலியே?. நாடு சீரளிஞ்சு போச்சுடே. ஹூம்.. இதொண்ணையும் அனுபவிக்காமயே போய்ருவேன் போலருக்கு" என அங்கலாய்க்கிறார். "இன்னுமொரு நூற்றாண்டிருந்து அத்தனைக்கும் ஆசைப்பட்டு அனுபவியும்" என்று மனசார வாழ்த்துவதன்றி நாம் செய்யக்கூடுவதுதான் யாது?



ஒத்த வயதுள்ள எதிரெதிர் பாலினரிடத்தில் மட்டுமன்றி, சக மனிதர் அனைவரிடமும் சுரக்கும் மனித நேயத்திற்கு வெறுமனே காதல் என ஒற்றை வார்த்தையில் முத்திரை குத்தி அதை, சிமிழுக்குள் கடலென அடைத்து விட முடியுமோ!!  தாயிடத்தில், தந்தையிடத்தில், உடன் பிறந்தாரிடம், ரத்த உறவுகளிடம், மற்றும் ஊழின் துயரில் அழுந்திப் பரிதவிக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏற்படுவதை அன்பு, பாசம் என பல்வேறு பொதுப் பெயர்களால் அடையாளமிட்டாலும் இரு நெஞ்சங்களினிடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டும் "காதல்" என வார்த்தை மகுடம் சூடிக்கொள்கிறது. 

கைத்தலம் பற்றிக் கடிமணம் கொள்ளும் நாள்வரையில் அவர்கள் நெஞ்சில் பரிசுத்தமான அன்பைப் பெய்து வளர்க்கும் அப்பயிர், ராக்கி, மஞ்சள் கயிறு போன்றவற்றை வலுக்கட்டாயமாகக் கட்ட நிர்ப்பந்திக்கும் சில கலாச்சாரக் காவலர்களால் இத்தினத்தில் சிதைக்கப்படுவது வேதனை. வெறும் இனக்கவர்ச்சியைக் காதல் என தப்பர்த்தம் செய்து கொள்ளும் சிலராலும், படிக்க வேண்டிய வயதில் தவறான நபர்களிடம் காதலில் விழும் சிலராலும் உண்மையான நேசம் கொண்டவர்களும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். அதனாலேயே, இத்தகு இன்னல்களுக்கும், சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள். 



எந்த நிகழ்வாயினும், ஒளிப்படக்கலைஞர்கள் தத்தம் பங்களிப்பையும் நல்காதிருக்க மாட்டார்கள். தீட்டத்தீட்டத்தானே வைரம் ஒளி பெறுகிறது. நிகழ்வுகளுக்காக ஒளிப்படம் பிடிக்க மூளையைக் கசக்கி யோசிக்கும்போது, க்ரியேட்டிவான கருத்துகள் கிட்டி, அதைப் படமாக்குவது சவாலான ஒன்று. பெரும்பாலும் ஒருவர் எடுக்கும் படம் மற்றவரது படத்திற்குத் தூண்டுகோலாக அமைவது ஒளிப்பட உலகில் சகஜமே. அவ்வாறாக அன்பின் சின்னமான இதயத்தை அடிப்படையாகக்கொண்டு வேலண்டைன்ஸ் நாளில் ஒளிப்படக்கலைஞர்களால் பகிரப்படும் பெரும்பாலான படங்களோடு எனது பங்களிப்பாக ஒரு சில படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. 








எந்த ராஜா எந்தப்பட்டணம் போனாலும், ஃப்ளிக்கரில் முடிந்தளவு படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். 1080 படங்களைத் தொட்டுள்ள இத்தருணத்தில் அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
படங்கள் அழகு அக்கா....

LinkWithin

Related Posts with Thumbnails