இந்திய தேசிய விடுதலைப்போராட்டக் காலத்தின் ஒரு முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தைப் பற்றிய நூலே அசோகமித்திரனின், "பதினெட்டாவது அட்சக்கோடு". அப்போது, ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்டிருந்த இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத்தைக் கதைக்களமாகக் கொண்ட இந்நூலில், இந்தியப் பிரிவினை சார்ந்த வரலாற்றுப் பூர்வமான இந்த இலக்கியப் பதிவில், சந்திரசேகரனும் அவன் வாழ்ந்து வந்த செகந்தராபாத் நகரமும் இந்திய சுதந்திரத்துக்குப்பின்னிருந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாகும் வரையிலான காலஇடைவெளியில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களையும், அந்நகரம் வன்முறையில் சிக்கி எப்படி அவதிப்பட்டது என்பதையும் அசோகமித்திரன் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார். பதின்ம வயது இளைஞன் சந்திர சேகரனின் பள்ளிப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரை அவன் பார்த்த, அனுபவித்த செகந்தராபாத் வாழ்க்கை, அதில் போராட்ட காலத்தில் அவனது பங்கு, பள்ளியைப் பகிஷ்கரித்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவது, என அனைத்தும் அவனது கூற்றாகவும் படர்க்கைக் கூற்றாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியப்பிரிவினைக்குப்பின் பிரிந்து கிடந்த குறுநாடுகளையும் சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து சர்தார் வல்லபாய் பட்டேல் இன்றிருக்கும் இந்தியாவை உருவாக்கினார். சிலர் உடனே இணைந்தாலும் சிலரை பெரும் பாடுபட்டு இணைக்க வேண்டியிருந்தது. இந்தியாவுடன் இணைய மறுத்த சமஸ்தானங்களை வலுக்கட்டாயமாக இணைக்க வேண்டியிருந்தது. அப்படித்தான் இந்திய ராணுவத்தின் துணையோடு ஹைதராபாத் சமஸ்தானம் இணைக்கப்பட்டது. தனித்தியங்க விரும்பிய ஹைதராபாத் நிஜாமுடன் ஏற்பட்ட சிக்கல் மதக்கலவரச் சிக்கலாக உருவெடுத்தது. அத்தனை நாள் எந்த மதவேறுபாடுமின்றி ஒற்றுமையாய்ப் பழகி வந்தவர்கள் கூட, பிறரை எதிரியாய்க்கருதி ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். பிறர் உடமைகளுக்குச் சேதம் விளைத்தனர். உயிர்ச்சேதமும் நிகழ்ந்தது.
நிஜாமின் அடியாட்களான ரஜாக்கர்களுக்கு அஞ்சியவர்கள் தம் குடும்பத்தாரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பத் தொடங்குகின்றனர். ஆனால் இந்திய ராணுவம் வந்திறங்கியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது. அதுவரை ஓடியொளிந்தவர்கள் ரஜாக்கர்களைத் திருப்பித்தாக்க ஆரம்பிக்கிறார்கள். அச்சமயம் காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்படும் சந்திரசேகரன் அதை உறுதிப்படுத்திக்கொள்ள செகந்தராபாதின் சந்துக்களில் அலையும்போதுதான் தன் உயிரைக் காக்க ஒரு வீட்டுக்குள் புக நேரிடுகிறது. அச்சமும் பதற்றமுமாக அவ்வீட்டில் ஔிந்திருக்கும் ஒரு குடும்பத்தின் சிறுமி, தன்னை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்தை விட்டுவிடுமாறு வேண்டும்போது கலங்கிப் பதறுவது சந்திரசேகரன் மட்டுமல்ல நாமும்தான். தன்னை ஒரு பெண் எதிரியாய்க்கருதி மானத்தை இழந்தாவது தன் குடும்பத்தைக் காக்க நினைக்கும்படி அமைந்துவிட்டதே என்ற மனக்கசப்பை அவன் வாந்தியாய் துப்புவதோடு நாவல் முடிகிறது.
ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படும் காலம் வரையிலான நாவல் நிகழ்வில் செகந்தராபாத் நகரின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், கடைவீதிகள், வீதி அமைப்புகள், மக்களின் இயல்புகள், அவர்களின் குரூரம், சுயநலம், மூர்க்கமான குழுமனப்பான்மை முதலியவைகளை சாவதானமாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவரலாறும் மக்களின் சாமான்ய வரலாறும் ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து ஒரே இழையாய் சொல்லப்படுகின்றன. கலவரம் முளைவிட்டு வளரத்தொடங்கும் பொழுதுகளிலும் அம்மக்கள் கேரம், கிரிக்கெட், பாட்மிண்டன் விளையாடிக்கொண்டு, 'வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்ற மனப்பாங்கிலேயே இருக்கின்றனர். சந்திரசேகரனைச்சுற்றிலும் ஆங்கிலோ இந்தியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்களும் நிரம்பியிருக்கின்றனர். மதவேறுபாடு கலவரத்தில் கொண்டு விட்டபோதுதான் அம்மக்கள் தனித்தனித் தீவுகளாகி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மதம் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி இருந்த சந்திரசேகரனும் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு மதசார்புள்ளவனாகக் கருதி, பிறரை எதிரியாய்க் கொண்டு இறுதியில் தெளிவுறுகிறான்.
சந்திரசேகரன் என்னும் சிறுவனுக்குள் இருக்கும் வெறுப்புணர்வுடன் நிகழ்வுகளையும் மனிதர்களையும் முன் வைத்துக் கதையை நகர்த்தும் அசோகமித்திரன் அதன் வழியாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பண்பாட்டுக் கூறுகளால் பிளவுண்ட மனிதர்களுக்கிடையே உருவாகும் மனமுறிவுகள், ஐயங்கள், பயம், பதற்றம் என்பனவற்றைச் சித்திரித்துக் கொண்டே போகிறார்
இந்நாவலில் குறிப்பிடத் தக்க அம்சமாக அநேகமாக உரையாடல்களாலேயே இது உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இந்த உரையாடல்கள் மூலம் பாத்திரங்களின் குண விசேஷங்களும், பண்புகளும் பிரசன்னமாவதைக் கூர்ந்து நோக்கினால் காணமுடியும். நாவலில் அங்கங்கே இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் காட்சிகளை மிகத்துல்லியமான விவரங்களோடு, நுண்தகவல்களோடு அதே சமயம் அதிக அலங்காரமில்லாமல் விவரித்திருப்பது இந்நாவலை விட்டு சற்றேனும் விலக முடியாதவாறு நம்மைக் கட்டிப்போடுகிறது. ஒரு தனிமனிதனின் அனுபவங்களின் ஊடாகவே காட்சிகள் விவரிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடைய ஆன்மாவின் மௌன ஓலத்தை இதில் கேட்க முடிகிறது.
4 comments:
அருமையான விமர்சனம்
அவசியம் வாங்கிப் படிப்பேன்
நன்றி
ஆகா படித்தே ஆகவேண்டிய நூல் போல் இருக்கிறதே
தம+
சமீபத்தில்தான் முழு நாவலையும்
படித்து முடித்தேன்
நாவலின் அடி நாதம் புரிந்து
மிக மிக அருமையாக
விமர்சனம் செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Post a Comment