Monday, 15 June 2015

ஃபேஸ்புக்கில் பேசியவை - 5


சோடியம் விளக்கிலிருந்து 
கொட்டிக்கொண்டிருந்த பெருமழையில்
நனைந்து கொண்டிருந்த மஞ்சள் மாடொன்றின்
முதுகிலிருந்து குதித்த
நீலத்தவளை சொல்லிப்போயிற்று
மழை 
வானத்திலிருந்தும் பொழிந்து கொண்டிருப்பதை.

வட்டத்திற்குள் கட்டமும்
கட்டத்திற்குள் சதுரமும்
ஒன்றையொன்று சிறைப்படுத்தியும்
விட்டு நீங்கியும், முழுமைப்படுத்தியும்
ஒன்றுக்குள் ஒன்றாயும்
அன்னியப்பட்டும்..

கரடிக்குட்டியும் ஷ்ரெக்கும் 
சிண்ட்ரெல்லாவின் பொருட்டு நடத்தும் மௌனயுத்தத்தை 
வேடிக்கை பார்த்தவாறு பாடிக்கொண்டிருக்கின்றன டால்மேஷியன்கள் 
பொம்மைக்கூடைக்குள்..

நினைத்தாற்போல் கலைந்து
திடுமென நினைத்துக்கொண்டு மூடும்
மழைக்கருமேகங்களுக்கும்
எதற்காக அழ ஆரம்பித்தோமென்பதை மறந்து
அவ்வப்போது ரீங்காரமிட்டு வைக்கும்
குழந்தைக்கும் அதிக வித்தியாசமில்லை.

நேற்று வரை வெயிலடிக்கிறது எனவும்
இன்று முதல் மழையடிக்கிறது எனவும்
பிறர் கூரையோரமாய் ஒதுங்கும்
தனக்கெனக் கூரையற்றவனை
மௌனசாட்சியாய் வெறித்துக்கொண்டிருக்கிறது கூரை

கடந்து செல்லும் கால்களைத் 
தட்டித்தட்டிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது
பாதையில் புதைந்திருந்த கல்.

இந்த வழியாகச் சென்றிருக்கலாம்
அந்த வழியாகக்கூட சென்றிருக்கலாம்
இரண்டும் முட்டிக்கொள்ளும் 
கூட்டுப்பாதைச்சந்திப்பில்
எதிர்பாராத ஏதோவொன்றைச் 
சந்திக்க நேரிடுமெனில்
எந்தப்பாதை வழியாகச்சென்றால்தான் என்ன?

குளிர்ந்த இரவுக்குளத்தில் அல்லிகளாய்ப் பறிப்பாரற்றுப் பூத்திருக்கின்றன நட்சத்திரங்கள்.

தின்னும் தனிமைக்கு எண்ணங்களை இறைத்தவன் நட்சத்திரங்களை எண்ண ஆரம்பிக்கிறான் இன்னொரு முறை.

வளர்ப்பவனை நம்பாமல் வெட்டுபனை நம்பிய ஆடுகளின் கடைசிக்கணத்தில் கொலைவாளில் பிரதிபலித்தன அவை இழந்த அத்தனையும்.

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசித்தேன்..

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி. சாந்தி மாரியப்பன் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

நினைவில் நிற்போர் - 28ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/28.html

LinkWithin

Related Posts with Thumbnails