Saturday, 30 May 2015

வாங்கி பாத் (கத்தரிக்காய் சாதம்)

அதென்ன “வாங்கி பாத்” “வாங்காத பாத்” என்று குழம்ப வேண்டாம். கத்தரிக்காயை மராட்டியில் “வாங்கி” என்று சொல்வார்கள். பாத் என்றால் சாதம். “தால் பாத்” என்பது பருப்பு சாதத்தைக் குறிக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் அரிசியைக்குறிக்கும் “சாவல்” என்ற சொல்லையே எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறார்கள். எங்களூரில் இப்பொழுதெல்லாம் எல்லா வீட்டிலும் தால் சாவலே சாப்பிடுகிறோம். நம்மூரிலும் முன்னெல்லாம் சோறு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது வழக்கொழிந்து இப்பொழுதெல்லாம் எங்கெங்கு காணினும் சாதமே பரிமாறப்படுகிறது. 

அதிலும் இப்பொழுதெல்லாம் “வெள்ளை சாதம்” என்றொரு பெயர் கிளம்பி கிலியடிக்க வைக்கிறது. ஒரு விருந்தில் என்னிடம் “வெள்ளை சாதம் வைக்கட்டுமா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பேய்முழி முழித்தேன். மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு இலையில் பரிமாறப்பட்ட அந்த வஸ்துவைக்கண்டதும் கொஞ்சம் ஆசுவாசமும், கொஞ்சம் திடுக்கிடலும் ஏற்பட்டது. வெறுஞ்சோறு என்று அதுகாறும் அறியப்பட்டதே வெள்ளை சாதம் என்று புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது. இப்பொழுதெல்லாம், சைவ, அசைவ பிரியாணிகள் பரிமாறப்பட்டதும் அடுத்த ரவுண்டுக்கு வெறுஞ்சோற்றுடன் ரசமோ அல்லது சாம்பாரோ பரிமாறப்படுகிறதாம். சரி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அப்பாலிருந்து எப்பொழுதாவது ஊருக்கு வரும்போது இம்மாதிரியான திடுக்கென்ற திடுக்கிடல்கள் ஏற்படுவது ஜகஜமே. வேறென்னென்ன அயிட்டங்கள் என்னென்ன பெயர்களில் மாற்றப்படக்காத்திருக்கின்றனவோ. 

சூப்பர் மார்க்கெட்டில் எம்.டி.ஆர் மசாலாக்கள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரிப்பக்கம் சென்றபோதும் இப்படித்தான், “பிசிபேளா பாத்” என்ற பெயரைக்கண்டதும், அட!!.. இது நம்மூர் கூட்டாஞ்சோற்றுக்கு தங்கையல்லவோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கண்ணை ஓட்டியபோது தென்பட்ட “வாங்கிபாத்” பாக்கெட்டை வாங்கி வந்து செய்து பார்த்தேன். ருசி பரவாயில்லை ஆனால் வாயில் வைக்க முடியாத அளவுக்குக் காரம். பொதுவாகக் காரம் என்றாலே ஒதுக்கி விடும் மகளுக்கு இது ரொம்பப் பிடித்து விட்டது. செய்து தரச்சொல்லி அடிக்கடி கேட்பாள். ஆனால் என்ன காரணத்தாலோ மார்க்கெட்டில் எம்.டி.ஆரின் வாங்கி பாத் கிடைக்கவேயில்லை. கிடைத்த ரெசிப்பிகளையெல்லாம் முயற்சித்தாலும் ‘அந்த’ ருசி வரவேயில்லை. கிட்டாத பழம் ரொம்பவே புளித்ததால் அதன்பின் முயற்சிக்கவேயில்லை.

சமீபத்தில் நம் கீத்தா மாத்தாஜியின் வலைப்பூவில் இதன் செய்முறை கிடைத்தது. அதன்படி செய்து பார்த்தேன். ஆஹா!!.. அபார ருசி போங்கள். செய்முறையை இங்கேயும் தருகிறேன்.

கத்திரிக்காய் கால் கிலோ

வெங்காயம் பெரிது 2 (இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.)

பச்சை மிளகாய்  2  குறுக்கே கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி

உப்பு தேவையான அளவு

தாளிக்க வறுக்கத் தேவையான எண்ணெய்

ஒரு டீஸ்பூன் நெய், கடுகு, ஜீரகம், வேர்க்கடலை தோல் நீக்கியது இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையானால்.

பச்சைக் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

மசாலாப் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:

மி.வத்தல் நான்கு

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு, உபருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்

மிளகு அரை டீஸ்பூன்

கொப்பரைத் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள் இரண்டு டீஸ்பூன்

வேர்க்கடலை வறுத்துத் தோல் உரித்தது  ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்

லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு

சோம்பு ஒரு  டீஸ்பூன்

ஏலக்காய் பெரியது ஒன்று,

கிராம்பு ஒன்று.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆற வைத்துப் பொடி செய்து கொள்ளவும்.

உதிரி உதிரியாக சாதம் வடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதிலே கறிவேப்பிலை, பச்சைமிளகாயப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்க்கவும். கத்தரிக்காயைச் சற்று நேரம் எண்ணெயிலே வதக்கவும். பாதி வெந்திருக்கும் நேரம் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்க்கவும். சற்று வதக்கவும். இப்போது வறுத்துப் பொடித்துள்ள பொடியை அளவாகச் சேர்க்கவும். பொடியைச் சேர்க்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். சற்று நேரம் கிளறவும். பின்னர் எடுத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டுக் கலக்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்பு சாதத்திற்கு மட்டும் தேவைப்படும்படி சேர்க்கவும். நன்கு கிளறவும். இன்னொரு வாணலியை அடுப்பில் ஏற்றி ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கடுகு, ஜீரகம் சேர்க்கவும். வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையை அந்த நெய்யில் போட்டு உடனே அடுப்பை அணைத்துவிடவும். இவற்றை அந்த சாதத்தின் மேலே போட்டுக் கொத்துமல்லியும் தூவிவிட்டுக் கிளறவும்.  இதற்குக் காரட் துருவல், வெங்காயத் துருவல் போட்ட தயிர்ப்பச்சடி தொட்டுக்கொளள நன்றாக இருக்கும்.


ஆஹா!!.. அபார ருசி போங்கள். அரிசியை உபயோகித்துச் செய்தது வெற்றியடைந்ததால் பையருக்காக கோதுமை ரவையை உபயோகித்துச் செய்தேன். அளவாகத் தண்ணீர் வைத்து அதிலேயே கொஞ்சம் உப்புப்போட்டுக் கொதிக்க வைத்தபின் கோதுமை ரவையைப் போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு, கோதுமை ரவையை அப்படியே ஆற விடவேண்டும். கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் தண்ணீரும் உறிஞ்சப்பட்டு பொலபொலவென சாதம் வெந்து விடும். அதன் பின் செய்முறையின்படி சாதத்தைத் தயாரிக்க வேண்டியதுதான். பையருக்கும் இது ரொம்பவே பிடித்துப்போனது. தொட்டுக்கொள்ள மாங்காய்இஞ்சி ஊறுகாய் இருந்தால் அதிக ருசி.

எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வயிற்றில் "வாங்கி பாத்" வார்த்த மாத்தாஜிக்கு ஜே :-)

6 comments:

ஸ்ரீராம். said...

வரம் வாங்கி வந்த பாத்! :))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

’வாங்கி பாத்’
என்ற பெயரைப்படித்ததுமே உடனே வாங்கி வந்து சாப்பிடணும் போல ஆசையை ஏற்படுத்தியுள்ளது.

காட்டியுள்ள படங்களும், செய்முறை விளக்கங்களும், நகைச்சுவையுடன் அருமையாக உள்ளன.

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

geethasmbsvm6 said...

ஹாஹாஹா,ஹிஹிஹிஹி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆனால் எங்க வீட்டில் கோதுமை ரவையில் செய்தால் நான் தான் சாப்பிடணும். :)

ராமலக்ஷ்மி said...

குறிப்பும் வழங்கிய விதமும் அருமை.

ADHI VENKAT said...

கத்திரிக்காயே எங்கள் வீட்டில் பிடிக்காது என்றாலும் கீதா மாமியின் செய்முறை செய்து பார்க்கத் தோன்றுகிறது..

வாங்கிபாத் ஜோர்..

Thenammai Lakshmanan said...

ஹாஹா சூப்பர். இன்றே கத்ரிக்காய் வாங்கீ வாங்கீபாத் செய்து பார்க்கிறேன் :)

எம்டிஆரில் எனக்கு பாதாம் பால் மிக்ஸும் குலாப் ஜாமூன் மிக்ஸும் கூட ரொம்பப் பிடிக்கும் :)

LinkWithin

Related Posts with Thumbnails