Wednesday, 4 February 2015

இப்பொழுது இரண்டாமிடம்.. ச்சாய்ஸில் எப்போதும் முதலிடம்.

முத்து, மணி, என்று ஏதோ ஒரு பெயரில் கிராமங்களில் வளர்பவையாகட்டும், ஜிம்மி, ஜானி, சாக்லெட், ஃபேஸ்புக்,, ரூஷி என்று பெயரிடப்பட்டு நகரங்களில் வளர்க்கப்படுபவையாகட்டும் மனிதர்களோடு பிரிக்க முடியாத ஒரு அன்புப்பிணைப்பை ஏற்படுத்தி விடுகின்றன இந்த ஜீவன்கள். கிராமங்களைப்பொறுத்தவரை முதலில் காவலுக்காகத்தான் வளர்க்க ஆரம்பிக்கப்படுகின்றன. அதனாலென்ன,.. காவலரும் நம் குடும்பத்தில் ஒருவர்தானே.

எங்கள் தாத்தா வீட்டில் ஒரு நாய் வளர்ந்தது. தாத்தாவின் கூடவே அதுவும் விடியற்காலையில் வயலுக்குப்போய் கொக்குகளை விரட்டுவது, வரப்பில் முடங்கித்தூங்குவது போன்ற மேல்வேலைகளைப் பார்த்து விட்டு, இரவில் களைத்துத்தள்ளாடியபடி வரும். பகலில் ஆளையே காணாது. என்றாவது ஒரு நாள் தாத்தா சீக்கிரம் வந்து விட்டாலும் அது தனது வழக்கமான நேரத்துக்குத்தான் வரும். “கஞ்சிய நேரத்தோட ஊத்துனாத்தான் என்னா?” என்ற அலுப்பு தொக்கிய முகத்துடன் போய் கோழிக்கூட்டின் மேல்திண்ணையில் போய் முடங்கிக்கொள்ளும்.

சிறுவயதில், அப்போது கைக்குழந்தையாக இருந்த என் தம்பியை இடுப்பில் வைத்துக்கொண்டு படிக்கட்டில் படுத்துக் கண் வளர்ந்து கொண்டிருந்த நாயைக்காட்டி “பட்டி பாரு.. த்ச்.. த்ச்.” என்று விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தேன். கனவில் என்னத்தைக்கண்டதோ!!.. என் ஆள்காட்டி விரலைக்கவ்வி விட்டது. பல் பதிந்து ரத்தம் கொடகொடவென்று கொட்ட திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த என்னைக்கண்டதும் அந்த வீட்டம்மா தரதரவென்று வீட்டினுள் கிட்டத்தட்ட இழுத்துச்சென்றார். ஒரு துண்டு கருப்பட்டியைக் கொடுத்து மென்று தின்னச்சொல்லி, ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய்யையும் கொடுத்து குடிக்கச்சொன்னார். கடிபட்டவருக்கு நாயின் உரிமையாளர் வீட்டிலிருந்து இதெல்லாம் செய்யவேண்டுமென்ற சம்பிரதாயமாம். கருப்பட்டியைக்கண்டு அகமகிழ்ந்தாலும் நல்லெண்ணையைக் கண்டதும் ஓடப்பார்த்தேன். விடாப்பிடியாகப் புகட்டி விட்டு என் வீட்டிற்குத்தகவல் சொல்வதற்காக கூடவே ஒரு ஆளையும் அனுப்பி வைத்தார்கள். ஆரம்பித்ததைய்யா வினை..

மறுநாள் அரசாங்க ஆஸ்பத்திரிக்குப்போய் ஒரு ஊசி, ஒரே ஒரு ஊசி போட்டு விட்டு வந்தேன். அன்றிலிருந்து நாற்பத்தொரு நாட்களுக்கு உப்பில்லாத பத்தியச்சாப்பாடுதான். சிறு பயிறை உப்பில்லாமல் அவித்துத் தின்னத்தருவார்கள். அதை உப்புப்போட்டு அவித்துத்தந்தாலே அப்பொழுதெல்லாம் சாப்பிடமாட்டேன். பற்றாக்குறைக்கு நான் சாப்பிட்டதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து தினமும் அந்த நாய்க்கும் போடுவார்கள். என்னைக் கடித்த தவறுக்காக அந்த நாயும் தினமும் உப்பில்லாப்பத்தியம் இருந்தது. போதாக்குறைக்கு வேறு யாரையும் கடித்து விடக்கூடாதென்று அதற்கு வீட்டுச்சிறை வேறு.
Great dane என்றும் அறியப்படும் German Mastiff இனத்தைச்சேர்ந்த இவரைப்பற்றிய தகவல்கள்  வலையில் நிறையக்கிடைக்கின்றன.
நாய் வளர்க்க வேண்டுமென்று ஆசையாக இருந்தாலும் இந்த சாங்கியங்களால் ஆசையை முளையிலேயே கிள்ளி விடுவதுண்டு. இருந்தாலும் எப்பொழுதாவது அப்பொழுதுதான் கண் திறந்த குட்டிகள் எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டொரு மாதங்கள் வளர்ந்து விட்டு வேறு எங்காவது போய் விடும். 

பக்கத்து வீட்டில் இருந்த அல்சேஷனுக்கு ரொம்பவும் குழந்தை மனசு. யார் லிப்டில் போனாலும் தன்னையும் கூட்டிப்போகச்சொல்லி அடம்பிடிக்கும். லிப்ட் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடி வந்து மேலே மோதும், இழையும். மனிதர்களிடம் கொண்டிருக்கும் தன் பிரியத்தைக் காண்பிப்பதற்காக அது செய்யும் வித்தைகள் இருக்கிறதே அட!! அட!! அட!! மகளுக்கு நாய் வளர்க்க ஆசையாக இருந்தாலும், கிட்டே நெருங்கப்பயப்படுவாள். அவள் கல்லூரி விட்டு வரும் நேரத்தில் நான் வாசற்கதவைத்திறந்தே வைத்திருப்பேன். லிப்ட் கதவின் கண்ணாடி வழியே பார்த்து விட்டு நாய் இல்லையென்றால் ஒரே பாய்ச்சலாய் வீட்டுக்குள் ஓடி வந்து விடுவாள். இல்லையென்றால் நான் பாதுகாப்பாய் கூட்டி வர வேண்டியிருக்கும். இதுவே ரங்க்ஸ் வரும்பொழுது பின்னாடியே எங்கள் வீட்டுக்குள்ளும் வந்து விடும். ஐந்து நிமிடமாவது கொஞ்சிக்குழைந்த பின் மனமேயில்லாமல் தன் வீட்டுக்குப்போகும்.

வீட்டுக்குக்கூட்டி வந்து வளர்த்தால்தான் வளர்ப்புப்பிராணியா? தெருக்களில் ஆதரவற்றுத்திரியும் நாய்க்குட்டிகள் எத்தனையோ இருக்கின்றன. பாசத்தை அவற்றுக்கும் கொஞ்சம் பங்கிட்டுக்கொடுக்கலாமே. வீட்டருகில் ஒரு நாய் ஐந்து குட்டிகளை ஈன்றிருந்தது. எலும்பும் தோலுமாக மடியே இல்லாமல் இருந்த அந்தத்தாயால் குழந்தைகளின் வயிற்றை நிரப்ப இயலவில்லை. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் பால், பிஸ்கட், ப்ரெட், சப்பாத்தி என்று கொண்டு வந்து ஊட்டுவார்கள். ஆனாலும் அது தன் கடமையை விடாமல் செய்தது. குழந்தைகள் பசித்திருக்கக் கண்டிருக்கும் தாய்மையும் உண்டா என்ன? தான் என்ன துன்பப்பட்டாலும் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதானே தாய்மை. இம்மாத பிட் தளத்தின் மாதாந்திரப்போட்டியும் இந்தத்தலைப்பையொட்டியே வந்ததால் நான் அனுப்பிய இந்தப்படம் இரண்டாம் இடத்தை வென்றது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்பொழுதும் நாய் வளர்க்க வேண்டுமென்ற மகளின் ஆசையை பராமரிப்பைக் காரணம் காட்டித்தான் நொறுக்கிப்போடுகிறேன். அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் நாய் வளர்க்க அனுமதி கிடையாது. கிடைத்தாலும் அவர்கள் போடும் விதிமுறைகளில் அந்த ஆசை தானாகவே அழிந்து போகும் என்பது இரண்டாவது காரணம். வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டு சரியாகப் பராமரிக்காமல் விடுவதை விட, அது நல்லதொரு பராமரிப்பாளரின் கையில் சென்று சேர்வது நல்லதல்லவா?..

8 comments:

மோகன்ஜி said...

சுவானம் குறித்து சுவாதீனமாய் எழுதியிருக்கிறீர்கள். 'நாய் வளர்ப்பது' என்பதே தவறான பதம்.. நாய்தான் நம்மில் அன்பையும்,வாஞ்சையையும் வளர்க்கும். நாய் எனும் ஜீவன் மனிதனுக்கு இறைவன் தந்த வரம்

கரந்தை ஜெயக்குமார் said...

எங்கள் வீட்டிலும், கடந்த நான்கு மாதங்களாக, ஒரு நாய் குட்டி வளர்ந்து வருகிறது.எங்கள் குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்டது.
படங்கள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே
நன்றி
தம +1

வல்லிசிம்ஹன் said...

நாய் வளர்ப்பு நம் நல்ல குணங்களையும் வளர்க்கும்னு நம்புகிறேன்.க்ரேட் டேன் தோழி வளர்த்தாள். அப்பாடி தோளுக்கு மேல கால் வச்சுக் கொஞ்சும். லாப்ரடரும் அருமை. உங்கள் படங்கள் செல்லம் போல இருக்குமா ஷாந்தி. தாத்தாவிட்டு நாயைப் பார்க்கணும் போல இருக்கு. போட்டியில் வெற்றி இடம் பிடித்ததற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

//அரசாங்க ஆஸ்பத்திரிக்குப்போய் ஒரு ஊசி, ஒரே ஒரு ஊசி//

அப்போ, தொப்புளைச் சுத்தி 16 ஊசி என்பதெல்லாம் கிடையாதா அபப்வும்?

/நாயின் உரிமையாளர் வீட்டிலிருந்து இதெல்லாம் செய்யவேண்டுமென்ற சம்பிரதாயமாம்//

நல்ல சம்பிரதாயம்!! ரெண்டு பட்டுப் பாவாடை எடுத்து, தட்டுல வெத்தில-பாக்கு வச்சு கொடுத்தாலாவது சமாதானமாகும். :-)

உங்க பதிவைப் பாத்துட்டு, கருப்பட்டி, நல்லெண்ணய்க்கு நாய்க்கடியைக் குணப்படுத்தும் மகிமை இருக்கிறதுன்னு இப்ப யாராவது ஸோ-கால்ட் “இயற்கை வைத்தியர்கள் ஆரம்பிக்கப் போறாங்க!!

கோமதி அரசு said...

கருப்பட்டியும் நல்லெண்ணய், பழைய சாத தண்ணீர் (நீராகாரம்) அதையும் வாங்கி குடிக்கச் சொல்வார்கள். நீங்கள் சொல்வது போல் தினம் நாயை கவனித்துக் கொள்வார்கள்.

படங்கள் எல்லாம் அழகு.

ராமலக்ஷ்மி said...

பத்தியச் சாப்பாடுடன் விட்டார்களே, வரிசையாக ஊசியைப் போடமல்:).

எல்லாப் படங்களும் அருமை. போட்டியில் வென்றிருப்பது அற்புதமான படம். நல்வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். நாய்க்கடி வாங்கியிராவிட்டாலும் அவைகளோடு கிடைத்த அனுபவங்கள் உண்டு! :))))

போட்டியில் இரண்டாமிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் சாந்தி

LinkWithin

Related Posts with Thumbnails