கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தோரணங்களுடன், வாசலில் குலையுடன் கூடிய வாழைமரம் போன்றவற்றைக் கட்டி வைத்து அலங்கரிப்பது வழக்கம். அதிலும் திருமணங்களில் கூடுதல் அலங்காரமாக செவ்விளநீர்க்குலைகளையும் வாசலில் கட்டி வைப்பார்கள். சில காலம் முன்பு வரைக்கும் திருமணங்களை வீட்டில், முற்றத்திலோ அல்லது வீட்டின் முன்பக்கத்திலோ, அருகிலோ இருக்கும் மைதானங்களில் தென்னையோலைக் கிடுகுகளால்(பின்னப்பட்ட ஓலைகள்) ஆன பந்தலிட்டு நடத்துவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பந்தலைத் தாங்குவதற்காக ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் மூங்கில் கம்புகளில் அலங்காரமாக வித்தியாசமான பச்சை ஓலைகளையும் செருகியிருப்பார்கள். மீன் வால் மாதிரியும் சிறகுகள் மாதிரியும் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருக்கும் அந்த ஓலைகள் கூந்தல் பனை என்றும் உலத்தி என்றும் அழைக்கப்படும் மரத்தினுடையவையே.
கூடுதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வாசல் அலங்காரத்தில் கூந்தல் பனையின் கூந்தலையும் கட்டி வைப்பார்கள். ஒரு கூந்தலை இரண்டாக வெட்டி இரண்டு பக்கமும் கட்டுவது வழக்கம். "என்னது!!.. கூந்தலா?" என்றுதானே நினைக்கிறீர்கள்.பச்சைப்பட்டாணிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் நீளமான சாட்டைகளைச் சேர்த்துக் கட்டியதுபோல் காட்சியளிக்கும் பூங்கொத்தைத்தான் கூந்தல் என்று சொல்லுவோம். சிறுசிறு அரும்புகள் போன்று காட்சியளிக்கும் பூக்கள் முதிர்ந்து பட்டாணியளவில் சின்னஞ்சிறு காய்கள் ஒட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும். இப்பருவத்தில் ஒரு கூந்தலின் விலை இரண்டாயிரம் வரைக்கும் போகுமாம். கல்யாண வீடுகளில் முஹூர்த்தம் முடியும்வரைக்கும் கூடக் காத்திருக்காத பொறுமையிழந்த குழந்தைகள், இந்தச்சாட்டைகளை அறுத்து வைத்துக்கொண்டு மனம்போல் விளையாடுவதுண்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'உலத்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caryota urens. 'யா மரம்' என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ். லத்தீன் மொழியில் urens என்ற பெயருக்கு 'அரிக்கும் தன்மையுடையது' என்ற அர்த்தமுண்டு. பெயருக்கேற்றாற்போல் கூந்தலில் இருக்கும் காய்களை வெகு நேரம் கையாண்டால் லேசான அரிப்பு ஏற்படும்.(இதிலிருக்கும் ஆக்சிலிக் ஆசிட்டின் காரணமாகவே அரிப்பு ஏற்படுகிறதென்று அறிவியல் சொல்கிறது.) இதற்காகவே சிறுவயதில் நாங்கள் இதை வைத்து விளையாடும்போது பெரியவர்கள் எச்சரித்த நினைவிருக்கிறது.
இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக்கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப்போலவும் தோன்றுவதால் கூந்தற்பனை, மற்றும் உலத்தி என்ற பெயர்கள் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. பனைவகையைச் சேர்ந்த இம்மரங்கள் சுமார் 15 மீ. வரை வளரக்கூடியது. வழவழப்பான, உருண்டையான இதன் தண்டுப்பகுதி சுமார் 30 செ.மீ விட்டமுடையதானதாக இருக்கும். உதிர்ந்த இலைகள் இதன் உடலில் விட்டுச்செல்லும் தடங்கள் பார்ப்பதற்கு வளையங்களைப் பதித்தது போலவே இருக்கும். கூந்தற்பனை (இலங்கை வழக்கில் கித்தூள்) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவரஇனமாகும்.
பொதுவாகவே பனைக்குடும்ப வகையைச் சேர்ந்த மரங்களிலிருந்து பதநீர் இறக்கப்படுவதும், அது காய்ச்சப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதும் உண்டு. இதற்கு கூந்தற்பனைமரமும் விதி விலக்கல்ல. இதிலிருந்து இறக்கப்படும் நீர் 'கித்தூள் பானி' என்று அழைக்கப்படுகிறது. இளநீர், பதநீர் என்று அழைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மரங்களை இளநீர் மரம் என்றோ பதநீர் மரம் என்றோ நாம் அழைப்பதில்லை. மாறாக தென்னை, பனை என்று அழைக்கிறோம். ஆனால், கூந்தற்பனையிலிருந்து பெறப்படும் நீர் 'கித்தூள்' எனப்படுவதால் கித்தூள் மரமென்று அழைக்கப்படும் பெருமை இம்மரத்திற்கு மட்டுமே உண்டு. ஆமாம்,..இலங்கையில் இந்த மரத்தைக் கித்தூள் மரமென்றுதான் அழைக்கிறார்கள் :-)) சமையலில் வழக்கமான வெல்லத்திற்குப் பதிலாக இதைப்பயன்படுத்தி இனிப்புகள் செய்யலாம்.
இதன் அழகான கூந்தலுக்காகவும் இலையின் அழகுக்காகவும் இது வீட்டின் உள் மற்றும் வெளி அலங்காரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. ஓரளவு வளரும்வரை தொட்டிகளில் க்ரோட்டன்ஸ்களைப்போல் வீட்டுக்குள் வளர்த்துவிட்டு பின் வெளித்தோட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். நவிமும்பையில் சில பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் தொட்டிகளிலும் அழகுக்காக வளர்க்கப்படுவதுண்டு. இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்ததுமே சின்னதாகப் பாளை விட்டு அரையடிக்கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு நிற்கும் சின்னஞ்சிறு உலத்திகளைப் பார்க்கும்போது 'பாப்'வெட்டிக்கொண்ட எலிக்கேஜி குழந்தையைப் போலிருக்கும்.
தென்னை மற்றும் பனை மரங்களைப்போலவே இதிலும் ஒவ்வொரு மடலுக்கும் ஒரு பாளை வரும். அந்தப்பாளை வெடித்து வரும்போது கூந்தலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து இறுதியில் ஒன்பதடிக்கூந்தலை உலர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்பாள் இந்தக் கூந்தலழகி. தனிமரம் தோப்பாகாதுதான். ஆனால், நன்கு செழித்து வளர்ந்த ஒரே ஒரு கூந்தற்பனை கிட்டத்தட்ட தோப்பையே வளர்க்கும் தோற்றத்தைக் கொடுக்கும். ஒரு கூந்தற்பனையை வீட்டு முன் தோட்டத்தில் வளர்த்தாலே போதும்.. வீட்டுக்கே ஒரு தனியழகு வந்தது போலிருக்கும். வீட்டின் முன் அலங்கரித்த தேரை நிறுத்தியிருப்பது போன்றதான, யானையைக் கட்டிப்போட்டு வளர்ப்பது மாதிரியான அழகு அது.
டிஸ்கி: இந்தக்கட்டுரை தமிழ்மரபு அறக்கட்டளையின் படக்காட்சி வலைப்பூவிலும் இணைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி சுபாஷிணி& கண்ணன்.
36 comments:
குறுந்தொகையில் சொல்லப்பட்டிரிப்பது வியப்பானசெய்தி. எல்.கே.சி. பெண் போல என்ற உங்க உவமை அழகு. படங்கள் ரம்யம்.
என்னவொரு அழகான மரம்... கூந்தலழகி மரம்...!
உங்களின் அழகிய வர்ணனையும் அப்படித்தான் அழகாக தோன்றுகிறது...! வாழ்த்துக்கள்...
நன்றி...
இது வரை அறியாத்தகவல் கன்னியாகுமரி பற்றி...
அடடா... என்ன அழகு!!!!!!
காய்த்த மரம் கண்டிருக்கிறேன். பூத்தமரம் பார்த்தில்லை!
அருமையான தகவல்கள்.
கித்தூள்ன்னு கடையில் ஸ்ரீலங்கா பகுதியில் பார்த்தேன். அப்போ அது இதுதான்னு தெரியாது!!!
நன்றீஸ்
அரையடிக்கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு நிற்கும் சின்னஞ்சிறு உலத்திகளைப் பார்க்கும்போது 'பாப்'வெட்டிக்கொண்ட எலிக்கேஜி குழந்தையைப் போலிருக்கும்.//
அழகான கற்பனை!
kithul paniyoda getti thayir serthu colombola sapitadhu gyapagathuku varuthu. :))
உலத்தி பெயர் எனக்குப் புதிது. படங்களும் தகவல்களும் அருமை. நல்ல பகிர்வு.
நிறைய புது தகவல்கள், சுவாரஸ்யமாகவும் இருந்தது.
ஆமா, என்ன ஒரே Palm tree பதிவா இருக்கு? தோப்பு கீப்பு வாங்கறதுக்காக ஆராச்சியா? :-))))))
கண்ணைக் கவர்கிறது கூந்தற்பனைப் படங்கள்.
அழகான படங்கள் + அற்புதமான புதுமையான விளக்கங்கள். பாராட்டுக்கள்.
ஹை! கித்துள்!
எங்கள் வீட்டில் கித்துள் பாணியும் கித்துள் பனங்கட்டியும் இல்லாமல் இருந்த நாளே கிடையாது. அதன் சுவை வேறு எதற்கும் வராது.
ஊரில் இருந்த பொழுது ஒரு மரம் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முடியவில்லை. இங்கு தாவரவியற் பூங்காவில் இருக்கிறது - அழகுக்காக.
கூந்தற்பனை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் பார்க்கிறேன். உலத்தி என்ற பெயரும் வெகுபொருத்தம். பாப் வெட்டிக்கொண்ட குழந்தைபோல், அலங்கரித்த தேர் போல், கட்டிவைக்கப்பட்ட யானைபோல் என்று உவமைகளின் மூலமே மரத்தின் அழகை ரசிக்கவைக்கிறீர்கள். படத்துடன் பல தகவல்களைப் பகிர்ந்து புதிய விஷயங்களை அறியச்செய்தமைக்கு நன்றி அமைதிச்சாரல்.
அட! நம்மஊர்:)) கூந்தல்அழகி பற்றி விரிவாக பகிர்ந்துள்ளீர்கள்.
விரும்பினால் கித்துள் பாணி சாப்பிட வாங்க ..... http://sinnutasty.blogspot.com/2010/02/blog-post.html
நன்கு செழித்து வளர்ந்த ஒரே ஒரு கூந்தற்பனை கிட்டத்தட்ட தோப்பையே வளர்க்கும் தோற்றத்தைக் கொடுக்கும்.
அழகான பகிர்வுகள்.. திருமண இல்லங்களில் மங்களத்தைப் பறைசாற்றி எழிலாக தோற்றம் தரும் கூந்தல் பனையின் அழகை ரசிக்கலாம் ..!
கூந்தப்பனை பார்த்திருக்கிறேன்.... அழகாக விளக்கியிருக்கிறீர்கள்....
இந்த முறை நாகர்கோவில் சென்ற போது நண்பர் வீட்டிற்கு அருகில் ஒரு கோவிலில் கட்டியிருந்தார்கள்... அப்போது இது கூந்தப்பனையில் இருப்பது என்று ஞாபகத்தில் இல்லை... என் மனைவி என்ன இது அழகா என்று நண்பனிடம் சொல்ல எனக்கும் ஞாபகம் வந்தது....
கூந்தற்பனை.... என்ன அழகு....
படங்கள் கண்களை அள்ளுது.....
விரிவான தகவல்களுக்கு நன்றி.
கூந்தல்பனை பற்றிய படங்களும், தகவல்களும், உவமைகளும் அருமை.
தில்லியில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ரோஜா பார்க்கில் (ஃபிப்ரவரி மாதத்தில் ரோஜாக்கள் பூத்து குலுங்குவதால்) இந்த மரத்தை பார்த்திருக்கிறேன்.
இந்தக்கட்டுரை தமிழ்மரபு அறக்கட்டளையின் படக்காட்சி வலைப்பூவிலும் இணைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி சுபாஷிணி& கண்ணன்.
வாங்க பாலகணேஷ்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க தனபாலன்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க சங்கவி,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க துள்சிக்கா,
பூத்திருக்கும் சமயம் கிட்டே போய்ப்பார்த்தால் தென்னம்பூக்கள் மாதிரிதான் இருக்கு. ஒரு பூக்கண்காட்சியில் இதன் காய்களை சாட்டையோட வெச்சுருந்ததைப் பார்த்தேன். நல்லா நெல்லிக்காய் சைஸ்ல இருந்தது ஆச்சரியமாயிருந்தது.
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க டி.பி.ஆர்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க தென்றல்,
உங்க நினைவுகளைக் கிளறி விட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஒரு பதிவு கிடைக்குமில்லே :-))
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஹுஸைனம்மா,
தென்னந்தோப்புல கயித்துக்கட்டில்ல உக்காந்து இளநீர் குடிக்கிறதுக்காவது தோப்பு வாங்கணும்தான்.
ஆனா, நான் போயி தோப்பு வாங்கறவரைக்கும் நம்மூர்ல அதெல்லாம் பிழைச்சுக்கிடக்காது போலிருக்கு. எல்லாமே ப்ளாட் ஆகுதாம் :-(
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஸ்ரீராம்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க வை.கோ ஐயா,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க இமா,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க கீதா,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க மாதேவி,
ஜொள்ளு வடிய வைக்கிறீங்கப்பா. கித்துள் பாணி சாப்பிட வரேன் :-)
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ராஜராஜேஸ்வரி,
எங்கூர்ல கல்யாண அலங்காரங்கள் ஒருசில இடங்களில் இன்னும்கூட கொஞ்சம் பழமை முறையில்தான் இருக்குது. அதனாலதான் இதெல்லாம் பார்க்கவும் முடியுது.
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க குமார்,
எங்க பக்கங்களில் கோவில் விழாக்களிலும் திருமணங்களிலும் அலங்காரம் ஏறக்குறைய ஒண்ணுபோல்தான் இருக்கும். செவ்விளநீரும் கட்டியிருந்துருப்பாங்களே!!..
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க வெங்கட்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஆதி,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.
குமரியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை திருமண வீடுகளில் வாழை மரத்துடன் உலத்தி குலை (கூந்தற்பனை), ஓலை, செவ்விழனி, சணல் ஓலை அலங்காரம் அநேகமாக இருக்கும். அப்போது வாழை மரத்தை வைத்தே திருமண வீட்டினரின் வசதியையும், அங்கு போடும் உணவையும் கணித்து விடலாம். வசதியான திருமணம் என்றால் செவ்வாழை கட்டியிருப்பார்கள். கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் ரசகதலி போன்ற சிறிய பழ ரகங்களை கட்டியிருப்பார்கள். தற்போது சணல் ஓலை அலங்காரம் குறைந்து விட்டது.
Post a Comment