Monday 15 April 2013

வாங்க.... ரசிக்கலாம் (பண்புடன் இதழில் வெளியானது)


“ஹைய்யோ.. என்னமா ஜொலிக்குது இந்த நட்சத்திரங்களெல்லாம்”.. பயணத்தின்போது கார் ஜன்னல் வழியே வானத்தை எட்டிப்பார்த்த பையர் ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார். டிட்வாலா போய் சனிக்கிழமை சதுர்த்தியும் அதுவுமாக பிள்ளையாரைத் தரிசனம் செய்து விட்டு நல்ல இருட்டில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சட்டென அப்படியே பதினெட்டு வருடங்கள் பின்னால் சென்று விட்டாற்போன்ற குதூகலம் பையர் குரலில் தொனித்தது. “வீட்டுல பால்கனியில் நின்னாக்கூட நட்சத்திரம் பார்க்கலாம்ப்பா” என்று சொன்னேன். “ஆனா, இந்த அளவுக்குத் தெளிவாத்தெரியாதும்மா. நகரத்துல ஒளி மாசு அதிகமா இருக்குது, அதோட வீரியத்தால வானத்துல இருக்கற நட்சத்திரங்கள் தெளிவாத் தெரியறதில்லைன்னு எங்கியோ வாசிச்சேன். ஆனா, இது காட்டுப்பாதையா இருக்கறதால மினுக் மினுக்ன்னு மின்னுறது நல்லாவே தெரியுது” என்று ஆச்சரியம் அகலாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.உண்மைதான், கருகருவென்ற வெல்வெட்டில் வெண்முத்துகளையும் வைரங்களையும் சிதறி விட்டிருந்தாற்போல் சோகையாகவும் பளீரென்றும் டாலடித்துக் கொண்டிருந்தன விண்மீன்கள்.

“இந்த மாதிரி அழகான இருட்டுல நட்சத்திரங்களைப்பார்த்து எவ்ளோ காலமாச்சு!!..” தன்னை மறந்து லயித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ம்.. அதான் தெனமும் பார்க்கறோமே..” என்று கொக்கி போட்டேன்.

“இல்லைம்மா,.. ராத்திரியில் கரண்டு போகணும். அந்த இருட்டுல வானத்துல தெரியுற நட்சத்திரம் பார்க்கணும். எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா?.. ஒருக்கா,.. ஆச்சி வீட்டுக்குப் போயிருந்தப்ப ராத்திரி லைட்டு போயிருச்சு. அப்ப முத்தத்துல(முற்றத்தைத்தான் அப்படிச் சொல்கிறார் :-))) கட்டில் போட்டுப்படுத்துக்கிட்டு மேல வானத்துல தெரிஞ்ச நட்சத்திரத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தோம். எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த நாட்களுக்குள் நுழைந்து விட்டது புரிந்தது.

“அப்படியா?.. எப்போ பார்த்தோம்” என்றேன்.

“அப்ப நான் நாலாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம் இன்னிக்கு மாதிரி ரசிச்சுப் பார்த்ததேயில்லை. அதென்னவோ,.. தோணவேயில்லை” என்றார். நான் கடைசியாக எப்பொழுது நட்சத்திரங்களை அவற்றுக்காகவே பார்த்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

காலேஜ் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து படிக்கும்போது (நம்புங்கப்பா.. :-)) முற்றத்தை அடுத்திருக்கும் முன்னறையின் மேற்கூரை மட்டத்தில் விடிவெள்ளி இருக்கும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்தபடியே கிடந்து விட்டு மெதுவாக எழுந்திருப்பேன். அதைத்தவிரவும் எனக்கு மிகவும் பிரியமான நட்சத்திரக்கொத்து ஒன்றும் உண்டு. அதற்கு கரடித்தலை என்றே பெயர் சூட்டியிருந்தேன். (அதன் உண்மையான பெயர் orion the hunter) அறுபது அல்லது எழுபது டிகிரி கோணத்தில் ஒரே நேர்கோட்டில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். பூமியின் சுழற்சியைப் பொறுத்து பாகையளவு மாறும். அதன் இடப்பக்கம் இந்தப்பக்கம் ஒன்றும் அந்தப்பக்கம் ஒன்றுமாக இரண்டு நட்சத்திரங்கள், அதில் ஒன்று இந்தக் கரடித்தலையிலிருக்கும் கண் மாதிரியே இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதை ரசித்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஆனால் இந்த ரசிப்பும், பொழுதுபோக்கும் ஏதோவொரு புள்ளியில் என்னையறியாமலேயே நின்று போயிருந்திருக்கின்றன. பையருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதை உணர்ந்து ‘ஞே’வென விழிக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கையில் இப்படித்தான்,.. ஒவ்வொரு அழகான விஷயங்களையும் கண்ணலக ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு நம் விரல் பிடித்து நடந்து கொண்டிருந்த சிறு குழந்தை எப்போது விலகிச்சென்றது என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். மாறுதல்களுக்கேற்ப மாறித்தானே ஆக வேண்டும் என்ற நியதிக்கேற்ப நாமென்னவோ பெரியவர்களாகி விடுகிறோம். ஆனால், நாம் விட்டு விட்டு வந்த அந்தக் குழந்தை நம் வரவை நோக்கி அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கும். சரியான சமயத்தில் அதைக் கண்டு கொண்டால் உதடு பிதுங்க, முகம் அழுகையில் கோணியபடி, கண்ணீர் நதிகள் பெருக்கெடுக்க ஓடி வந்து நம்மைக் கட்டிக்கொள்ளும். அந்தச் சிறுகுழந்தை வேறு யாருமல்ல. நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தை மனம்தான். நாம் பெரியவர்கள் ஆனாலென்ன?. அந்தக் குழந்தையும் அதன் பாட்டிற்கு ஒரு ஓரமாய் வந்து கொண்டிருக்கட்டுமே.

நாமெல்லோருமே ஒரு குறிப்பிட்ட வயது வரை, கேள்விக்குறி போல் வளைந்த நாயின் வால், பொன்வண்டின் முதுகில் மினுங்கும் வண்ணங்கள், மழையில் குளித்த ரோஜாக்கள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்திருப்போம். மழை பெய்யும்போது வேண்டுமென்றே தொப்பலாக நனைவதும், நீர் தேங்கியிருக்கும் சின்னப்பள்ளங்களில் தபாலென்று குதித்து மற்றவர்களை நனைப்பது அல்லது வழிந்து சொட்டும் மழை நீரை உள்ளங்கையில் நிறைத்து நண்பர்களின் முகத்தை நனைப்பதுமாக   இருந்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் “சனியன் பிடித்த மழை” என்று திட்டத்தொடங்குவது ஆரம்பித்து விடுகிறது.

காரணங்கள் சுலபமானவை.. சிறு குழந்தைகளாக இருந்தவரைக்கும் கவலைகள் இல்லை, பொறுப்புகள் இல்லை… இந்தக்காலத்திய குழந்தைகளானாலும் கூட. அதுவே,.. வளர வளர எதிர்காலம் பற்றிய பயம், காத்திருக்கும் பொறுப்புகள் போன்றவை நம் மனதை ஆக்கிரமிக்கின்றன. குருவிகளின் கீச்.. கீச் போன்ற ரசித்த விஷயங்கள் இப்போது எரிச்சலூட்டுகின்றன அல்லது அமைதியாகக்கடந்து செல்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சிடுமூஞ்சிகளாகவோ இயந்திரங்களாகவோ மாறி விடுகின்றோம். மனதை இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தால் இதைத்தவிர்க்கலாம். ‘அதற்காக எப்பொழுதுமே விளையாட்டுப்பிள்ளையாக இருக்க முடியுமா?’ என்ற கேள்வி எழலாம். எப்பொழுதும் இல்லாவிட்டாலும் சில சந்தர்ப்பங்களிலாவது நம் மனதை விளையாட்டுப்பிள்ளையாக இருக்க விடுதல் நல்லதே. இறுக்கங்கள் விலகி பழையபடி உற்சாகமாகி விடலாம்.

இந்த விஷயத்தில் பெண்களிடம் கவனித்த ஒரு சில விஷயங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் புடவை, பூ, லேசான மேக்கப், உடற்பயிற்சி என்று ரசனையுடன் பளிச்சென இருக்கும் நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பாகக் குழந்தைகள் பிறந்தபின் நம்மைக் கவனித்துக்கொள்வதில்லை? இனிமேல் என்ன வேண்டியிருக்கிறது என்று இழுத்துச் சொருகிய புடவை, அல்லது கசங்கிய நைட்டி, அள்ளி முடிந்த கூந்தல் என்று ஏனோதானோவென்று இருக்க ஆரம்பித்து விடுகிறோம். எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அலங்காரங்கள். சில இடங்களில் ஊர் வாய்க்குப் பயந்து கொண்டும் அப்படி இருப்பதுண்டு. எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகள் பெரிய பெண்ணாக ஆனபின் தாய் பின்னலிட்டுக்கொள்வதில்லை. அப்படியே பின்னிக்கொண்டாலும் அதைச் சுருட்டிக் கொண்டையாக இட்டுக் கொள்வதைக் கண்டிருக்கிறேன். அதுவே மும்பையில் வயதானவர்கள் கூட காலையில் எழுந்ததுமே குளித்துப் ப்ரெஷ்ஷாகி சுத்தமான ஆடையணிந்து ஏதோ அந்த நிமிடம் வெளியே செல்லத் தயாராக இருப்பதைப்போல காட்சியளிப்பதையும் கண்டிருக்கிறேன்.வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கிறார்களோ என்று சில சமயம் தோன்றும்.

எப்பொழுதுமே சில விஷயங்களை சீரியஸாய்ப் பார்க்காமல் சிரியஸாகவும் பார்ப்பது நல்லது. கவலைகள், துக்கங்கள் எல்லாம் வாழ்க்கையில் அது பாட்டிற்கு ஒரு ஓரத்தில் ஊறுகாய் மாதிரி இருந்து கொண்டிருக்கட்டுமே. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டால் மட்டும் சரியாகி விடுமா என்ன?. ஊறுகாய் ருசியில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் பாயசத்தின் ருசியை அனுபவிப்பது எப்படி?. ‘அடடா!!.. உளுந்த வடையில் ஓட்டை போடாமல் இருந்திருந்தால் கூடுதலாக இன்னும் ஒரு விள்ளல் வடை கிடைத்திருக்குமே’ என்று கவலைப்படுவதை விட ‘அடடா!!. டோநட் தயாரிக்கிறதுக்கு நம்ம இந்தியர்கள்தான் ரோல் மாடல்களா இருந்திருக்காங்க” என்று பெருமையுடன் இன்னொரு ப்ளேட் வடை சாம்பாரை உள்ளே தள்ளுவது மேலல்லவா?..  ரசனையை முற்றிலும் தொலைத்து விடாத நம் மனக்குழந்தை செய்யும் மாயாஜாலமும் இதுதான். வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள்.

டிஸ்கி: வெளியிட்ட பண்புடன்  மின்னிதழுக்கு நன்றி.

17 comments:

'பரிவை' சே.குமார் said...

//எப்பொழுதுமே சில விஷயங்களை சீரியஸாய்ப் பார்க்காமல் சிரியஸாகவும் பார்ப்பது நல்லது.//

உண்மை...

அருமையான பகிர்வு...

பண்புடனில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

உங்கள் சிந்தனைகளோடேயே நடந்து வந்து மலரும் நினைவுகளைப் பார்த்தோம்!

rajamelaiyur said...

பகிர்வுக்கு நன்றி

rajamelaiyur said...

இன்று
ரிலாக்ஸ் ப்ளீஸ்

ஸாதிகா said...

ரொம்பவே ரசித்தேன்.

கோமதி அரசு said...

ரசனையை முற்றிலும் தொலைத்து விடாத நம் மனக்குழந்தை செய்யும் மாயாஜாலமும் இதுதான். வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள்.//

உண்மைதான் அமைதிச்சாரல் நீங்கள் சொல்வது.
பண்புடன் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வெளியூரில் பார்த்த நட்சத்திரங்கள் சென்னையில் முடிவதில்லை.

உங்கள் பையன் சொல்வது போல நகரத்தின் வெளிச்சம் வானத்தை மறைக்கிறது. இதுவே ரயில் பயணத்திலோ பேருந்திலோ கிரமங்களைக் கடக்கும்போது சோம்பி வழியும் மஞள் லைட்டின் வெளிச்சம் மறைய வானத்தில் கோடி நட்சத்திரங்கள் ஒளிவிடுவதைப் பார்க்கலாம்.
உங்கள் பதிவு என்னைப் பயணங்கள் போகச் சொல்கிறது. நன்றி சாரல்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான வரிகள் பல... 'சுவையான' உதாரணங்கள் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள்.
-மிகமிகச் சரி! மனக் குழந்தை என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் மிக ரசித்தேன் மேடம்!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை.....

வாழ்த்துகள்.

பூ விழி said...

வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள். // அருமையான விஷயத்தை பதித்து இருக்கீங்க அருமையான பதிவு

மனோ சாமிநாதன் said...

//வாழ்க்கையில் இப்படித்தான்,.. ஒவ்வொரு அழகான விஷயங்களையும் கண்ணலக ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு நம் விரல் பிடித்து நடந்து கொண்டிருந்த சிறு குழந்தை எப்போது விலகிச்சென்றது என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். மாறுதல்களுக்கேற்ப மாறித்தானே ஆக வேண்டும் என்ற நியதிக்கேற்ப நாமென்னவோ பெரியவர்களாகி விடுகிறோம். ஆனால், நாம் விட்டு விட்டு வந்த அந்தக் குழந்தை நம் வரவை நோக்கி அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கும். சரியான சமயத்தில் அதைக் கண்டு கொண்டால் உதடு பிதுங்க, முகம் அழுகையில் கோணியபடி, கண்ணீர் நதிகள் பெருக்கெடுக்க ஓடி வந்து நம்மைக் கட்டிக்கொள்ளும். அந்தச் சிறுகுழந்தை வேறு யாருமல்ல. நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தை மனம்தான்.//

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சாந்தி! ஒவ்வொரு வரியையும் ரசித்துப்படிக்கும்போதே மனம் தானாகவே சின்னஞ்சிறு வயதில் ரசித்தவற்றையெல்லாம் அசை போட ஆரம்பித்து விட்டது! உண்மை தான்! காலம் செல்லச் செல்ல மன அழுத்தங்களும் பிரச்சினைகளும் நம் ர‌சனைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு விடுகின்றன ! நமக்குப் பிடித்த விஷயங்கள் எதற்குமே நேரம் இருப்பதில்லை அல்லது நேரத்தை ஒதுக்குவதுமில்லை! மனசின் மூலையில் மட்டும் ஏக்கம் என்னவோ இருக்கத்தான் செய்கிறது ஒவ்வொருத்தருக்கும்!

மறுபடியும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

ராமலக்ஷ்மி said...

அழகான வாழ்வியல் கட்டுரை. பண்புடனிலேயே வாசித்திருந்தேன். வாழ்த்துகள் சாந்தி.

pudugaithendral said...

super :)) i like it

மாதேவி said...

வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் சிறப்பான பகிர்வு.

மோகன்ஜி said...

தாமதமான வாசிப்புக்கு ஒரு குட்டு குட்டிக் கொள்கிறேன். கோர்வையாய் நச்சென்றிருக்கிறது. வாழ்வியல் சொல்லிக் கொடுக்கும் என் போன்ற பேராசிரியர்களுக்கு நீங்க டீச்சரா இருக்கிற தகுதி இருக்கு சாந்தி.. (நான் ரெண்டு பாயிண்ட் சுட்டிருக்கேன் இதிலிருந்து!)

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

LinkWithin

Related Posts with Thumbnails