Friday, 27 April 2012

வாழ்தலின் ருசி..


படமெடுத்த என்னோட காமிராவுக்கு நன்றி.. :-)
எதையாவது பேச வேண்டுமென்பதற்காக எதையோ பேசிக் கடுப்படைய வைப்பதைக் காட்டிலும் எதுவுமே பேசாமல் மௌனம் காப்பதே மேல்.

நிமிடத்தின் கடைசித்துளிகள் சொட்டித்தீரும் வரைக்கும் அந்த நிமிடத்தின் மதிப்புப் புரிவதில்லை.

நிகழ்காலத்தில் என்ன கனவு காண்கிறோம் என்பதே நாம் வருங்காலத்தில் என்னவாக ஆகப்போகிறோம் என்பதற்கு அடிப்படையான முதல் விஷயம். அஸ்திவாரத்தைப் பலப்படுத்தினால் அன்றோ கட்டிடத்தின் ஆயுள் கூடும்..

வாழ்வின் இறுதிக்கணம் வரை தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதில்தான் வாழ்தலின் ருசி அடங்கியிருக்கிறது.

மகிழ்ச்சியை வேண்டியபடி, ஒவ்வொரு கணத்திலும் அவை ஒளிந்திருப்பதைக் கண்டு கொள்ள முடியாமல் கை நழுவ விடுவதைப்போலவே, கோடையில் மழையையும் மழை மற்றும் குளிர் காலங்களில் வெய்யிலையும், எதிர்பார்த்து ஏக்கப்பட்டு, அவை தன்னியல்பாக நிகழும்போது அனுபவிக்கத் தெரியாமலேயே எல்லாப் பருவங்களும் கடந்து விடுகின்றன.

எல்லோருக்கும் பொதுவாக மேகத்தையும், சூரியனையும், நிலவையும் நட்சத்திரங்களையும், தென்றலையும், புயல் காற்றையும் படைத்ததைப் போலவே இன்ப துன்பங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரவரின் முதலீட்டிற்கேற்ப, ஒவ்வொருவர் பங்கிலும் வரவும் செய்யப்படுவதில்தான் ஒளிந்திருக்கிறது அவரவர் லாப, நஷ்ட வாழ்க்கைக்கணக்கு.

அழுது கரைப்பதற்கோ, இல்லை ஆர்ப்பரித்து ஆடி முடித்து விடுவதற்கோ ஒன்றுமில்லாத நேரங்களில் சிறிது வாழ்ந்தும் பார்ப்போம்.

கல் இடித்து விட்டது, முள் குத்தி விட்டது என்று தான் செய்த தவறுகளை மறைத்து விட்டு, தப்பிக்கும் மனப்பான்மையுடன், எப்போதும் பிறரைப் பழி கூறியே வாழ்பவர்கள் அதிலேயே சுகம் கண்டு விடுகின்றனர். இவர்களின் சொல்லம்புகள் அவர்கள் வட்டத்துக்குள் நுழையும் நல்லிதயங்களையும் விட்டு வைப்பதில்லை.

வெகு நாட்களாய்க் கனவு கண்டு வந்த எதிர்காலத் திட்டத்தில் எடுத்து வைக்கும் முதலடி எப்போதும் சற்று அழுத்தமாகவே இருக்கட்டும். அப்போதுதான் சறுக்கல்களை வென்று நிற்க முடியும், பாறையில் கட்டப்பட்ட வீடு போல்..

ஏமாற்றங்களையும் காயங்களையும் தாங்கிக் கொள்ளத் தெரிந்த பொறுமைசாலிகளின் வீட்டில்தான் அதிக நறுமணத்துடன் பூக்கின்றன ரோஜாப்பூக்கள்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

17 comments:

Ramani said...

ரசித்துப் படித்தேன்
படித் தேன் ருசி
மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி

Ramani said...

Tha.ma 1

Lakshmi said...

ஏமாற்றங்களையும் காயங்களையும் தாங்கிக் கொள்ளத் தெரிந்த பொறுமைசாலிகளின் வீட்டில்தான் அதிக நறுமணத்துடன் பூக்கின்றன ரோஜாப்பூக்கள்.

அழகான வரிகள்.னல்லா இருக்கு.

Anonymous said...

//கல் இடித்து விட்டது, முள் குத்தி விட்டது என்று தான் செய்த தவறுகளை மறைத்து விட்டு, தப்பிக்கும் மனப்பான்மையுடன், எப்போதும் பிறரைப் பழி கூறியே வாழ்பவர்கள் அதிலேயே சுகம் கண்டு விடுகின்றனர்.//
its true

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பிடித்த வரிகள்:

//மகிழ்ச்சியை வேண்டியபடி, ஒவ்வொரு கணத்திலும் அவை ஒளிந்திருப்பதைக் கண்டு கொள்ள முடியாமல் கை நழுவ விடுவதைப்போலவே, கோடையில் மழையையும் மழை மற்றும் குளிர் காலங்களில் வெய்யிலையும், எதிர்பார்த்து ஏக்கப்பட்டு, அவை தன்னியல்பாக நிகழும்போது அனுபவிக்கத் தெரியாமலேயே எல்லாப் பருவங்களும் கடந்து விடுகின்றன.//

//எல்லோருக்கும் பொதுவாக மேகத்தையும், சூரியனையும், நிலவையும் நட்சத்திரங்களையும், தென்றலையும், புயல் காற்றையும் படைத்ததைப் போலவே இன்ப துன்பங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரவரின் முதலீட்டிற்கேற்ப, ஒவ்வொருவர் பங்கிலும் வரவும் செய்யப்படுவதில்தான் ஒளிந்திருக்கிறது அவரவர் லாப, நஷ்ட வாழ்க்கைக்கணக்கு.//

//ஏமாற்றங்களையும் காயங்களையும் தாங்கிக் கொள்ளத் தெரிந்த பொறுமைசாலிகளின் வீட்டில்தான் அதிக நறுமணத்துடன் பூக்கின்றன ரோஜாப்பூக்கள்.//


வெகு அருமையாக எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன் vgk

கோமதி அரசு said...

அனுபவிக்கத் தெரியாமலேயே எல்லாப் பருவங்களும் கடந்து விடுகின்றன.//

அந்த அந்த பருவங்களை ரசிக்க தெரியவில்லை என்றால் சலிப்புதான் மிஞ்சும்.


ஏமாற்றங்களையும் காயங்களையும் தாங்கிக் கொள்ளத் தெரிந்த பொறுமைசாலிகளின் வீட்டில்தான் அதிக நறுமணத்துடன் பூக்கின்றன ரோஜாப்பூக்கள்.//

அருமையான வரிகள். சகிப்புதன்மை, பொறுமை இருந்தால் பரிசு ரோஜாப்பூக்கள்.

வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஏமாற்றங்களையும் காயங்களையும் தாங்கிக் கொள்ளத் தெரிந்த பொறுமைசாலிகளின் வீட்டில்தான் அதிக நறுமணத்துடன் பூக்கின்றன ரோஜாப்பூக்கள்.
//

அருமையான வரிகள்..அழகிய வாழ்வியல் கட்டுரை.

ஹேமா said...

வாழ்வைப் படித்த சாயல் இந்த ரோஜாக்களில்.வாடினாலும் அத்தராகி மணக்கும்.கற்றுக்கொள்வோம் !

ராமலக்ஷ்மி said...

/சிறிது வாழ்ந்தும் பார்ப்போம்./

வாழ்வினை ருசிக்காமல் அவசரமாய் அள்ளி விழுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிற உலகம் இது. அருமையான இடுகை சாந்தி.

கோவை2தில்லி said...

அழகான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

அமைதியாக வாழ்வின் ஒவ்வொரு கோணங்களையும் அலசி விட்டீர்கள்.வயதானபிறகு , கிடைத்த அனுபவங்களை அசை போடும் நேரம் உங்கள் பதிவைப் படிக்கும்போது ஏக்கம் மிச்சமாகிறது.
என்ன என்று யோசித்தல் அந்த அந்த நிகழ்ச்சிகளில் மூழ்கும்போது அங்கே ஒளிந்திருந்த நேய நொடிகளையும் உணர்ந்திருக்கவேண்டும். இப்பவும் ஒன்றும் கெடவில்லை.மிச்ச நேரங்களை ரசிக்கலாம் ரோஜா பூக்கவேண்டுமே.நன்றி மா.

நிரஞ்சனா said...

ரொம்பவே நல்லா இருந்துச்சு உங்க கருத்துக்கள் எல்லாம். என் வீட்டில் பூக்கின்ற பூக்களும் அதிக நறுமணத்தோட பூககணும்னு ஆசைப்படறேன். அதுக்கான தகுதி‌யை இனி நிச்சயம் வளர்த்துப்பேன்!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான வரிகள்.... நல்ல பகிர்வுக்கு நன்றி.

Asiya Omar said...

//கல் இடித்து விட்டது, முள் குத்தி விட்டது என்று தான் செய்த தவறுகளை மறைத்து விட்டு, தப்பிக்கும் மனப்பான்மையுடன், எப்போதும் பிறரைப் பழி கூறியே வாழ்பவர்கள் அதிலேயே சுகம் கண்டு விடுகின்றனர். இவர்களின் சொல்லம்புகள் அவர்கள் வட்டத்துக்குள் நுழையும் நல்லிதயங்களையும் விட்டு வைப்பதில்லை.//

அருமை சாந்தி.பட்டுவண்ண ரோசா சூப்பர்.

மாதேவி said...

அருமையான பகிர்வு.

"வாழ்வின் இறுதிக்கணம் வரை தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதில்தான் வாழ்தலின் ருசி அடங்கியிருக்கிறது." பிடித்த வரிகள்.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வின் இறுதிக்கணம் வரை தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பதில்தான் வாழ்தலின் ருசி அடங்கியிருக்கிறது.

ரச்னை நிறைந்த பகிர்வுகள் .. பாராட்டுக்கள்..

அமைதிச்சாரல் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி..

LinkWithin

Related Posts with Thumbnails