பூரண் போளி என்னும் இந்த அருமையான சுவையான வஸ்துவைச் சமைக்க ஆரம்பிக்குமுன், நாள் நட்சத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதைப் பஞ்சாங்கத்தில் பார்த்துக் கொள்வது முக்கியம். குறிப்பாகப் “போறாத” காலம் இல்லாத பொழுதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு போளியும் சமைக்கும் போது ஒவ்வொரு கண்டத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் அமைந்து விடும்.
இந்த பூமியும் அதில் உலவும் கட்டைகளாகிய நாமும் மட்டுமல்ல, போளியும் பஞ்சபூதங்களால் தயார் ஆனவையே என்று என்னப்பன் நெய்யப்பன் புளுகிய புராணத்தில் அருளிச்செய்திருக்கிறான். அதாவது, மாவு நிலமாகித் தாங்கி நிற்க, நெய்யானது நீராகப் பெய்யப்பட்டு, சமையல்வாயு பகவானின் அருளுடன், லைட்டாக எரியும் அக்னி பகவானின் கருணையால் சுடப்படும் போளியில் அண்டசராசரம் ஆகாயமெங்கும் பரவி நிற்கும் பரம்பொருளெனப் பூரணம் விரவி நிற்கும். மும்மூர்த்திகளை இணைத்துப் பரம்பொருளென்று அழைப்பது போலவே கடலைப்பருப்பு, வெல்லம், ஏலக்காய் இவற்றின் கூட்டணியும் பூரணமென்று பொதுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
நானும் என் காமிராவும் சுட்டவை..
விசேஷ தினமொன்றில் ஒரு வீட்டில் பூரண்போளி சமைக்கப்படும் வாசனை தேவலோகம் வரை எட்டிப்பார்க்கிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டவர்களுக்காக, அந்த வீட்டின் அடுக்களையிலிருந்து இதோ.. லைவ் டெலிகாஸ்டாக நிகழ்ச்சி தொடருகிறது.
“என்னாங்க.. ஒரு கப் கடலைப்பருப்பை குக்கரில் வேக வைக்கச் சொன்னேனே.. செஞ்சீங்களா?..”
“எப்பவோ ஆச்சும்மா.. பருப்பு வெந்து இறக்கவும் இறக்கியாச்சு. இனிமே என்ன செய்யணும்?”
“தண்ணீரை நல்லா வடிகட்டிட்டு, நல்லா மசிச்சு வையுங்க. பருப்பு நல்லா மசியணும். இல்லைன்னா போளியா இடறப்ப மாவுலேர்ந்து வெளிநடப்புச் செஞ்சுரும்”
“ஹூம்.. கொடுத்து வெச்சது அவ்ளோதான்”
“என்ன அங்கே முணுமுணுப்பு?.. எனக்குக் கையிலே சுளுக்குப் பிடிச்சுருக்கற நேரம் பார்த்து, பூரண்போளி வேணும்ன்னு கேட்டீங்கல்லே. கொஞ்சம் ஒத்தாசை செஞ்சாத்தான் என்னவாம்?..”
“ஒண்ணுமில்லே.. வெல்லம் எங்கே வெச்சிருக்கேன்னு கேட்டேன். எவ்வளவு வெல்லம் போடணும்?”
“இந்த அரைக்கிலோ வெல்லத்தைப் பொடிச்சுட்டு அதுலேர்ந்து ஒன்னரை கப் அளவுலே எடுத்துக்கோங்கோ..”
“அப்ப மிச்ச வெல்லத்தை என்ன செய்யறது?”
“அதைப் ஃப்ரிஜ்ஜுல வையுங்க. அடுத்த தடவைக்கு ஆகுமில்லே. இப்ப எடுத்துக்கிட்ட வெல்லத்தோட கால் கப் தண்ணி ஊத்தி அடுப்புல வெச்சுச் சூடாக்கிக்கோங்க. வெல்லம் கரைஞ்சதும் கல், மண் போக வடிகட்டிக்கோங்க. வடிகட்டினதுக்கப்புறம் அடுப்புல வெச்சு, பாகுபதம் வர்ற வரைக்கும் மறுபடியும் சூடாக்கணும்..”
“பாகுபதம் வந்ததும் மசிச்ச கடலைப்பருப்பை அதுல போட்டு, நல்லாச் சுருண்டு வர்ற வரைக்கும் கிண்டீட்டு, ரெண்டு ஏலக்காயைப் பொடிச்சுப்போட்டுரணும். நல்லாக் கெட்டியானதும் இறக்கி ஆற விடணும். ரைட்டுதானேம்மா?..”
“அட!.. எப்டீங்க?.. இவ்ளோ சீக்கிரம் கத்துக்கிட்டீங்க!!”
“ஆங்.. போன தீவாளிக்கு பூரணம் செய்ய, நாந்தானே எல்ப் செஞ்சேன். அப்பக் கத்துக்கிட்டேன்.”
“சமத்து.. பூரணம் ஆறட்டும். அதுக்குள்ள போளிக்கு மேல்மாவு தயார் செஞ்சுருவீங்களாம். சரியா?. இப்பல்லாம் மைதாவுக்கு மவுசு குறைஞ்சுட்டு வருது. அதுல சத்து இல்லேன்னு வேற சொல்றாங்க. அதுனால கோதுமை மாவுலயே மேல்மாவு தயார் செஞ்சுருங்க”
“எங்க ஆத்தா சாம்பார் வைக்கச் சொல்லிக்கொடுத்தா, ரசம் வைக்கச் சொல்லிக்கொடுத்தா, இவ்வளவு ஏன்? பாயசம் வைக்கக்கூட சொல்லிக்கொடுத்தா. ஆனா, போளிக்கு மாவு பிசையச் சொல்லிக் கொடுக்கலையே..”
“சப்பாத்திக்கு மாவு பிசையச்சொன்னா, தோசைக்கான பக்குவத்துல கரைச்சு வெச்ச ஆளாச்சே நீங்க.!! அதான் அவங்க சொல்லித்தரலை. அழுவாதீங்க, நான் சொல்லித்தரேன். ரெண்டு கப் கோதுமை மாவை எடுத்துக்கோங்க. நாலு பேர் இருக்கற நம்மூட்டுக்கு இதுவே போறும். இப்ப மூணு டேபிள் ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி மாவுல விட்டு, ஸ்பூனால நல்லா கலக்கி விடுங்க. நேரடியா கையை வெச்சு, விரலைச் சுட்டுக்காதீங்க. நெய் மாவுல கலந்ததும், சிட்டிகை உப்பும், மஞ்சப்பொடியும் போட்டுப் பிசிறி விடுங்க. நல்லாச் சேர்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணி தெளிச்சு, பொறுமையாப் பிசைஞ்சு வையுங்க. மாவு பிசையுறதுலதான் மென்மையான போளியோட சூட்சுமமே இருக்குது. பிசைஞ்ச மாவை சமமான உருண்டைகளாப் பிரிச்சு வையுங்க."
"ஆச்சா.. இப்ப ஒவ்வொரு உருண்டையையும் சொப்பு மாதிரி செஞ்சுக்கிட்டு, அதுல கொஞ்சம் பூரணத்தை வெச்சு, அழகா மூடிரணும். இப்ப அதை சப்பாத்தியாத் திரட்டணும். பொறுமையா திரட்டலைன்னா ஒவ்வொண்ணும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஒவ்வொரு கண்டமாத்தான் இருக்கும். தோசைக்கல்லுல போட்டு ரெண்டு பக்கமும் நெய் தடவிச் சுட்டெடுக்க வேண்டியதுதான். பக்குவமாச் சுட்டெடுத்தா ரெண்டு நாள் வரைக்கும் கெட்டுப்போகாம மிருதுவா இருக்கும்”
“இனிப்புப் பத்தலை, மிருதுவா இல்லைன்னு ஈஸியா நொட்டை சொல்லிச் சாப்பிடற போளிக்குப் பின்னால இவ்ளோ உழைப்பு இருக்குதா!.. ஸாரிபா, இனிமே சமையல்ல குறை கண்டு பிடிக்கவே மாட்டேன்”
“அடடா.. பூரணம் வெளியே வராம அழகாத் திரட்டணும். இல்லைன்னா சப்பாத்திப் பலகையில மாவு ஒட்டிக்கிட்டு, பெரிய இம்சையாப்போயிரும். நகருங்க, நான் சுட்டெடுக்கறேன்”
“அப்ப, கையில் சுளுக்குப்பிடிச்சுருக்குன்னு சொன்னியே?”
“சமையக்கட்டுச் சிரமங்கள் உங்களுக்குத் தெரியணும்ன்னுதான் அப்படிப் புளுகினேன்.”
“அப்ப,.. நானும் ஒரு உண்மையைச் சொல்லவா?.. என்ன இருந்தாலும் உன் கையால் சமைச்சது போல் ஆகுமா?.. அதான் நானும் போளி திரட்டறப்ப வேணும்ன்னே சொதப்பி வெச்சேன்..”
40 comments:
அடாடா.. செய்முறை சொல்லுங்கன்னு கேட்ட எங்களுக்காக அதை அழகா ஒரு உரையாடலுக்குள்ள பொதிச்சு வெச்சு ரசிக்கும்படி சொல்லி அசத்திட்டீங்க. ரொம்ப நன்றி!
நல்லா இருக்குங்க பூரண் போளி.... பகிர்ந்த விதம் நன்று.
சொல்லிச் சென்ற விதமும்
முடித்த விதமும் மிகமிக அருமை
பகிர்வுக்கு நன்றி
முடிவு ..anti climax
நேயர் விருப்பத்துக்காக அழகான உரையாடலுடன் சூப்பரா தந்திருக்கீங்க.....
தேங்காய் சேர்க்க வேண்டாமா....
சமையல் குறிப்பை இத்தனை வித்தியாசமாகக்கூட கொடுக்க முடியுமா?
சூப்பர். செய்முறையை இப்படிக் கூட சொல்லலாமா?
\\இந்த பூமியும் அதில் உலவும் கட்டைகளாகிய நாமும் மட்டுமல்ல, போளியும் பஞ்சபூதங்களால் தயார் ஆனவையே என்று என்னப்பன் நெய்யப்பன் புளுகிய புராணத்தில் அருளிச்செய்திருக்கிறான்.\\
}}}
அடேங்கப்பா! போளிக்குள்ள பஞ்ச பூதத்தையும் கொண்டுவந்தாச்சா?? :)
ஜாடிக்கேத்த மூடி.. :)
போளியை ருசித்தேன்.
லைவ் டெலிகாஸ்டை ரசித்தேன்:))!
சூப்பர்க்கா,அழகான உரையாடலோடு சொல்லி கலக்கிட்டீங்க..
santhi puran poli parcel rentu pls
பூரண் போளிப் புராணம் அருமை.. பாராட்டுக்கள்..
பஞ்ச பூதங்களை வச்சு போளி தத்துவத்தை விளக்கி போலியான விஷயங்கள்லேருந்து விடுபட வழி வகுத்த சாந்தி அம்மையார் வாழ்க!
தங்க்ஸ் ரங்க்ஸ் உரையாடல் குடும்ப விளக்கு சுடர் விட்டு பிரகாசிக்கறாப்ல இருக்கு
பதிவின் முதல் பத்தியை மிகவும் ரசித்தேன் (அப்ப மிச்சமெல்லாம் ரசிக்கலையான்னு கேக்கப் படாது.மத்தவங்க சொல்றதுக்கு விட்டு வச்சுருக்கேன்) :)
சூப்பர்ங்க, உங்க போளியும் அதை செய்த முறையும்:))
சுவையான உரையாடலில் தயாரான போளி ரொம்ப சுவையாகத்தான் இருக்கும் என நம்பப்படுகிறது.
அப்படித்தானே? :-)
சரியான ஜோடிதான். ரெசிப்பிக்குத் தாங்க்ஸ். ஆனால் அரை கிலோ வெல்லம் சரி, ஒரு கப் ஒன்றரை கப் என்றால் எவ்வளவு?!! எங்கள் வீட்டிலேயே மூணு சைஸில் கப் இருக்கே... போகட்டும் விடுங்க....எப்படிச் செய்யனும்னு குண்சா ஒரு ஐடியா கிடைச்சிட்டுது...!
சூப்பர் போளி.
இதுக்காகக் கையை வேற சுளுக்குக்கிட்டு....அடடா பிரமாதம்.
சதிபதி சேர்ந்து செய்த பூரன்+போளி நல்ல ஜோடி. சாரலும் சாந்தியும் சேர்ந்தால் இடப்படும் போளி மத்திரமா,பதிவும் சூப்பர்.
கண்ணாலே ரசித்துக் கொண்டேன் அருமை சாந்தி.
போளியை விடவும் செய்முறை அசத்துது. பிரமாதம். அதிலும் அந்த என்னப்பன் நெய்யப்பன்... ஆஹா... ரொம்பவே ரசிச்சேன். நன்றி அமைதிச்சாரல்.
வாங்க கணேஷ்,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..
வாங்க வெங்கட்,
வாசிச்சதுக்கு மிக்க நன்றிங்க..
வாங்க ரமணி,
வாசிச்சதுக்கு மிக்க நன்றி.
வாங்க பாசமலர்,
தங்க்ஸ் ஜெயிப்பாங்கன்னு நினைச்சேன். கவுத்துட்டாங்கப்பா ரெண்டு பேரும்.. :-))))))
வாங்க ஆதி,
தேங்கா சேர்க்கணும்ன்னு அவசியம் இல்லைங்க. விருப்பப்பட்டா துருவி, லேசா வறுத்துட்டு சேர்க்கலாம். ஆனா, அதுல தேங்கா வாசனைதான் முன்னே நிக்கும். பருப்புப்போளியோட வாசனையும் ருசியும் கொஞ்சம் மட்டுப்படுது.
அதுக்கு, தேங்காப்பூரணத்தை தனியாச் செஞ்சு தேங்காப்போளியாவே சாப்பிடலாமே. சரிதானா :-))
வாங்க ஸாதிகா,
சமைக்கப் போரடிக்குதுன்னு சொல்றவங்களையும் அடுக்களைக்குள்ள இழுக்கறதுக்காக கொஞ்சம் தேன் தடவிக் கொடுத்துருக்கேன் :-))
வாங்க அம்பிகா,
நேரமொதுக்கி வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..
ஆளையே காணோம்,.. அடிக்கடி பதிவு போடுங்க,. உங்க பதிவுகளை ரொம்ப எதிர்பாக்கறோம் நாங்க :-))
வாங்க தக்குடு,
பஞ்ச தத்துவத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்த பிரபஞ்சத்துல ஏதுமில்லைங்கறப்ப போளி மட்டும் விதிவிலக்கா என்ன
:-))
வாங்க முத்துலெட்சுமி,
ஆமாங்க,.. போளிக்கேத்த நெய்யும் கூடத்தான் :-))
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க மேனகா,
வாசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க லக்ஷ்மிம்மா,..
ரெண்டென்ன?? அத்தனை போளியும் உங்களுக்குத்தான். பார்சல் அனுப்பிட்டேன் :-)
வாங்க ராஜி,
ரசிச்சதுக்கும் வாசிச்சதுக்கும் நன்றிங்க..
வாங்க தெய்வசுகந்தி,
வாசிச்சுக் கருத்திட்டமைக்கு ரொம்ப நன்றிங்க,
வாங்க ஆர்.வி.எஸ்,
உங்க நம்பிக்கை வீண் போகலை, அன்னிக்குத் தட்டு கூட மிஞ்சலையாம்.. அவ்வளவு ருசியா இருந்துச்சுன்னு தங்ஸும் ரங்க்ஸும் சொல்லச்சொன்னாங்க :-))
வாங்க ஸ்ரீராம்,
கப் அளவுதானே.. எந்தக்கப்பால் பருப்பை அளக்கறீங்களோ அந்தக்கப்போட அளவுல ஒண்ணரைக் கப் வெல்லம் எடுத்துக்கோங்க. இப்பச் சரியா :-))
வாங்க புவனேஸ்வரி,
வாசிச்சுக் கருத்திட்டமைக்கு நன்றிங்க.
வாங்க வல்லிம்மா,
அடடா!!.. கொலஸ்ட்ரால் பயமா?.. அப்ப கண்ணாலே நிறையவே ரசிச்சுக்கோங்க :-))
வாங்க கீதமஞ்சரி,
ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு :-)
வாங்க சங்கரலிங்கம் அண்ணா,
ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு..
Post a Comment