Friday 23 March 2012

எங்க ஊர்ல விசேஷம்ங்க..

இன்னிக்கு எங்கூர்லயும் புது வருஷக் கொண்டாட்டம்தான். தமிழ்நாட்ல விஷூன்னும், ஆந்திராவில் யுகாதின்னும் கொண்டாடற மாதிரி மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா”ங்கற பேர்ல புது வருஷம் கொண்டாடப்படுது. இங்கே உள்ள மக்களுக்கு இன்னிக்குத்தான் சித்திரை முதல் தேதியாக்கும். சித்திரையை இங்கேயுள்ளவங்க “சைத்ர”ன்னு சொல்லுவாங்க.

எப்பவுமே பொறந்த ஊரைப்பத்தி மட்டுமே நெனைச்சிட்டிருக்காம, கொஞ்சம் புகுந்த ஊரையும் அப்பப்ப கண்டுக்கணும். என்ன இருந்தாலும் நமக்கு அன்னந்தண்ணி தர்ற இடம் இல்லையோ. அதனாலத்தான் இங்கே உள்ள பண்டிகைகளையும் கொஞ்சம் நாங்க கண்டுக்குவோம்.
சுட்ட படம்...
பண்டிகைக் கொண்டாட்டம்ன்னா என்ன?.. மனசும் வயிறும் குளிர்றதுதானே. அந்தக் கணக்குல நாங்களும் இங்கே உள்ள பண்டிகைகளை அடுக்களையளவில் கொண்டாடுவோம். விளக்கமாச் சொன்னா, அன்னிக்கு எங்கூட்லயும் விருந்து இருக்கும். பக்கத்து ஊட்டு அடுக்களை ஜன்னல்லேர்ந்து நெய்யும் வெல்லமுமா வாசனை மிதந்து வந்து நம்மூட்டுல மணக்கும்போது நம்மால சும்மா இருக்க முடியுதா சொல்லுங்க.

“Gudi Padva” இங்கே வசந்தத்தின் முதல் தினத்தைக் குறிக்குது. ராவணனை அழிச்சப்புறம் ராமன் அயோத்திக்கு வந்த நாள்தான் இதுன்னு சில பேர் சொல்றாங்க. இல்லேல்ல… இன்னிய தினம் ராமன் முடி சூட்டிய நாளாக்கும்ன்னு சில பேர் சொல்றாங்க. அதெல்லாம் இல்லை பிரம்மா இன்னிக்குத்தான் உலகத்தைப் படைக்க ஆரம்பிச்சார்ன்னு இங்கே உள்ளவங்க சொல்லிக்கிறாங்க. சிவாஜி மஹராஜ் சாலிவாகனர்களை வெற்றி கொண்ட தினம்தான் இன்னிய தினம் அப்டீன்னு மஹராஜை தெய்வமாக வணங்கி வழிபடற மராட்டிய மக்கள் விட்டுக் கொடுக்காம சொல்றாங்க. காரணம் எதுவாயிருந்தா என்ன?.. சந்தோஷமாக் கொண்டாடணும். அதானே முக்கியம்.

அமாவாசைக்கு அடுத்து வர்ற முதல் தினத்தை இங்கே பாட்வான்னு சொல்லுவாங்க. வடக்கே ரெண்டு பாட்வா தினங்கள் ரொம்பவும் முக்கியம் வாய்ஞ்சவை. தீபாவளிப் பண்டிகையின்போது கிருஷ்ண பட்சத்துல வர்ற பாட்வாவும், சைத்ர மாசம் சுக்ல பட்சத்துல வந்துருக்கும் இன்னிய பாட்வாவும் கொண்டாட்டத்துக்கான தினங்கள். பண்டிகைக்கு முன்னாடியே வீடு வாசல் எல்லாம் சுத்தம் செஞ்சுருவாங்க. கிராமங்களைப் பொறுத்தவரைக்கும் இன்னிக்கு வீட்டு முற்றத்துல சாணமிட்டு மொழுகி வெச்சிருப்பாங்க.

பாட்வா அன்னிக்கு காலைல தீபாவளியன்னிக்கு செஞ்சுக்கற மாதிரியே அப்யங்க ஸ்நானம் எல்லாம் செஞ்சு, புது ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்குவாங்க. வாசல்ல அலங்காரத்தோரணம், மாவிலைத்தோரணம், ரங்கோலின்னு பண்டிகை களை கட்டிரும்.

இப்ப Gudi-ஐ வீட்டுத்தலைவர் தயார் செய்வார். ஒரு நீளமான மூங்கில் கம்பையெடுத்துக்கிட்டு அதோட ஒரு நுனியில் அழகான ஜரிகை போட்ட புதுத்துணியைக் கட்டி வைப்பாங்க. சில வீடுகள்ல நல்ல அழகான துப்பட்டாவையோ அல்லது புதுப்புடவையையோ கட்டி விடறதும் உண்டு. சில புத்திசாலி தங்க்ஸுகள் இதுக்குன்னே வெலை கூடுன புடவையா எடுத்துக்கறது வழக்கம். எப்படியும் அது அவங்க கைக்குத்தானே போய்ச் சேரப்போவுது.

அப்றம் நல்லா பளபளன்னு பொன்னு போலத் துலக்கி வெச்சிருக்கும் தாமிரச்சொம்பை கம்பு நுனியில் கவிழ்த்து வைப்பாங்க. சில வீடுகள்ல வெள்ளிச்சொம்பையும் வைக்கிறதுண்டு. அப்றம் பூமாலை, சர்க்கரை மாலை, மாவிலைத்தோரணம் இல்லைன்ன ஒரு கொத்து வேப்பிலை எல்லாம் போட்டு அலங்கரிச்சு வெச்சதுமே பார்க்கறதுக்கு ஒரு அம்சமா ஆகிரும். இதை குடும்பத்தலைவர் வீட்டு வாசல்ல வலப்பக்கம் கொண்டாந்து வெச்சு, அந்தக் கலசத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, அட்சதை போட்டு தூப தீபம் காட்டி ஆராதனை செய்வாங்க. பூஜை முடிஞ்சதும் யுகாதிக்கு நாம செய்யறது மாதிரியே இங்கியும் வேப்பங்கொழுந்து, ஓமம், வெல்லம் இத்யாதிகளை அரைச்சு உருண்டை பிடிச்சு பிரசாதமா முதல்ல சாப்பிடுவாங்க.


இந்த 'Gudi'க்கு பிரம்மாவின் கொடின்னும் இன்னொரு பெயர் உண்டாம். கொடிதான் மழுவி 'குடி'ன்னு ஆகிருச்சு போல இருக்கு. உசரமான வீடுகள்லயும் கட்டிடங்கள்லயும் மூங்கில் கம்பு நுனியில் பளபளன்னு காத்துல பறக்கற துணிகள் அசப்புல பார்க்கறதுக்கு கொடி மாதிரியேத்தான் தோணும். காலையில் ஏத்தப்படற இந்தக்கொடி சாயந்திரம் சூரிய அஸ்தமனம் சமயம் எடுக்கப்பட்டுரும்.

சாமி கும்பிட்டு, முடிஞ்சதும் வீட்ல செஞ்ச இனிப்பை நைவேத்தியமா படைக்கிறதுண்டு. இன்னிக்கு பூரி, ஸ்ரீகண்ட், பூரண்போளின்னு விருந்து அமர்க்களப்படும். சில வீடுகள்ல சேமியா கீர் செய்யறதும் உண்டு. எனவே ஊரோடு ஒத்து வாழும் முறைப்படி எங்கூட்லயும் இன்னிக்கு கீரும், பூரண்போளியும் செஞ்சாச்.
பூரண் போளி..
இந்த குடி பாட்வா அன்னிக்கு எந்த ஒரு சுபகாரியம் ஆரம்பிச்சாலும் அது பன்மடங்காப் பெருகும்ன்னு ஒரு நம்பிக்கை உண்டு. நம்மூர் அட்சய திருதியை மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். புது வீட்டுக்கான பத்திரப் பதிவுகள், அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செஞ்சுக்கறதுன்னு இன்னிக்கு ரியல் எஸ்டேட் காரங்க காட்டுல ஒரே அடைமழைதான். நாலஞ்சு நாளாவே செய்தித்தாள்கள்ல தள்ளுபடிக்கான விளம்பரங்கள்தான் பக்கங்களை அடைச்சுக்கிட்டு இருக்குது.

வடக்கே அட்சய திருதியை, குடி பாட்வா, நவராத்திரி, அப்றம் தந்தேரஸ் இந்த நாலு தினங்களையும் “ஸாடே தீன் முஹுரத்”ன்னு ரொம்பவும் விசேஷமாச் சொல்லுவாங்க. இந்த தினங்கள் முழுக்க நல்ல நேரமாத்தான் இருக்குமாம். ராகு, எம, இத்யாதிகளையெல்லாம் கடவுள்கள் கெட்டவுட் சொல்லிருவாங்களாம். அதனால அன்னிக்கு முழுக்க கல்யாணம், கிரகப்பிரவேசம்ன்னு எந்தவொரு விசேஷமானாலும் எப்போ வேண்ணாலும் நடத்திக்கலாம்.” முஹூர்த்தம் முடியப்போறது, பொண்ணைக் கூப்பிடுங்கோ”ன்னு இன்னிக்கு பண்டிட்ஜீ சீன் போட முடியாது.

‘ஸாடே தீன்’ அப்டீன்னா மூணரைன்னு அர்த்தம். மொத்தம் நாலு தினங்கள் வருது. அப்றம் அதென்ன ஸாடே தீன் கணக்கு??. எங்கியோ இடிக்குதேன்னு என்னோட தோழியான மராட்டிய மைந்தி ஒருத்தங்க கிட்ட கேட்டேன். அவங்க சொன்ன விளக்கப்படி அட்சய திருதியையை முழுக் கணக்குல எடுத்துக்க மாட்டாங்களாம். அது அரை நாள் கணக்குலதான் வருமாம்.

இந்தியா ஒரு விவசாய நாடு. அதனால இங்கே எல்லாப் பண்டிகைகளுமே ஏதோ ஒரு விதத்துல விவசாயத்தோட பலனை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறதாவே அமைஞ்சுருது. இங்கேயும் கிராமப்புறங்கள்ல "Gudi Padva" அன்னிக்கு விவசாயிகள் பொன்னேர் பூட்டி உழவை ஆரம்பிக்கிறது வழக்கம். வெவ்வேறு பெயர்கள்ல கொண்டாடப்பட்டாலும் பண்டிகை ஒண்ணுதானே. வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களல்லவா நாம். ஆகவே,

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..



18 comments:

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. புது தகவல்களை நெரிஞ்சுகிட்டேன். பூரண் போளியை எடுத்துக்கிட்டேன்.

அனைவருக்கும் குடி பாட்வா, யுகாதி தின நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,அமாவாசைக்கு அடுத்த நாள் நம் ஊரில் அவ்வளவு விஸேஷம் இல்லை. ஆனால் இதையே அங்கே கொண்டாடுகிறார்கள் என்னும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. புடவை,வெள்ளி சொம்பு
எல்லாமே அருமை. பூரன் போளி பிரமாதம். மனம் நிறைந்த குடிபாடுவா வாழ்த்துகள் மா.

இராஜராஜேஸ்வரி said...

காரணம் எதுவாயிருந்தா என்ன?.. சந்தோஷமாக் கொண்டாடணும். அதானே முக்கியம்.

குடி பாட்வா, யுகாதி தின நல்வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_2053.html

வசந்தத்திருநாள் யுகாதிக்கு அழைப்பு..

ராமலக்ஷ்மி said...

/வெவ்வேறு பெயர்கள்ல கொண்டாடப்பட்டாலும் பண்டிகை ஒண்ணுதானே/

ஆம், புகுந்த ஊருப் பண்டிகைக்கு நல்வாழ்த்துகள்! அருமையாகத் தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.

Asiya Omar said...

ஊரோடு ஒத்துவாழ்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. உங்க கொண்டாட்டப் பகிர்வு சூப்பர்.கீர்,பூரண்போளி அருமையான காம்பினேஷன்.குறிப்பு போடுங்க.வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள். விழாக்கால விவரங்கள் தெரிந்து கொண்டேன். மராத்தில, ஹிந்தில கொடி அர்த்தம் வருமா...எப்படி குடி என்று மருவும்?! பூர்ண போளி மைதா மாவு பூரணம்தானே...(நான் சாப்பாட்டு ராமனாக்கும்!)

raji said...

எல்லாம் சரிதான் கொண்டாடினீங்க ஓக்கே.பூரண்போளின்னா நம்ம ஊர் போளி மாதிரியா? இல்ல வேற மாதிரின்னா அதுக்கு ரெசிப்பி யார் சொல்வாங்களாம்? நாங்களும் ஃபோட்டோ மட்டுமே பாக்காம செஞ்சு சாப்பிடுவமில்ல?

அந்த சுட்ட படம் உங்கூட்ல சுட்டதா?நல்லாருக்கு

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான தகவல்கள் அருமையாக இருக்கின்ற‌ன!!

ஹேமா said...

நானும் உங்க கொண்டாட்டத்தில கலந்துகிட்டேன் சாரல்.அந்த பூரண் போளி தருவீங்கதானே !

பால கணேஷ் said...

முதல்ல உங்களுக்கு புதுவருஷ வாழ்த்துக்கள்! அந்த கீரும், பூரண போளியும்... படத்துல பாத்தாலே ப்ளச், ப்ளச்! ஆசியாஓமர் அவர்கள் சொன்ன மாதிரி செய்முறையாவது சொன்னிங்கன்னா புண்ணியமாப் போவும் சாரல்!

உணவு உலகம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் சாரல்..

'பரிவை' சே.குமார் said...

குடி பாட்வா, யுகாதி தின நல்வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்....

பூரண் போளி... :))) சுவையோ சுவை....

RVS said...

நல்லா இருக்குங்க மேடம் குடி பாட்வா...

முதல்ல குடி படுவான்னு படிச்சுட்டேன்... அப்புறம்தான் ஹிந்தில இருக்கிற மென்மையான குடி அதுன்னு புரிஞ்சுது... அப்புறம்தான் அது படுவாவுமில்லை பட்வான்னு தெரிஞ்சுது..

வாழ்க்கையில் போலியா வாழாமல் போளி சாப்பிடறது ரொம்ப முக்கியம்...

:-)))))

குறையொன்றுமில்லை. said...

சாந்தி சரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் லேட்டானாலும் லேட்டஸ்ட்டான நன்றிகள் :-))

LinkWithin

Related Posts with Thumbnails