Monday, 7 June 2010

கடலுக்குள் ஒரு மர்ம கோட்டை.

எதுக்கும் ஒரு நேரம் வரணும்ங்கிறது சரியாத்தான் இருக்கு. ரங்க்ஸோட வேலை நிமித்தம் இந்த ஊரில்( Alibaug) ரெண்டு வருஷம் இருந்திருக்கோம் . வீட்டுல, மொட்டைமாடியில் இருந்து பார்த்தா நல்லா தெரியும். ஆனா,.. உள்ளே போய் பார்க்கிறதுக்கு இப்போத்தான் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. பொண்ணோட பரீட்சை நிமித்தம், அலிபாக் போறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதும் , கடலுக்குள்ள இருக்கிற கோட்டைக்கு எப்படியும் விசிட் அடிக்கணும்ன்னு முடிவு செஞ்சேன்.

அலிபாக்... மும்பையிலிருந்து சுமார் 108 கி.மீ தூரத்தில் இருக்கிறது. சாலைவழியா வந்தா மும்பை-கோவா ஹைவேயில் வரணும். wadkhal என்னும் இடத்தில் சாலை ரெண்டா பிரியும். வலதுபக்கச்சாலையை பிடிச்சுக்கிட்டு நேரா வரலாம். மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவிலிருந்து படகுப்போக்குவரத்தும் உண்டு. Mandhwa என்னும் இடம்வரை படகில் வந்து அங்கிருந்து பஸ்ஸிலும் அலிபாக் வரலாம். இந்த மாண்ட்வாவில் நிறைய வி.ஐ.பிக்களின் கடலோர பங்களாக்கள் இருக்கின்றன.

பொண்ணை பரீட்சை ஹாலில் விட்டுட்டு ,கடற்கரைக்கு போனோம். சாயந்திரம் நாலுமணிவரை நேரத்தை போக்கணும். அதுக்கு இதுதான் பெஸ்ட் இடம். முன்னைக்கு இப்போ சுத்தமா இருக்கு. இங்கே உள்ள கடற்கரைகளில், கடல் உள்வாங்குறதையும் ...அதையே நாலஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம் தளும்பத்தளும்ப தண்ணீரோடும், பாக்கலாம். High tide, Low tideன்னு சொன்னா இன்னும் சுலபமா புரியும். சும்மா... ரெண்டு மூணு கிலோமீட்டர்வரைக்கும் கடல் நீர் உள்ளே போயிடும். டைமிங் தெரிஞ்சிருந்தா , கடலுக்குள்ள ஒரு ஜாலி வாக் போயிட்டு வரலாம். தண்ணீர் நிறைஞ்சிருந்தாலும் அப்படி ஒண்ணும் பெருசா ஆழம்கிடையாது. குறைவான அலைகள் இருப்பதால் இடுப்பளவு தண்ணியில் பயப்படாம நிக்கலாம்.

இன்னிக்கு எங்க அதிர்ஷ்டம்.. hightide இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு. கோட்டைக்கு போகிற குதிரை வண்டிகள், முழங்காலளவு தண்ணியில் போய்க்கிட்டிருக்கு. நடந்து போறவங்களும் ஜாலியா போய்க்கிட்டிருக்காங்க. தண்ணி கூடுதலாயிட்டா குதிரை வண்டி சர்வீஸ் நிறுத்திட்டு, ஃபைபர் போட் சர்வீஸ ஆரம்பிச்சுடுவாங்க. குதிரை வண்டியில் போயிட்டு வர்றதுக்கு தலைக்கு நூறு ரூபாய். போட்டில் கொஞ்சம் கூடுதல். கடலுக்குள் அங்கங்க படகுகளை பார்க்கிங்கில் விட்டிருக்காங்க.


குதிரை வண்டியும் தொலைவில் கோட்டையும்..

தண்ணியில் ஓடும் குதிரைகள்..
சுமார் ஆறுபேர் உக்காந்துக்கிறமாதிரியான இருக்கை அமைப்பு. ஒரு த்ரில்லிங்குக்காக நானும் ரங்க்ஸும் , முன்பக்கம், குதிரை ஓட்டியின் பக்கத்து இருக்கைகளில் உக்காந்துக்கிட்டோம். வாயில்லா ஜீவனை கஷ்டப்படுத்துறோமேன்னு பாவமா இருந்துச்சி . இருந்தாலும் ரெவ்வெண்டு கிலோமீட்டர் தண்ணீரில் நடந்துட்டு வந்தா, நான் காலில்லா ஜீவன் ஆகிடுவேனே :-((

கரையிலிருந்து பாக்கிறப்ப கோட்டை பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அங்க போக சுமார் பதினஞ்சு நிமிஷத்துக்கு மேலயே பிடிக்குது.இதை மராட்டிய மன்னர், 'மலை எலி'ன்னு அழைக்கப்படும் சிவாஜி மகராஜ் கடல் பாதுகாப்பை பலப்படுத்தறதுக்காக கட்டியிருக்கார். இதை கொலாபா கோட்டைன்னு சொல்றாங்க. மும்பையிலும் ஒரு கொலாபா இருக்கு. மும்பையில் இருப்பது 'colaba' , அலிபாக்கில் இருப்பது 'kolaba' .

1698 ல் முதன்மை தளபதியா இருந்த Sidoji Gujarன் மறைவுக்குப்பின்னால் ,துணை தளபதியாக இருந்த கங்கோஜி அங்க்ரே(Kanhoji Angre) என்பவர் , முதன்மை தளபதியானார். கடற்படையில் இவருக்கிருந்த திறமை காரணமா, kolabaவும் மற்ற கடற்புர கோட்டைகளும் இவருடைய கண்காணிப்பில் வந்தன.

இந்த கொலாபா கோட்டைக்குள்ள இவருக்குன்னு ஒரு அரண்மனை இருந்திச்சு. அவரோட மனைவி பெயரால மரியாதையா 'நானி சாகேப் அரண்மனை'ன்னு அழைக்கப்பட்டது. அம்மாவோட அம்மாவ இங்கே 'நானி'ன்னு கூப்பிடுவாங்க. அவரோட மனைவி பேர் லஷ்மிபாய். ஆனா, மக்கள் ஒரு பிரியத்தால நானின்னு கூப்பிடுவாங்களாம்.


நானிம்மா இருந்த மாளிகை.

எங்களை கரையில் இறக்கிவிட்டுட்டு , ஏற்கனவே சுத்திப்பாத்து முடிச்சிட்டு காத்திட்டிருந்தவங்களை கூட்டிட்டு குதிரை வண்டி போயிடுச்சு. இன்னும் அரைமணி நேரம் கழிச்சு எங்களை கூட்டிட்டு போக வரும். கோட்டை சிதிலமடைஞ்சு இருந்தாலும் வரலாற்று எச்சங்களை பார்க்கிறதுல ஒரு த்ரில்தான். வடக்குப்பார்த்த பிரதான நுழைவாயில் ரெண்டுஆர்ச்சுகளால் ஆனது.இதை மஹா தர்வாஜான்னு சொல்வாங்க. தர்வாஜான்னா வாசல், கதவு, ன்னு அர்த்தம். மஹாராஷ்டிர மக்களின் இஷ்ட தெய்வமான கண்பதி அம்சமா உக்காந்திருக்கார். இன்னும் ஏதேதோ விலங்குகளோட சிற்பங்களெல்லாம் மங்கலா தெரியுது.


பிரதான நுழைவாயில்..

உள்ளே தொல்பொருள் துறையினர் அஞ்சு ரூபா வசூலிச்சுக்கிட்டு அனுமதி சீட்டு கொடுக்கிறாங்க. ஃபோட்டோ எடுக்க கட்டணம் தேவையில்லை. இந்த கோட்டைக்குள் சிதைந்த அரண்மனைகளும், சின்னதா ரெண்டு மூணு கோயில்களும், கோயிலில் பூஜை செய்றவங்களும் இருக்காங்க. ஒரு காலத்துல சுமார் 700 படைவீரர்கள், குதிரைகள், இன்னபிற விலங்குகளெல்லாம் இருந்ததுண்டு. இப்போ, பூஜை செய்ற பண்டிட்டுகளும், அவங்க குடும்பங்களுமா, பத்துப்பதினஞ்சு பேர் கோட்டைக்குள்ளேயே குடியிருக்காங்க. பசங்களை ஊரில் சொந்தக்காரங்க வீட்டில் தங்கி படிக்க வெச்சுட்டு, இவங்க இங்கியே இருக்காங்க. எதாவது தேவைன்னா தண்ணி வத்தினப்புறம் கரைக்கு நடந்துவருவாங்க.

சிவாஜி மஹராஜோட இஷ்ட தெய்வமான பவானிக்கு , இங்கே ஒரு கோயில் இருக்கு. எந்த போருக்கு புறப்பட்டாலும்... பவானியின் காலடியில் தன்னோட வாளை வெச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் புறப்படுவாராம். கோயிலுக்கு பின்பக்கம், கண்ணை உருட்டி முழிச்சிட்டு ஒரு சிலை.. 'மஹிஷாசுர மர்த்தினி'யாம்.மஹிஷாசுரமர்த்தினிக்கு முன்புறம் அதாவது பாதையின் இடது பக்கம் நானிசாகிப்பின் அரண்மனை. ஒரு பெரிய தீவிபத்தில் இந்த அரண்மனை சேதமடைஞ்சதா சொல்றாங்க.

இதுக்கு பக்கத்துலதான் அவரோட மகன் ரகுஜி அங்க்ரே கிபி 1816 ல் இன்னொரு அரண்மனை கட்டியிருக்கார். ஐந்து மாடி கட்டிடமா இருந்தது,.. விபத்துக்குப்பின் முதல் நிலை வரைமட்டும் தப்பிப்பிழைச்சிருக்கு. இந்த அரண்மனைகளுக்கு முன்புறம் குதிரைகள், சண்டை ஆடுகள், செல்லப்பறவைகள் இவையெல்லாம் தங்குறதுக்கான இடமா இருந்திருக்கு. அரண்மனைக்கு கிழக்குப்பக்கத்தில் கிட்டங்கிகளும் இன்னபிற சின்னச்சின்ன கட்டிடங்களும் இருந்திருக்கு.

கோட்டையின் நடுநாயகமா பிள்ளையார் கோவில். சித்தி புத்தியோட, வலதுபக்கம் அப்பாவும், இடதுபக்கம் மாமனும், மாமாவோட பின்னால மஹிஷாசுர மர்த்தினியும், அமர்ந்த நிலையில் பிரம்மாவும்... (அப்படித்தான் நினைக்கிறேன். மகன் நாரதரை மடியில் வெச்சிருக்காரே :-)). புடைசூழ காட்சியளிக்கிறார். கர்ப்பக்கிரகமும், முன்மண்டபமுமா ரெண்டே நிலைகள்தான். இந்த கோயிலுக்கு வலதுபுறம் சிவனும் , இடதுபுறம்,.. வாலில் மணிகட்டிய ஆஞ்சனேயரும் தனிக்கோயில்களில் இருக்காங்க. புள்ளையார் மற்றும் சிவன் கோயில்களின் நடுவே எட்டுமுக கல்பீடம் ஒன்னு இருக்குது. ஒவ்வொரு பக்கத்திலும் தானியக்கதிர்,அர்ஜூன் தவம்,இன்னும் என்னன்னவோ செதுக்கியிருக்காங்க.


புள்ளையார் ஃபேமிலியோட இருக்கார்.

கோயிலுக்கு முன்னாடி பிரம்மாண்டமான குளம். பல்டியடிச்சு குளிக்கிறதுக்கேத்தவாறு பெரிய சுத்துச்சுவர்கள். கோயில்லேர்ந்து வெளியே வந்து தெக்குப்பார்த்து நடந்தோம். கோட்டையின் தெற்குக்கடைசியில் இருக்கும்
யஷ்வந்த் அல்லது தர்யா தர்வாஜான்னு சொல்லப்படுற நுழைவாயில், கடலைப்பார்த்தவாறு அமைஞ்சிருக்கு. இந்தப்பக்கம் கடல்ல கப்பல்களை நிறுத்தி வெச்சிக்கிட்டு , பிரிட்டிஷ்காரங்க தாக்குவாங்களாம். அதனால எப்பவும் வீரர்கள் இங்கே காவல் இருப்பாங்களாம். டூட்டி முடிஞ்சதும் அங்கியே படுத்து ஓய்வெடுத்துக்க வசதி இருக்கு. ஆயுதங்களை மறைச்சு வெச்சுக்கவும் சுவரில் ஒரு குழி மாதிரி இருக்கு.


யஷ்வந்த் தர்வாஜா...

படைவீரர்கள் தற்காலிக ஓய்வுக்கான இடம்..

தெம்பிருந்தா கோட்டைச்சுவர் மேல ஏறி நடக்கலாம். மேற்குப்பக்கத்துல ரெண்டு இடங்களில் அரைவட்ட வடிவமா பதுங்குகுழிகள் இருக்குது . உடனே எங்க கற்பனைக்குதிரை பறக்க ஆரம்பிச்சிட்டது. அது அகழிதான்.. எதிரிகள் உள்ளே நுழைஞ்சா முதலைகளைவிட்டு கடிக்க விடுவாங்கன்னு ரங்க்ஸ் சொல்றார். இல்லையில்லை,.. எதிரிகளை உள்ளே போட்டு அடைச்சுட்டு, கிளேடியேட்டர் மாதிரி சிங்கத்தையோ, புலியையோ தொறந்து விட்டுடுவாங்கன்னு நான் சொல்றேன். எது கரெக்ட்ன்னு அந்தக்காலத்துக்கே போய் தெரிஞ்சுட்டு வந்து சொல்லணும் :-))

கோட்டையின் வடக்குப்பக்கத்தில் கடலைப்பார்த்தமாதிரி ரெண்டு பீரங்கிகள் இருக்கு. இது எதிரிகளை தாக்குறதுக்கு மட்டுமல்ல.... மழை மற்றும் புயல் காலங்களில் ஏதாவது கப்பல் தெரியாத்தனமா கோட்டைக்கு பக்கத்துல வந்துட்டா வெடி மூலம் எச்சரிக்கை செய்வாங்களாம்.. வாண வேடிக்கை!!!!

இந்தப்பக்கம் கடல் ஆழம் கிடையாது. ரொம்ப கிட்டக்க வந்துட்டா தரைதட்டி நிக்க வேண்டியதுதான். இங்க ரொம்ப பிடிச்ச விஷயம் ஒன்னு..., தேசியக்கொடியேத்த கொடிமரம் ஒண்ணு இருக்குது. நல்ல நாள் பெரிய நாள்கள்ல கொடியேத்துவாங்களாம். இந்த கோட்டைக்குள்ள இப்ப மிஞ்சிப்போனா... இருபது இருவத்தஞ்சு பேரு இருந்தாலே அதிகம். ஆனாலும் கடமையை விடாம செய்றாங்க....

இந்த கோட்டைக்குள்ள சுத்திக்கிட்டிருக்கும்போது ஒரு விஷயம் கவனிச்சேன். ஒவ்வொரு வாசல்லயும் வெள்ளையா ஒரு பூச்சும் அது நடுவுல சிந்தூரப்பூச்சும் இருந்தது. இதுமாதிரி நிறைய பூசி வெச்சிருக்காங்க. என்னன்னு விசாரிச்சப்ப.. " வீரர்களெல்லாம் அவங்கவங்க குல தெய்வத்தை நினைச்சு சாமிய அங்க வரைஞ்சு வெச்சு கும்பிடுவாங்களாம். அதாவது , அந்தப்பூச்சுதான் கோயிலும், சாமியும். அதுதான் தங்களுக்கு போர்முனையில் காவல் வருதுங்கிறது அவங்க நம்பிக்கை".


எங்கிருந்தாலும் சாமிதான்..

வெளிய வந்து காத்திட்டிருந்த குதிரை வண்டியை நோக்கிப்போனோம். ரங்க்ஸ் முதல்ல ஏறி, காமிராவை வாங்கிக்கிட்டார். நான் இருக்கையின் கம்பியை பிடிச்சிக்கிட்டு, வண்டிச்சக்கரத்தில் கால் வெச்சு.. ஏற முயன்றேன். குதிரை லேசா முன்னோக்கி நகர்ந்தது. அவ்வளவுதான்.... கால் வழுக்கி , முருங்கைமரத்து வேதாளம் மாதிரி, அந்தரத்தில் தொங்கிக்கிட்டிருக்கேன். பிடிச்ச பிடியை விடலை. கை கம்பியில் மோதி, அடிபட்டுச்சா இல்லையான்னு தெரியலை... சுளீர்ன்னு வலிக்குது. சமாளிச்சுக்கிட்டு ஏறி உக்காந்தேன். கை லேசா வீக்கம் இருந்தமாதிரி இருக்கு . ஆரம்பத்திலிருந்தே அந்தக்குதிரை என்னை விரோதமாவே பாத்துக்கிட்டிருந்தமாதிரி ஒரு தோணல். என்னோட ப்ளாக்கை படிக்குமோ என்னவோ!!!. இந்தக்கைதானே ப்ளாக் எழுதுதுன்னு சமயம் பார்த்து பழி தீர்த்துக்கிட்டது. :-))) .கரைக்கு வந்து எப்பவும் ஹேண்ட்பேகில் வெச்சிருக்கும் வலி நிவாரணியை எடுத்ததும் ஒரு ரெண்டு மூணு மணி நேரத்துக்கு சரியாப்போச்சு :-)

கொஞ்ச நேரத்துலயே வண்டியை நிறுத்திட்டு , போட் சர்வீஸ் ஆரம்பிச்சுட்டது. பின்னே,..இப்ப கடல்தண்ணி கரை வரைக்கும் வந்துட்டதே. இங்கே வசிச்ச காலத்தில் , ப்ளாஸ்கில் காப்பியை எடுத்துக்கிட்டு, மொட்டை மாடிக்கு போயிடுவோம். டைடினால் கடலில் ஏற்படுற மாற்றங்களை கவனிச்சிக்கிட்டே அரட்டை அடிச்சுட்டு அப்றம், மெதுவா வீட்டுக்கு வருவோம். தோணினால் ஃப்ரெண்ட் குடும்பத்தோட பீச்சுக்கு போவோம். கடலில் அதிகம் ஆழமில்லாததால் பசங்களை தைரியமா விளையாடவிடலாம் . இங்கே கிடைக்கிற "ரகடா பேட்டிஸ்" பயங்கர டேஸ்டா இருக்கும். பேல்பூரி, பானிபூரி, தஹிபூரின்னு ச்சாட் அயிட்டங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த பிரதேசத்தில் தென்னைமரங்கள் கூடுதல் இருக்கிறதால நல்ல இளநீர் கிடைக்கும்.




கடலின் வெவ்வேறு நேரத்தோற்றங்கள்.. ரெண்டு மணி நேரத்துக்குள்..

அலிபாக்கை சுத்திலும் சுமார் முப்பத்தாறு கி.மீ சுத்தளவில் நிறைய பீச்சுகள் இருக்கு. மாண்ட்வா, அக்ஷி, தள், ரேவ்தண்டா, ஸ்ரீவர்தன், முருட், இதில் குறிப்பிடத்தகுந்தது. இதில் ரேவ்தண்டா மட்டும் நான் போனதில்லை. அக்சி ரொம்ப பிடிக்கும். சுத்தமான பட்டுப்போன்ற மணலும் .. சுத்திலும் சவுக்கு மரங்களுமா அவ்வளவு அருமையா ஏகாந்தமா இருக்கும். சில சமயம் ஷூட்டிங் கூட நடக்கும் . மாண்ட்வாவுக்கு ஹேப்பி ந்யூ இயர் சொல்லப்போயிருக்கேன். பேல்பூரிக்கான பொருட்கள் எல்லாவற்றையும் கொண்டுபோய் தயார் செஞ்சு, ஏழெட்டு குடும்பங்களாக எஞ்சாய் செஞ்சுட்டு வந்தது இன்னும் ஞாபகம் இருக்கு. அலிபாக் மற்றும் முருட் பீச்சை தவிர மத்த இடங்களில் குடிக்க தண்ணிகூட கிடைக்காது. அதனால் கட்டுச்சோறு எடுத்துக்கிட்டு போறது நலம்.

38 comments:

எல் கே said...

நல்ல விவரிப்பு. தலைப்ப பார்த்து எதோ கதைன்னு வந்தேன் .. ஏமாந்து போய்டேன்..
//கால் வழுக்கி , முருங்கைமரத்து வேதாளம் மாதிரி, அந்தரத்தில் தொங்கிக்கிட்டிருக்கேன். பிடிச்ச பிடியை விடலை. கை கம்பியில் மோதி, அடிபட்டுச்சா இல்லையான்னு தெரியலை... சுளீர்ன்னு வலிக்குது///
ஹிஹி

//. அந்தக்காலத்துக்கே போய் தெரிஞ்சுட்டு வந்து சொல்லணும் :-)/

பொய் பார்த்து வந்து சொல்லுங்களேன்

துளசி கோபால் said...

//வாயில்லா ஜீவனை கஷ்டப்படுத்துறோமேன்னு பாவமா இருந்துச்சி . இருந்தாலும் ரெவ்வெண்டு கிலோமீட்டர் தண்ணீரில் நடந்துட்டு வந்தா, நான் காலில்லா ஜீவன் ஆகிடுவேனே :-((//

ஹாஹாஹாஹா

பதிவும் படங்களும் அருமை.

இனிய பாராட்டுகள்.

கண்ணகி said...

ஆரம்பத்திலிருந்தே அந்தக்குதிரை என்னை விரோதமாவே பாத்துக்கிட்டிருந்தமாதிரி ஒரு தோணல். என்னோட ப்ளாக்கை படிக்குமோ என்னவோ!!!. இந்தக்கைதானே ப்ளாக் எழுதுதுன்னு சமயம் பார்த்து பழி தீர்த்துக்கிட்டது. :-))):)))

மர்மகோட்டை மர்மம் என்னங்க...

ஹுஸைனம்மா said...

கடலுக்குள்ள கோட்டையான்னு ஆச்சர்யமா இருக்கு. அதுவும் குதுர வண்டில கடல்ல போறதுவேறயா!! இப்படி பாழடைஞ்சு கிடக்குதே? சரி பண்ண முடியாதாமா தொல்பொருள் துறையால?

வெங்கட் நாகராஜ் said...

பல விவரங்கள் அடங்கிய நல்ல பதிவு. புகைப்படங்களும் அருமை.

குதிரை வண்டியில் செல்லும் போது அதைப் படுத்துகிறோமே என்ற எண்ணம் வந்ததே பெரிய விஷயம். நிறைய பேர் அந்த எண்ணம் கூட இல்லாது இருப்பது வருந்தத்தக்கது.

Vidhoosh said...

:)) நல்லாருக்கு பயணம்.

Ahamed irshad said...

நேர்'ல பார்த்த உணர்வு... அருமையான பகிர்வு..

Prathap Kumar S. said...

ஹஹஹ... நானும் போயிருக்கேன்.... ரொம்ப சிதிலமடைஞ்சு இருக்கு...

பீச்சு...சுத்த வேஸ்ட்டு....அந்த படகு சவாரி சரியான பாதுகாப்பே கிடையாது... இறங்கிப்போக சரியான பாதையும் கிடையாது...

Prathap Kumar S. said...

சத்தியமா அந்த குதிரை உங்க பிளாக்கை படிக்கிறதில்லை...படிச்சிருந்தா ஏறவே விட்டிருக்காதே... :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல வர்ணனை... ஒரு நல்ல பயண கட்டுரை படிச்சாப்ல (அதேதாங்கரீங்களா....). என்ஜாய் சம்மர்...

அமைதி அப்பா said...

உங்களின் பயணங்கள் தொடர்பான பகிர்வுகள் எல்லாமே நன்றாக உள்ளது.

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான தகவல்களும் படங்களுமாய் ரசித்து அனுபவித்ததை நாங்களும் உணருகிற மாதிரியான எழுத்து நடையில்..

பகிர்வுக்கு ரொம்ப நன்றி அமைதிச் சாரல்.

கருடன் said...

idula enna sir MARMAM irukku??? chumma Heading ippadi pottu engala kalaichitinga....

நிகழ்காலத்தில்... said...

விவரிப்புகள் விரிவாக இருப்பது மகிழ்ச்சியைத் தந்தது,

வாழ்த்துகள் நண்பரே

Paleo God said...

விவரமா எழுதி இருக்கீங்க! ரசிச்சி படிச்சேன். பகிர்வுக்கு மிக்க நன்றி! :)

Paleo God said...

விவரமா எழுதி இருக்கீங்க! ரசிச்சி படிச்சேன். பகிர்வுக்கு மிக்க நன்றி! :)

நசரேயன் said...

//விவரமா எழுதி இருக்கீங்க! ரசிச்சி படிச்சேன். பகிர்வுக்கு மிக்க நன்றி! :)//

நானும் தான்

ப்ரியமுடன் வசந்த் said...

சுவாரஸ்யமான தகவல்கள் புகைப்படங்கள் நல்ல ஷாட்ஸ்...

அலிபக் பேரே பயமுறுத்துதுங்களே...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

இன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கு. ஆல்பத்துல போடலாம்ன்னா பிகாஸா தகராறு பண்ணுது.

பாராட்டுக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

இப்பத்தான்..கொஞ்ச வருஷமா இந்தக்கோட்டைக்குள்ள என்ன இருக்குன்னு வெளியுலகத்துக்கு தெரிய வந்திருக்கு. இவ்வளவு வருஷமா கோயில் இருக்குன்னு மட்டும்தான் தெரியும்.. அதுவும் சுத்துவட்டார ஆட்களுக்கு மட்டும்தான். நாங்க அங்க குடியிருந்தப்போ போட்,குதிரைவண்டின்னு எந்த வசதியும் கிடையாது. ஒருசில ஆட்கள் மட்டும்தான் கோட்டைவரை போயிட்டு வருவாங்க,அதுவும் தண்ணி வத்தினப்புறம்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

அன்னிக்கு ஹைடைட் ஆரம்பிச்சுட்டது. நடந்து போயிட்டு வந்தா நேரமாயிடும். தண்ணி ரொம்பி நடக்க சிரமமாயிடும். அதான் குதிரைவண்டி.

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அந்த ஊருக்கு போனபுதுசுல எனக்கும் ஆச்சரியமாத்தான் இருந்தது.அதுவும் ஒரு அரண்மனையே இருந்திருக்குன்னு இப்ப தெரியவந்தப்ப இன்னும் ஆச்சரியமா இருக்கு.

சிதிலமெல்லாம் ஆங்கிலேயர்கள் செஞ்சுட்டு போனது. நினைவுச்சின்னமா அப்படியே விட்டுட்டாங்க போலிருக்கு.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விதூஷ்,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில்,

கோட்டைக்கு வந்திருக்கீங்களா?.. எப்போ?..

இங்கே இருக்கிற பீச் நம்ம பக்கம் மாதிரி கிடையாது.லோடைட் சமயம் காய்ஞ்சுபோய் கிடக்கும்.அதனால் படித்துறை எல்லாம் கட்டறதில்லை. ஒரு மாதிரி சரிவாத்தான் ஜெட்டி கட்டியிருப்பாங்க.மக்கள் வரத்து அதிகமாயிட்டதால இப்ப பரவாயில்லை.ஓரளவு சுத்தமா இருக்கு. முந்தியெல்லாம் குப்பைகூளத்தோட கண்றாவியா இருக்கும்.

குதிரை விஷயத்துல மைல்டா டவுட்டு இருந்திச்சு. கீழே தள்ளிவுட்டு பழிவாங்கிட்டதால போயே போச் :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

ஏதோ ஊர்சுத்திட்டு வந்து உங்ககிட்டே பகிர்ந்துக்கறேன். பயணக்கட்டுரையா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்.

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

ஊக்கம் கொடுத்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ரசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அடிமை பாண்டியன்,

முதல்வரவுக்கு நன்றி.

வெளியுலகுக்கு தெரியாத இன்னொரு உலகம் அங்கே இருக்குங்கிறதே ஆச்சரியம்தான். எதுவுமே இருக்குன்னா இருக்கு.. இல்லைன்னா இல்லை.. மனசைப்பொறுத்ததுதான் எதுவும். சரிதானா :-))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நிகழ்காலத்தில்,

போரடிக்கலைன்னு நினைக்கிறேன். எனக்கும் மகிழ்ச்சிதான்.

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

ரசிச்சதுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

உங்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

இந்தியில் 'பகீச்சே'அப்டீன்னா தோட்டங்கள்ன்னு அர்த்தம். அதிலிருந்துதான் பாக் என்ற வார்த்தை வந்தது.ஒருகாலத்தில் இங்கே அலி என்பவருக்கு சொந்தமாக நிறைய தென்னை, பாக்கு தோட்டங்கள்,தோப்புகள் இருந்தன.அதன் நடுவேதான் இந்த ஊர் உருவாகியிருக்கு. அதனாலதான் அலியின் தோட்டங்கள்ன்னு பொருள்பட 'அலிபாக்' என்ற பெயர் உருவானது. கூகிளாண்டவரை கேட்டா நிறைய சொல்லுவார்.

நன்றிப்பா.

மரா said...

நல்லதொரு அருமையான பயணக்கட்டுரை. எங்களை ‘அலிபாக்’ கே கூட்டிட்டு போனமாதிரி இருக்கு.நன்றி.

Sairam said...

அருமையான படைப்பு அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய விபரம்.
நானும் ஒரு பதிவு போடணும் என்று பல நாட்களாக ஏங்கினேன். ஆனால் எப்படி பதிவது என்று தெரியவில்லை விபரம் சொல்லவும்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மயில்ராவணன்,

ஒரு வருஷம் ஆனாலும் மறக்காம நன்றி சொல்றேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சாய்ராம்,

நீங்க ஏற்கனவே வெச்சிருக்கும் ப்ளாகில் ரெண்டே இடுகையோட நிறுத்திட்டீங்க போலிருக்கே.. குறைஞ்ச பட்சம் மூணு இடுகைகளாவது எழுதியிருந்தா, அதை தமிழ்மணத்துல இணைச்சு ஓட்டுப்பட்டையும் ஒட்டிக்கலாம். அப்றம் இடுகை போடறப்பல்லாம் ஓட்டுப்பட்டையிலிருந்தே நேரடியா தமிழ்மணத்துல அளிச்சுக்கலாம்.

சிவப்பு கலர்ல தமிழ்மணம்ன்னு எழுதியிருக்கே.. அதை க்ளிக் செஞ்சா தமிழ்மணத்தின் முகப்புப்பக்கத்துக்கு கொண்டுபோயி விடும். அதில் எல்லா விவரங்களும் இருக்கும். உதா: தமிழ்மணத்தில் எப்படி இணைப்பது, ஓட்டுப்பட்டையை எப்படி ஒட்டுவது இதர விஷயங்கள். படிச்சிப்புரிஞ்சிக்கலாம்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails