
சூரிய பகவானின் தரிசனம் கண்டு ரெண்டு மூணு நாள் ஆகியிருக்கும். அன்னிக்கு மதியத்துக்கு மேல மழை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு நிக்க ஆரம்பிச்சுடுச்சு. மழை விட்டும் தூவானம் விடாத கதையா, ஹை டை இன்னும் முடியாததால தண்ணீர் மட்டம் அப்படியே இருந்தது. பசங்களெல்லாம் கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாம கப்பல் செஞ்சுவிட்டு விளையாடிக்கிட்டிருந்தாங்க. மெதுவா காரை நிறுத்தியிருந்த இடத்துக்கு போய் பார்த்தேன்.எதிர்பார்த்ததுதான்... மிக்ஸிங் எதுவுமில்லாமலேயே தண்ணியில மிதந்துக்கிட்டிருக்கு. நல்லவேளை இருக்கைகள் வரை தண்ணி ரொம்பலை. ஆக்ஸிலேட்டர் நல்லா கடப்பாரை நீச்சலடிச்சு குளிச்சிக்கிட்டிருக்கு. இந்த மழைக்கப்புறம் எல்லா சர்வீஸ் செண்டர்களிலும் பயங்கர பிஸினெஸ் தெரியுமோ..
மதியத்துக்கு மேல நீர்மட்டம் குறைய ஆரம்பிச்சது. இப்ப ரங்க்ஸ் பையரை கூட்டிக்கிட்டு, 'சும்மா.. அப்டிக்கா போயிட்டு வர்றேன்'ன்னு நழுவிட்டார். போயிட்டு சாவகாசமா, ஆடி அசைஞ்சு அரைகப் பால் பாக்கெட்டோட வர்றாங்க. ஏது இதுன்னா.. ரெண்டுபேரும் ஊர்க்காடெல்லாம் சுத்திச்சுத்தி, ஊருக்கு வெளிய இருக்கிற பண்ணைக்கு பக்கமா போயிருக்காங்க. அங்க பால்சப்ளை நடக்கிறதை பார்த்ததும் வாங்கிட்டு வந்திருக்காங்க. அரைகப் பால் வெறும் முப்பதே ரூபாய்தானாம். இதுல, அரைமணிக்கொருக்கா ஊசிபோட்டு பால்சுரக்க வெச்சு, காசுபார்த்த கொடுமையும் அங்கெல்லாம் நடந்துக்கிட்டிருந்ததாம். நெறைய மாடுகள் வெள்ளத்தில் அடிச்சிக்கிட்டு போயிட்டதால உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம். அதை இப்படி ஈடுகட்டி மழையுள்ளபோதே நனைஞ்சிருக்காங்க.
கிட்டத்தட்ட நாலாம் நாள் தண்ணீரெல்லாம் சுத்தமா வடிஞ்சு, தரையெல்லாம் கொஞ்சம் காயவும் ஆரம்பிச்சுடுச்சு. அப்பாடா... இனி இயல்பு நிலை திரும்பிடும்ன்னு நினைச்சிருந்தோம். வீட்டுக்குள்ளேயே இருந்தா ஊர் நிலவரம் எப்படி தெரியும்!!. கிளம்பிட்டேன்.. ரோடெல்லாம் ஒரே குப்பை. தண்ணீரில் ஊறிப்போன ஃபர்னிச்சர்கள், மெத்தைகள். பாய் தலையணைகள், உணவுப்பொருட்கள்ன்னு எல்லாத்தையும் மக்கள் வெளியே கொண்டு வந்து குப்பையா குமிச்சிக்கிட்டிருக்காங்க . வீட்டை சுத்தம் பண்ண வேணாமா.. கடைத்தெருவிலிருந்த ஒண்ணு ரெண்டு கடைகளை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் புகுந்ததால ஊறிப்போன அரிசி, சோளம், கோதுமை மூட்டைகளை அப்படியே குப்பைத்தொட்டிக்கு பக்கத்துல கொண்டாந்து கொட்டியிருந்தாங்க.
ஒருகடையின் வெளியே வெச்சிருந்த போர்டை பார்த்ததும் திக்குன்னு ஆயிடுச்சு. 'பக்கத்தூர்ல இருக்கிற அணை எப்போ வேணும்ன்னாலும் உடையலாம், எல்லாரும் பாதுகாப்பா இருந்துக்கோங்க'ன்னு எழுதி வெச்சிருந்தாங்க. அந்த அணை நிரம்பிவழியுது, ஏகப்பட்ட ஷட்டர்களை திறந்து தண்ணீரை வெளியேத்துறாங்கன்னு தோழி ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. உடனே வீட்டுக்கு ஓடிவந்தேன். இங்கே என்னடான்னா அதுக்குள்ளே இதப்பத்தி கேள்விப்பட்டு மீட்டிங்கை கூட்டிட்டாங்க. அப்படி அணை ஒடைஞ்சா தண்ணி அரை மணி நேரத்துல இங்கே வந்துடும். மொதல்ல தரைத்தளம் மற்றும் முதல் தளத்துல இருக்கிறவங்க, முக்கியமான பொருட்களை (documents, pass books, passport, jewels,cash) எடுத்துக்கிட்டு மேல்தளங்கள்ல இருக்கிறவங்க வீட்டுக்கு போயிடுங்கன்னு அறிவிச்சாங்க. எங்க வீட்டுக்கும் ரெண்டு ஃபேமிலியை அழைச்சோம். முக்கியமான பொருட்களோட கம்ப்யூட்டர், டிவி, உணவுப்பொருட்கள்ன்னு என்னல்லாம் கொண்டு வரமுடியுமோ, அதையெல்லாம் எங்க வீட்டுல பத்திரப்படுத்தினாங்க.
அந்த சூழ்நிலையில் எனக்கு 'கள்ளிக்காட்டு இதிகாசம்'தான் ஞாபகம் வந்தது. வைகை அணையில் நீர் நிரம்பும்போது இப்படித்தானே ஊர்களெல்லாம் மூழ்கும். அந்த சூழ்நிலையிலும் ரங்க்ஸ் கிட்டபோய் செயின் இருக்கான்னு கேட்டேன். கடைசி நேரத்துல காமெடி பண்றாளே.. பயத்துல மூளை கலங்கிடுச்சோன்னு நினைச்சாரோ இல்லியோ.. 'எதுக்கு?' ன்னார். 'இல்ல, காரை கட்டிப்போட்டா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போவாதில்ல'ன்னு சொன்னப்புறம்தான் நான் கேட்டது தங்கச்செயின் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டார். அணை உடைஞ்சு வெள்ளம் வந்தா அந்த வேகத்துல நம்ம பில்டிங்கே நிக்குமோ நிக்காதோ.. ஸ்டீல் செயினெல்லாம் எந்த மூலைக்கு.. பொழச்சுக்கெடந்தா நம்ம கார்ல பயணம்.. இல்லேன்னா தேவலோக வாகனத்துல பயணம். எது வாய்க்குதோ பாக்கலாம்.
இத்தனை பேர் ஒரே சமயத்துல வந்தா ட்ராபிக் ஜாம் ஆயிடும்ன்னு நெனைச்ச முப்பத்து முக்கோடி தேவர்களெல்லாம் ஓவர்டைம் பாத்து, அந்த அணையை காப்பாத்திட்டாங்க. சில இடங்களில், அணை உடையப்போவுதுன்னு வதந்தியா கிளப்பறதுக்கே சில காமெடிபீஸ்கள் அலைஞ்சுக்கிட்டிருந்தது. ஒடனே மாநகராட்சி ஜீப்புல ஆட்களை அனுப்பி,' வதந்திகளை நம்பாதீர்'ன்னு தண்டோரா போட்டப்புறம்தான் வதந்தியலை ஓய்ஞ்சது. ஒரு வாரத்துக்குள்ள மும்பை மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பிடுச்சு.
மும்பை நகருக்குள் வெள்ளசேதம் நிறைய ஏற்படுவதற்கு நகருக்குள் ஓடும் Mithi நதியும் ஒரு காரணம் . Powai, மற்றும் விஹார் ஏரிகளிலிருந்து மும்பைக்கு குடி நீர் வழங்கப்படுது. இந்த ஏரிகளிலிருந்து வெளியாகும் அதிகப்படியான நீரே அந்த நதி. இது, Powai, Saki Naka, Bandra Kurla complex, calina, Dharavi மற்றும் பல இடங்கள் வழியா ஓடி மாஹிம்மில் அரேபியக்கடலில் கலக்குது. பேருக்குத்தான் இது நதியே தவிர எல்லாவிதமான மற்றும் தொழிற்சாலைக்கழிவுகளை கொட்டும் இடமாத்தான் இருக்குது.அதோட மழை நீர் வடிகாலாகவும் இது இருக்குது. மக்கள் கொட்டிய குப்பைகள் , கழிவுகளெல்லாம் அதோட ஓட்டத்தையே திசைதிருப்பிடுச்சு. மும்பையின் கலீனா பகுதிதான் வெள்ளத்தின்போது ரொம்பவும் சேதப்பட்டது. அதற்கு இந்த நதியே முக்கிய காரணம். போதாக்குறைக்கு பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் இதன் பாதையை மறித்துக்கட்டப்பட்டதால் மழைத்தண்ணீர் போக்கிடமில்லாம ஊருக்குள் புகுந்துடுச்சுன்னும் அரசியல் நடந்தது. வெள்ளமெல்லாம் வடிஞ்சப்புறம் அந்த நதியை தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தமும் செஞ்சாங்க. இப்பவும் வருஷாவருஷம் அந்த சடங்கு நடக்குது. நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்தாலும் சரி.. உடனே வெள்ள எச்சரிக்கை கொடுத்து, அந்த பகுதி மக்களை உஷார்படுத்திடுவாங்க.
மழையெல்லாம் முடிஞ்சப்புறம், பாலிதீன்பைகள் சாக்கடைகள், மற்றும் வடிகால்கள்ல போய் அடைச்சிக்கிட்டதாலதான், வெள்ள அபாயம் வந்துச்சுங்கிற ஒரு ஒலக மகா உண்மைய ரூம்போட்டு யோசிச்சு கண்டுபிடிச்சாங்க. (அவங்கவங்க இருந்த இடத்துல, ரெண்டு நாளா மாட்டிக்கிட்டு,... நகரமுடியாம இருந்த சந்தர்ப்பத்துல,.. யோசிச்சதாத்தான் இருக்கணும்). மழைக்கப்புறம் ஒரு மாசத்துக்குள்ளாற கடைக்காரர்களெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறதுக்காக அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிற பாலிதீன்பைகளை காலிபண்ணனும், அதுக்கப்புறம் அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிறதா கண்டுபிடிச்சா அபராதம், பொதுஜனங்கள் யாராவது கேரிபேக்கை கையில் வெச்சிருக்கிறதை பாத்தா ஆயிரம்ரூபாய் அபராதம்ன்னு சட்டம் போட்டாங்க. அப்புறம் 50 மைக்ரான் கள் அளவுக்கு பாலிதீன்பைகள் தயாரிச்சிக்கலாம்ன்னு ரெண்டு படி இறங்கிவந்தாங்க. இப்போ, 20 microns அதாவது .002 cm வரை அனுமதி கொடுத்திருக்காங்க. எதுவோ தேஞ்சு கட்டெறும்பு ஆச்சுதாமே!!! அந்தக்கதை ஞாபகம் வருதா :-))
மும்பையை பொறுத்தவரை, எந்த சீசனா இருந்தாலும் நல்லா ஜாலியா எஞ்சாய்பண்ணுவோம். மழை வந்தாத்தான் எங்களுக்கு ஐஸ்க்ரீமே ருசிக்கும் :-) வினாயகர் சதுர்த்திக்கப்புறம் நாரியல் பூர்ணிமான்னு ஒரு பண்டிகை வரும்... அதுவரை மழை இருக்கும். இங்கே கொஞ்சமா தண்ணி தேங்கறது, பஸ், ரயில் போக்குவரத்து தாமதப்படுவது, நிறுத்தப்படுவதெல்லாம், அன்றாட நிகழ்ச்சி... சொல்லப்போனா, நாங்களே அதை எதிர்பார்க்கிறதுண்டு... ஏன்னா மும்பை மக்கள் த்ரில் பிரியர்கள். இதோ இப்பக்கூட.. மும்பையின் புற நகர்பகுதியான தானாவில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துருக்கு. இதையும் தாண்டி வருவோமில்ல.... |
நாலு நாளா பெஞ்ச மழையில் எங்கூடவே நனைஞ்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. யாருக்காவது சளி பிடிச்சிருந்தா, சொந்த அனுபவத்தில் ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன்... செஞ்சு பாருங்க.
ஒரு கைப்பிடி துளசியும், ரெண்டு ஸ்பூன் பனங்கற்கண்டும், ரெண்டு கப் தண்ணியில் போட்டு கொதிக்கவெச்சு ஆறவிடுங்க. ஆறியதும் ஒரு ஸ்பூன் தேனை அதில் விட்டு, ஒரு நாளுக்கு ரெண்டுவேளைன்னு மூணு நாள் குடியுங்க. சளி, இருமல் ஓடிப்போயிடும்.
வர்ட்ட்டா....
