Tuesday 3 May 2022

கொலுசு போட்ட பூனை


ஒரு காலத்தில் நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பஞ்சை கோடவுனில் சேமித்து வைப்பது வழக்கம். அடைசலாக இருந்த கோடவுனுக்கு வந்த ஒரு எலி, "ஆஹா... ரொம்ப வசதியான இடமா இருக்கே, இங்கேயே செட்டிலாகி விடலாம்" என்று அங்கேயே தங்கி குட்டி போட்டுப் பல்கிப்பெருகலாயிற்று.

எலிகளின் பற்கள் மிக வேகமாக வளருமென்பதும், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கூராக வைத்திருக்கவுமென அவை பொருட்களைக் கரம்பும் என்கிறது அறிவியல். ஒரு எலி என்றாலும் பரவாயில்லை, எலிக்கூட்டமே அல்லவா கோடவுனில் கிடக்கிறது. அவை துவம்சம் செய்ய ஆரம்பித்தன. பஞ்சு மூட்டைகளைக் கடித்து ஓட்டையாக்குவதும், பஞ்சைப் பறத்துவதும், கோடவுனிலிருக்கும் கணக்குப்புத்தகங்களைப் பஞ்சு பஞ்சாகக் கிழிப்பதுமாக அவற்றின் கொட்டம் அதிகரித்துக்கொண்டே போயிற்று.

எலித்தொல்லையைச் சமாளிக்கவென நான்கு பேரும் ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தார்கள். அதுவும், நாளொரு எலியும் பொழுதொரு கிண்ணம் பாலுமாக வேட்டையாட ஆரம்பித்தது. சில நாட்களிலேயே எலித்தொல்லை கட்டுக்குள் வந்துவிடவே நண்பர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள். பூனையின் மேல் சொல்லவொண்ணா பாசமுண்டாயிற்று. நான்கு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பாசத்தைப்பொழிந்தார்கள். ஆளுக்கொரு பொறுப்பாகப் பிரித்துக்கொண்டு அதற்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்தார்கள். ஒரு படி மேலேயே போய் பட்டுச்சொக்காய், கால்களுக்குக் கொலுசு, கழுத்துக்கு வைர அட்டிகை என அணிவித்து அழகு பார்த்தனர்.

இப்போதெல்லாம் எலிகள் பூனையைக் கண்டு நடுங்குவதில்லை. கொலுசு சத்தம் கேட்டதுமே, அவற்றின் மனதில் தந்தி அடித்து, அவையெல்லாம் ஓடிப்போய் பதுங்கி விடும். இப்படியிருக்க, கோடவுனில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருந்த இரவுக்காவலனுக்கோ ஒரு புதுப்பிரச்சினை தோன்றியிருந்தது. நடுஇரவில் வெள்ளையாய் ஒரு உருவம் ஜல் ஜல் என கொலுசோசை ஒலிக்க அங்குமிங்கும் அலைவதை அரசல்புரசலாய்க்கண்டு பயத்தில் நடுங்கினான். இரண்டு கைகளிலும் தாயத்துகள், நெற்றி நிறைய கோவில் பிரசாதங்கள் என பேயிடமிருந்து காத்துக்கொள்ள எல்லா விதமான ஆயுதங்களோடுதான் அவன் பணிக்கு வருவதே. அன்றும் அப்படியே நாற்காலியில் ஆழ்ந்த நித்திரையிலாழ்ந்து அவன் பணி செய்யுங்காலை, ஒரு உருவம் அவன் மேல் பாய்ந்தது. "யம்மே.." என வீறிட்டு எழுந்த வேகத்தில் அவன் கையிலிருந்த லத்தி அவ்வுருவத்தின் மேல் வேகமாக மோதவும் "ம்யாவ்" என்ற அலறலோடு தூரப்போய் விழுந்தது, நொண்டிக்கொண்டே நகர முயன்றது.

"அயயோ.. இது எஜமானர்கள் வளர்க்கற பூனையாச்சே. இதுவா இத்தனை நாள் என்னைப் பயமுறுத்துச்சு, நடக்க வேற சிரமப்படுதே" என்றபடி பூனையைக் கையிலெடுத்து கால்களைப் பரிசோதித்தான். வலது முன்னங்காலைத் தொடும்போது வலியால் சீறியபடி அவன் கையைத் தட்டிவிட முயன்றது. அவனுக்குத்தெரிந்த கை வைத்தியமாக அப்போதைக்கு கைக்குட்டையைக் கிழித்து காலில் கட்டுப்போட்டு விட்டான். மறுநாள் வந்த நண்பர்கள் நடந்ததைக் கேள்விப்பட்டு கோபமும் வருத்தமும் ஏற்பட்டாலும், பூனையின் அடிபட்ட காலுக்குச் சொந்தக்காரர் அதன் காலில் காயத்திருமேனி எண்ணெய்யைத் தடவி நீவி விட்டு கட்டுப்போட்டார். எண்ணெய் நன்கு ஊறட்டுமென கட்டின் மேலும் கொஞ்சம் ஊற்றி விட்டார்.

அந்தப்படியே இரண்டொரு நாள் போனது, பூனையை பெட்ரெஸ்டில் வைத்துப் பார்த்துக்கொண்டனர். படுத்த வாக்கிலேயே பக்கவாட்டில் நாக்கை மட்டும் நீட்டி சாப்பிடும் அளவுக்கு அது சோம்பேறியாய்ப் போய்விட்டது. சின்னாளிலேயே பழகப்பழகப் பாலும் புளித்து கசந்து படுக்கையும் நொந்தது அதற்கு. எலியின் சுவையை நாக்கு தேடியது. கனவில் கூட சுண்டெலிகளின் கொட்டம்தான். எலி ரோஸ்ட், சுண்டெலி 65, தந்தூரி பெருச்சாளி என நாக்கில் ஜொள் வழிய அது கனவிலாழ்ந்திருந்த காலை, தொட்டு விடும் தூரத்திலில் ஒரு எலி வந்து, "பிடி பார்க்கலாம்" என வம்புக்கிழுத்தது. கோபம் கொண்ட பூனை பாயவும், பூனையின் கேண்டில் லைட் டின்னருக்கென அங்கே அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி சரிந்து விழவும் சரியாக இருந்தது. 

பக்கத்திலிருந்தாலே கப்பெனப் பற்றிக்கொள்ளும் பஞ்சும் நெருப்பும், கை கோர்த்துக்கொள்ளுமளவுக்கு நெருங்கினால் கேட்கவா வேண்டும். ஒரு நொடியில் கோடவுனே எரிந்து சாம்பலானது. செய்தியறிந்து ஓடி வந்த நண்பர்கள் குய்யோமுறையோ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும், பண்டல் பண்டலாய் எரிந்த பஞ்சு திரும்ப வரவா செய்யும்?. சிசிடிவி மூலம் நடந்ததையெல்லாம் அறிந்து கொண்டவர்கள், கட்டுப்போட்ட காலுக்குச் சொந்தக்காரரின் மேல் வழக்குப்போட்டு, மிச்சம் மீதி இருந்த சொத்துகளும் பஞ்சாய்ப்பறந்து கொண்டிருக்கின்றன எனக்கேள்வி.

கெட்டும் பட்டணம் போ என்பார்கள், பட்டணம் போய் கெட்டுப்போன பூனையோ, "வனத்தில் மேய்ஞ்சாலும் இனத்தில் வந்து அடையணும்" என்ற தாயின் சொல்லைத்தட்டாத தனயனாக சொந்த ஊருக்கே போய் விட்டது. அங்கே, ஒரு நாய்க்குட்டிக்குப் பயந்து மரத்தில் தாவி ஏறும்போது காலில் ஏற்பட்டிருந்த சுளுக்கு சரியாகி விட்டதாம். கோடவுனில் மிச்சம் மீதி இருந்த எலிகளெல்லாம் பக்கத்துக் கிராமத்து வயல்வெளிகளில் விளைந்திருக்கும் ஆர்கானிக் விளைபொருட்களை நாடியிருப்பதாகத் தகவல்.

இதனால் அறியப்படும் நீதி என்னவெனில்: எலித்தொல்லை அதிகமானால், எலிப்பொறி வையுங்கள், இல்லாவிடில் pest controlஐ நாடுங்கள்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

எலித்தொல்லை - கதை நன்று. ரசித்தேன்.

LinkWithin

Related Posts with Thumbnails