வெளியிடங்களுக்குச்செல்லும்போதோ அல்லது முக்கியமான ஏதேனும் நிகழ்வுகளின்போதோ அதன் ஞாபகார்த்தமாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்வது மக்களின் வழக்கம். அதிலும் காமிரா வசதி கொண்ட அலைபேசிகள் வந்தபின், விதவிதமான வகைகளில் படங்கள் எடுத்து மெமரி கார்டை நிரப்புவது இன்னும் அதிகரித்திருக்கிறது. என்னதான் டியெஸ்ஸெல்லார் வகை காமிராவின் தரத்துடன் இவை போட்டி போட இயலாதெனினும், நல்ல தரமான பிக்ஸல் எண்ணிக்கை கொண்ட அலைபேசியில்.. ஒளிப்படக்கலையின் அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றி எடுக்கப்பட்ட படங்கள் தொழில்முறை காமிராக்களில் எடுக்கப்பட்ட படங்களுக்கு சவால் விடும் வகையில் அமைகின்றன. தவிரவும், டியெஸ்ஸெல்லார் வகை காமிராக்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் மொபைல்தான் ஆபத்பாந்தவனாக உதவிக்கு வருகிறது. குறைந்தது 16 மெகாபிக்ஸல் கொண்டிருக்கும் மொபைலில் எடுக்கப்படும் படங்கள் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கிறது. பரீட்சார்த்தமாக ஒரு பயணத்தின்போது எனது நிக்கானை வீட்டில் விட்டுவிட்டு மொபைலிலேயே நிறையப்படங்களை எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு. "மொபைல் க்ளிக்ஸ்" என்ற எனது ஃப்ளிக்கர் ஆல்பத்திலும் அவற்றைக்காணலாம்.
சரியான விதத்தில் படம் எடுப்பதே ஒளிப்படக்கலையின் பாலபாடம். எதைப்படம் பிடிக்க நினைக்கிறோமோ அந்த சப்ஜெக்ட் ஃப்ரேமுக்கு வெளியில் சென்று, அரையும் குறையுமாக படத்தில் பதியாமல் முழுவதும் ஃப்ரேமுக்குள் அடங்கும்படி எடுத்தல் ஒரு விதம். இவ்வாறு எடுக்கும்போது சப்ஜெக்டைச்சுற்றிலும் சற்று இடம் விட்டு க்ளிக் செய்தல் அவசியம். சாய்ந்திருக்கும் படத்தை நேர்செய்தல் போன்ற பிற்சேர்க்கையின்போது சப்ஜெக்ட் வெட்டுப்படுவது இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கோவில் கோபுரங்கள், பிரம்மாண்டமான மரங்கள், கட்டிடங்கள் போன்றவற்றின் முழு அமைப்பையும் படம் பிடிக்க முனையும்போது இவ்விதியைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
மொபைலில் எடுத்த படங்களை பிற்சேர்க்கையின் மூலம் மேம்படுத்த விரும்பினால், கணினியில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டு வழக்கமாக எந்த போட்டோஷாப் மென்பொருளை உபயோகப்படுத்துகிறோமோ அதன் மூலம் மேம்படுத்திக்கொள்ளலாம். தவிரவும், இப்பொழுது மொபைலிலும் ப்ளேஸ்டோரில் அடோப், பிக்ஸ் ஆர்ட், போன்ற ஆப்கள் கிடைக்கின்றன. அவற்றைத்தரவிறக்கி அதன் மூலமும் பிற்சேர்க்கை செய்து படத்தை அழகுபடுத்திக்கொள்ளலாம்.
2 comments:
படங்கள் நன்று அக்கா...
வாங்க குமார்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment