மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரின் தரிசனத்துடன் ஆரம்பித்த 2016 ஓரளவு இனிமையான நினைவுகளையே தந்து சென்றிருக்கிறது. பயணத்துடன் ஆரம்பித்ததாலோ என்னவோ!! போதும் போதுமென உடலும் மனமும் அலுக்குமளவுக்கு, சென்னை முதல் குமரி வரையிலான ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுப்பயணமாகச் சென்று கண்டு களித்து வந்தோம். அவற்றில் இராமேஸ்வரம், திருநள்ளாறு போன்ற இடங்களில் தீர்த்தமாடியதும், ஆற்றுக்கால் பகவதி கோவிலுக்கு முதன் முறையாகச் சென்றதும் மறக்க முடியாத ஒன்று. திருப்பதியில் ஆரம்பித்த அப்பயணத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லுமுன், முந்தின நாள்தான் தத்கால் முறையில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து கொண்டே சென்றோம். ஏனெனில், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை நாட்கள் தங்கப்போகிறோமென எங்களுக்கே தெரியாது. சீட்டுகள் உறுதிப்படுத்தப்படும் வரை சற்றே திக்திக்கென இருந்த அந்தப்பயணம் த்ரில்லிங்காகவும் இருந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் எதிரிலிருந்த ராயாஸில் தங்கியிருந்தும் கோவிலுக்குச் செல்லாமல் வந்தது பெரிய மனக்குறை. வரும் வருடங்களிலாவது கும்பகோணத்துக்கு மட்டுமென ஒரு பயணம் சென்று வர வேண்டும்.
சென்னையில்நுனிப்புல் உஷா, நம் வல்லிம்மா மற்றும் அவர்கள் வீட்டு செடிகொடிகளுடன் நடந்த பதிவர் சந்திப்பும், வித்யா சுப்ரமணியன் அவர்களுடன் நடந்த ஒன் டு ஒன் பதிவர் சந்திப்பும், ஃபேஸ்புக் தோழிகளான கீதா, செல்வி, மாலா, சுமதி, ஜெயந்தி, கலைச்செல்வி, ஆகியோரைச் சந்தித்து அடித்த கொட்டமும் பசுமையானவை.
எழுத்திலும் வாசிப்பிலும் ஒரு சிறிய மைல்கல்லை எட்ட முடிந்தது சிறு மகிழ்ச்சி. வலைப்பூவை வாடவிடாமல் சராசரியாக மாதந்தோறும் ஒரு இடுகையாவது இட முடிந்ததும், முதன்முறையாக புத்தக விமர்சனம் எழுத ஆரம்பித்ததும் மகிழ்ச்சியே. தவிர, எங்கள் "பயோனியர் குமாரசுவாமி கல்லூரி"யின் பொன்விழா ஆண்டு மலரில் என் படைப்பு வெளியானது பெருமகிழ்ச்சியைத்தந்தது.
உடல் நலிவும், எங்கள் குடும்பத்திலேற்பட்ட ஒரு பேரிழப்பின் காரணமாக விளைந்த மனநலிவும் சற்றே சோர்வுறச்செய்ததால், வாசிப்பு மற்றும் ஒளிப்படமெடுப்பதில் மனதைத் திசை திருப்பி சற்றே மீண்டு வந்திருக்கிறேன். எது எப்படியானாலும், காமிராவைக் கீழே வைத்து விடாமல் ஃப்ளிக்கரில் தினமும் இரண்டு படங்களைப் பதிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் அதுதான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கிறது. டியெஸ்ஸெல்லார் வகை காமிராக்களுடன் போட்டி போடும் வகையில், நல்ல பிக்ஸல் எண்ணிக்கையுடன் மொபைல் அலைபேசிகள் வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒளிப்படக்கலையின் விதிமுறைகட்குட்பட்டு மொபைலிலும் ஏராளமான படங்களை எடுக்க முயன்று ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது. "மொபைல் க்ளிக்ஸ்" என்ற குறிச்சொல்லுடன் அவற்றை ஃபேஸ்புக்கில் வலையேற்றி வருகிறேன். விரைவில் அவை வலைப்பூவிலும் காணக்கிடைக்கும்.
சோம்பி முடங்கியிராமல், முடிந்ததைச் செய்து உடலையும் மனதையும் இயக்கத்தில் வைத்திருப்பது இருத்தலின் பொருட்டென்றாலும், அதிலும் ஓர் மனநிறைவு ஏற்படும்படி இயங்குவதே அதன் வெற்றி. இல்லையெனில் நேரமும் உழைப்பும் வீணே.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே விளையட்டும்.
2 comments:
மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வரும் ஆண்டு உங்களுக்கு மேலும் சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகள். வலைப்பூவையும் இந்த ஆண்டு கொஞ்சம் கவனித்திடுங்கள் - மாதம் ஒரு பதிவு என்பதை வாரம் ஒரு பதிவு என்ற அளவுக்காவது கொண்டு வந்தால் நலம். :)
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Post a Comment