அழுத கண்ணும் சிவந்த மூக்குமாக தலைவிரி கோலத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்ணகி. மதுரையில் தன்னுடைய சிலம்பை உடைத்து அதிலிருந்த மாணிக்கப்பரல்களே சாட்சியாக, தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தபின், ஆவேசம் கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டு, அதே ஆவேசம் எள்ளளவும் குறையாமல் பரசுராம ஷேத்திரத்தில் அந்த ஆற்றங்கரைக்கு வந்தடைந்திருந்தாள். அங்கு இருந்த பெரியவர் ஒருவர் அவளை ஆற்றுப்படுத்தி அமைதியடையச்செய்தபின் அவள் பொன்னுடலோடு தனக்காகக் காத்திருந்த கோவலனுடன் புஷ்பக விமானத்திலேறி வானுலகம் சென்றாள் என்பது செவி வழிச் செய்தி. அவள் யார் என்பதைக் கண்டுகொண்ட பெரியவர் அந்த ஆற்றங்கரையிலேயே அவளுக்காக ஒரு கோவில் கட்டினார். பொதுவாக கேரளக்கோவில்களில் தேவியை "பகவதி" என அழைப்பது மரபு. அந்தப்படியே இவளும் "ஆற்றுக்கால் பகவதி" எனப் பெயர் கொண்டாள்.
திருவனந்தபுரத்தின் பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலிருக்கும் இக்கோவில் உள்ளூர் மக்களால் "தேவி ஷேத்ரம்" எனவும் அழைக்கப்படுகிறது. "பெண்களின் சபரிமலை" எனவும் அழைக்கப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பூர நட்சத்திரம் பவுர்ணமி தினத்தன்று நடைபெறும் "பொங்காலை" மிகப்பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதால் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்ற பெருமையுடையது.
தேவி சன்னிதியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் தீபத்தினால் கோவிலின் பெரிய மற்றும் சிறிய பள்ளி அடுப்புகளும் பண்டார அடுப்புகளும் குலவை மற்றும் மங்கல ஓசைகள் முழங்க தீப்பெருக்கப்படும். இவ்வோசை கேட்டதும் அனைவரும் தத்தம் அடுப்புகளில் தீப்பெருக்குவர். கோவில் வளாகத்தில் மட்டுமன்றி சுற்றுப்பட்டு பத்து கி.மீ. அளவில் ரோடுகள் சந்துபொந்துகளில் அடுப்பு கூட்டி, புது மண்பானையில் பொங்கலிடுவர். அதன்பின் மேல்சாந்தியும் நம்பூதிரியும் பொங்கல் பானைகளில் நீர் தெளித்து நிவேதனம் செய்வர். ஆகாயத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூமழை தூவியதும், மக்கள் தங்கள் நிவேதனத்தை தேவி ஏற்றுக்கொண்டாள் என்ற மகிழ்ச்சியுடன் வீடு செல்வர்.
கோவிலின் முற்றத்திலேயே ஒரு பக்கமாக இருக்கும் கவுண்டர்களில் அர்ச்சனைச் சீட்டு வாங்கிக்கொண்டு தேவிக்குப் பிரியமான தெச்சிப்பூ மாலையும் கையில் சுமந்து தரிசனத்துக்கான வரிசையில் நின்றோம். முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் கேரளக்கோவில்களுக்கேயுரிய வெடி வழிபாட்டுக்கான அனுமதிச்சீட்டுக் கவுண்டரும் இருக்கிறது. கோவிலின் கோபுரவாசல்களில் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. வாசலில் நிற்கும்போதே மூலவரைத் தரிசிக்க முடியுமளவிற்கு மிகச் சிறிய கோவில். இதை நாடியா எங்கெங்கிருந்தோ பக்தர்கள் வருகிறார்கள்!!!? என்ற வியப்பு தோன்றுவது இயல்பே. மூர்த்தி சிறிதெனினும் இவளது கீர்த்தி பெரிது.
வாசலைத்தாண்டினால் முன் மண்டப முகப்பிலும் பகவதியே சிறுவடிவில் அமர்ந்திருக்கக் காண்கிறோம். மூலவரைப்போலவே இவளுக்கும் வஸ்திரம் அணிவித்து அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அதைப்பார்த்துக்கொண்டிருந்தபோதே சங்கநாதத்துடன் கேரளத்துக்கேயுரிய செண்டை மேளம் முழங்கியது. என்னவொரு தாளநடை.!!! அதில் மயங்கி நின்றுவிட்டால் தீபாராதனையைக் காணாமல் தவறவிட நேரும்.. கவனம்.
மூலவரான பகவதி ரத்னாங்கி அணிந்து மலர்களினூடே மதிவதனம் காட்டி, "அஞ்சேல்" என அருள்பாலிக்கிறாள். அவளைத்தரிசித்துக்கொண்டு சற்றே முன்நகர்ந்து அர்ச்சனைச்சீட்டையும் வாங்கி வந்த தெச்சிமாலையையும் நீட்டினேன். மாலையை அருகிலிருந்த ஆணியில் ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த மாலைகளுடன் சேர்த்துப் போட்டு விட்டு "பிரசாதம் அந்தப்பக்கம்" என எதிர்ப்பக்கத்தைக் கை காண்பித்தார். அந்த ஆணி செய்த பாக்கியம்தான் என்னே!!.. எதிர்ப்பக்கத்தில், ஆஸ்பத்திரி மற்றும் வங்கிகளில் உரக்க டோக்கன் எண்ணைச் சொல்லி அழைப்பது போல் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். உரியவர் போய், குங்குமம் களபம், பூக்கள் மற்றும் ஒரு வாழைப்பழம் வைக்கப்பட்டிருக்கும் இலைத்துண்டை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். வெகுநேரமாக நாம் அழைக்கப்படவில்லையென்றாலும் பாதகமில்லை. விவரங்களைச் சொன்னால் போதும். பிரசாதம் வழங்கப்பட்டு விடும்.
பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது மறுபடி செண்டைமேளம் முழங்கியது. சன்னிதியின் முன் ஓடி வந்து நின்றால் அடடா!! உற்சவ மூர்த்தி சன்னிதிக்கு வெளியே கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அபிஷேகங்களும் முடியும் வரை செண்டை மேளம் தொடர்ந்தது ஓர் வித்தியாசமான அனுபவம். அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடத்தியதும் உற்சவ மூர்த்தி மறுபடியும் உள்ளே கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஒவ்வொரு வழிபாட்டின்போதும் செண்டையும் சங்கும் முழங்க தேவிக்கான பாடல்களும் பாடப்படுவதைக் கேட்பது நமக்கெல்லாம் ஒரு புது அனுபவம்தான்.
கோவிலினுள் சிற்பங்களுக்குக் கணக்கேயில்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், ரதி மன்மதன் சிலைகள், வினாயகர், ஆஞ்சநேயர் மற்றும் சிவன் என அனைவரும் ஆளுயரச் சிலைகளாக ஒவ்வொரு தூணிலும் வடிக்கப்பட்டிருக்கின்றனர். கண்ணகியின் வாழ்வு நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. இரண்டாம் பிரகாரத்தில் வினாயகருக்கென தனிச்சன்னிதியும் அமைந்துள்ளது. அதன் அருகே கேரளக்கோவில்களுக்கேயுரிய சர்ப்பக்காவு அமைக்கப்பட்டு, பிரதி மாதமும் ஆயில்ய பூஜையும் நடந்து வருகிறது.
நாங்கள் பிள்ளையாரை வணங்கி நகரும்போது சர்ப்பக்காவினருகே சிறு கூட்டமாக ஆட்கள் நிற்பதும் நடுவில் நின்ற ஒருவர் ஏதோ பாடிக்கொண்டிருந்ததும் தெரிந்தது. என்னவென்று அங்கே போய்ப்பார்த்தால்,.. மக்கள் ஒவ்வொருவராக தங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொன்னதும் அவர் தன் கையில் வைத்திருந்த, கொட்டாங்கச்சி வயலின் போன்ற சிறு கருவியை இசைத்தவாறே நாலைந்து வரிகள் பாடினார். இதுவும் அங்கே ஒரு விதமான வழிபாடாக நடத்தப்படுகிறது.
பிரகாரம் சுற்றி வரும்போது, பிரசாத ஸ்டால் தாண்டியதும் இருந்த சிறு முற்றத்தில், மணைப்பலகை முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்குகள், நெல் நிரப்பப்பட்ட பாத்திரம், அதில் செருகப்பட்டிருந்த தென்னம்பூக்குலை, நாணத்துடன் மணமக்கள் என திருமணச்சூழல் நிரம்பியிருந்தது. கேரள முறைப்படி நடக்கும் கல்யாணம்.. அதுவும் கோவிலில் நடக்கும் கல்யாணத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென ஆவல் முட்டினாலும், இன்னும் போக வேண்டிய இடங்கள் நினைவில் வந்து அழைக்க மனதில்லா மனதோடு அங்கிருந்து கிளம்பினோம்.
இக்கோவிலில் பொங்கல் வழிபாடு நடத்தப்படும் சமயம் "தாலப்பொலி" என்ற நேர்ச்சையும் பெண்குழந்தைகளால் நிறைவேற்றப்படும். இதனால் அக்குழந்தைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்டுமென்பது நம்பிக்கை.
4 comments:
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
நேரில் தரிசிக்கிற எண்ணத்தைத் தோற்றுவித்தது
இன்னும் படங்கள் இருந்திருந்தால்
இன்னும் மிகச் சிறப்பாக உணர்ந்திருக்க முடியும்
என நினைக்கிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..
Nice write up akka. Visited this temple few yrs ago
வாங்க ரமணி,
கோவிலுக்குள் படமெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றுவதில் கேரளக்கோவில்கள் மிகவும் கறாரானவை :-)
அதிகம் ஒளிப்படங்கள் எடுக்க முடியாதது எனக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
வரவுக்கு நன்றி.
வாங்க அப்பாவி,
பொங்காலை சமயம் போகணும்ன்னு ஒரு ஆசை,.. பார்ப்போம்.
வரவுக்கு நன்றி.
Post a Comment