Wednesday, 28 January 2015

225 அடி உயரத்தில் தாயின் மணிக்கொடி பாரீர்..

 “நம் மூவர்ணக்கொடியானது இந்தியாவின் ஒற்றுமையின் சின்னம். மக்கள் தங்களிடையேயான அரசியல் மற்றும் பல்வேறு வேற்றுமைகளைக்களைந்து நம் தாய்த்திருநாடான இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற கடமையை இது நினைவூட்டுகிறது. இத்தகு பெருமையுடைய நம் தேசியக்கொடியை உயரே.. மிக உயரே பறக்கச்செய்வது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்” நவிமும்பை மாநகராட்சியின் முதல் மேயரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ் நாயக்கின் இந்த விருப்பத்தாலும் விடாமுயற்சியாலும்தான் இன்று நவிமும்பை மாநகராட்சியின் புதிய கட்டடத்தில் 225 அடி உயரக்கம்பத்தில் நம் இந்தியத்தாயின் மணிக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி என்ற பெருமையுடையது.

கொடியைப்போலவே இக்கொடியைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நவிமும்பை மாநகராட்சியின் தலைமைச்செயலகமும் பல சிறப்பம்சங்களைக்கொண்டிருக்கிறது. முதலில் பேலாப்பூரில் அடுக்கு மாடி அலுவலகம் ஒன்றில் இயங்கி வந்த இச்செயலகம் தற்போது அதே பேலாப்பூரில் பாம் பீச் ரோடில் கில்லா ஜங்க்ஷனில் கட்டப்பட்டிருக்கும் புதிய கட்டடத்திற்கு இடம் மாறியிருக்கிறது. 


ஜெர்மன் தொழில்நுட்பத்துடன், நம் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் சாயலுடன் கட்டப்பட்டிருக்கும் இக்கட்டடத்தில் மழை நீர் சேகரிப்பு, மற்றும் சூரிய ஒளிப்பிரதிபலிப்பை அதிக அளவில் தடுக்கும் anti-reflective tiles போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் காரணமாக அறை சூடாவது தடுக்கப்பட்டு அதன் மூலம் குளிர்பதன எந்திரங்களின் உபயோகமும் அதன் விளைவாக மின்சார உபயோகமும் குறைக்கப்படுகிறது. அடிக்கும் வெய்யிலை வீணாக்காமல் அதிலிருந்து மின்சாரம் தயாரித்துக்கொள்ள சூரிய ஒளித்தகடுகளும் பதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வசதிகளைக்கொண்ட ஒரே அரசு அலுவலகம் இதுதான் என்பதால் லிம்காவின் சாதனைப்புத்தகத்திலும் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் பத்து இடங்களில் 207 அடி உயர தேசியக்கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. நவிமும்பையிலுள்ள கொடிக்கம்பம் அவற்றை விட 18 அடி கூடுதல் உயரம் கொண்டது. கொடிக்கம்பத்தின் எடை 12.5 டன்களாம்.இவ்வளவு உயரத்தில் பறக்கும் கொடி காற்றில் கிழிந்து போகாமல் இருக்கவேண்டும் அல்லவா? ஆகவே இதற்கென்றே பூனாவின் அருகிலுள்ள ரஞ்சன்காவ் என்ற ஊரில் ஸ்பெஷலாகத்தயாரிக்கப்பட்ட பாலியெஸ்டரில் இந்தக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 48.9 கிலோ. இவ்வளவு எடையுள்ள கொடியை ஏற்றுவதென்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. ஆகவே இது இயந்திரம் மூலம் இயக்கப்படும் விஞ்சால் ஏற்றப்படுகிறது. ஒரு முறை ஏற்றவோ இறக்கவோ 7-9 நிமிடங்கள் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

பொதுவாக தேசியக்கொடி சூரிய உதயத்தின் போது ஏற்றப்பட்டு சூரிய அஸ்தமனத்தின் போது இறக்கப்பட்டு விட வேண்டும். ஆனால், இந்தக்கொடி 24x7 அதாவது எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்க விசேஷ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிக உயரத்தில் காற்றின் வேகம் காரணமாக கிழிந்து போய்விடாமல் இருக்க சிறப்பு கவனத்துடன் பராமரிக்கப்படும் இந்தக்கொடி போதிய இடைவெளிகளில் மாற்றவும் படுகிறது. கடந்த ஒரு வருடமாகக் காற்றில் படபடவென்ற சிறிய ஒலியுடன் பட்டொளி வீசிப்பறக்கும் இந்தக்கொடியின் கீழ் நிற்கும்போது படமெடுக்க வேண்டுமென்ற உணர்வு கூட தோன்றாமல் நம் மனமும் ஜிவ்வென்று பறக்கும் உணர்வு ஏற்படுவதென்னவோ உண்மைதான்.

ஜெய் ஹிந்த்.. பாரதத்தாயை வணங்குவோம்..

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

தில்லியின் கனாட் ப்ளேஸிலும் [Central Park] இப்படி ஒரு கொடி உண்டு. எத்தனை அழகு நம் தேசியக்கொடி பறக்கும் போது.....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ஆமாம்,.. டெல்லியும் பத்தில் ஒன்றுதான். உயரமான கொடி தேசத்தின் தலைநகரில் இல்லாமல் எப்படி? :-)

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் குறிப்புக்களும் அருமை...
முன்னரே பின்னூட்டம் இட்ட ஞாபகம்...
ஆனால் இங்கு காணோம்..

ராமலக்ஷ்மி said...

அழகான படங்கள், சாந்தி.

ஞா கலையரசி said...

அன்புடையீர், வணக்கம்.

தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/02/blog-post.html

அன்புடன் மலிக்கா said...

எத்தனை அழகு நம் தேசியக்கொடி பறக்கும் போது

பெருமிதம்தான் நமக்கு
மூவர்ணக்கொடியில் மட்டுமே பறக்கிறது சுதந்திரம் சுதந்திரமாக...

சாரலின் பக்கம் வந்து வெகுநாளாச்சி..

LinkWithin

Related Posts with Thumbnails