Wednesday 17 September 2014

உறங்கும் எரிமலை..


மூச்சடக்கி இருக்கும் எல்லா எரிமலைகளும் குளிர்ந்து அமைதியாய் இருப்பதாய் அர்த்தமில்லை. அவற்றில் சில ஆயத்தமாகிக்கொண்டிருக்கவும் கூடும்.

கூரையில் பிடிமானம் கிட்டாது சறுக்கிய கால்கள் கைவிட, தரை தொடவிருந்த இறுதிக்கணத்தில் உதவிக்கு வந்தன அதுகாறும் மடக்கியே வைத்திருந்த இறக்கைகள்.

சொற்கள் காயப்படுத்தும், வன்மத்தை விதைக்குமெனில் அவ்வாறான சொற்களை வெளி விடாமல் ஆயுட்சிறைக்கு உட்படுத்துவதே மேல்.

வினையாக முடிந்தவையில் சில, விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கக்கூடும்.

பால்யத்தில் தொலைந்த நிலா திரும்பக்கிடைத்தது காட்ராக்ட் திரைக்கு அப்பால். இத்தனை நாள் எங்கிருந்தாயென்று இருவருமே கேட்டுக்கொள்ளவில்லை.

இறகின் நீர்த்துளியில் ஒளிந்திருக்கும் சூரியனை அறியாமல் சிறகு கோதிக்கொண்டிருக்கிறது குருவி.

எல்லாக்காதுகளும் மூடிக்கொள்ளும்போது மனது திறந்து கொள்கிறது சொற்களை வரவேற்க.

போனால்தான் என்ன? வராமலா போய்விடும்?

சிந்திய ஒரு சொட்டு நிலவினைப்பருக அடித்துக்கொண்டன அத்தனைக் கண்களும்.

செய்த தவறுகளையெல்லாம் மறந்து விடுவதாகச் சொல்லிக்கொள்பவர்களில் பலர் தாங்கள் செய்த தவறுகளை மட்டுமே மறக்கிறார்கள்.

7 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் சிந்தனை முத்துக்கள்! ஆறாவது அழகிய கவிதை.

கோமதி அரசு said...

அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது சாந்தி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

//வினையாக முடிந்தவையில் சில, விளையாட்டாகத்தான் ஆரம்பித்திருக்கக்கூடும்.//

என் சமீபத்திய அனுபவத்தில் நான் உணர்ந்த உண்மை.

மனோ சாமிநாதன் said...

அத்தனையும் அழகு. முதலாவது மிக அழகு!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே நற்சிந்தனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அனைத்து முத்துக்களும் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா..

பால கணேஷ் said...

அத்தனையும் மிகச் சிறப்பானவை. அவற்றிலும் குறிப்பாக 2, 4, 7 ஆகியவை. எக்ஸலண்ட்.

LinkWithin

Related Posts with Thumbnails