காயம் பட்டவர்களின் வலியை ஆயுதம் என்றும் அறிந்ததில்லை.
சோம்பல் தனியே வருவதில்லை, முயற்சியின்மை, ஒத்திப்போடுதல், சாக்குச் சொல்தல் போன்ற நண்பர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு வருகிறது.
பயணிகளுக்கு மட்டுமன்றி, வாகனங்களுக்கும் சேர்த்து கையசைத்து விடை கொடுக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.
தொலைந்து போனதைத் தேடித்தேடி கடைசியில், "போய்த்தொலைகிறது " என்று விட்டு விடுவதுதான் பக்குவப்படுவதன் அடுத்த படி.
மதிக்கப்படும் இடங்களில் ஒரு துளிக் கண்ணீரும் ஒரு துளி தண்ணீரும் விலை மதிப்பற்றவை.
ஏமாறுவதும் குதூகலமளிக்கிறது, ஏமாற்றுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்.
கசந்த காலத்திற்கு நிகழ்காலத்திலும் உயிரூட்டிக்கொண்டிருந்தால் எதிர்காலம் இனிக்காது.
உறவுகளுக்கும் உணர்வுகளுக்குமிடையே அரைபட நேரிடும் போது, நழுவிச் செல்லத்தெரிந்தவர்களே தப்பித்துக்கொள்கிறார்கள். அல்லாதவர்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள்.
குறும்புத்தனத்துடன் முன்னே ஓடி, விசுவாசத்துடன் பின்தொடர்ந்து, பின் களைப்புற்ற நாய்க்குட்டியாய்க் காலடியில் குறுகியது நிழல்.
கட்டறுத்துக்கொண்டு ஓடும் எண்ணங்களை அடக்கியாள்வதும் , அவற்றால் துவைத்து எடுக்கப்படுவதுமாக மனித வாழ்வில் நடக்கிறது தினம் ஒரு ஜல்லிக்கட்டு.
6 comments:
பயணிகளுக்கு மட்டுமன்றி, வாகனங்களுக்கும் சேர்த்து கையசைத்து விடை கொடுக்க குழந்தைகளால் மட்டுமே முடியும்.//
உண்மை.
அருமையான எண்ணங்கள் பகிர்வு.
வாழ்த்துக்கள்.
அத்தனையும் அருமை. பாராட்டுகள்.
\\தொலைந்து போனதைத் தேடித்தேடி கடைசியில், "போய்த்தொலைகிறது " என்று விட்டு விடுவதுதான் பக்குவப்படுவதன் அடுத்த படி.\\
எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.
குழந்தைகளைப் பற்றி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கலாம். மனம் ஓயாமல் ரசித்துக்கொண்டிருக்கலாம்.
அனைத்தும் அருமை. பாராட்டுகள் சாந்தி.
காயம் பட்டவர்களின் வலியை ஆயுதம் என்றும் உணர்ந்ததில்லை
அருமை
அருமை
அருமையான சிந்தனைத் துளிகள்!
அருமை சாந்திம்மா
Post a Comment