Saturday 5 April 2014

ஜீவ ஒளியும் குமிழ் முத்தமும்..

ஓட்டைப்பாத்திரமும் நிம்மதியற்ற மனமும் ஒருநாளும் நிறையாது,.. அவற்றை நிரந்தரமாய் அப்படியே விட்டு வைக்கும்வரை.

கூத்து நிறைவுற்றபின் ஒப்பனையைக் கலைக்கத்துவங்கினர் ஒவ்வொருவராக, அடுத்த திருவிழாவை எதிர்நோக்கியபடி முடங்கிக்கிடந்தது காவல்தெய்வம் சருகுகளைச் சுமந்தபடி.

வெறுமனே பேச்சளவில் திட்டமிடுபவனை விட திட்டத்தின்படி செயலைச் செய்து முடிப்பவனே பாராட்டத்தக்கவன்.

நடந்த தவறுக்காய் பிறரைக் குற்றம் சாட்டுமுன் ஒரு நிமிடம் நிதானித்து யோசிப்பது நல்லது, ஏனெனில் தவறுக்கான ஆரம்பம் நம்மிலிருந்தும் இருக்கலாம்.

நம் திறமையையும் வளர்ச்சியையும் மதிப்பிட எப்பொழுதும் பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டிருக்காமல், நமது முந்தைய மற்றும் தற்போதைய நிலைகளையும் அவ்வப்போது ஒப்பிட்டு நோக்குவோம்.

இரை கவ்வி நீராழம் பதுங்கிய மீன் பரிசளித்த குமிழ் முத்தத்தை, கன்னம் மாற்றிக் குதூகலிக்கிறது குழந்தை.

கூடு கட்ட சுள்ளிகளைப்பரிசளித்த மரத்திற்கு குஞ்சுமொழியில் தினம் நன்றி நவில்கிறது பறவை

அத்தனையையும் அழுதோ சிரித்தோ தீர்த்துவிட முடியுமென்றால் எத்தனை நன்றாக இருக்கும்!. முடியாதென்பதால்தான் செயலில் ஈடுபடுகிறோம்.

உண்மையின் உறுதியான குரலுக்கு முன் பொய்யின் ஆரவாரக்கூச்சல் தேய்ந்து முடிவில் ஓய்ந்து விடுகிறது.

இடைஞ்சல்கள் சூறாவளியாய்ச் சுழன்றடித்தாலும், மனதிலிருக்கும் வெல்ல வேண்டுமென்ற ஜீவஒளியை அணையாமல் பார்த்துக்கொண்டால் அதுவே நமக்கு வழிகாட்டி வெளிக்கொணர்ந்து விடும்.

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நல்ல கருத்து மிக்க படைப்பு....

நன்றி
அன்புடன்
ரூபன்

ராமலக்ஷ்மி said...

அருமை எல்லாமே. பறவை நன்றி சொல்லும் அழகு வெகு இனிமை. ஜீவ ஒளி அணையாது ஒளிரட்டும்!

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய மற்றும் தற்போதைய நிலைகளையும் ஒப்பிடுவது தான் சிறந்தது உட்பட அனைத்தும் அருமை...

செய்தாலி said...

அனைத்தும் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.... தொடரட்டும் ஜீவ ஒளி...

Anonymous said...

தமிழில் வசன கவிதைகள் மிகக் குறைவு, இதுவும் ஒரு வசன கவிதை வடிவாகவே எனக்குப் பட்டது, கருத்தும், வார்த்தைகளின் கோவையும் ஆழமானதாய், அழகானதாய் உள்ளது.

LinkWithin

Related Posts with Thumbnails