தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்த செடியில் பூத்த சுதந்திரமலர் இன்று மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் வாழ்வையும் ஈந்த எத்தனையோ தியாக உள்ளங்களைப்பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களையும் நம் வருங்காலத்தலைமுறையினருக்கு நம்மில் ஒருசிலரேனும் எடுத்துரைத்துக்கொண்டுதானிருக்கிறோம். என்றாலும் பிற பண்டிகைகளையும் காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற சிறப்பு தினங்களையும் கொண்டாடும் அளவுக்கு நாம் குடியரசுதினத்தையும், சுதந்திரதினத்தையும் கொண்டாடுகிறோமா என்றால் வேதனைக்குரிய பதில்தான் கிடைக்கிறது. அதிலும், "குடியரசுதினம் கொண்டாடப்படுமளவுக்குச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா?.. இங்கே மட்டுந்தான் இப்படியா? அல்லது தேசம் முழுக்கவே இப்படியான மனோநிலைதான் நிலவுகிறதா!" என்பதில் எனக்கு என்றுமே சந்தேகமுண்டு..
மற்ற இடங்களில் எப்படியோ.. மும்பையில் குடியரசுதினம் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. குடியிருப்புகளும் அரசாங்க அலுவலகங்களும், வீதிகளும் அன்று அட்டகாசமாக தேசியக்கொடியின் தோரணங்களாலும், வண்ணக்காகிதங்கள் மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். காலையில் கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தேறும். அதன்பின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக விளையாட்டுப்போட்டிகளும் நடத்திப் பரிசளிக்கப்படும். அன்று நல்ல நேரத்தில் சத்ய நாராயணா பூஜை செய்யப்பட்டு தேச, மற்றும் மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடக்கும். மாலையில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் ‘ஹல்திகுங்கும்’ நிகழ்ச்சியுமுண்டு. குடியிருப்பில் அன்று லஞ்சோ அல்லது டின்னரோ கட்டாயமுண்டு.
இத்தனை அமர்க்களங்களும் வேண்டாம்.. அதில் ஒன்றிரண்டையாவது சுதந்திரதினத்தன்று கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அரசு அலுவலகங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஒரு சில குடியிருப்புகளையும் தவிர மற்ற இடங்களில் கொடி கூட ஏற்றுவதில்லை. இப்படியிருக்கும் சுதந்திரத்தையும் அந்தச்சுதந்திர தினம்தானே நமக்கு வழங்கியிருக்கிறது.
சென்ற சுதந்திர தினத்தன்று, வழக்கம்போல் புகைப்பட வேட்டைக்காகப் புறப்பட்டேன்.(வண்டிக்கருகில் வந்த விற்பனையாளர்களைத்தவிர சாலைக்காட்சிகளெல்லாம் நகர்ந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குற்றம் குறை பொறுத்தருள்க). ஒன்றிரண்டு இடங்களிலாவது பொதுஇடங்களில் கொடியேற்றும் வைபவம் நடக்கும்.. பார்க்கலாம், காமிராவிலும் பிடிக்கலாம் என்று ஆசையோடு கிளம்பிய எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வழியில் தென்பட்ட ஒன்றிரண்டு மாண்டிசோரி நர்சரிப்பள்ளிகளில் மட்டும், மூவர்ணப்பலூன்களும் கொடிகளுமாக அலங்காரங்களும் தேசபக்திப்பாடல்களுமாகக் குழந்தைகள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். ஏதோ.. குழந்தைகளாவது கொண்டாடுகிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இதைத்தவிர தெருவில் சுதந்திரதினம் என்பதற்கான எந்த அடையாளமுமில்லை. அரசு அலுவலகங்களிலும்கூட பிரத்தியேகமான அலங்காரங்கள் எதுவும் தென்படவில்லை. போனால் போகிறதென்று கொடி மட்டும் ஏற்றப்பட்டிருந்தது.
தொல்லைக்காட்சியின் முன் மக்கள் முடங்கி விட்டதால், அதிகம் ஆளரவமற்ற கடைத்தெருவிலும் சாலைகளின் சிக்னல்களிலும் கொடிகளை விற்றுக்கொண்டிருந்தவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சத்தியமாக இதுவும் இன்னொரு நாளாகத்தான் தெரிந்தது. வீட்டுக்குத்திரும்பும்போது வாங்கி வந்த காகிதக்கொடிகளில் ஒன்றைக் குடியிருப்பின் வாசலில் அமர்ந்திருந்த காவலாளியின் மேசையில் குத்தி வைத்து விட்டு வந்தேன். இப்படியாக, ‘எங்க குடியிருப்பிலும் கொடியேத்தியாச்..”
7 comments:
padangal arumai
படங்கள் அருமை...
உங்கள் பதிவில் இருக்கும் வருத்தம் உண்மைதான் அக்கா... இதுவும் ஒரு விடுமுறை நாளாகத்தான் கழிகிறது.
படங்களும் பதிவும் நன்று சாந்தி. ஆம், எத்தனை போராடிக் கிடைத்தது இந்த சுதந்திரம் என்பதை இந்நாளில் கூட எண்ணிப் பார்ப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
வேதனைகளைச் சாதனைகளாக்கிய காலம் இந்தத் தலைமுறைக்குத் தெரியவில்லை. சும்மாக் கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதையும் மறந்து வருகிறோம். மற்றபடி இதுவும் ஒரு விடுமுறை நாளாகவே பார்க்கப்படுகிறது என்பது வருத்தமான விஷயம்.
பாடலும் பதிவும் மிக அருமை.
கொடி விற்பவர்களை பார்க்கும் போது வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது.
படங்களும் பதிவும் அருமை
டிவி நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் என்றும் சொல்லலாம். இது மற்ற பண்டிகைகளுக்கும் பொருந்தும்.
இருப்பினும், சுதந்திர-குடியரசு தினங்களும் சரி, மற்ற பண்டிகைகளும், நட்பு-காதலர்-மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே - தினங்களும் சரி, ரொம்பவே கமர்ஷியலைஸ் செய்யப்பட்டதாக ஒரு எண்ணம். இயல்பான ஒரு உணர்வு, இந்த வியாபாரமாக்கங்களால் அதீத உணர்ச்சிமயமாக்கப்பட்டுள்ளனவோ என்று ஒரு எண்ணம்
நம் சிறுவயதுகளில், டிவி காலத்திற்கு முன்பு, சுதந்திர தினம் என்பது பள்ளிகளில்-அரசு அலுவலகங்களில் மட்டுமே கொடியேற்றி மிட்டாய் வழங்கும் ஒரு தினமாகத்தான் இருந்தது. இப்போ அத்தினங்களில் ஒரு கொடியாச்சும் வாங்கி குத்திக்கலைன்னா நமக்கே குற்ற உணர்ச்சி வந்துடுது பாருங்க. :-)))))
Post a Comment