Friday 18 January 2013

ஏழு அதிசயங்களும் ஒரே இடத்தில்..(வொண்டர்ஸ் பார்க் - நெருல்)

பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகின் நியதி. பழசாகிப்போனதாலோ, சேதப்பட்டுப்போனதாலோ, இல்லை பார்த்துப்பார்த்து போரடித்துப் போனதாலோ அல்லது இது எதிலும் அடங்காத ஏதாவதொரு காரணத்தாலோ பழையவற்றை கழித்துக்கட்டி விட்டு புதியதாக ஒன்றைக் கொண்டு வருகிறோம்.(மறுபாதிகளுக்கும் இந்த நியதி பொருந்துமான்னு வில்லங்கமால்லாம் யோசிக்கப்டாது புரிஞ்சதோ. பிடிச்சு 'உள்ளே' தள்ளிருவாங்க :-))) அந்த நியதியிலிருந்து மாறாமல் உலகின் பழைய அதிசயங்களான பாபிலோனின் தொங்கும் தோட்டம்,  எகிப்து மன்னர் பாரோ கூபுவின் சமாதி அடங்கியுள்ள கிஸா பிரமிட், ஆர்ட்டிமிஸ் கோவில், ஒலிம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ் கடவுளின் சிலை, மாசோலஸ் மசோலியம், ரோட்ஸ் சிலை, அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கம். போன்றவை பட்டியலிலிருந்து விலக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.

பழைய பட்டியலில் உள்ள அதிசயங்கள் கிரேக்க எழுத்தாளரான ஆண்டிபேட்டர் என்பவரால் தேர்வு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. புதிய ஏழு அதிசயங்கள் சுவிட்சர்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கனடா நாட்டுக்காரருமான பெர்னார்ட் வெபர் என்பவரின் முயற்சியால் பொது வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கென நியூ செவன் வொண்டர்ஸ் அறக்கட்டளையும் ஆரம்பிக்கப்பட்டது. விரும்புபவர்கள் இணையம் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக தமது வாக்குகளை அளிக்கவும் வசதிகள் செய்து தரப்பட்டன.

இந்த வாக்கெடுப்பில் உலகின் பெருமளவு நாடுகள் கலந்து கொண்டாலும் சில நாடுகள் இதில் கலந்து கொள்ளாமல் தம் எதிர்ப்பைத்தெரிவித்தன. அதிசயங்களை வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுப்பதை யுனெஸ்கோவும் விரும்பவில்லை. ஆரம்பக்கட்டத்தில் தேர்வாளர்களை, அதாவது nomineeக்களை மட்டும் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய ஆலோசனைகளை வழங்கி விட்டு ஒதுங்கிக்கொண்டு விட்டது. ஒருவரே எத்தனை வாக்குகள் என்றாலும் போட்டுக்கொள்வதைத் தடுக்க வழியில்லாததால் இந்த வாக்கெடுப்பை அறிவியல்பூர்வமாக ஆதாரமற்றது என்றும் கூறுகிறார்கள். எக்கச்சக்க கள்ள ஓட்டுகள் விழுந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறதுதானே.

சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தார்களாம். இதுவரை நடந்த கருத்துக்கணிப்புகளில் இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய கருத்துக்கணிப்பென்று zogby international என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் கமிஷனரான john zogby கருத்துத்தெரிவித்திருக்கிறாராம். உண்மையில் எத்தனை பேரோ?.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்.  

நம் இந்தியாவில் மதுரை மீனாட்சியம்மனுக்கும், தாஜ்மஹாலுக்கும் நடந்த கடைசிக்கட்டப் போட்டியில் தாஜ்மஹால் ஜெயித்த விதம் குறித்து இங்கேதான் சற்றுச் சந்தேகம் வருகிறது :-) மதுரையை ஜெயிக்க வையுங்கள் என்று நம்மாட்கள் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் மன்றாடியும் தேர்தல் சமயங்களில் நடப்பது மாதிரி கன்னாபின்னாவென்று கள்ளஓட்டுகளைக் குத்தாமல் நம்மாட்கள் அம்போவென்று விட்டு விட்டதில் மீனாட்சியை அலங்கரிக்க வேண்டிய “தாஜ்” தாஜுக்குப் போய்விட்டது. தாஜ் என்றால் கிரீடம் என்றும்  இன்னொரு அர்த்தமுண்டு :-) என்னே மதுரைக்கு வந்த சோதனை..

2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ செவன் வொண்டர்ஸ் அறக்கட்டளை தனியார் அளித்த நன்கொடைகள் மற்றும் இந்த வாக்கெடுப்பு சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் இவற்றைக் கொண்டே இயங்கியது, எந்தப் பொதுப் பணத்தையோ அல்லது வரிசெலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை என்றும் கூறிக்கொள்கிறது.

யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயரைத் தனி நபர்த்தலைவராகவும், (அதாவது யுனெஸ்கோவுக்கும் இந்தக்குழுவுக்கும் சம்பந்தமில்லையாம்) உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணர்களான, சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், போன்ற ஆறு பேரையும் கொண்ட ஒரு குழு உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்தது. இந்தக்குழு உலகின் புதிய அதிசயங்களை 2007-ம் வருடம் ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பெருத்த ஆரவாரத்துக்கிடையே அறிவித்தது. போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனில் பென்பிசியா ஸ்டேடியத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியைக் காண நேரிலும் தொலைக்காட்சிப்பெட்டிகள் முன்னாடியும் லட்சோபலட்சம் மக்கள் தவமிருந்தனர்.

இந்தப்புதிய பட்டியலில்,
இந்தியாவின் தாஜ்மஹால்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், மலை உச்சியில் உள்ள பிரம்மாண்ட இயேசு நாதர் சிலை.
சீனப் பெருஞ்சுவர்.
ரோம் நகரின் கொலோசியம்.
பெருவின் மச்சு பிச்சு.

ஜோர்டானின் பெட்ரா.
மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்..
போன்றவை சேர்க்கப்பட்டன.

இந்த அதிசயங்களையெல்லாம் உலகம் முழுக்கச்சுற்றி வந்து பார்க்க வேண்டுமென்றால, குறைவில்லாத பணமும், உடல் நலமும் வேண்டும். பக்கத்து ஊருக்குப் போய்வந்தாலே ‘அம்மாடி’ என்று காலைப் பிடித்துக்கொண்டு உட்கார்பவர்களும், வயதானவர்களும் சுற்றிப்பார்ப்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவேதான் பாஸ்போர்ட், விசா போன்ற எந்தப் பிடுங்கல்களுமில்லாமல் எல்லா அதிசயங்களையும் ஒரே இடத்தில் சுற்றிப்பார்க்க வொண்டர்ஸ் பார்க்கில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் புண்ணியவான்கள். அதுவும் வெறும் முப்பத்தைந்தே ரூபாய் செலவில் :-)

இந்தப்பக்கம் கால் வைத்தால் தாஜ்மஹாலின் முற்றத்தில் நிற்கலாம். அதுவே அந்தப்பக்கம் ரெண்டடி எடுத்து வைத்தால் ரியோ டி ஜெனிரோவின் ஏசுவைத் தரிசிக்கலாம். “மத்தவங்களுக்கு வழி விடாம ரொம்ப நேரமா நிக்காதீங்க.. பிச்சு பிச்சு” என்று யாராவது அன்பாக எச்சரித்தால் மச்சு பிச்சுவுக்குப் போய் விடலாம். பற்றாக்குறைக்கு மயன்கள் கட்டி வைத்த அமைப்பு வேறு இங்கே இருக்கிறது. “அடுத்தாப்ல எப்ப உலகத்துக்கு எக்ஸ்பயரி தேதி குறிச்சுருக்கீங்க?. இங்கே அது சம்பந்தமான கல்வெட்டு ஏதாவது இருந்தா சொல்லுங்க. எங்களுக்கும் பொழுது போக வேணாமா?. ப்ளாக், பேஸ்புக்ன்னு  கொஞ்ச நாளைக்கு தீப்பிடிக்க வைப்போமில்லே!!” என்று அலப்பறையைக் கூட்டி விட்டு வரலாம். ”ஆஹா!!.. என்னவொரு சௌகரியம். 

இந்த ஏழு அதிசயங்களையும் பற்றி விலாவாரியாக விரைவில் எழுதப்படும் அபாயம் இருக்கிறதென்று இப்போதே எச்சரித்துக் கொல்கிறேன் :-))))

17 comments:

ராமலக்ஷ்மி said...

ஏழு அதிசயங்களையும் இலகுவாக ஓரிடத்தில் இரசிக்கத் தந்திருக்கிறார்கள். நாங்களும் காணும் வகையில் மிக அழகாகப் படமாக்கியிருக்கிறீர்கள். தகவல்களுக்கும் நன்றி. விலாவாரியான பகிர்வுக்கும் காத்திருக்கிறோம்:). தொடருங்கள்.

Asiya Omar said...

அருமையான பகிர்வு.படங்கள் அழகுக்கு மிக அழகு சேர்க்கிறது.

துளசி கோபால் said...

அடடா.... நோகாம நோம்பு கும்பிட்டுக்கலாமா!!!! பேஷ் பேஷ்.

இந்த வொண்டர்ஸ் பார்க் எங்கனக்குள்ளெ இருக்கு?

படங்கள் எல்லாம் சூப்பர்மா!!!

பால கணேஷ் said...

அபாயமா... ஆனந்தம்தான் சாரல் மேடம்! காத்திருக்க‌ோம். இந்தப் பதிவில் உங்க தயவுல எல்லா அதிசயங்களையும் கண்ணாரக் கண்டு ரசிச்சேன். நன்றி.

மனோ சாமிநாதன் said...

தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... கஷ்டப்படாம ஒரே இடத்தில் ஏழு உலக அதிசயங்களையும் பார்க்க முடியுதே.....

ரொம்ப நல்ல விஷயம்....

த.ம. 1

ADHI VENKAT said...

ஆஹா! ஏழு உலக அதிசயங்களையும் ஓரே இடத்தில் கண்டு களிச்சாச்சு. விலாவரியான பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

ஸாதிகா said...

இங்கு சென்னையிலும் சில மாதங்களுக்கு முன்னர் செவண் வொண்டர்ஸ் என்று தீவு திடலில் போட்டார்கள்.உங்கள் விரிவான அடுத்த பகிர்வுக்காக வெயிட்டிங்.

தி.தமிழ் இளங்கோ said...

//இந்த ஏழு அதிசயங்களையும் பற்றி விலாவாரியாக விரைவில் எழுதப்படும் அபாயம் இருக்கிறதென்று இப்போதே எச்சரித்துக் கொல்கிறேன் :-)))) //

நல்ல நகைச்சுவை!
உலகம் அழியும் நாள் என்று யாரேனும் கொல்வதற்கு முன் நீங்கள் எழுதி கொல்லவும்! :-)))) //

கோமதி அரசு said...

இந்த அதிசயங்களையெல்லாம் உலகம் முழுக்கச்சுற்றி வந்து பார்க்க வேண்டுமென்றால, குறைவில்லாத பணமும், உடல் நலமும் வேண்டும். பக்கத்து ஊருக்குப் போய்வந்தாலே ‘அம்மாடி’ என்று காலைப் பிடித்துக்கொண்டு உட்கார்பவர்களும், வயதானவர்களும் சுற்றிப்பார்ப்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவேதான் பாஸ்போர்ட், விசா போன்ற எந்தப் பிடுங்கல்களுமில்லாமல் எல்லா அதிசயங்களையும் ஒரே இடத்தில் சுற்றிப்பார்க்க வொண்டர்ஸ் பார்க்கில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் புண்ணியவான்கள். அதுவும் வெறும் முப்பத்தைந்தே ரூபாய் செலவில் :-)//
நானும் உங்கள் புண்ணியத்தில் எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக உலக அதியங்களை சுத்திப்பார்த்து விட்டேன்.
நன்றி சாந்தி. படங்கள் எல்லாம் அழகு.

சேக்கனா M. நிஜாம் said...

அருமை !

அனைத்து இடங்களையும் நேரில் பார்த்த திருப்தி :)

தொடர வாழ்த்துகள்...

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பதிவு அருமை

அடுத்த அபாயத்திற்கு ஆவலாகக் காத்திருக்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

அட இது டிரைலர் தானா? சீக்கிரம் மெயின் பிக்சர் ரிலீஸ் பண்ணுங்க

பூந்தளிர் said...

ஏழு அதிசயங்களும் ஒரே இடத்திலா? பரவால்லியே. இதுகூட நல்லா தன் இருக்கு

'பரிவை' சே.குமார் said...

உங்கள் படங்கள் எங்களுக்கும் புதிய உலக அதிசயங்களைக் காணக் கொடுத்தன... அருமை அக்கா....

மாதேவி said...

ஆகா! ஒரே கூரையின் கீழ்.

ஹுஸைனம்மா said...

ஜாரி ஃபார் லேட் கமிங்!!

அதுக்கு ஓட்டுப் போடுங்க, இதுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கொஞ்ச காலத்துக்கு மின்னாடி மெயில்கள் ப்றந்திட்டிருந்துது. சின்சியரா ஓட்டுப் போட்டதோட சரி, அதுக்கப்புறம் என்னாச்சுன்னே தெரியலை. இந்திய வாக்காளராச்சே, ஓட்டுப் போடறது மட்டும்தான் நம்ம கடமைன்னு இருந்தாச்சு!!

தேர்வு விபரங்களையும், முடிவுகளையும் விவரமாச் சொன்னதுக்கு நன்றி!!

அடுத்த பதிவும் எழுதுங்க. இப்படி பதிவுகள் வாசிச்சு தெரிஞ்சுகிட்டாத்தான் உண்டு. “அபாயம்”னெல்லாம் பயங்காட்டாதீங்கோ! எவ்வளவோ பாத்துட்ட நாங்க, இதுக்கெல்லாம் அசர மாட்டோம்!! :-)))

LinkWithin

Related Posts with Thumbnails