Friday 11 January 2013

போனோமே ஊர்வலம் (வொண்டர்ஸ் பார்க்-நெருல்)

"ஓடி விளையாடு பாப்பா" என்று பாடி வைத்து விட்டுப்போய் விட்டார் பாரதியார். இன்றைய அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் ஓடி விளையாடுவதை விடுங்கள்.. உட்கார்ந்து விளையாடக்கூட இடமில்லாத அளவுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. டவர்கள் என்று அழைக்கப்படும் சில பெரிய குடியிருப்புகளிலாவது பரவாயில்லை. க்ளப் ஹவுஸ், சின்னக்குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களுடன் கூடிய புல்வெளி என்று ஓரளவு வசதி இருக்கிறது. ஆனாலும் அங்கே ஓடியாடி விளையாட முடியாது. நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், மற்றும் தரைத்தளத்தில் இருக்கும் வீடுகளின் கண்ணாடிகள் உடைய வாய்ப்பிருப்பதால் சிறுவர்களை பந்து போன்ற பொருட்களை வைத்து விளையாட அனுமதிப்பதில்லை. நேரக்கட்டுப்பாடு இன்னொரு புறம்.. விளைவு, குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடந்து டிவி முன் பழி கிடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்..

நவிமும்பையின் ஒரு பகுதியில் இருக்கும் குடியிருப்பில் அங்கே வசிக்கும் குழந்தைகள் குடியிருப்பின் காம்பவுண்டுக்குள் விளையாடினால் பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஒரு அபத்தமான சட்டம் போடப்பட்டது. அங்கு வசிப்பவர்கள், "முதலில் விளையாடும் பகுதிக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கும் இடையில் வலையாலான தடுப்பு ஒன்றை அமையுங்கள். அதை விட்டு குழந்தைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள்" என்று எழுப்பிய கடுமையான ஆட்சேபத்துக்கப்புறம் நிர்வாகிகள் பொருட்களை சேதப்படுத்தும் குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நிபந்தனையை மாற்றிக்கொண்டார்கள்.

வார இறுதிகளில் குழந்தைகளைச் சமாளிப்பதே பெரிய காரியம் எனும்போது பள்ளி விடுமுறைக்காலங்களில் அவர்களைக் கட்டிப்போட்டு வைக்க முடியுமா என்ன?.. அதே சமயம் மற்றவர்களுக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாதென்றால் அருகிலிருக்கும் பூங்காக்களுக்குச் செல்வதுதான் ஒரே வழி. குழந்தைகளுடன் பெற்றோரும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டுமானால் இதுவரைக்கும் மும்பையின் எஸ்ஸெல் வேர்ல்ட், வாட்டர் கிங்டம், நிஷி லேண்ட் என்று ஆங்காங்கே இருக்கும் தீம் பார்க்குகளுக்குச் செல்வது வழக்கம். நவிமும்பையிலும் அப்படி ஒரு இடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற பலரது ஏக்கம் சமீபத்தில் நெரூலில் செக்டர் 19Aயில்  திறந்து வைக்கப்பட்டிருக்கும் "வொண்டர்ஸ் பார்க்"கால் தீர்ந்திருக்கிறது.
பன்வெலில் இருந்து மும்பை செல்லும் சயான் ஹைவேயில் பேலாப்பூர் கடந்ததும், ஹைவேயிலிருந்து இடப்புறமாக "உரன்" என்ற ஊருக்குச் செல்லும் பாதை பிரியும். அதில் பயணித்தால் ஐந்து நிமிடத்திலேயே வலப்புறம் இருக்கும் பார்க் இதோ இருக்கிறேனென்று கண்களுக்கு அகப்படும். நான்கு டயர் மற்றும் இரண்டு டயர் வாகனங்களுக்கு தனித்தனி பார்க்கிங் வசதிகள் இருக்கின்றன. சார்ஜும் அதிகமில்லை, நான்கிற்கு ஐம்பதும், இரண்டிற்கு பத்து ரூபாயும் வசூலிக்கிறார்கள். டயருக்கு ஐந்து ரூபாயென்று நியாயமான கணக்கு வைத்துக்கொண்டாலும் கூட நான்குக்கு வசூலிக்கும் தொகை அதிகம்தான் :-)). விரும்பினால் பே பார்க்கிங்கில் நிறுத்தாமல் இலவச பார்க்கிங்கிலும் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் மாநகராட்சி வண்டி வந்து எப்போது கவ்விக்கொண்டு போகுமென்று தெரியாது :-)
டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்ததும், இருக்கும் பெரிய முற்றத்தில் விளையாடுவதற்காக ஒரு பெரிய க்யூபை வைத்திருக்கிறார்கள். விளையாடலாம் என்று ஆசையாகக் கிட்டே போனால், "ஊஹும்.. நாம அதுக்குச் சரிப்பட மாட்டோம்" என்று தோன்றி விட்டது. இவ்வளவு பெரிய க்யூபை வைத்து விளையாட வேண்டுமென்றால் அவ்வளவு பெரிய கை இருந்தால்தான் முடியும் போலிருக்கிறது. 

முற்றத்தின் இடது புறம் ஜயண்ட் வீல், ட்ராகன்(இதை ஆக்டோபஸ் என்றும் விளிக்கிறார்கள்) கப் அண்ட் சாஸர், அனைத்தும் குழந்தைகளுக்காகக் காத்திருக்கின்றன. இது தவிரவும் ஸ்கேட்டிங் மைதானம், ஊஞ்சல், கயிற்றுப்பின்னல் என்று மற்ற விளையாட்டுகள் அடங்கிய மைதானமும் இருக்கிறது. விளையாடும் குழந்தைகளை மேற்பார்வையிட்ட களைப்புத்தீர ஆங்காங்கே இருக்கும் கூடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கின்றன புல்வெளிகளும் அதற்கு அருகாமையில் அமைந்த நீரூற்றுகளும்.படிக்கட்டுகளில் ஜிலுஜிலுவென்று வரும் காற்றையும், அதில் மிதந்து வரும் இசையையும் ரசித்தபடியே அரட்டையடிக்கலாம். நீரூற்றுகள் இருக்கும் பகுதியில் இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கம் போக இருக்கும் பாலத்தில் நீரின் குளிர்ச்சியை அனுபவித்தபடி மக்கள் நகர மனமில்லாமல் நின்று கொண்டிருந்தார்கள். தண்ணீரைப் பார்த்ததும் விளையாட ஆசை வந்து பாயும் குழந்தைகளை படிக்கட்டுகளைத்தாண்டி தண்ணீரில் கால் வைத்து விடாமல் கண் காணித்தபடி விசில் ஊதி விலக்கிக்கொண்டே இருந்தனர் காவலர்கள். அதானே.. ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் யார் பதில் சொல்வது?. 

மனதாலும் வயதாலும் குழந்தையாய் இருப்பவர்களுக்காகவென்றே ஒரு பொம்மை ரயிலும் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து ரயிலில் ஏறினால் பத்தே நிமிடத்தில் பார்க்கைச் சுற்றிக் காட்டிவிட்டு வந்து இறக்கி விட்டு விடுகிறார்கள். அநியாயமாய் இருக்கிறது :-)). ராட்டினம் போன்ற விளையாட்டுகள் இருக்கும் இடங்களிலும் இப்படித்தான் மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிந்தது. டிக்கெட் எடுக்கவும் மணிக்கணக்கில் இன்னொரு வரிசையில் நிற்க வேண்டியிருப்பதை இதில் சேர்க்கவில்லை :-)
சென்ற வருடம் டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் மராட்டிய முதல்வரும் இப்போதைய விவசாயத்துறை அமைச்சருமான திரு. சரத் பவாரால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பார்க்கில் ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவிலிருக்கும் ஆம்பி தியேட்டர் முக்கியமான ஒன்று. மேலும் லேஸர் நிகழ்ச்சிகளுக்கான மைதானம் ஒன்றும் வரவிருக்கிறதாம். ஆம்பி தியேட்டரின் முன் இருக்கும் இயற்கைக் குளத்தில் எதிர்காலத்தில் நீர் நிரப்பி வைப்பார்கள்  என்று நம்புவோமாக. அப்படியே அந்த காஃபிடோரியாவையும் திறந்து வைத்தால் நல்லது. தவித்த வாய்க்கு ஒரு டீ,காபி கூட கிடைக்க வழியில்லை இப்போது. நொறுக்ஸ் வேண்டுமென்றால் வீட்டிலிருந்தே கொண்டு போனால்தான் உண்டு.

உடம்புக்கு நல்லதென்று ஆங்காங்கே ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, தர்பூசணிப்பழங்களும் வைத்திருக்கிறார்கள். உள்ளே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். அந்த வழியாக யாராவது வந்தால் அவர்களிடம் மொபைலையோ, காமிராவையோ கொடுத்து தங்களைப் போட்டோவும் எடுக்கச் சொல்லலாம் :-)
உட்கார்வதற்கான இருக்கையேதான் இது..


ஆம்பிதியேட்டரின் பின்பக்கம் ஒரு சின்ன குன்று போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் விளையாட்டுகளைக் குறிக்கும் சிற்பங்களை வைத்திருக்கிறார்கள். நவீன சிற்பங்கள் என்று வைத்துக்கொள்வோமே :-). செஸ் விளையாட்டுக்கான பிரம்மாண்டமான தளம் காத்துக்கொண்டிருக்க, ராஜா ராணி, குதிரைகளுக்கு அப்போதுதான் மேக்கப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். துடைத்து, பெயிண்ட் ஸ்ப்ரே செய்து என்று நாலைந்து பேர் அந்த வேலையில் பிசி. பார்க்கைச் சுற்றி வந்த களைப்பில் அப்பாக்கள் புல்தரையில் பள்ளி கொண்டு விட அம்மாக்கள் ஓவர்டைம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.வேறென்ன,.. குழந்தைகளை கண்ணுக்கெட்டிய எல்லைக்குள் வைத்துக்கொள்வதுதான்..


அவுட்டிங் போய் வர சிறந்த இடம்தான், ஆனாலும் முழுக்க இன்னும் தயாராகவில்லை. இப்பொழுது நட்டு வைத்திருக்கும் மரக்கன்றுகள் நாலைந்து வருடங்களில் வளர்ந்து விருட்சமாகி விட்டால் இந்த இடத்தின் தோற்றமே மாறி அழகாகி விடும். நுழைவுச்சீட்டு எடுக்கும் இடத்தின் அருகிலேயே ரைடுகளுக்கான சீட்டுகளையும் எடுக்க வசதி செய்து விட்டால், 'அங்கே' காத்திருக்கும் நேரம் குறையும். அதேபோல் காஃபிடோரியாவும் இயங்க ஆரம்பித்து விட்டால் பொட்டுப்பொடிசுகள் வருமிடத்தில் நியாயமான விலையில் ஸ்னாக்ஸ், ஜூஸ், காபி, டீ கிடைக்க ஏதுவாக இருக்கும். வெளியே வந்ததும் பெற்றோர்கள் ரோட்டோரக்கடைகளை நோக்கித்தான் முதலில் செல்கிறார்கள். 

இந்தப் பார்க்கின் சிறப்பம்சமே இங்கே அமைந்திருக்கும் உலகின் புதிய ஏழு அதிசயங்கள்தான். அவை, அடுத்த இடுகையில் :-))))

17 comments:

ராமலக்ஷ்மி said...

மக்களை ஈர்க்க அழகாகவும் வண்ண மயமாகவும் அமைத்துள்ளதை அப்படியே அருமையாய் உங்கள் படங்கள் காட்டுகின்றன. ஏழு அதிசயங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்:)!

Starjan (ஸ்டார்ஜன்) said...

வொண்டர் பார்க்கை சுற்றி காண்பித்திருப்பதற்கு நன்றி. படங்களும் அருமை.

பவள சங்கரி said...

அன்பின் சாந்தி,

அழகான படங்களுடன் சுவையான தகவல்கள். அருமை.

அன்புடன்
பவள சங்கரி

பால கணேஷ் said...

சாரல் மேடம்... நீங்களும் குழந்தையாக மாறி அனுபவிததிருப்பதை படிக்கையிலேயே உணர முடிந்தது. நானும் அதே மனநிலையில் அனுபவித்தேன். படங்கள் அனைத்தும் உங்கள் கைவண்ணத்தில் ஜொலிக்கின்றன. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Prathap Kumar S. said...

Naan 3 varudam merulla irunden Sector3 ippo neryA change ayduchu

அமுதா கிருஷ்ணா said...

பொங்கல் வாழ்த்துக்கள். வொண்டரா இருக்கு.

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் விளக்கத்துடன் பதிவு
மிக மிக அருமை
18 முதல் மாதக் கடைசிவரை
மும்பை மற்றும் பூனேயில்
இருப்பேன் என நினைக்கிறேன்
அப்போது அவசியம் இதனையும்
பார்க்கிற பட்டியலில் சேர்த்துவிட்டேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

Asiya Omar said...

அசத்தலான புகைப்படங்களுடன் கூடிய பகிர்வு.தொடருங்கள் ..மும்பை பதிவுகள் இனி களைகட்டும் சாந்தி...

பூந்தளிர் said...

அமைதிச்சாரல் மேடம் படங்களும் பகிர்வும் அமர்க்களமாக இருக்கிறது. பாராட்டுக்கள். என் பக்கமும் வந்து பாருங்க.

தமிழ் காமெடி உலகம் said...

அருமையான பதிவு....உங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

வல்லிசிம்ஹன் said...

வொண்டர் பார்க் உண்மையிலியே வொண்டர்தான்.

உங்கள் படங்கள் சூப்பர் ம. ஆசையாக இருக்கு அங்க வந்து பார்க்க. நீங்கள் சொல்லியிருக்கும் வசதிகளைச் செய்துவிட்டால் இன்னும் பிரமாதம். நல்லதொரு பகிர்வு சாரல்.

ADHI VENKAT said...

வொண்டர் பார்க் சூப்பரா இருக்கே.... ரோஷ்ணியிடமும் படங்களை காண்பித்தேன். அவள் ஒரு ஸ்ட்ராபெர்ரி ப்ரியை....:)

குட்டி ட்ரையினில் போக நானும் ரோஷ்ணியும் எப்பவுமே ரெடி...:))ஆனா சீக்கிரம் சுற்றி காட்டி விடக் கூடாது.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுகளும் படங்களும் ,,பாராட்டுக்கள்..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

உள்ளே நியாயமான விலையில் ஸ்நாக்ஸ் முதலானவை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் பேராசை! எப்பவுமே இது மாதிரி இடங்களில் கூட விலை வைத்துத்தான் விற்பார்கள். மிக அழகாகப் படங்கள் எடுத்து எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள்.

முன் காலத்தில் குழந்தைகள் விளையாட நிறைய இடம் இருந்தது. இப்போது அதற்காக என்று ஒரு இடம் ஒதுக்கி அங்கு போய் விளையாட வேண்டும் என்று சொல்வது.. என்னே காலத்தின் கொடுமை! எதிர்காலத்தில் அதுவும் இருக்காதோ என்னமோ!

ஹுஸைனம்மா said...

படஙக்ள் அழகா இருக்கு.

ஸ்ரீராம் சார் கருத்துகளை ரிப்பீட்டிக்கிறேன்.

/உள்ளே நியாயமான விலையில் ஸ்நாக்ஸ் முதலானவை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் பேராசை!//
அதானே!! கடைய வச்சுட்டு, வெளிய இருந்து எதுவும் - பச்சத்தண்ணிகூட - கொண்டுவரக்கூடாத்துன்னு கண்டிஷன் போட்டு படுத்துவாங்க... பல இடங்களிலும் அப்படித்தான் நடக்குது!! :-(((

நிலாமகள் said...

பெயருக்கு ஏற்றாற்போல் இருக்கிறது பார்க்'கும் பதிவும். இதமான எழுத்து.

காணும் பொங்கலில் வலைச்சரம் வழி எம்மைக் கண்டு போனமைக்கு மகிழ்வும் நன்றியும்... கைபிடித்து அழைத்து வந்த திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails