Tuesday, 19 July 2011

எதிர்பாராத வேளையில்..

'க்ணிங்..க்ணிங்..' என்ற மணிச்சத்தத்தோடு சைக்கிளை வாசலில் நிறுத்திய தபால்காரர், சைக்கிளில் இருந்தபடியே தபாலை வீட்டுக்குள் விசிறிவிட்டுப்போனார்.

நாற்காலியில் அமர்ந்தபடி நகம் வெட்டிக்கொண்டிருந்த நாராயணனுக்கு லேசான மேல்பார்வையிலேயே.. தபால் எங்கிருந்து வந்திருக்கிறதென்று புரிந்துபோனது. 'அப்பா கவனிக்காமல் இருக்கவேண்டுமே!!..' என்ற வேண்டுதலுடன் அந்த கவரை எடுக்க குனிந்தான். முதுகைத்துளைத்த பார்வையை உணர்ந்து ஓரக்கண்ணால் பக்கவாட்டிலேயே லேசாக தலையை திருப்பினான். எதிர்பார்த்ததுபோல, செய்தித்தாளை லேசாக தாழ்த்தி அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா.

அவன் பார்த்ததும் லேசாக புன்னகைத்தார். சட்டென தபாலை பிரிப்பதுபோல பாவனை செய்துகொண்டே தன்னுடைய அறைக்கு நகர்ந்துவிட்டான்.. ' இதுவும் திரும்பிவந்துடுச்சா??...' அவருடைய பார்வைக்கு இதுதான் அர்த்தம். பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்புவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். கதை, கவிதை, கட்டுரைகள் என்று ஏதாவது அனுப்பிக்கொண்டேயிருப்பான். அவர்களும் சளைக்காமல், 'பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற ஒற்றைவரியில் அவனுடைய கனவுகளை சுக்கு நூறாக தகர்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆயினும், என்றாவது ஒரு நாள் தன்னுடைய படைப்புகளும் பத்திரிகைகளில் வெளியாகும் என்று நம்பினான். நம்பிக்கைதானே வாழ்க்கை??.. அவனுடைய அப்பாவுக்கோ இதெல்லாம் வெட்டியாக செய்யும் காரியமாக பட்டது.  எதையாவது எழுதி எழுதி, சரியாக வரவில்லையென்றால் கசக்கிவீசும் காகிதங்களுக்காக எத்தனை மரங்கள் கொலைசெய்யப்பட்டனவோ?.. சாப்பாட்டில் கவனமில்லாமல், எதையாவது யோசித்துக்கொண்டு சோற்றை அளைந்துகொண்டிருப்பான். கேட்டால் அவன் சொல்லும் பதில்..,'நல்ல ஒரு தாட் வரும்போது கட் பண்ணாதீங்க'

அப்பாவால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ஆரம்பத்தில் அவர் ஊக்குவிக்கத்தான் செய்தார், ஆனால் நடைமுறை வாழ்க்கையையும் கவனிக்கவேண்டும் என்ற நடைமுறை தெரிந்தவர் அவர். அதனால், பையனின் கனவு நனவாக வேண்டுமென்று விரும்பினாலும், வெளிப்பார்வைக்கு கிண்டலும் கேலியும் செய்துகொண்டேயிருப்பார். அப்படியான ஒரு நேரத்தில்தான் அவனிடம் கேட்டார்.

"சரி!!... உன்னோட படைப்புகள் பத்திரிக்கையில் வெளியாகுதுன்னே வெச்சுக்குவோம். வர்ற சன்மானத்தில் எனக்கென்ன வாங்கிக்கொடுப்பே.."

"உங்களுக்கு என்னவேணும்ன்னு மொதல்ல சொல்லுங்க. வாங்குறதை அப்புறம் பார்ப்போம்"

"ம்ம்.... வேற ஒண்ணும் வேணாம். எனக்கு ஒரு சால்வை வாங்கிக்கொடு. அப்புறம் இந்தத்தெருவுல இருக்கிறவங்களுக்கெல்லாம் ஸ்வீட்டும் கொடு,.. எம்பையன் ஒரு படைப்பாளின்னு பெருமையா சொல்லிப்பேன்.. அதுபோதும் எனக்கு"

"கொடுக்கிறேனா.. இல்லியான்னு பாருங்க"

வழக்கம்போல சிரித்துக்கொண்டார். அப்படிப்பட்ட அப்பா இறந்துவிட்டதாகத்தான் ஆபீசுக்கு, வீட்டிலிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. அலறியடித்துக்கொண்டு ஓடினான். அவன் வீட்டுக்குள் நுழையும்போதே அழுகுரல் அவனை வரவேற்றது.

ஆபீசிலிருந்து அவன் சாயந்திரம் வீட்டுக்குள் நுழையும்போது, 'வாடா... கைகால் கழுவிட்டு வா.. காப்பி சாப்பிடலாம்' என்று வரவேற்கும் அப்பா... அறைக்குள் அவன் இறைத்துவிட்டுப்போன புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் ஒழுங்குபடுத்தி வைக்கும் அப்பா.. ஆயிரம்தான் கிண்டல் செய்தாலும், மகனுடைய வாசிப்பிற்காக தேடித்தேடி புத்தகங்கள் வாங்கிக்கொடுத்த அப்பா... இப்போது அவன் வீட்டுக்குள் வந்ததே தெரியாமல் படுத்துக்கிடந்தார். எப்பொழுதும் வரவேற்கும் வாய் இன்று ஏனோ ஊமையாகிவிட்டிருந்தது.

எவ்வளவு நேரம் அப்பாவின் பக்கத்தில் அவர்முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் என்று நினைவில்லை. முகத்தையும் கண்ணீரையும் ஒருங்கே துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், கைப்பையை வைப்பதற்காக தன்னுடைய அறைக்கு சென்றான். மேசையின்மேல் வைக்கும்போதுதான் காற்றில் பறந்துவிடாமலிருக்க பேனாஸ்டாண்ட் மேலே வைக்கப்பட்டிருந்த அந்த தபாலை பார்த்தான். வழக்கம்போலத்தான் இருக்கும் என்ற அசிரத்தையும், அப்போது அவனிருந்த மனநிலையும் ஒருசேர, கவரை கையிலேயே வைத்துக்கொண்டு நின்றான். பின் தன்னையறியாமலேயே மெதுவாக பிரித்து, உள்ளிருந்த கடிதத்தை படித்தவன் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினான். அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஐநூறு ரூபாய்க்கான காசோலை நழுவி கீழேவிழுந்தது.

அன்றைக்கு அவன் நடந்துகொண்டதை பார்த்தவர்கள் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நம்பினார்கள். இறந்த தகப்பனுக்கு சால்வை போர்த்தியதுகூட அவர்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால், அழுதுகொண்டே வீடுவீடாக சென்று இனிப்புகொடுத்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நீங்களே சொல்லுங்கள்... அவன் பைத்தியமா??.....

டிஸ்கி: இந்தக்கதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி..32 comments:

siva said...

GREAT....

siva said...

அழகான எதார்த்தம்
அருமையான நடை
எழுத்துகளில்
பாத்திரங்கள்
கண்முன்னே
அருமை
வாழ்க வளமுடன்

சே.குமார் said...

அழகான... எதார்த்தம் நிரம்பிய கதை...
வாழ்த்துக்கள்.

ஆமினா said...

எதார்த்தமான கதைகளம்

வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வின் யதார்த்தம் இதுதானே. அருமையான பகிர்வு. அதீத பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

அவர் இறுதிப் பயணம் கிளம்புமுன் அவரின் ஆசையை நிறைவேற்றி வைத்து விட்ட மகன்.
நெகிழ்வு.

ராஜி said...

சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!

ராஜி said...

வாழ்வின் கொடுமையான பரிசு இது வேறென்ன சொல்ல முடியும்

வல்லிசிம்ஹன் said...

சாரல்,

தந்தைதான் கடிதத்தையும் எடுத்துவைத்திருப்பாரோ.

வெகு அமைதியான நடையில் ஒவ்வொரு தந்தையையும் உணர வைத்துவிட்டீர்கள்


மனம் நிறைந்த பாராட்டுகள்.

ஸாதிகா said...

எதார்த்த நடையில் அருமையான எழுதப்பட்ட இச்சிறுகதை முடிவில் நெகிழ்வை ஏற்படுத்தியதென்னவோ நிஜம்.

புதுகைத் தென்றல் said...

ரொம்ப நல்லா இருந்தது

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கதை சாரல்...நெகிழ்ச்சி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மற்றவர் கண்ணுக்கு வேண்டுமானால் அவன் பைத்தியமாகத் தெரியலாம்.. ஆனால், தந்தையின் ஆசையை நிறைவேற்றிய, சாந்தியாவது அவனுக்கு கிடைத்திருக்கும்..!

நல்ல கதை.. முடிவில் சோகம் இருப்பினும்..

ஹேமா said...

நல்லதொரு சிறுகதை சாரல்.வாழ்த்துகள் !

நானானி said...

நெகிழ வைத்த கதை.
என்னோட 'ஏசி ரூமும் காரும்' கதை போலவே முடிவு. நிறைய சந்தர்ப்பங்களில் இப்படித்தான் முடிகிறது.

அமைதிச்சாரல் said...

வாங்க சிவா,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க குமார்,

ரொம்ப நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க ஆமினா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

சுபமுடிவும் கொடுத்திருக்கலாம்.. ஆனா, வலிஞ்சு திணிச்சமாதிரி தோணிச்சு :-)

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

ஒருவேளை அவர் கிளம்பிய அப்புறம் அந்தக்கடிதம் வந்திருந்தா, அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும். ஏதோ இதுக்காவது கொடுப்பினை இருந்ததே..

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துல கலந்துக்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம்ப்பா :-))

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

அதே.. அதே.. தனயன் இறைத்துவிட்டுப்போன அறையை ஒழுங்குபடுத்துவதே அந்த தந்தையின் வேலை.. அன்பை மனசுல ஒளிச்சுவெச்சுருக்கும் தாயுமானவர்களும் உண்டுதானே :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

ரொம்ப நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

ரொம்ப நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஆனந்தி,

ஸ்ரீராமுக்கு சொன்ன பதிலையே உங்களுக்கும் சொல்லிக்கிறேன்.

ஏதோ, அந்த நிம்மதியாவது அவனுக்கு கொடுத்துவெச்சிருந்ததே..

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா.

உங்களோட அந்தக்கதையைப்படிக்க ஆவலாயிருக்கேன். நிச்சயம் படிப்பேன் :-)

S.Menaga said...

நல்ல கதை,கடைசில ரொம்ப சோகமா முடிச்சிட்டீங்கக்கா...

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் அமைதிக்கா. நல்ல கதை. ஒரு சராசரி தந்தை, இப்படித்தான், மகனின் ஆர்வத்தை ஊக்குவித்தாலும், நடைமுறை எதார்த்தங்களையும் எதிர்கொள்ளமுடியவும் வேண்டுமென்று விரும்புவார்.

வெங்கட் நாகராஜ் said...

அதீதம் இதழில் இந்த நல்ல கதை வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் சகோ.. எதார்த்தமான நடையில் உண்மை தொட்டது மனதை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் யதார்த்தமான, மனதை நெகிழவைத்த வெகு அருமையான கதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மிகவும் தாமதமாக படிக்க நேர்ந்துள்ளதற்கு வருந்துகிறேன்.

அன்புடன் vgk

LinkWithin

Related Posts with Thumbnails