சதுர்த்திக்கு ஒன்றிரண்டு மாசத்துக்கு முன்னாலேயே.. அதாவது வெய்யில் காலத்துலயே, ஏற்பாடுகளெல்லாம் ஆரம்பிச்சுடும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் வடிவமைப்பதும், வர்ணமடிச்சு அழகுபடுத்துவதுமாக தொழிலாளர்களெல்லாம் பிஸியோபிஸியாகிடுவாங்க... இப்பல்லாம் காகிதக்கூழில் செஞ்சு, வாட்டர் கலர் அடிச்ச eco friendly புள்ளையார் மார்க்கெட்டுக்கு வந்துட்டார். நிறையப்பேர் கேட்டு வாங்கிட்டுப்போறாங்க.. ஆனாலும், ஜிகுஜிகுன்னு பெயிண்டில் ஜொலிக்கிற பிள்ளையாருக்கு ஒரு சில மக்கள் மத்தியில இன்னும் வரவேற்பு இருக்குது..
நம்மூர்ல பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்றது மாதிரிதான் இங்கியும் புள்ளையார வீட்டுக்கு கூட்டிட்டு வரமுன்னாடி வீட்டை சுத்தம் செய்வோம். அவரை உட்கார வைக்க சின்னதா மண்டபம் கட்டி, அலங்காரமெல்லாம் செஞ்சு.. ரெடியா வெச்சு, புள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு, 'கண்பதி பப்பா.. மோரியா!! மங்கள்மூர்த்தி மோரியா' என்ற கோஷத்தோட அவரை கூட்டிட்டு வந்து உட்கார வெச்சு, பத்து நாளும் உபச்சாரமெல்லாம் செய்வோம். தினம் ரெண்டுதடவை அவருக்கு ஆரத்தி நடைபெறும். வீட்டுல உள்ளவங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுப்போம். அபார்ட்மெண்ட்களில், எல்லோருக்கும் பொதுவான பிள்ளையார் வெச்சு,.. கூட்டு வழிபாடு நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் அவங்க வீட்டுல இருந்து பிரசாதமா, ஷீரா, கரஞ்சி,மோதகம், லட்டுன்னு செஞ்சு கொண்டு வருவாங்க.
பிள்ளையார் வந்ததும், 'சத்ய நாராயண பூஜை' கண்டிப்பா நடக்கும். அபார்ட்மெண்டின் மிக மூத்த தம்பதியோ அல்லது, புதிதாக திருமணமான தம்பதியோ இந்த பூஜையை தம்பதி சமேதரா செய்வாங்க. அன்னிக்கு, லஞ்ச் அல்லது டின்னர் ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. இதை மஹாபிரசாதம்ன்னு சொல்லுவாங்க. தமிழ்க்குடும்பங்கள் நிறைய இருக்கும் இடங்களில் கணபதி ஹோமம் நடக்குறதுண்டு.
பொதுவா, இங்கே 'விசர்ஜன்' எனப்படும் பிள்ளையாரை கரைக்கும் நிகழ்ச்சி, சதுர்த்திக்கான மறு நாள்(ஒன்னரை நாள்ன்னு கணக்கு), மூணாம் நாள், ஐந்தாம் நாளான 'கௌரி கண்பதி' , ஏழாம் நாள், மற்றும் ஒன்பதாம் நாள்.. அதன்பின் பத்தாம் நாளான ஆனந்த சதுர்த்தி அன்று நிறைவு பெறும். 'கௌரி கண்பதி' அன்னிக்கு மகனைப்பார்க்க பார்வதி தேவி வருவதாக ஐதீகம். அன்னிக்கு சிலவீடுகளில், கௌரிபூஜையும், விருந்துச்சாப்பாடும் நடக்கும்.அது முடிந்தபின், கௌரி, மற்றும் கண்பதியை விசர்ஜன் செய்வார்கள். விசர்ஜன் செய்யப்படும் நாட்களில் சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுவிடும். ஊரிலுள்ள எல்லாப்புள்ளையார்களையும் அன்னிக்கு ஆர அமர பார்த்து.. 'பை..பை' சொல்லிட்டு வரலாம்.
ஆனந்த சதுர்த்தி அன்னிக்கு ரோட்டுல எள் போட்டா விழ இடமிருக்காது!!!(எள்ளை ஏன் போடணும்ன்னு சொல்றாங்கன்னே புரியலை.. இருந்தாலும் நானும் சொல்லி வைக்கிறேன் :-))). அவ்வளவு நாள் பயபக்தியா ஆராதிச்ச புள்ளையார்களை அன்னிக்கு க்ரேன்ல கட்டி ஆழமான கடல்ல தூக்கிப்போட்டுடுவாங்க. (அம்பூட்டு உசரமா இருப்பாருங்க). ஆனாலும், கரைச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் மனசுக்கு ஒரு வெறுமை வருமே... அதை சொல்லத்தெரியலை.
எங்க ஊர்ல புள்ளையார் ஆரத்திக்குன்னே ஸ்பெஷல் பாட்டு இருக்குது. இங்கே புள்ளையார் சதுர்த்தி பிரபலமானதுக்கும்.. இந்திய விடுதலைப்போருக்கும் சம்பந்தமிருக்குது. வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல, கூட்டம் கூட தடை போடப்பட்ட காலத்துல...நம்ம பாலகங்காரதர திலகர் கண்டுபிடிச்ச வழிதான் இது. 1892 -லிருந்து இது சமூகவிழாவா கொண்டாடப்பட ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி, மராட்டிய பேஷ்வாக்கள் மட்டுமே, சிறிய அளவில் கொண்டாடியிருக்காங்க.. பேஷ்வாக்களின் அழிவுக்குப்பின்னால, க்வாலியர் மற்றும் குஜராத் அரசர்கள் இதை சாதாரண மக்களிடம் கொண்டு வந்தாங்க.
இங்கெல்லாம் கூடும் கூட்டத்தை பார்த்த திலகருக்கு, இது மக்களை ஒருங்கிணைக்கும் வழியாக தோன்றியது. கடவுளைக்கும்பிட்ட கையோட, அங்கிருந்த கூட்டத்துக்கிட்ட விடுதலை தாகத்தை உண்டாக்க, புள்ளையார் சதுர்த்தி, திலகருக்கு ரொம்பவே வசதியா இருந்தது. இப்பவும், மக்களெல்லாம் ஆரத்தி முடிஞ்சதும், 'பாரத் மாதா கீ... ஜெய்' ன்னு கோஷம் எழுப்ப தவறுவதில்லை. மும்பையில் 'லால்பாக்' என்னும் இடத்துல வைக்கப்படும் புள்ளையார் ரொம்பவே பிரபலமாயிட்டார். திருப்பதி மாதிரியே அங்கியும் வரிசையில நின்னுதான் தரிசனம் செய்யணும். விலையுயர்ந்த நகைகள், பொருட்களெல்லாம்கூட காணிக்கையா கொடுக்கப்படுதாம். இங்கே வந்து போகாத மும்பை வி.ஐ.பிக்களே இருக்கமுடியாது. அவர்கிட்ட கேட்கும் வேண்டுதல்களெல்லாம் நிறைவேறுதுன்னு ஒரு புதுப்பேச்சு கிளம்பியிருக்கு. 'லால்பாக்ச்சா ராஜா' ன்னுஅவருக்கு செல்லப்பேரும் உண்டு. இந்தப்பேருக்கு பேடண்ட் எடுத்திருக்காங்கன்னா அவரு எவ்வளவு பிரபலம்ன்னு பாத்துக்கோங்க.
மஹாராஷ்ட்ராவில் பிரபலமானஆரத்திப்பாட்டு இது.....
இது எங்கவீட்டு புள்ளையார்...
டிஸ்கி: எங்கூர்ல இன்னும் புள்ளையார் சதுர்த்தி முடியலை. இவர் எங்க குடியிருப்பின் பொதுவான புள்ளையார்.கௌரி கண்பதி வரைக்கும் இருப்பார் :-)))))))
