Monday, 12 July 2010

ஓடமும் ஓர் நாள்...

"என்னா வெயில்.. மனுசன் வெளியில தலைகாட்ட முடியலை. மக்கா... வீட்டுலதான் இருக்கியா?.." குரலைக்கேட்டதும் சமையலறையிலிருந்தே யாரென்று எட்டிப்பார்த்தேன்.. அட.. செல்லம்மக்கா. செருப்பை வாசலில் கழட்டி விட்டுவிட்டு, வியர்த்திருந்த முகத்தை சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தார்.

"அடடே.. வாங்கக்கா, ரெண்டு வாரமா ஆளையே காணலியே!! ஊருல இல்லியா?" என்றவாறே ஃபேனைப்போட்டுவிட்டு ,"உக்காருங்கக்கா" என்றேன். அப்படியே மகன் பக்கம் திரும்பி," மக்ளே,.. ஓடிப்போயி முக்குக்கடையில அத்தைக்கு போஞ்சி வாங்கிட்டு வந்துரேன்" என்றேன். " அப்படியே, போயிலை வெச்சு ஒரு வெத்திலையும் வாங்கிட்டு வந்துரு மக்கா" என்றபடியே சோபாவில் அமர்ந்துகொண்டார்.

செல்லம்மக்கா என்ற செல்லம்மா எங்களுக்கு உறவில்லை.. ஆனால், உறவு மாதிரி. இந்த ஊருக்கு வந்தபுதிதில் எங்கள் பக்கத்துவீட்டில்தான் இருந்தார். வந்த கொஞ்ச நாளிலேயே தாயும் பிள்ளையுமாய் பழகிவிட்டோம். நாலுமாசத்துக்கப்புறம் மகனுக்கும் கல்யாணமாகி, வேலையும் மாற்றலானபோது, பக்கத்து ஊரில் இருந்தால் வேலைக்கு போய்வர சௌகரியமாக இருக்குமென்று, வீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஆனாலும் பழகிய பழக்கத்தை மறக்காமல் அவ்வப்போது இந்தப்பக்கம் வந்து, எல்லார் வீட்டிலும் நலம்விசாரித்து செல்வார். அப்படியே, முதல்தடவை வந்தபோது கிடைத்த ஆர்டருக்கேற்ப, அப்பளம், வடகம், கூழ்வற்றல் போன்றவற்றை செய்து எடுத்து வந்து கொடுப்பார். கடைகளில் கிடைப்பதைவிட சகாயமாகவும், சுத்தமாகவும் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் அவர்கிட்டேயே வாங்குவது வழக்கம். 'செல்லம்மக்கா' என்றால் தெருவில் உள்ளவர்கள் அவ்வளவு மரியாதை, பாசம் வைத்திருந்தார்கள்.

" பழனிக்கு மக வீட்டுக்கு போயிருந்தேன்.. போனவாரமே வந்துருப்பேன், மக விடவே மாட்டேனுட்டா.. ஒரு மாசமாவது இருந்துட்டுத்தான் போகணும்ன்னு சொன்னா. ஒனக்கு தெரியாதா?.. நம்ம ஊரையும் ஆளுகளையும் விட்டுட்டு என்னால அவ்வளவு நாளு இருக்கமுடியாதுன்னுட்டு கிளம்பிட்டேன்.. சரி.. இதுல அம்பது அப்பளமும், ரெண்டுகிலோ கூழ்வத்தலும் இருக்கு, எடுத்து வெய்யி"

"ஆமா,.. இந்த உளுந்தங்கஞ்சிக்க மக தீயை வெச்சுக்கிட்டாளாமே.. நேத்துத்தான் எனக்கு தெரியும் பாத்துக்கோ.. அசல்ல கொடுத்தா அபாயம்ன்னு அக்காவீட்டுக்கே மருமகளா அனுப்பினானே..அப்படியுமா இந்தக்கதி!!" என்றவாறே வெத்திலையை வாயில் அடக்கிக்கொண்டார். செல்லம்மக்கா வாயில் வெத்திலையுடன் ஊர்வம்புகளையும் சேர்த்து மெல்ல ஆரம்பித்தார். உளுந்தங்கஞ்சி என்பது அவர் இட்ட பட்டப்பெயர். தெரிந்த மனிதர்களை, பட்டப்பேர் சொல்லி அழைக்கும் வாஞ்சைகலந்த நக்கல் அவருடையது.

" அது தலையெழுத்து.. மொதல்ல கட்டிக்கொடுத்து அஞ்சாவது மாசமே, அவன் ஆக்ஸிடெண்டில் போய்ச்சேர்ந்துட்டான். என்வீட்டுக்குன்னு பொறந்தவளை, அடுத்த வீட்டுக்கு அனுப்பினியே.. இப்பவாவது என்வீட்டுக்கு அனுப்புன்னு அக்காக்காரி மூக்கைச்சிந்தினதை பொறுக்காமத்தான், அவ மகனுக்கு கட்டி வெச்சார். அந்தப்பையன் என்னடான்னா, அதை அடிக்கடி குத்திக்காட்டி பேசியிருக்கான். பொறுக்க முடியாம அது போய் சேர்ந்துடுச்சு. விட்டுப்போன சொத்தும், சொந்தமும் திரும்ப கிடைச்சுடும்ன்னு மனக்கோட்டை கட்டிக்கிட்டிருந்த மாமியா, இப்போ உள்ளதும் போச்சேன்னு உக்காந்துக்கிட்டிருக்கா.. அது கெடக்குது, நீங்க இருந்து ஒருவாய் கஞ்சி குடிச்சிட்டுத்தான் போகணும்".

சாப்பிட்டுவிட்டு, மேலும் கொஞ்ச நேரம் அக்கம்பக்கத்து விஷயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு, என் வீட்டிலிருந்து கிளம்பினார். மருமகளைப்பற்றி மகாபெருமை அவருக்கு. தேடிப்பிடித்தாலும் இப்படி ஒரு குணவதி கிடைக்கமாட்டாள் என்றே வாய்க்குவாய் சொல்லிக்கொண்டிருந்தார். 'கல்யாணமாகி மூணு வருஷமாச்சு.. வீட்டுல ஒரு தொட்டில் ஆடறதை பாத்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதைத்தவிர வேற என்ன குறை எனக்கு?.. என் மருமக ..என் ராசாத்தி, என்னை தங்கம் மாதிரி தாங்குறா. அவளுக்காகத்தான் கோயில் கோயிலா போயிட்டிருக்கேன்' கிளம்பும் முன் சொன்னது ரொம்ப நேரம் என் தலைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடுத்த வாரமே அவரை கோயிலில்வைத்து சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ' இன்னைக்கு பிரதோஷமுல்லா.. அதான் ஒரு எட்டு,.. கோயிலுக்கு வந்தேன், கடவுள் எப்போதான் கண்ணை திறக்கப்போறாரோ?.. ஹூம்.. நேரமாச்சு வாரேன்" என்று விரைந்து சென்றுவிட்டார். பாவம்.. முகமெல்லாம் வாடியிருந்தது.

அதற்கப்புறம் வேலைச்சுமைகள் அழுத்த, அவரைப்பற்றி மறந்தேபோனேன். பரீட்சைகளெல்லாம் முடிந்து விடுமுறைக்கு வந்திருந்த சொந்த பந்தங்கள், குழந்தைகள், எல்லோருக்கும் செல்லம்மக்கா செய்த அயிட்டங்கள் ரொம்ப பிடித்துப்போய்விட, பார்சல் கட்டும் வேலை சேர்ந்து கொண்டது. அக்காவும் வந்து ரொம்ப நாள் ஆனபடியால், நேரடியாக நானேபோய் வாங்கி வந்துவிடுவதென்று கிளம்பினேன். எப்பவோ ஒருமுறை வந்தது.. ' நீ எதுக்கு வெறுதா அலையுத.. நாந்தான் அப்பளம் கொண்டுட்டு வர சாக்குல உங்களையெல்லாம் பாக்க வந்துட்டுத்தானே இருக்கேன்' என்று தடுத்துவிடுவார்.

தேடிப்பிடித்து விலாசம் கண்டுபிடித்து, வீட்டை சென்றடையும் போது ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது வீட்டுக்குள். ஒரு பெண்ணின் ஆங்காரமான கத்தலும் இன்னொரு பெண்ணின் கதறலும் கேட்டுக்கொண்டிருந்தது. வாசலில் ஒரு பத்துப்பதினைந்து பேர் கூடி நின்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தயக்கத்துடன் மெல்ல ஒரு பெண்ணின் தோளைத்தொட்டு, ' எக்கா.. இங்க என்ன கலாட்டா?' என்று கேட்டேன்.

" அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க.. தங்கமும் வேண்டாம், வெள்ளியும் வேண்டாம் .. தங்கமான மருமக கிடைச்சாப்போறும்ன்னு தேடிக்கொண்டாந்தாங்க செல்லம்மக்கா. ஆனா,.. அவங்களுக்கு ஒரு தகரத்துக்குண்டான மரியாதையைக்கூட கொடுக்கிறதில்லை அந்தப்பொண்ணு. வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி கூட ஒழுங்கா ஊத்தறதில்ல. பாவம், அந்தக்கா.. வெளியில எதையும் காட்டிக்காம, 'என்னையப்போல மகராணி உண்டுமா'ன்னு பொய்யா பெருமை பேசிக்கிட்டு,.. பசியை மறைக்க 'இன்னிக்கு விரதம்'ன்னு சொல்லிக்கிட்டு திரியுது. இப்படியும் உண்டுமா!!!" என்று நொடித்துக்கொண்டாள்.

ஒரு நொடி உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது.இங்க கிடந்து கஷ்டப்படுறதுக்கு மக கிட்ட போய் இருக்கலாமே.. மனதில் தோன்றியதை வாய்விட்டே அரற்றிவிட்டேன். " அது இதுக்கு மேல.. மக வீட்டுல தங்கிட்டுவரப்போறேன்னு போனாங்க. அங்க என்ன ஆச்சோ.. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. ரெண்டுபேரும் அவங்களை இப்படி பந்து மாதிரி உருட்டிவிடுறதை நினைச்சா பாவமா இருக்கு. மகன் எதையுமே கண்டுக்கிறதில்லை.. அவங்க சம்பாத்தியத்தையும் ஏதாவது சாக்குச்சொல்லி அம்பது நூறுண்ணு வாங்கிர்றான். 'நா எங்கியாவது தனியா இருந்து பொழைச்சிக்கிறண்டா'ன்னு அழறாங்க. அவங்க வெளிய போயிட்டா தொரைக்கு கவுரவம் கொறைஞ்சிடுமாம்.. தாயை தவிக்க விட்டுட்டான்னு ஒலகம் பேசுமாம். அதனால போகக்கூடாதுன்னு தடுக்கிறான். ரெண்டு நாளா அவங்க வீட்டுக்குள்ள இதே போராட்டம்தான் நடக்குது.. நமக்கெதுக்கு அடுத்த வீட்டு பராதி. ஆமா!! நீங்க அந்தக்காவுக்கு தெரிஞ்சவங்களா?.."

நான் பதிலேதும் சொல்லாமல் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தேன். மருமகளின்முன், எண்சாண் உடம்பை ஒரு சாணாக குறுக்கிக்கொண்டு பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார் செல்லம்மக்கா. முகத்தை மூடிக்கொண்டிருந்தாலும் ,அவரது முதுகு குலுங்குவதிலிருந்தே.. அழுவது புரிந்தது. கம்பீரமாய் வலம்வரும் அவரெங்கே... கெஞ்சிக்கொண்டிருக்கும் இவரெங்கே... அவரை அந்த நிலையில் பார்க்கும்போது திரண்ட கண்ணீர் பார்வையை மறைக்க,.. ஒரு முடிவுடன் அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்..














40 comments:

எல் கே said...

எதுக்கு மறு பதிவு ??? அந்தப் பதிவு எங்க போச்சு ????

நல்ல நடை.. உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம். தொடருங்கள் சகோதரி

சாந்தி மாரியப்பன் said...

அவசரக்குடுக்கையா தேதியை கவனிக்காம பப்ளிஷ் கொடுத்ததில் காக்கா தூக்கிட்டு போச் :-))).

நல்ல கதைகளை எத்தனை தடவை வேணும்ன்னாலும் படிக்கலாமே (ஸ்ஸப்பா.. சமாளி.. சமாளி). அத நாங்கல்ல சொல்லணும்ன்னு நீங்க மைண்ட் வாய்சுல சொல்றது கேக்குது :-)))))

இன்னொருக்கா படிச்சதுக்கு நன்றி.

எல் கே said...

//மைண்ட் வாய்சுல சொல்றது கேக்குது :-)))/
ஒரு மைன்ட் வாய்ஸ் தொந்தரவு தாங்கல. இதுல நீங்களுமா

ப்ரியமுடன் வசந்த் said...

செல்லம்மாக்கா கதாபாத்திரமும் அவர்களை சுற்றி பின்னப்பட்ட கட்தையும் தலைப்புக்கடுத்துவரும் பின்பாதியை உணர்த்துகின்றது...

நல்லா எழுதியிருக்கீங்க மேடம்...

இன்றைய மருமகள்கள் உணர்ந்தால் சரி...அதுதான் இப்போதைக்கு எங்களுக்கு (எனக்கும்)பெரிய பயமாகெடக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

கதையே தேவையில்லையென்பது போன்ற கரெக்ட்டான படம் செலக்சன் நச்...

kavisiva said...

நாளை மருமகளும் மாமியார் ஆவார் என்று மாமியாரைப் படுத்தும் மருமகள்கள் புரிந்து கொண்டால் நல்லது.

கதையை படிக்கும் போது அப்படியே எங்கள் நாஞ்சில்நாட்டுக்கு சென்றுவிட்டேன். இதுபோல ஒரு செல்லம்மக்காவை எனக்கும் தெரியும். எங்கள் வீட்டுக்கு அப்பளம் கொண்டு வருவார். அவரா இவர்?!

சாந்தி மாரியப்பன் said...

எல்.கே,

//ஒரு மைன்ட் வாய்ஸ் தொந்தரவு தாங்கல//

நீங்க ஏங்க மைண்ட் வாய்ஸ்ல பேசறீங்க :-)))

Anonymous said...

கதை படிச்சு முடிஞ்சு நான் எனக்கு தெரியாமலே அழுதுட்டேன்...இது கதையா நிஜமா ?நல்லா இருக்கு அமைதி மேடம்....

அம்பிகா said...

வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் பலர் இருக்கின்றனர்.
நல்ல எழுத்து நடை . நல்லாயிருக்கு அமைதிச்சாரல்.

நானானி said...

யதார்த்தத்தை அமைதியாக, அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
குற்றால அருவியின் சாரல் போல் நல்ல நடை. வாழ்த்துக்கள்.

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு.... இதுபோல் நிறையா செல்ல‌ம்மாக்க‌ள் இருக்க‌தான் செய்கிறார்க‌ள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

இன்றைய மருமகள் நாளைய மாமியார். இன்றைய மாமியார் நேற்றைய மருமகள். இதை மறந்துவிடுவதால்தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. நீங்க நினைக்கிறமாதிரியே ஒரு நல்ல Mrs. வசந்த் கிடைக்க வாழ்த்துக்கள்.

நகர்வலம் போனபோது( கரெக்டா சொன்னா.. ஊர்சுத்த போனபோது) எங்களுக்கு முன்னால் இருந்த வண்டியில் இந்த ஓடங்கள் இருந்தன. துடுப்பு போட்டு கூட்டிட்டு வந்துட்டேன்.கதையா, கவிதையான்னு டாஸ் போட்டுப்பார்த்ததுல கதை ஜெயிச்சிடுச்சு :-))).

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

ஆஹா... காக்கா உட்கார பனம்பழமா :-)))). நான் பார்த்த ஒரு சம்பவத்தை என்னுடைய கற்பனை கேரக்டருக்கு நடப்பதாக எழுதினேன்.. அவ்வளவுதான் :-). நானும் கன்னியாகுமரி மாவட்டத்து மருமகள்தான். ஆகவே நம்ம நாஞ்சில் நாடுன்னே சொல்லலாம்....

வருகைக்கு நன்றி.

நிலாமதி said...

வாழ்க்கைப் பாடத்தை எடுத்துச்சொல்லும் அழகான் கதை...பாராடுக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

க‌தை ந‌ல்லா இருக்கு..

வாழ்க்கைப் பாடத்தை எடுத்துச்சொல்லும் அழகான் கதை

ஜெயந்தி said...

எழுத்துநடை நல்லா இருக்கு. கதையும் நச்சுன்னு நல்லாயிருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விவரணைகள் நல்லா இருக்கு..நல்லா எழுதி இருக்கீங்க சாரல்..

ஹேமா said...

கதை சொன்ன விதம் இயல்பாய் இருக்கு.எல்லாருமே இதை உணர்ந்தால் வாழ்வில் சிக்கலே இல்லை.நானும் ஒரு நாள் எனக்கும் முதுமை வரும் என்று நினைத்தால் முதியோர்களை மதித்து நடக்கலாம்.அதுபோலவேதான் மருமக்களும் !

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை. பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

யதார்த்த வாழ்வில் நடப்பதை இயல்பான நடையில் கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள். நல்ல கதை அமைதிச்சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

தொண்ணூத்தஞ்சு சதவிகிதம் கதைதான்..:-))

உங்க பாராட்டுக்கு மிகவும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

நீங்க சொன்னது உண்மைதான்.,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

ஆமாம்ப்பா.. அவர்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.

நன்றி.

பனித்துளி சங்கர் said...

கதை மற்றும் கதைக்கு ஏற்ற புகைப்படத் தேர்வு அனைத்தும்
மிகவும் அருமை . புனைவில் ஒரு புதுமைதான் தொடரட்டும் . பகிர்வுக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

நல்ல எழுத்துநடை அமைதி. அருமையா எழுதிருக்கீங்க பாராட்டுக்கள்..

தூயவனின் அடிமை said...

//" அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க.. தங்கமும் வேண்டாம், வெள்ளியும் வேண்டாம் .. தங்கமான மருமக கிடைச்சாப்போறும்ன்னு தேடிக்கொண்டாந்தாங்க செல்லம்மக்கா. ஆனா,.. அவங்களுக்கு ஒரு தகரத்துக்குண்டான மரியாதையைக்கூட கொடுக்கிறதில்லை.//

நல்ல மனம் படைத்தவர்களை தேர்ந்து எடுப்பதில் கொஞ்சம் சிக்கல் தான்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நிலாமதி,

உங்க பெயர் அழகா இருக்குங்க..

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய(என்னங்க இப்படி கூப்பிட வெச்சுட்டீங்க :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

இதையேதாங்க நம்ம ஊரில் 'பழுத்த ஓலையைப்பாத்து சிரிச்சதாம் பச்சை ஓலை' என்று சொல்லுவார்கள். நமக்கும் அந்த நிலைமை வரக்கூடும் என்று யோசித்தாலே நிறைய சிக்கல்கள் தானாக அவிழ்ந்துவிடும்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி சங்கர்,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலிக்கா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இளம் தூயவன்,

நிச்சயமாக.. நிறைய சமயங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சும் :-((

நன்றிங்க.

rkm said...

"போஞ்சி" தெரியல. தனது குடும்ப சிக்கல் வெளியேதெரியாமல் மற்றவர் மனம் மகிழ வாஞ்சயுடன் பழகும் செல்லமக்காவுக்கு இத்தனை கஷ்ட்டமா? பெருமை தேடும் மகன் அம்மாவின் அருமை தெரியயாமல் போனது கொடுமை. பாவம் செய்யும் மருமகள்... நல்ல கதையோட்டம். மிக்க நனறி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க RKM

எலுமிச்சை ஜூஸை 'போஞ்சி'ன்னு நாஞ்சில் வட்டாரத்துல சொல்லுவோம் :-)

Shakthiprabha (Prabha Sridhar) said...

முதியோரின் வலியை எடுத்துக்கூறும் இக்கதையை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன்.
நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

LinkWithin

Related Posts with Thumbnails