Saturday, 23 August 2025

அம்மாவின் சேலை - "பூபாளம்" இதழில் வெளியானது

சிறுகதையை வெளியிட்ட "பூபாளம்" இதழுக்கு நன்றி

பீரோவைத்திறந்து, அடுக்கப்பட்டிருந்த அம்மாவின் சேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ரகு. ரகம் வாரியாகப் பிரித்து வெகு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள் அம்மா. விசேஷங்களுக்கு உடுத்தும் பட்டுப்புடவைகள், சில்க் காட்டன், ஜரிகை போட்ட ஜிகுஜிகுவென்ற புடவைகள் ஒவ்வொன்றும் பழைய தலையணை உறைகளுக்குள் தனித்தனியாகப் பொதியப்பட்டிருந்தன. அக்கம்பக்கம் கோவில்களுக்குப்போக, ஷாப்பிங் மற்றும் உற்றார் உறவினர் வீடுகளுக்குப் பளிச்செனச்செல்ல என அதற்கேற்ற வகையில் உள்ள புடவைகளை இன்னொரு அடுக்கில் வைத்திருந்தாள். தினப்படி வீட்டில் உடுத்தும் எளிய காட்டன் புடவைகள் நடுத்தட்டில் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன.

அம்மாவுக்கு எல்லாவற்றிலும் நேர்த்தி வேண்டும், ஏனோதானோவென செயல்படுவது அவளுக்குப் பிடிக்காது. வீட்டில் உடுத்தும் சேலைகளைக்கூட அவ்வப்போது கஞ்சி போட்டு, மொடமொடப்பாக அயர்ன் செய்து உடுத்துவாள். எப்போது அவளைப் பார்த்தாலும் ஏதோ இப்போதுதான் வெளியில் கிளம்பத்தயாராய் இருப்பது போல் பளிச்சென்று இருப்பாள். ரகு லேசாக முன்னகர்ந்து வாத்சல்யத்துடன் சேலைகளைப் பட்டும்படாமலும் வருடியபோது, பொத்தென்று ஒரு சேலை கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அசங்கி, உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மேட்சிங் ப்ளவுஸ் லேசாக சேலைக்கு வெளியே வந்து தெரிந்தது. 

குனிந்து எடுத்து முகத்தை சேலையில் புதைத்துக்கொண்டு முகர்ந்து அனுபவித்தான். அந்த மென்மையும் வாசனையும் அவளது மடியில் படுத்துக்கிடந்த தினங்களை ஞாபகப்படுத்தியது. அம்மாவின் மடியில் யார் படுப்பதென்பதில் எப்பொழுதும் அவனுக்கும் சின்னக்காவுக்கும்தான் போட்டி. வெளியூரில் வேலை கிடைத்து, பெட்டியை அடுக்கும்போது முதலாவதாக அம்மாவின் பழம்புடவையொன்றைத்தான் எடுத்து வைத்துக்கொண்டான். வீட்டு ஞாபகம் மேலிட்டு அதிகமாகி ஏக்கமாக மாறி தூக்கம் தொலைத்த இரவுகளில் அதைப் போர்த்திக்கொண்டு உறங்குவான். அம்மாவே அருகிலிருந்து தலையைக்கோதி தூங்க வைப்பதுபோல் உணர்வான்.

கையிலிருந்த புடவையின் மேல் அவன் பார்வை சென்றது. இதே மாதிரியான புடவையால்தான் அன்றைக்கு அம்மாவுக்கும் பாட்டிக்குமிடையே சண்டை வந்தது. இதுதானா அது?! இல்லையில்லை.. இது பிங்க் கலர் அல்லவா!, அம்மாவிற்குக் கோபமேற்படுத்திய அந்தப்புடவை நல்ல வாடாமல்லி கலர். பேத்தியின் பிறந்த நாளுக்கென பாட்டி வாங்கி வைத்திருந்தாள். புடவையைக் கண்டதும் பெரியம்மாவின் கண்கள் விரிந்தன. அவளது வழக்கப்படி முதலில் விலையைப் பார்த்தாள். விலையுயர்ந்த புடவை என்றதும் ஆசையில் பளபளத்தன அவள் கண்கள். “இதை நான் எடுத்துக்கறேனே அம்மா?” என மூத்த மகள் ஆசைப்பட்டுக்கேட்டதும் புடவையை அவளிடம் தூக்கிக்கொடுத்து விட்டு பேத்திக்கு வாடாமல்லி கலரில் ஒரு புடவையை வாங்கிக்கொண்டு சின்ன மகளின் வீட்டுக்கு வந்தார். 

வந்தவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல், நடந்ததைச் சொல்லிவிட அம்மாவுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. ‘எம்புள்ளையோட பொறந்த நாளுக்குன்னு வாங்குனதை நீங்க வழக்கம்போல ஒங்க மூத்தமகளுக்கே தாரை வாத்துட்டு வந்துருக்கீங்களா’ என ஆவேசப்பட்டுச்சீறியவர், அந்த புதுப்புடவையை வாங்கி, பாட்டி பதறப்பதற சரிபாதியாக இரண்டாகக் கிழித்தார். “அடுத்த வீட்டு ராகினி அக்காட்ட கொடுத்து ஒனக்கும் கீதா அக்காக்குமா ரெண்டு பாவாடை தைக்கச்சொல்லு” என சின்னக்காவை அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட பெரியம்மா அதன்பின் அடுத்தவர் புடவைகளுக்கு, முக்கியமாய் தங்கையின் உடமைகளுக்கு ஆசைப்படுவதையே விட்டுவிட்டார்.

அவர்களது குடும்ப வட்டாரத்தில் அவளது உடைரசனை மிகவும் பிரசித்தம். “ஏட்டி சியாமளா.. ஒனக்குன்னு எங்கேருந்துதான் கிடைக்குதோ?!!.. நாங்களுந்தான் நாகருகோயிலு, திருனேலின்னு கட கடயா அலஞ்சு அலசுதோம். இந்தக் கலருதாம் வேணும்ன்னு கட கடயா முங்கி முத்தெடுத்தோம். அப்புடியும் வீட்டுக்கு வந்து பிரிச்சுப்பாத்தா அந்தச்சேல அவ்வளவா நல்லாயில்லாத மாதிரி தோணி, புடிக்காம போயிட்டு. ஒனக்கு எந்தச்சேல கட்டுனாலும் அம்சமா பொருத்தமா இருக்கு” என பாதி வயிற்றெரிச்சலில் குமைவார்கள். “அவளும்.. அவளுக்க சீலையும்.. பெரிய ஆப்பீசர் கணக்கால்லா மினுக்கிட்டு அலயுதா” என்பவர்கள் கூட, “சியாமளா.. நாளைக்கு மகன் கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க சொக்காரங்க, அப்றம் கல்யாணப்பொண்ணுன்னு எல்லாருக்கும் சேலை எடுக்கணும். நீயும் வாயேன், உன் செலக்ஷந்தான் டாப்பா இருக்கும்” என கூச்சநாச்சமில்லாமல் அழைப்பார்கள்.

இத்தனைக்கும் ஒவ்வொரு பெண்களைப்போல் பத்து கடைகள் ஏறியிறங்கி, எல்லாப்புடவைகளையும் கலைத்துப்போடச்சொல்லி கடை ஊழியர்களின் பொறுமையைச் சோதிக்கும் ரகமில்லை அவள். ரேக்குகளில் அடுக்கப்பட்டிருப்பவைகளை கண்ணாலேயே அலசி ஆராய்ந்து நாலைந்தை எடுத்துப்போடச்சொல்லி ஒன்றை செலக்ட் செய்து ஐந்து நிமிடத்தில் கடையை விட்டு வெளியே வருபவள் அவள். “உங்களுக்கு உங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா? எங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா?” என அவன் ஒரு நாள் கேட்டதற்கு, “எனக்கு நான் வாங்கிக்கறதுதான் பிடிக்கும்?” என குறும்புடன் சொன்னாள்.

“பீரோ முழுக்க புடவையா வாங்கி அடுக்கி வெச்சிருக்கியே.. கொடுத்து வெச்சவதான் போ..” என ஓர் உறவுக்காரி சொல்லிவிட்டுப்போன அன்றைக்கு அந்திக்கருக்கலில், உப்பும், மிளகும், கடுகும், வரமிளகாயுமாய் பொட்டலம் கட்டி, புடவைகளுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டவள் அவள். அம்மாவின் புடவைக்காதலைப் பற்றிப் புரிந்திருந்த மகள்களும் மகன்களும் அவளுக்கு விதவிதமாய் வாங்கிக்கொடுத்தாலும், அவளுக்கு ரகு ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப்போய் வரும்போது அந்தந்த ஊரின் ஸ்பெஷல் என வாங்கி வரும் புடவைகள் என்றால் தனிப்பிரியம். “பணக்கார மகன் வாங்கிக்கொடுக்கறதுதானே ஒனக்குப்புடிக்கும், நாங்க வாங்கிக்கொடுக்கறதுல்லாம் புடிக்குமா?” என சின்னக்கா ஒரு நாள் குத்தலாகச்சொன்னபோது, “ஏட்டி.. என்ன வார்த்தை சொல்லுகே? தாய்க்கு எல்லாப்புள்ளையளும் ஒண்ணுதான்” என அடக்கிவிட்டாள்.

“கையைத்தூக்க முடியலைப்பா இப்பல்லாம், ப்ளவுஸ் போடறதுக்குள்ள சீவன் போகுது” வயோதிகத்தின் முதல்படியில் நின்றுகொண்டு அலுப்புடன் அம்மா சொன்னபோது, முதன்முதலாக நைட்டி அணிய நேர்ந்த கூச்சமும், இனிமேல் புடவையே கட்டிக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவளிடம் லேசாக எட்டிப்பார்த்தது. நாளாக ஆக நடமாட்டம் குறைந்தபோது பார்த்துப்போகவென வந்திருந்த சின்னக்கா, “இனும உடுத்தமுடியாதுன்னு ஆயாச்சுன்னா, எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு புடவைங்களைத் தரலாமில்ல? நாங்களாவது கட்டி அனுபவிப்போம்” என்றதற்கு,

“என் கண்ணுள்ள வரைக்கும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கட்டும், நான் போனதுக்கும்பொறவு என்னமும் செஞ்சுக்கோங்க” என்று ஒரேயடியாய் மறுத்துச் சொல்லிவிட்டாள்.

அப்படியெல்லாம் சேலைகளை ஆசையுடன் கட்டிக்காத்த அம்மாவைத்தான் இன்று சிதையில் வைத்து விட்டுத் திரும்பியிருந்தார்கள் அவனும் அண்ணனும். நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை, பின்னால் கேட்ட பேச்சுக்குரல் நனவுக்குக்கொண்டுவந்தது.
அக்காக்களும் அண்ணியும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்..

“என்னதான் சொல்லுங்க.. அம்மாவோட கலெக்ஷன் போல வராது”

“அப்பம்லாம் அம்மா புதுப்புடவை எடுத்தா, மொதல்ல என்னைத்தான் கட்டச்சொல்லுவாங்க. அதென்னவோ அம்மாவுக்கு அப்படி ஒரு செண்டிமெண்ட்” இது பெரியக்கா.

“நீ கல்யாணமாகிப்போனப்புறம் அம்மா என்னைக் கட்டிக்கச்சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” இது சின்னக்கா.

“எனக்கு அம்மாவோட ஞாபகமா ஒரு சேலை வேணும்”

“எனக்கும்..”

“எனக்கும்..” 

சேலைக்கடை போல் ஆகியிருந்தது வீட்டுக்கூடம்.

“அடடா!!.. அதுக்கென்ன? ஒண்ணென்ன?! யார்யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கிடுங்க” என்றான் பெரியண்ணன்.

அவர்கள் வருவதை உணர்ந்து வழிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான் ரகு. அவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு புடவையாகக் கையிலெடுத்துப்பார்த்து, பிடித்தவற்றை.. முக்கியமாக விலையுயர்ந்தவற்றைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்கள். அவரவர் வாங்கிக்கொடுத்தவற்றையும் கவனமாக அவரவரே எடுத்துக்கொண்டனர்.

“இந்த காப்பிப்பொடி கலர் புடவை, மகேசுக்கு நல்லாருக்கும், அவளுக்குத்தான் கொடுக்கப்போறேன்னு அத்தை சொல்லிக்கிட்டே இருந்தாங்க” என்றாள் அண்ணி. மகேசு என்ற மகேஸ்வரி அவள் மகள்.

“அந்தப்புடவை அம்மாவோட சித்தி பையன் அவன் மகளோட கல்யாணத்துக்கு அம்மாவுக்கு வச்சுக்குடுத்ததுதானே? அம்மா சார்பா அந்தக்கல்யாணத்துக்கு நான் ஐயாயிரம் ரூவா மொய் செஞ்சேன் பாத்துக்கோ. பரவால்ல, மாமா நல்ல புடவையாத்தான் எடுத்திருக்கார்” என்ற சின்னக்கா புடவையைத் தன்மேல் போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள்.

“எம்புள்ள இன்ன நேரம்ன்னு கிடையாது.. பெரியவளாகிருவா. அவளுக்கு ஆச்சியோட சீரா, மொதப்பொடவையா இத கொண்டுட்டுப் போறேன். காப்பிப்பொடி கலர் அவ நெறத்துக்கு நல்லா எடுப்பா இருக்கும்” என்றாள் பெரியக்கா.

புடவைகளின் சரசரப்பினூடே பேச்சும் சலசலத்துக்கொண்டிருந்தது. ஒரே புடவைக்கு அத்தனை பேரும் போட்டி போடும்போது பெண்கள் நடத்தும் நுண்ணரசியலை நினைத்து அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘இது எனக்கு வேண்டும்’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லாமல் அதே சமயம் அத்தனை பேருக்கும் அழுத்தமாகப் புரியும் வண்ணம் எப்படி சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒரு சதுரங்க ஆட்டத்துக்கேயுரிய லாவகத்துடன் எத்தனை அழகாகக் காய் நகர்த்தி பாகம் பிரித்துக்கொள்கிறார்கள் என ஆச்சரியப்பட்டான். தனக்குத் திருமணமாகியிருந்தால் இந்நேரம் தன் மனைவியும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பாளோ என யோசனையாக இருந்தது. இவர்கள் அம்மாவின் நினைவுகளைப் பகிர்கிறார்களா அல்லது அதைச்சாக்கிட்டு அவளது பொருட்களை மிச்சமில்லாமல் சுருட்டுகிறார்களா எனப்புரியவில்லை.

அண்ணி அவனது மௌனத்தைக்கலைத்தாள். “ஒங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா கொழுந்தம்பிள்ளே?”

வேண்டாமெனச்சொல்லலாமா என ஒரு நிமிடம் யோசித்தான். அம்மையை வேண்டாமென அப்படி சுலபமாகச் சொல்லிவிட முடியுமா? 

சுற்றிலும் பார்த்தான். கொடிக்கயிற்றில் அம்மாவின் இன்னும் துவைக்காத ஒரு நைட்டி தொங்கிக்கொண்டிருந்தது. அவள் இறப்பதற்கு முந்தைய நாள்தான் உடம்பு துடைப்பதற்காக அட்டெண்டர் அதை அவிழ்த்துப்போட்டிருந்தார். அதை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டான். அம்மாவின் கடைசி வாசனை,.. இனியெப்போதுக்குமாக இது போதும். நைட்டிக்கும் முந்தானை உண்டு, அம்மாவை நினைத்து ஏங்கும் பிள்ளைகளை அது அரவணைத்து ஆறுதலளிக்கும். நாப்தலீன் மணக்கும் சேலைகளை மற்றவர்களே வைத்துக்கொள்ளட்டும்.

அவன் நைட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அணைத்தாற்போல் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டு எழுந்தான். அம்மையே குழந்தையாக அவன் தோளில் சாய்ந்திருப்பதுபோல் ஒரு தாய்மையுணர்வை உணர்ந்தபோது அவனுக்குச் சிலிர்த்தது. நைட்டியின் கைப்பாகம் அவனது கையில் உரசியபோது அம்மாவே தன் கையைப்பற்றியிருப்பது போல் உணர்ந்தான். “நடுச்சாமம் ஆகப்போகுது, போய்த்தூங்கு மக்கா” என்ற அம்மாவின் குரல் காதில் கேட்டதுபோல் இருந்தது. நைட்டியைத்தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 

வெகு நாட்களுக்குப் பின் அம்மையின் மடியில் தலை வைத்துப்படுத்திருப்பது போல் ஒரு ஆறுதல், கொந்தளித்துக்கொண்டிருந்த அவனது மனதைச் சற்று அமைதியுறச்செய்தது. மரத்துப்போயிருந்த மனது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது. இனிமேல் அம்மையை எப்போதுமே பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தாக்க, சூடான கண்ணீர் அவன் இமைகளினோரம் வழிந்து நைட்டியை நனைத்தது.  கண்ணீர் வழிய வழிய துக்கம் மெல்ல மெல்ல கரைந்து, தூக்கம் கண்ணைச்சுழற்றியது. மின்விசிறியின் காற்றில் மெல்ல படபடத்துக்கொண்டிருந்த நைட்டி மெதுவாக அவன் கன்னத்தை உரசியது. “அழாதே மக்கா..” என அம்மையே அவனது கண்ணீரைத் துடைத்ததுபோல் உணர்ந்தான். ‘என் அம்மா.. எங்கூடவேதான் இருப்பா” என தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக்கொண்டான். அம்மாவின் கை தனது தலையைக்கோதுவது போன்ற கற்பனையுடன், இமைகள் கனக்க  ஆழுறக்கத்தில் இன்னும் இன்னுமென அமிழத்தொடங்கினான்.

Thursday, 14 August 2025

மனத்துக்கண் மாசிலன்.. ( பண்புடன் இதழில் வெளியானது)


செக்கச்சிவந்திருந்தது வானம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மேகங்கள் விளிம்புகளில் செம்பஞ்சுக்குழம்பைப்பூசிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தன. வினோதுக்கு மருதாணியின் சிவப்பு மிகவும் பிடிக்கும். பூசிய மறுநாள் தோன்றும் இளஞ்சிவப்பு, நாளாக ஆக மெருகேறி அடர்வண்ணமாய் மின்னும் ரத்தச்சிவப்பு, கொஞ்சங்கொஞ்சமாய் நிறமிழந்த ஜாங்கிரி வண்ணம் என ஒவ்வொன்றையும் ரசிப்பான். சூரியனும் பளீரென்ற நீலவானில் ஒரு ஜாங்கிரியாக மிதந்து கொண்டிருந்தது. அழகான வளையம் வளையமாக ஜீராவின் மினுமினுப்புடன் பார்த்தாலே தின்னத்தூண்டுவதாக.. அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. கையை நீட்டி அதை எடுத்தான். கைக்குச்சிக்காமல் அது நழுவிக்கொண்டேயிருந்தது. அவனுக்கு அழுகையும் கோபமுமாக வந்தது. “அம்மா..” என கத்தினான். 

“இங்கேதான்ப்பா இருக்கேன், என்ன வேணும்?” கமலம்மாளின் மென்மையான குரல் பக்கத்தில் கேட்டது.

“இந்த ஜாங்கிரி தட்டோடு ஒட்டிக்கிச்சு. எடுக்க வரலை, எடுத்துக்கொடுங்களேன்” என்றான்.

“எங்கேப்பா?”

“இங்கதான்..” என்றவாறு திரும்பியவன் திகைத்தான். எங்கே போச்சு அதுக்குள்ள!! எனக்குழம்பினான். டேபிளின் துணியை இழுத்து அதனடியில் பார்க்க முற்பட்டான். அம்மா சட்டென்று கையை நீட்டித்தடுத்தாள். “போகட்டும் விடு.. உனக்கு ஜாங்கிரிதானே வேணும். சாயந்திரம் அண்ணனை வாங்கிட்டு வரச்சொல்றேன். இப்ப இந்த இட்லியைச்சாப்பிடு. அம்மா வேண்ணா ஊட்டி விடட்டா?” அவனது பதிலுக்குக் காத்திராமல் கொஞ்சிக்கெஞ்சி ஊட்டி விட்டு, வாய் துடைத்து, அவனது மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். சோபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே சரிந்து தூங்க ஆரம்பித்தான்.

‘இன்னிக்கு மனப்பிரமையால கொஞ்சம் அதிகமா கஷ்டப்படறான் போலிருக்கே’ கவலையுடன் அவனையே நோக்கியபடி பக்கத்தில் அமர்ந்தார் கமலம்மாள். சில நாட்களாகவே வினோத் சரியாகத் தூங்கவில்லை. ஆகவே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். எனவே அவனது வழக்கமான மாத்திரைகளோடு தூக்க மாத்திரையையும் சேர்த்து கொடுத்து விட்டிருந்தார். எப்போதுமே தூக்கமின்மையைத் தொடர்ந்து வரும் சில நாட்களை அவன் பெரும் அவஸ்தையுடன் கடக்க வேண்டியிருந்தது. அவனுக்கு மட்டுமே தெரியும் மாயக்காட்சிகளால் பெரும் குழப்பமடைந்தான். அவன் சொல்வதை யாராவது நம்ப மறுத்தாலோ அல்லது காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாகக் கடந்தாலோ பெருங்கோபம் கொண்டான். “இல்லாததைச்சொல்ல நானென்ன பைத்தியமா?” எனக்கத்தியபடி கையில் கிடைத்ததைப் போட்டுடைப்பது வழக்கமாக ஆகியிருந்தது. 

“இதை ஹாலுஷினேஷன்னு சொல்லுவாங்க”

அவனைப் பரிசோதித்து முடித்து, கைகளைக் கழுவிக்கொண்டு அமர்ந்த டாக்டரின் முன் அவனது மெடிக்கல் ஃபைல் விரிந்து கிடந்தது. ஏகப்பட்ட டெஸ்டுகள், அவற்றின் ரிசல்ட் ரிப்போர்ட்டுகளோடு சமீபத்தில் எடுத்த எம் ஆர் ஐ ரிப்போர்ட்டும் இணைந்திருந்தது. அவற்றையெல்லாம் பார்த்து அலசி விட்டுத்தான் அதைச்சொன்னார். 

“அப்படீன்னா?” என வினோதின் அப்பா கேட்டார்.

“மாயத்தோற்றம். ஒரு விஷயம் இருக்கு.. ஆனா இல்லே. இல்லே.. ஆனா இருக்குங்கற மாதிரியான விஷயம்” என்றார் டாக்டர்.

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் டாக்டர்”

“இப்ப, இந்த ரூம்ல நீங்க, நான், இந்த டேபிள், சேர்ன்னு இருக்கறது எல்லாம் வினோதுக்கு மட்டும் வேற மாதிரி தெரியும். வேற மாதிரி உணர்வார், வேற எங்கியோ இருக்கற மாதிரி புரிஞ்சுக்குவார். அதையே நம்பவும் செய்வார்”

“ஆமா டாக்டர். ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டிருந்தப்ப கூட ‘அப்பா.. ஃப்ளைட் ஏன் லேட்டாகுதுன்னு கவுண்டர்ல விசாரிங்கன்னு நச்சு பண்ணிட்டிருந்தான்”

“எங்க ஆஸ்பத்திரியோட லைட்டிங் அமைப்பு, யூனிஃபார்ம் உடுத்திய ரிசப்ஷன் பெண்கள், அடுத்த நோயாளிக்கான அழைப்பைச்சொல்லும் ஸ்பீக்கர் இதெல்லாமும் அவருக்கு ஏர்போர்ட்டை நினைவுபடுத்தியிருக்கு. அதான் ஆஸ்பத்திரி அவருக்கு ஏர்போர்ட்டா தெரிஞ்சுருக்கு, அதனால அப்படிக் கேட்டிருக்கார்”

“இது இப்படியேதான் இருக்குமா டாக்டர்? சரியாகாதா? வாழ வேண்டிய வயசுப்புள்ளை இவன்” தழுதழுத்தாள் கமலம்மாள்.

“கவலைப்படாதீங்க, நம்ம உடம்பு அடிப்படையில் கெமிக்கல்களாலதான் கட்டமைக்கப்பட்டிருக்கு. உடம்போட சுரப்பிகள், ஹார்மோன்கள் எல்லாத்துக்குமே அடிப்படை உப்புகள்தான், அதாவது கெமிக்கல்கள்தான். இதோட விளையாட்டுதான் நம்ம உணர்ச்சிகள், நம்ம சிந்தனைகள் எல்லாத்துக்கும் அடிப்படை. இவரோட எண்ணங்களும் மனசும் ஒண்ணையொண்ணு இயக்குது. ஒரு செயின் ரியாக்ஷன் மாதிரின்னு வெச்சுக்கோங்க. மனசைக்கட்டுப்படுத்தத்தெரிஞ்சா எண்ணங்களும் கட்டுப்படும். இந்த பிரமைகளும் குறையும். ஆனா, எண்ணங்களால சுரக்கற கெமிக்கல்களால இவரோட மனசு கட்டுப்பட மறுக்குது. இவரோட ரத்தத்துல சோடியம் அதிகமா இருக்கறதால கொஞ்சம் உக்கிரமா இருக்கார். இவரோட சாப்பாட்டில் உப்பைக்குறைங்க” 

“மத்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் நல்லாருக்கு, முன்னைக்கு இப்ப முன்னேற்றம் தெரியுது. மருந்துகளோட உங்க ஒத்துழைப்பும் கவனிப்பும் பாசமும் அவருக்கு இப்ப ரொம்பவே தேவை. அவர் மனபிரமையால ஏதாவது பேசறப்ப மறுத்துப்பேசாம அவர் போக்கிலேயே பேச விடுங்க. கொஞ்ச நேரத்துக்கப்றம் தான் என்ன பேசினோம்ங்கறதே அவருக்கு ஞாபகம் இருக்கப்போறதில்லை. அதனால அவர் பேசறதை சீரியஸா எடுத்துக்காதீங்க. மறுக்கறப்பதான் வயலண்ட் ஆவாங்க. மனசறிஞ்சு எந்தத் தீங்கும் செய்யவோ பேசவோ மாட்டார். அதை நீங்க புரிஞ்சுக்கணும். மருந்துகளோட டோஸைக் கொஞ்சம் மாத்தியிருக்கேன். கொஞ்சம் தூங்குவார்.. தூங்க விடுங்க. அடுத்த மாசம் கூட்டிட்டு வாங்க. ஆல் தி பெஸ்ட்”. ப்ரிஸ்க்ரிப்ஷனை டைப் செய்து பட்டனைத்தட்டினார். அருகிலிருந்த ப்ரிண்டர் துப்பிய ப்ரிஸ்கிரிப்ஷனை ஃபைலின் உள்ளே வைத்து மூடி நீட்டினார். 

ஒரு வாரமாக அவர் அறிவுறுத்தியபடியேதான் எல்லோரும் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள். அவன் என்ன பேசினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்கள். பக்குவமாகப் பதிலளித்தார்கள். ஆனாலும் சில சமயங்களில் சற்று மிகையாக நடந்து கொள்ளும்போது, கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே திருப்பித்திருப்பிச்சொல்லும்போது தங்கள் பொறுமை உடைந்து விடக்கூடாதே எனப் பயந்தார்கள். அவனது உடல் தன்னைச்சரி செய்து கொள்வதற்கான நேரத்தை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற மருத்துவரின் அறிவுரையை அம்மாதிரியான சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதல் போல் சொல்லிக்கொண்டார்கள்.
 
கடந்த சில மாதங்களாகத்தான் இப்படியிருக்கிறான். அதற்கு முன் அவனும் மற்ற ஆண்களைப்போல் இயல்பாக இருந்தவன்தான். கல்லூரி முடித்ததுமே வேலையும் கிடைத்துவிட, வழக்கமான அம்மாக்கள் போல் தன் பிள்ளைக்கொரு கல்யாணத்தைப்பண்ணிப் பார்த்து விட வேண்டுமென கமலம்மாள் முனைந்திருந்த நேரம். அன்றைக்கு மட்டும் அந்தச்சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் எல்லாம் கூடி வந்து இன்றைக்கு அவனும் ஒரு குடும்பஸ்தனாகியிருப்பான்.

அன்றைக்கு கமலம்மாள் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். பருப்பு டப்பாவைத்தேடியபோதுதான் கை மறதியாக அதை மேல்தட்டில் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. எட்டி எடுக்க முனைந்தாள், எட்டவில்லை. நாற்காலியைப்போட்டுக்கொண்டு ஏறி எடுக்கலாம் என அவள் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வரத் திரும்பும்போதுதான் வினோத் தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழைந்தான். இல்லையில்லை… விதி அவனை இழுத்து வந்தது. 

“இதுக்குத்தான் அப்பாவையும் என்னையும் மாதிரி ஒசரமா வளரணும்ங்கறது. நகருங்க.. நான் எடுத்துத்தரேன் என்றவாறு டப்பாவை இழுத்தவன் தலையில் நங்கென்று ஏதோ விழுந்தது. “அம்மா..” எனக்கத்தியவாறு தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான். டப்பா விழுந்து மொத்தமும் சிதறியதையும் பையன் தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்ததையும் கண்டவள் பதறியடித்து மகனிடம் ஓடி வந்தாள். நல்லவேளையாக ரத்தம் எதுவும் வரவில்லை என உறுதிப்படுத்திக்கொண்டாள். அதற்குள் எலுமிச்சை அளவுக்கு உச்சந்தலையில் புடைத்து வீங்கியிருந்தது. “தேய்ச்சு விட்டுராதே.. ஐஸ் ஒத்தடம் கொடுத்தா சரியாப்போயிரும்” என்றபடி அவனை அழைத்து வந்து ஹாலில் உட்கார வைத்து, துணியில் கட்டிய ஐஸ் துண்டங்களால் ஒத்தடம் கொடுத்தாள்.

களேபரம் கொஞ்சம் ஓய்ந்தபின் அடுக்களைக்குச்சென்று அத்தனையையும் சீராக்கியபோதுதான் அவன் தலையில் விழுந்தது என்னவென்று கண்டாள். இஞ்சி, பூண்டு, ஏலக்காய் போன்றவற்றை இடிப்பதற்காக வைத்திருந்த சின்ன கல்பத்தா சரிந்து கிடந்தது. காலையில்தான் மூத்தவனின் குழந்தை அடுக்களையில் வந்து குறும்பு செய்து கொண்டிருந்தபோது, அவன் காலில் போட்டுக்கொண்டு விடக்கூடாதென அவசரத்தில் கைக்குக்கிடைத்த இடத்தில் அதைச் செருகி வைத்திருந்தாள். இப்போது அதுவே தீம்பாக முடிந்ததையெண்ணி தன்னைத்தானே கடிந்துகொண்டாள். “புள்ளைய ஆஸ்பத்திரிக்குப்போயி வீக்கம் வத்தறதுக்கு ஒரு ஊசியைப்போட்டுட்டு வரச்சொல்லணும். சரியாப்போயிரும்” என எண்ணிக்கொண்டாள்.

ஆனால், அவள் எண்ணியது போல அது சரியாகப்போகவில்லை. அப்போதைக்கு வீக்கம் வற்றி அவர்களும் அதை மறந்து விட்டிருந்தார்கள். ஒரு மாதம் போல் கழிந்திருக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது என வினோத் சொல்ல ஆரம்பித்தான். விண்விண்ணெனத் தெறிக்கும் வலியோடு தலையைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருப்பான். சாத்தியமான எல்லா நோய்க்கூறுகளுக்கும் டாக்டர் பரிந்துரைத்த டெஸ்டுகளையெல்லாம் எடுத்து எல்லாமே நார்மல் என ரிப்போர்ட் வந்தது. எங்கேயோ வெறித்துப்பார்த்துக்கொண்டு வெகு நேரமாய் அவன் அமர்ந்திருப்பது ஆரம்பித்தது. டிவியிலிருந்து ஆட்கள் இறங்கி வந்து தன்னுடன் பேசிக்கொண்டிருந்ததாக அவன் சொன்ன அன்றுதான் குடும்ப மருத்துவர், “நீங்க ஒரு ந்யூராலஜிஸ்டைப் பார்க்கறது நல்லது” என்றார். 

ஆதியோடந்தமாய் அத்தனையையும் கேட்டுக்கொண்ட ந்யூராலஜிஸ்ட், அவர் பங்குக்கு சில டெஸ்டுகளை எடுத்தார். சில விவரங்களை அவனிடமும் குடும்பத்தினரிடமும் தனித்தனியாகக் கேட்க வேண்டுமென்றார். அவனிடம் பேசியபின், “அம்மாவை வரச்சொல்லுங்க, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க” என்றார். வெளியே வந்தவன், “அம்மா.. டாக்டர் கேக்கறதுக்கு கவனமா பதில் சொல்லுங்க, இல்லைன்னா எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குன்னு நினைச்சுக்கப்போறார்” என்றான்.

“போடா..” என்றுவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.

அவளிடமும் பேசி விவரங்களை அறிந்து கொண்டபின், “இதோ பாருங்கம்மா, தலைல கனமான பொருள் விழுந்ததால ஒரு சின்ன ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கு. மருந்துகளால அதைக் கரைச்சிரலாம். ஒண்ணும் பயப்படாதீங்க. ஆனா அந்தக்கட்டியால ரத்த ஓட்டம் தடைபட்ட பகுதிகள்ல சின்ன பாதிப்பு இருக்குது. ஆண்டவன் அருளால, நினைவாற்றல் பாதிக்கப்படலை, கை கால் இயக்கம் முடங்கலை. ஆனா கொஞ்சம் சித்தப்பிரமை மாதிரி அப்பப்ப ஒரு அஞ்சு பத்து நிமிஷத்துக்கு ஏற்படும். மாயத்தோற்றங்கள் தென்படும். அதால அவருக்கு எது நிஜம்? எது மாயைங்கற குழப்பம் ரொம்பவே இருக்கும். அந்த சமயங்கள்ல அதெல்லாத்தையும் அவர் நம்பறதோட நீங்களும் நம்பணும்ன்னு எதிர்பார்ப்பார். சில சமயம் அந்தக் கனவுலகிலேயே வாழவும் செய்வார். கொஞ்சம் பொறுமையா கையாண்டுதான் இதை சரி செய்யணும். எப்பவுமே குடும்பத்தாரோட ஒத்துழைப்பு இருந்தாதான் எதையும் சரிவர நடத்த முடியும். அதுவும் நீங்க அவரோட அம்மா. இதில் பெரும்பான்மையான பங்கு உங்களோடதாத்தான் இருக்கும். புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். மருந்துகள் எழுதித்தரேன், நாளடைவில் சரியாகிரும்” என்றார் மருத்துவர்.

ஆடிப்போயிருந்தாள் கமலம்மாள். ‘தெய்வமே.. என் குழந்தையை காப்பாற்றிக்கொடு, உன் சந்நதிக்கு வரேன் தாயே’ என கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள். “எல்லாம் சரியாப்போயிரும்” என எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல் தனக்குத்தானேயும் சொல்லிக்கொண்டாள். வினோதின் அண்ணன் தினேஷுக்கு மட்டும் மருத்துவர் சொன்னதை சொல்லி வைத்தாள். ‘மெடிக்கல் லீவ் போடேன்ப்பா.. உடம்பைச் சரியாக்கிட்டு அப்றம் வேலைக்குப் போகலாமில்லே?’ என வினோதைத் தாஜா செய்து லீவ் போட வைத்தாள். பிரமை கூடிவரும் நேரங்களில் பிள்ளை எங்காவது தொலைந்து விடுவானோ அல்லது அவனைப்பற்றி அக்கம் பக்கம் யாராவது வம்பு பேசி அதனால் அவனது பிற்காலத்தில் அமையப்போகும் திருமண வாழ்வுக்குப் பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்தாள். சிகிச்சையாலும் அவளது அன்பான கவனிப்பாலும் அவனும் கொஞ்சங்கொஞ்சமாகத் தேற ஆரம்பித்திருந்தான்.

மொபைல் கிணுகிணுத்தது… சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள். ‘அடக்கடவுளே.. உட்கார்ந்து கொண்டே தூங்கிட்டேன் போலிருக்கு’ கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். வினோத் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. பாத்ரூம் போயிருப்பான் என எண்ணிக்கொண்டவள் மணியைப்பார்த்தாள், மதியம் இரண்டரை ஆகியிருந்தது. “வினோத்.. சாப்பிட வாப்பா. தட்டு வைக்கிறேன்” குரல் கொடுத்து விட்டு அடுக்களையை நோக்கி நகர்ந்தாள். தெருவில் கலவையான குரல்கள் கூச்சலும் குழப்பமுமாய்க் கியாமுயாவெனக் கேட்டுக்கொண்டிருந்தன. நகர்ந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள். அவள் கண்ட காட்சி விசித்திரமாயிருந்தது.

முழு சீருடை அணிந்த ஒரு போலீஸ் அதிகாரியை, சாதாரண லுங்கியும் பனியனும் அணிந்த, பொதுஜனம் போல் தோன்றிய ஒருவன் கைகளைக் கயிற்றால் கட்டி அழைத்துச்சென்று கொண்டிருந்தான். தெருவில் நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்த்தார்களேயன்றி யாரும் அதைத்தடுக்க முயலவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தவாறே வீட்டுக்குள் நுழைந்த தினேஷிடம்,  ‘ஒரு போலீஸை இப்படி நடத்துவது அரசாங்கக்குற்றம் அல்லவா?’ என மருகினாள் கமலம்மாள்.

“ஐயோ அம்மா!.. உங்களுக்கு விஷயமே தெரியாதில்லே. அந்த போலீஸ் யூனிஃபார்ம்ல இருக்கறவன் உண்மைல ஒரு ஃப்ராடு. வாடகைக்கு யூனிஃபார்மை வாங்கிப்போட்டுக்கிட்டு அங்கங்க மிரட்டி காசு பிடுங்கிட்டிருந்தான். அவனை கையும் களவுமா பிடிக்க ஒரு நிஜமான போலீஸ் ஆபீசர் ரொம்ப நாளா மஃப்டில சுத்திட்டிருந்தார். இன்னிக்கு, அவர் கிட்டயே கைவரிசையை காமிச்சிருக்கான். அதான் அந்தக்கையைக்கட்டி இழுத்துட்டுப்போறார். தெருமுனைலதான் போலீஸ் ஜீப் நிக்குது. பாத்துட்டுதான் வரேன்” என்றான் தினேஷ்.

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! சட்டத்தின் கைகள் நீளமானவை, அதன் பிடியிலேர்ந்து தப்ப முடியுமா. சரி.. அது அதன் கடமையைச்செய்யட்டும், நாம நம்ம கடமையைச்செய்வோம். சாப்பாடு ஆறி அவலாகறதுக்குள்ள மொதல்ல சாப்பிடுவோம்” என்றாள்.

“சட்டத்தோட கைகள் மட்டுமில்லே.. இந்த பொடிப்பயலோட கைகளும் வரவர நீளுது. பாருங்க, எப்படி கிள்ளறான்னு. ஆமா, வெளில என்ன கலாட்டா? ஒரே சத்தமா கேட்டுது?” முகத்தைத்துடைத்த டவலை நாற்காலியின் முதுகில் போட்டு விட்டு அமர்ந்தான் வினோத்.

“அது ஒண்ணுமில்லைப்பா.. சும்மா ஏதோ சத்தம்” வினோதுக்குத்தெரியாமல் அம்மாவுக்கு மட்டும் ‘எதுவும் பேசாதீங்க’ என்பது போல் கண்ணைக்காட்டி ஜாடை செய்தான் தினேஷ். பேசும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்று கூட வினோதைத் தூண்டுவதாக அமைந்து விடலாம் என்பதால் அவனிடம் சற்றுக் கவனமாகவே பேசுவது வழக்கம்.

மனம் ஒரு விசித்திரமான ஜந்து. அதை ஆற்றுப்படுத்தும் சொற்களையோ செயல்களையோ விட, அதை ஆட்டுவிக்கும் விதமாய் நடப்பவற்றையே அது மனமுவந்து ஏற்றுக்கொள்கிறது. இறுகப்பற்றிக்கொள்கிறது, மிட்டாயைக் கொடுக்க மறுக்கும் குழந்தையாய் நம்முடைய சமாதானச்சொற்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அலறி அழுகிறது. அதன் போக்கிலேயே விட்டுத்தான் அதை வசப்படுத்த வேண்டும். கடைசிச்சந்திப்பின்போது மருத்துவர் சொல்லியிருந்தது நினைவில் மோத ‘வினோதின் மனமும் விரைவிலேயே அவன் வசப்படும். என் குழந்தையும் மற்றவர்களைப்போல் நன்றாக வாழ்வான்.. வாழ வேண்டும்’ என அந்தத்தாயுள்ளம் பிரார்த்தித்தபடி பூஜையறை இருக்கும் திசை நோக்கி கை கூப்பியது.

டிஸ்கி: கதையைப் பிரசுரித்த பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails