Friday 26 July 2024

திருக்கார்த்தியல் - ராம் தங்கம்


வாழ்வின் துயரங்களால், புறக்கணிப்புகளால், ஊழால் அலைவுறும் சிறுவர்களின் வலி மிகுந்த உலகின் சித்திரமே எழுத்தாளர் ராம் தங்கத்தின் “திருக்கார்த்தியல்” எனும் இந்தச் சிறுகதைத்தொகுப்பு. பதினொரு கதைகள் கொண்ட இந்தத்தொகுப்பு 2023 வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது பெற்றது. தொகுப்பின் தலைப்புச்சிறுகதையான “திருக்கார்த்தியல்” வென்ற பரிசுகள் எண்ணிலடங்கா.

இத்தொகுப்பிலுள்ள கதைகளில் பல, வறுமையினாலும் பசியினாலும் சிதைக்கப்பட்ட வாழ்வுடைய சிறுவர்களையே கதைமாந்தர்களாகக்கொண்டவை. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தைக்கொண்டது, அனுபவங்களைக்கொண்டது எனினும் அச்சிறுவர்கள் அனைவருக்கும் ஒரே முகம். இன்னும் சற்றுக் கூர்ந்தால் அந்த எல்லாச்சிறுவர்களும் ஒன்றே என்ற புள்ளியில் அமைவர். விதியாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு விளிம்பு நிலையிலிருக்கும் முகமற்ற அக்குழந்தைகளுக்கு ராம் தங்கம் தன்னுடைய மொழியின் வழி ஓர் அடையாளம் கொடுத்திருக்கிறார்.

சபிக்கப்பட்ட தங்கள் வாழ்வின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த இந்தச்சிறுவர்களின் வாழ்வியல் இன்னல்களை நூலாசிரியர் எவ்வித ஒப்பனையுமின்றி அலங்கார வர்ணனைகளின்றி அவர்களின் களத்திலிருந்தே அப்படிக்கப்படியே தரிசிக்க வைக்கிறார். குழந்தைத்தொழிலாளர் முறை பெருமளவில் தடை செய்யப்படாத அக்காலத்தில் நாமும் இத்தகைய சிறுவர்களை எச்சில் இலை எடுப்பவனாக, சைக்கிள் கடையில், ஜூஸ் கடையில் எடுபிடியாக, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப்படிப்பவனாக, ஹோட்டல்களில் எச்சில் தட்டுகளையும் கிண்ணங்களையும் கழுவுபவனாக, வீடுகளுக்குச் செய்தித்தாள், பால் போன்றவற்றைப் போடுபவனாக, ஷூ பாலீஷ் போடுபவனாக என பல்வேறு உருவங்களில் கண்டிருக்கக்கூடும். அவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் புள்ளியாக இருப்பது ‘பசி’. கொடிது கொடிது இளமையில் வறுமை என்றாள் அவ்வைப்பாட்டி. படிக்க வேண்டிய வயதில் தன் குடும்பத்தினரின் வயிற்றுக்காகவும் உழைக்க வேண்டியிருப்பது எத்தனை பெரிய துயரம்.

இத்தொகுப்பின் ஒரு சில சிறுவர்கள் அன்னையாலும் குடும்பத்தாலும், கையாலாகாமல் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் இருந்தும் யாருமில்லாமல் இருப்பது பெருவலி. ஒரு துண்டு கொழுக்கட்டைக்காக அலந்து ஊரின் தெருக்களில் நடந்து ஏமாந்து இறுதியில் சபித்து அழும் செந்தமிழின் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம். செந்தமிழைப்போலவே பாதித்த இன்னொருவன் வினோத். ‘கடந்து போகும்’ என்ற கதையின் நாயகனான அவனை எளிதில் கடந்து போக இயலவில்லை. உயிர் போகும் வாதையிலிருக்கும் நிலையிலும் அவனிடம் கடை முதலாளி வேலை வாங்குவது அப்பட்டமான உழைப்புச்சுரண்டல். இந்தச்சிறுவர்களைப்போல் கையறு நிலையில் இல்லாவிட்டாலும் தாயால் கைவிடப்பட்டு, வீட்டை விட்டே செல்வதன் மூலம் வளர்ந்த இளைஞரான ராஜீவும் அதே கோட்டிலமைகிறான்.

பிள்ளைப்பசியோ.. பெருந்தீயோ! என்பார்கள். அந்தப்பசியே இத்தொகுப்பிலிருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. சிறுவர்களுக்கு வயிற்றுப்பசி எனிலோ பெரியவர்களுக்கு அகங்காரப்பசி, அதிகாரப்பசி. அந்தப்பசிக்காக அறத்தை மீறத்துணிந்த பெரியவர்களைப்போலல்லாமல் வறுமையிலும் செம்மையாக தன்னறத்தை மீறாமலிருப்பவர்கள் இச்சிறுவர்கள். இவர்களின் வாழ்வின் துயரை அவர்களின் மொழியிலேயே சொல்லும்போது அதன் வீரியம் நம்மைத்தாக்குகிறது. அப்பா அம்மா இல்லாத நிலையில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப்படிக்கும் நிலையிலும் சாதி எனும் கொடிய அரக்கனின் கைகளில் சிக்கி, வாழ்வே கேள்விக்குறியாகும் கார்த்திக் என்றாவது திரும்பி வந்து விட மாட்டானா என நம்மை ஏங்க வைக்கிறது, ‘பானி’யின் மரணமோ பெருவலியுடன் நம்மைப்புரட்டிப்போடுகிறது.

பால்யத்தையும் கல்வியையும் இழந்து விளிம்பில் வாழ நேரும் இவர்கள் முன், வாழ்வு தன் இருண்மை மற்றும் ஒளி பொருந்திய இரு கரங்களையும் நீட்டுகிறது. தாம் சந்திக்க நேரும் மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கேற்ப அவர்கள் அக்கரங்களிலொன்றைப் பற்றிக்கொள்ளக்கூடும். அதற்கேற்ப அவர்களின் திசை மாறவும் கூடும்.

நாஞ்சில் நாட்டு மண்ணில் நிகழும் இக்கதைகள் அம்மண்ணின் மொழியிலேயே, வட்டார வழக்கிலேயே அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சொல்லப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. இக்கதைகளில் சொல்லப்படும் மனிதர்கள் நம்முன் நேரடியாக வாழ்கிறார்கள். அதனாலேயே பெரிய நாடாரையும், மூத்த பிள்ளையையும் கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கனகச்சிதமான சித்தரிப்பும் இயல்பான, அதே சமயம் வலுவான கதைமொழியும் கொண்டு வலிகளுடனும் காயங்களுடனும் வெளிப்பட்டிருக்கும் கதைமாந்தர் நம்முள் கடத்தும் அவ்வலியை நம்மால் வெகுநாட்களுக்கு இறக்கி வைக்க இயலாது. அதுவே இத்தொகுப்பின் வெற்றியும் கூட.

டிஸ்கி : இத்தளத்தில் இது எனது 500 ஆவது இடுகை.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு நூல் அறிமுகம்.

500-ஆவது இடுகை - ஆஹா... மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் சகோ.

LinkWithin

Related Posts with Thumbnails