அமெரிக்காவை மனசுல நினைச்சதும் ஜுவாலை ஏந்தி நிக்கிற சுதந்திரதேவியும், டில்லியை நினைச்சதும் செங்கோட்டையும், மதுரைன்னதும் மீனாட்சியும், ஆக்ரான்னதும் தாஜ்மஹாலும்தான் ஞாபகம் வருது. (வடக்கே உள்ளவங்களுக்கு ஆக்ரான்னதும் வேற ஒரு 'வில்லங்கமான' ஞாபகமும் வர்றதுண்டு). அந்தந்த இடங்களை ஞாபகப்படுத்தற விஷயங்களைத்தானே நினைவுச்சின்னங்கள்ன்னு சொல்றோம். அதுக்காக, திருனேலின்னதும் 'அல்வா'தானே ஞாபகம் வருது. அப்டீன்னா அல்வாதான் திருனேலியோட நினைவுச்சின்னமான்னு வில்லங்கமால்லாம் யோசிக்கப்டாது. பின்னே இருட்டுக்கடை எதுக்கு இருக்குதாம்?? காலப்போக்குல அதுவும் நினைவுச் சின்னமா ஆனாலும் ஆகலாம், சொல்ல முடியாது :-)
ஒவ்வொரு ஊர்லயும் எந்தவொரு கட்டிடத்தைக் கட்டும் போதும், எந்த நோக்கத்துல கட்டப்பட்டாலும் நாட்பட அந்த ஊரைப் பத்தி நினைக்கும் போதே சம்பந்தப்பட்ட கட்டிடமும் நினைவுக்கு வர்ற மாதிரி அந்த ஊரோட வரலாற்றுல இரண்டறக் கலந்துடுது. சம்பந்தப்பட்ட கட்டிடத்தோட படத்தைப் பார்க்கிறப்பவும் "அட!!.. இது அந்த ஊராச்சே.."ன்னு சட்டுன்னு அந்த ஊரோட ஞாபகமும் வந்துரும். அதுவும் அந்த ஊர் நாம போய் வந்த ஊராயிருந்தா கேக்கவே வேணாம். அங்கே தங்கியிருந்த நாட்கள், அனுபவங்கள்ன்னு சரசரன்னு கொசுவத்தி பத்திக்கும். இதுல சில கட்டிடங்களைக் கட்டும் போதே அறிஞர்கள், நிகழ்வுகளோட ஞாபகார்த்தமா நினைவுச்சின்னங்களா கட்டினாலும், சில கட்டிடங்கள் மொதல்ல வெறுமே கல்லு மண்ணாலான கட்டிடமா இருந்துட்டு காலப்போக்குல நினைவுச் சின்னங்களாப் ப்ரமோஷன் வாங்கிக்கும். அப்படி என்னோட காமிராவில் பிடிச்சிட்டு வந்த சில நினைவுச்சின்னங்களை, ஃப்ளிக்கரோட நிறுத்திக்காம இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-))
கன்னியாகுமரி: இந்தப் பேரைச் சொன்னதும் குமரியம்மனுக்கு அடுத்தபடியா மனசுல வர்றது விவேகானந்தரோட ஞாபகார்த்தமா கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவுச் சின்னம்தான். அமெரிக்கா போறதுக்கு முந்தி அவர் இந்தப் பாறையில் அமர்ந்துதான் தியானம் செஞ்சாராம். அந்த ஞாபகார்த்தமா 1970ல் கட்டப்பட்ட இந்த மண்டபம் அரிச்செடுக்கும் உப்புக் காத்தையும் சுனாமியையும் சமாளிச்சுக் கிட்டுக் கம்பீரமா நிக்குது.
மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா: கிட்டப் பார்வையில்..
விவேகானந்தரும், ஸ்ரீபாத மண்டபமும் ஒரு தொலை நோக்குப் பார்வையில்..
இந்த காந்தி மண்டபத்தோட படத்தைப் பார்த்த அப்றமும் இது கன்னியாகுமரிதானேன்னு தெரிஞ்சுக்காதவங்க ஒரு நடை கன்னியாரி போயிட்டு வந்துருங்க. கன்னியாகுமரிக் கடல்ல கரைக்கிறதுக்கு முன்னாடி அவரோட அஸ்தியை வெச்சிருந்த ஞாபகார்த்தமா கட்டப்பட்ட இந்த மண்டபத்துல, மேல் விதானத்துல இருக்கற ஒரு துளை வழியா அஸ்தியை வெச்சிருந்த இடத்துக்கு ஒவ்வொரு வருஷமும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, அதாவது அக்டோபர் 2-ம் தேதி அன்னிக்கு சரியா நடுப்பகல் 12 மணிக்கு சூரிய பகவான் ஒளியபிஷேகம் செஞ்சு அஞ்சலி செலுத்தறதைப் பார்க்கக் கூட்டம் நெரியும். எள்ளு போட்டா எண்ணெய்தான் விழும்.
மும்பையில் மலபார் பகுதியில் தொங்கும் தோட்டத்துக்குப் பக்கத்துல இருக்கற கமலா நேரு குழந்தைகள் பூங்காவில் இருக்குது இந்த பாட்டிம்மாவின் ஷூ.. (பாவம்.. ஒரு ஷூவை இங்கே தொலைச்சுட்டு என்ன சிரமப் படறாங்களோ :-))
மும்பையின் தாஜ் ஹோட்டல்: 565 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டல் திரு. ஜாம்ஷெட்ஜி டாடாவால் கட்டப்பட்டு, 1903-ம் வருஷம் டிசம்பர் 16-ம் தேதியன்னிக்கு விருந்தினர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கு. முதலாம் உலகப்போர் சமயத்துல இதை 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையா மாத்தி உபயோகப் படுத்தியிருந்துருக்காங்க. இதுல படத்தோட இடது பக்கம் இருக்கறது பழைய ஹோட்டல். இதுல நடுவே இருக்கும் வெங்காயக்கூம்பு பகுதியில் ஈஃபில் டவர்ல உபயோகப் படுத்தியிருக்கற அதே வகை இரும்பை வெளிநாட்லேருந்து தருவிச்சுப் பயன்படுத்திக் கட்டியிருக்காங்களாம்.
1980-85 கால கட்டத்துல உலகத்துலயே சிறந்த ஐந்தாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்ங்கற இடத்தை அடைஞ்ச பெருமை இதுக்குண்டு. 2008-ல் 26 நவம்பர் அன்னிக்கு நடந்த தாக்குதல்ல கொஞ்சம் கலகலத்தாலும் மறுபடியும் மீண்டு வந்து, அழிவின் சுவடுகளையெல்லாம் துடைச்சுப் போட்டுட்டுத், தனக்காக உயிர் கொடுத்தவர்களின் நினைவையும் சுமந்துக்கிட்டுத் தலை நிமிர்ந்து நிக்குது. தாக்குதலுக்கு அப்புறம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படமே அதுக்குச் சாட்சி.
மும்பையின் புகழ்பெற்ற கேட் வே ஆஃப் இந்தியா: இது வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரு. நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-). எதிர்த்தாப்ல இருக்கற தாஜ் ஹோட்டல்ல தங்கிக்கிட்டா நாள் முழுசும் பார்த்துட்டே இருக்கலாம். (சில வருந்தத்தக்க நிகழ்வுகளால இப்ப தாஜும் நினைவுச்சின்னமாகிடுச்சு )
மும்பையின் பாந்திரா-வொர்லி கடல் இணைப்பு: 1999-ல் பால் தாக்கரேயால் அடிக்கல் நாட்டப்பட்டு 2010-ல் மக்கள் உபயோகத்துக்காக முழுவதும் திறந்து விடப்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்குப் பேர் போன மும்பையில் இந்தப் பாலம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். இந்தப் பாலம் வர்றதுக்கு முந்தி, இங்கேருந்து அங்கே போகறதுக்குச் சுமார் ஒன்னரையிலேர்ந்து ரெண்டு மணி நேரம் எடுக்குமாம். இப்பல்லாம் பாந்திராவுலேர்ந்து வொர்லிக்கு வெறும் ஏழே நிமிஷத்துல போயிடலாம். போக்குவரத்து நெரிசல் இருந்தா சுமார் பத்துப்பதினஞ்சு நிமிஷங்களாகும். அவ்ளோதான். டோல் வசூல் கொஞ்சம் கூடுதல்தான்னாலும் நல்லாவே பராமரிக்கிறாங்க.
டிஸ்கி: ஊர் சுத்தப் போயிருந்தப்ப விவரங்கள் சொன்ன கைடுக்கும், மேல் விவரங்கள் கொடுத்த விக்கியண்ணனுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் :-))
