Friday, 15 June 2012

மும்பை ரயில் நிலையங்களில் ஆரம்பிச்சுருக்கும் புரட்சி..

"இனிமேல் மத்திய ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள்ல ப்ளாஸ்டிக் பையில் அடைத்த உணவுப்பொருட்களை விற்பது தடை செய்யப்படுவதால் யாரும் இந்த உத்தரவை மீறக்கூடாது. ஜூன் ஒண்ணாம் தேதியிலிருந்து இந்த தடையுத்தரவு அமலுக்கு வருகிறது" இப்படியொரு உத்தரவு வியாபாரிகளைக் கொஞ்சம் கலங்க வைத்திருக்கிறது.
இணையத்தில் சுட்ட படம்..
மும்பையின் ரயில் நிலையங்களில் ப்ளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட ஜங்க்ஃபுட், பிஸ்கட் மற்றும் துரித வகை உணவுப்பொருட்களின் விற்பனை, இந்த ஜூன் முதலாம் தேதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் சமோசா, சாண்ட்விச், வடாபாவ் போன்றவற்றை ப்ளாஸ்டிக்கைத் தவிர்த்து பேப்பரில் சுற்றி வைத்து விற்றுக்கொள்வதானால் அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில், உணவுப்பொருட்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு உறைகளை ப்ளாட்பார்மிலோ அல்லது ரயில் தண்டவாளங்களிலோ வீசி விடுவதால் ரயில் நிலையங்கள் குப்பைக்கூடைகளாகக் காட்சியளிக்கின்றன. மட்டுமல்லாது ரயில் தண்டவாளங்களில் வீசப்படும் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக் கொள்வதால் மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து செல்வதும் தடுக்கப்படுகிறது. இப்படித்தேங்கி நிற்கும் நீரில் தண்டவாளங்கள் மூழ்கிக் கிடப்பதும், அதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின் சில நாட்களில் மும்பையின் உயிரோட்டமான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமான ஒன்று. இனி வரும் காலங்களிலாவது இந்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் மட்டுமல்ல, நகருக்குள்ளும் வீசப்படும் ப்ளாஸ்டிக் பைகள் காற்றில் பறந்து சில சமயம் சாக்கடைகளுக்குள்ளும் விழுந்து அடைத்துக் கொள்வதுண்டு. இப்படி அடைத்துக் கொண்டதன் விளைவாக 2005-ம் வருடம், ஜூலை 26-ம் தேதியிலிருந்து சில நாட்களுக்கு மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. மும்பையை ஷாங்காய் நகரைப்போன்று மாற்ற வேண்டுமென்ற அப்போதைய முதலமைச்சரின் ஆசைக்கு வருண பகவான் செவி சாய்த்து விட்டானோ என்று தோன்றுமளவுக்கு.

ப்ளாஸ்டிக்கின் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அது சுற்றுப்புறச் சூழலுக்கு உண்டாக்கும் கேடுகளையும் அதைத்தவிர்ப்பதையும் பற்றிய விழிப்புணர்வு இப்போது மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் மற்றும் சிறு கடைகளில் பாலிதீன் பைகளில் பொருட்களைப் போட்டுக் கொடுக்கும் வழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. அப்படியே தவிர்க்க முடியாமல் பைகள் தேவைப்பட்டாலும் அதை விலை கொடுத்தே வாங்க வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தே பைகள் எடுத்துப் போவது அதிகரித்துள்ளது. இதுவே ஒரு நல்ல ஆரம்பம்.

மும்பையைப் பொறுத்தவரை 50 மைக்ரான்கள் அளவிற்குக் குறைவாக இருக்கும் பைகளுக்கு அனுமதி கிடையாது. எந்தக் கடையிலாவது அந்த அளவிற்குக் குறைவாக இருக்கும் பைகளைப் பயன்படுத்துவது தெரியவந்தால் உடன் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். ஏனெனில் 50 மைக்ரான்களுக்குக் குறைவாக இருக்கும் பைகள் எளிதில் மக்கிச் சிதைவதில்லை. புவியின் மேற்பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் இவை, மழைநீர் புவியினுள் செல்லாதவாறு தடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பேற்படுகிறது. மற்றும் சில சமயங்களில் பைகளில் கெட்டுப்போன உணவுகள் இருந்து, அவை குப்பைத்தொட்டியில் வீசப்படும் பட்சத்தில், அவற்றைத் தின்னும் மாடுகளின் வயிற்றுக்குள் உணவோடு இந்தப்பைகளும் சென்று விடுகின்றன. இதனால் கால்நடைகள் உடல் நலம் குன்றி இறக்கவும் நேரிடுகிறது.

இவை தானாகவே அழிவதற்கு சுமார் ஆயிரம் வருஷங்களாம். எரித்து அழித்தி விடலாமென்றாலோ அது சுற்றுச்சூழலை இன்னும் மாசு படுத்துதும். ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும் போது வெளியேறும் நச்சுவாயுக்களால் புற்று நோய் ஏற்படும் அபாயமும் உண்டு. இந்த வாயுக்கள் தண்ணீரில் கரைந்தும், காற்றில் கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது.  இதையெல்லாம் சுவாசிப்பதால் நம் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இதையெல்லாம் யோசித்துத்தான் தன்னாலான முயற்சியாக மத்திய ரயில்வே தற்சமயம் மும்பையின் மத்திய ரயில் தடங்களில் வரும் நிலையங்களில் மட்டும் இந்தத் தடையுத்தரவை முதலில் அமல் படுத்தியது. ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் உணவுப்பண்டங்களை விரைவில் காலி செய்து விடும்படியும், ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின் அவ்வாறான விற்பனை நடப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அபராதமோ அல்லது தண்டனையோ உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்கள் நின்று புறப்படும் சி.எஸ்.டி போன்ற சில நிலையங்களுக்கு முதலில் விதி விலக்கு அளிக்கப்பட்டு, கல்யாண், தானா, குர்லா, வடாலா போன்ற நிலையங்களில் இதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். போகப்போக மற்றும் சில நிலையங்களும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்கள். ஆனால் சி.எஸ்.டியில் கடைகளையே எடுத்து விட்டார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி வந்தது.

நவி மும்பையின் பன்வெல்லிருந்து, வாஷி வரைக்குமான துறைமுகத்தட ரயில் நிலையங்களில், உள்ளே ஒரு கடை கூடக் கிடையாது. நிலையத்தின் உள்வாயிலில் மட்டுமே ஒரு சில கடைகள் இருக்கும், அதுவும் டீ, காபி, சமோசா, வடாபாவ் போன்ற சிற்றுண்டிகள் மட்டுமே கிடைக்கும். மத்திய மற்றும் மேற்கு ரயில் தடங்களுடன் ஒப்பிடும்போது மும்பையின் துறைமுகத்தட நிலையங்களில் இருக்கும் நடைமேடைகளின் சுத்தம் திருப்திகரமானது. பெருமளவில் மக்கள் போக்குவரத்து இருந்தாலும் நன்றாகப் பராமரிக்க முடியும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு.

தொலைதூர ரயில்கள் நின்று புறப்படும் நிலையங்களிலும் இப்போது உணவுப்பொருட்கள் கிடைக்காது என்று ஆகி விட்டதால் அவசரத்துக்கு பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றை வாங்கிப்பயனடையும் பயணிகள், முக்கியமாகக் குழந்தைகளுடன் வருபவர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். சமோசா போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்குமென்றாலும் அது சுத்தமான முறையில்தான் தயாரிக்கப்படுகிறதா என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடிவதில்லை. 

வரவேற்பு இருக்கும் அதே சமயத்தில் பெருமளவு அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது இந்த அறிவிப்பு. ரயில் நிலையங்களுக்கு வெளியே இருந்து இந்த உணவுப்பொருட்களைக் கொண்டு வருவது தடை செய்யப்படவில்லை, அப்படிக் கொண்டு வந்து, சாப்பிட்டு விட்டு வீசும் ப்ளாஸ்டிக்கால் மட்டும் ரயில் நிலையம் குப்பையாகாதா? ரயில் நிலையங்களில் குப்பைக்கூடைகள் வைத்து, அதில்தான் குப்பையைப் போட வேண்டும் என்று அறிவுறுத்துவதை விட்டுவிட்டு, வெறுமனே தடை செய்வதென்பது என்ன பலன் தரும்? என்பது அவர்கள் எழுப்பும் நியாயமான கேள்விகள்.

ஆனால், சுத்தமான சூழலை ஒரு தடவை உருவாக்கி விட்டால் அப்புறம் அதைப் பாழ்படுத்த மனம் வராது என்பதும், நல்லதொரு பழக்கத்தைக் கற்றுக்கொள்வதில் நாமே குழந்தைகளுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதும் சத்தியமான உண்மைகள்.

டிஸ்கி 1: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.
டிஸ்கி 2: இது என்னோட 202-வது இடுகை.

37 comments:

துளசி கோபால் said...

நல்ல விஷயம். எப்படியோ நாட்டைச் சுத்தப்படுத்தினால் சரி.

தின்னவுடன் வீசி எறிவதை சுதந்திரமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் மக்கள்:(

Ramani said...

ஆனால், சுத்தமான சூழலை ஒரு தடவை உருவாக்கி விட்டால் அப்புறம் அதைப் பாழ்படுத்த மனம் வராது என்பதும், நல்லதொரு பழக்கத்தைக் கற்றுக்கொள்வதில் நாமே குழந்தைகளுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதும் சத்தியமான உண்மைகள்.//

உண்மையிலும் உண்மை
நல்ல தகவலை விரிவான அழகான
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 1

பா.கணேஷ் said...

உண்மை. பிளாஸ்டிக்கைத் தடை செய்யும் அதே வேளையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு அவை முறையாய் பராமரிக்கப்படவும் வேண்டூம். அவ்வாறு செய்யாமல் மக்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. மக்களின் மனோநிலையும் இப்படிக் குப்பைகள் வீசி எறியும் விஷயத்தில் மாறத்தான் வேண்டும். அருமையான பகிர்வு.

பா.கணேஷ் said...

[ma]நல்ல பகிர்விற்கு நன்றிகள் பல![/ma]

பா.கணேஷ் said...

நீங்க சொன்ன வழிமுறைப்படி கோடிங் இணைச்சிட்டு சாம்பிள் கமெண்ட் போட்டுப் பாத்தேன். எழுத்துக்கள் ஓடுது. நன்றி. உங்களின் எண்ணிக்கை 200 அல்ல 20000க்கும் மேலே தொடரவும். உங்களை நாஙகள் தொடரவும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

மிக நல்ல விஷயம். வெறும் காற்றை அடைத்து விற்று வரும் இந்த மாதிரி கம்பெனிகளுக்கு தடை விதிப்பது தான் சிறந்தது.

ஸ்ரீராம். said...

நல்ல செயல். தமிழகத்திலும் கடைகளில் இந்த நிலைதான். காசு கொடுத்துத்தான் பைகள் வாங்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் போறாது, இன்னும் கட்டாயச் சட்டம் வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. மக்காள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. நல்ல விஷயங்களுக்குச் சட்டம் போட்டால் மக்களுக்குப் பிடிப்பதேயில்லையே... மழை நீர் சேகரிப்பை எவ்வளவு பேர் உருப்படியாகக் கடைப் பிடித்தார்கள்? உயரும் வெப்பங்கள், நிலத்தடி நீர்க் குறைவது.... நாம் இன்னும் ரொம்ப வளரணும், மாறணும்!

இராஜராஜேஸ்வரி said...

ஆனால், சுத்தமான சூழலை ஒரு தடவை உருவாக்கி விட்டால் அப்புறம் அதைப் பாழ்படுத்த மனம் வராது என்பதும், நல்லதொரு பழக்கத்தைக் கற்றுக்கொள்வதில் நாமே குழந்தைகளுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதும் சத்தியமான உண்மைகள்

சாத்தியமான முறைகளில் சுற்றுசூழலை உணர்த்திய அருமையான் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. !

ராமலக்ஷ்மி said...

நல்ல விஷயங்கள் நடைமுறைப் படுத்தப்படுகையில் எதிர்ப்பும் அதிருப்தியும் எழும்புவது வாடிக்கையாயிற்றே. ஆனா நீங்க சொல்லியிருப்பது கருத்தில் வைக்க வேண்டிய ஒன்று: /சுத்தமான சூழலை ஒரு தடவை உருவாக்கி விட்டால் அப்புறம் அதைப் பாழ்படுத்த மனம் வராது என்பதும், நல்லதொரு பழக்கத்தைக் கற்றுக்கொள்வதில் நாமே குழந்தைகளுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும்/ !

மோகன் குமார் said...

Good post. Read in Atheetham

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம். இன்னும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவை நடைமுறையிலும் செயல்பட வேண்டும். அப்போது தான் இந்த பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க முடியும்.

MANO நாஞ்சில் மனோ said...

மிக நல்ல விஷயம், வாழ்த்துகள்....!

மகேந்திரன் said...

இந்த விழிப்புணர்வு எங்கும் பரவவேண்டும்..

Asiya Omar said...

நல்லதொரு பகிர்வு.202க்கு வாழ்த்துக்கள்.

சாமக்கோடங்கி said...

பாராட்டப் பட வேண்டிய விஷயம்.. கொஞ்சம் கடினமாக இருந்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நமது தேசத்தை நாம் தான் காக்க வேண்டும். சிறு சிறு விஷயங்கள் தானே.. போனால் போகட்டும் என்று விட்டு விடுவதால் தான் இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதாக உருவெடுத்து உள்ளது...

ஹுஸைனம்மா said...

//ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின் //

அப்படின்னா, ஆரம்பிச்சாச்சா? வெரிகுட்!! சொல்லிருக்க மாதிரி, கடைகளில் விற்பதை மட்டும் தடுக்காமல், வெளியிலிருந்து கொண்டு வருவதையும் தடுக்க வேண்டும்.

நல்ல சட்டங்கள் கொண்டுவர்றாங்க, ஆனா அதை முழுமையா கடைபிடிப்பதற்கேற்ற வசதிகளையும் (எ.கா. குப்பைத் தொட்டிகள்) செய்துத் தந்தால் நிச்சயமா முழுமனசோடு எல்லாரும் கடைபிடிப்பாங்க.

புதுகைத் தென்றல் said...

ம்ம் இங்கயும் போன வருஷம் ப்ளாஸ்டிக் தடா சுறு சுறுப்பா நடந்துச்சு. இப்ப புது மேயர் வந்ததுக்கப்புறம் கண்டும் காணாமலும் இருக்காக. :(

ரிஷபன் said...

மக்கள் மனதில் வேரோடிப் போன விஷயம்.. கடைக்குப் போனால் இன்னொரு பை கேட்கிற சுபாவம்.. திருந்தி வர அவகாசம் எடுக்கும்..

மாதேவி said...

வரவேற்கப்படவேண்டியது.

அமைதிச்சாரல் said...

வாங்க துள்சிக்கா,

சமீபத்திய மும்பை ரயில் பயணங்களில் கவனிச்சேன். முன்னைக்கு இப்போ குப்பைகள் குறைவா இருக்கு. சில இடங்களில் கடைகளையே மூடிட்டாங்க. இருக்கும் ஒரு சில கடைகள்லயும் பாக்கெட் ஐட்டங்கள் இல்லவே இல்லை. இதுவே முன்னேற்றம்தானே.

என்ன?.. இந்த பான் துப்பலையும் குறைச்சுக்கிட்டா நல்லாருக்கும்..

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

மிக்க நன்றி வாசிச்சதுக்கு..

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

நவி மும்பையில் குப்பைகளுக்கு மட்டுமல்ல, ஆங்காங்கே பான் எச்சிலைத் துப்பவும் குப்பைத்தொட்டிகள் வெச்சுருப்பாங்க. மத்திய ரயில்வே பகுதிகளில் இந்த வசதிகள் வர கொஞ்சம் நாளெடுக்கும். ஆனா வந்துரும். மக்களும் கொஞ்சம் கொஞ்சமா தங்களை மாத்திக்க வேண்டிய காலமும் வந்துருச்சு.

சாம்பிள் கமெண்டுக்கும் நன்றி :-))

அமைதிச்சாரல் said...

வாங்க அமுதா,

வெறும் காத்து மட்டுமா,.. உப்பையும் சாட் மசாலாவையுமில்லே கூடுதலா தூவி வெச்சுருக்காங்க. வயித்துக்கும் கெடுதல் இதெல்லாம்..

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

நல்லது செருப்பை அணிந்து கொள்ளும் நேரத்தில் கெட்டது உலகத்தைச் சுத்தி வந்துரும்ன்னு சொல்லுவாங்க. அதேமாதிரிதான் நல்ல பழக்கங்கள் வர நாளாகும் ஆனா வந்தா நிலைச்சு நிற்கும். மக்கள் மாறுவாங்கன்னு நம்புவோமே..

வாசிச்சதுக்கு நனறி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசிச்சதுக்கு மிக்க நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க மோகன் குமார்,

வல்லமையிலும் வாசிச்சதுக்கு நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கு நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ,

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மகேந்திரன்,

நிச்சயமா.. தூங்கற மக்கள் விழிச்சுக்கற காலம் வெகு தொலைவில் இல்லை.

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க சாமக்கோடங்கி,

ரொம்பச் சரியா அடிச்சுச்சொன்னீங்க.. கவனிக்காம விட்ட சின்ன செடி முள்ளு மரமா வளர்றதுக்குள்ள பிடுங்கி எறியறதுதான் நல்லது. வளர விட்டதன் பலன்,.. அனுபவிக்கிறோம். ஆனாலும், இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. இருக்கும் காலத்தில் சரி செஞ்சுரலாம்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுசைனம்மா,

வெளியிலிருந்து கொண்டாரதையும் தடுக்கலாம்தான். அதுக்கு இந்தப் பொருட்களின் உற்பத்தியைத் தடுத்தாலன்றி வேற வழியில்லை. ஜங்க் உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண நாமும் குழந்தைகளைப் பழக்கப் படுத்தணும். அதுதான் ஒரே வழி.

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

ஒரு கை அரசாங்கம்ன்னா இன்னொரு கை மக்கள். ரெண்டு பேரும் சேர்ந்து தட்டுனா நிச்சயமா ஓசை வரும். ஒரு கை செயல்படலைன்னா அதுக்கும் சேர்த்து இன்னொரு கை செயல்படலாமே..

மக்கள் மனசு வெச்சா முடியாதது இல்லை.

வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

அவகாசம் வேண்டிய மட்டும் எடுத்துக்கிட்டாலும் கடைசியில் நல்லது நடந்தாச் சரி :-)

வாசிச்சதுக்கு நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

LinkWithin

Related Posts with Thumbnails