'அரிது.. அரிது.. ஆரோக்கியமாய் இருத்தல் அரிது; அதனினும் அரிது மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடல்'ன்னு நிகழ்காலக்கலம்பகத்துல படிச்சப்பகூட நான் நம்பலை.. வறுபட்டு ஃப்ரைட்ரைஸ் ஆனப்புறம்தான் நம்புனேன் :-)))
அந்த சரித்திரமுக்கியத்துவம் பெற்ற சம்பவம் நடைபெற்று பத்துப்பதினஞ்சு நாளானப்புறமும்கூட அதோட பாதிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு நீங்கலைன்னா, அதோட மகிமை என்னான்னு புரிஞ்சுக்கோங்க. பையருக்கு பல்லில் பிரச்சினை காரணமா, பல்டாக்டரைப்பார்க்கவேண்டி வந்தது (பல்டாக்டரைப்பார்க்காம பின்னே,.. கண் டாக்டரையா பார்ப்பாங்கன்னு கமெண்டுறவங்கல்லாம் அப்டியே ஒன் ஸ்டெப் பேக் :-)).
இந்த E.N.T. ஸ்பெஷலிஸ்டுகளெல்லாம் ஏன், பல்லுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடாதுன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். காது,மூக்கு,தொண்டை எல்லாத்துக்கும் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருக்கறமாதிரியே பல்லோடயும் சம்பந்தம் இருக்குதுதானே!!.. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் பக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்க இல்லியா :-)
சொல்லவந்ததை விட்டுட்டு எங்கியோ போயிக்கிட்டிருக்கேன்.. முந்திய நாளே ஆசுத்திரிக்கு போன் செஞ்சு, 'இந்த மாதிரி இந்தமாதிரி பையனுக்கு பிரச்சினை இருக்கு,.. அதனால இந்தமாதிரி இந்தமாதிரி டாக்டர்கிட்ட கலந்தாலோசிக்கணும். அதனால அப்பாயிண்ட்மெண்ட் குடுங்க'ன்னு கேட்டேன். அதுக்கு அங்க வரவேற்பறையில இருந்தவங்க,' இந்த மாதிரி இந்த மாதிரி மொத நாளே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது,.. அதனால நாளைக்கு காலேல போன் செய்யுங்க'ன்னு சொன்னாங்க.
அதேமாதிரி மறு நாள் காலேல போன் செஞ்சப்ப, 'டாக்டர் மத்தியானம் ஒருமணிக்குத்தான் வருவாரு,.. உங்களுக்கு ரெண்டுமணிக்கு அப்பாயிண்ட்மெண்டு கொடுத்திருக்கேன்'னு சொன்னாங்க. சரீன்னுட்டு 'நோயாளியோட பேரை எழுதிக்கோங்க'ன்னுட்டு பையரோட பேரைச்சொன்னேன். 'பரவால்லைங்க.. நீங்க மத்தியானம் வரச்சே வரவேற்புப்பிரிவுல வந்து பேரைச்சொன்னாப்போதும்'ன்னாங்க. அவங்க சொன்னதை நம்ம்ம்ம்பி மெத்தனமா இருந்துட்டேன்.
மத்தியானமா, குறிச்ச நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னாடியே கிளம்புனோம். ஆக்சுவலி அந்த ஆசுத்திரிக்கு பதினஞ்சு நிமிஷத்துலயே போயிடலாம். ஆனா, ஆசுத்திரிக்கும், பஸ் நிலையத்துக்கும் நடுவால இருக்கற ரோட்டுல பாலம் கட்டுற வேலை நடக்குது. அதனால, ஊரெல்லாம் ஊர்கோலம் போயித்தான் சேரணும். அங்க போனா, மூணாவது மாடிக்கு போங்கன்னாங்க. அங்க போயி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா காத்திருந்தோம். ஒவ்வொரு காமணி நேரத்துக்கொருக்கா, சிஸ்டர் கிட்ட டாக்டர் வந்தாச்சான்னு கேக்கறதும், இப்ப வந்துடுவார்ன்னு அவங்க பதில் சொல்றதும், இடையிடையே, எதுக்காப்ல இருந்த வார்டுகள்ல இருக்கற குட்டிக்குட்டி பேஷண்டுகளை வேடிக்கை பார்க்கறதுமா இருந்தோம்.
கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சதும், டவுட்டு வந்து தலைல தட்டுச்சு. தடவிவிட்டுக்கிட்டு, மறுபடி வரவேற்புப்பிரிவுல வந்து 'டாக்டர் எப்போங்க வருவாரு.. குறைஞ்சபட்சம் அவருக்காவது போன் செஞ்சு கேளுங்களேன்'னு ஐடியா கொடுத்தேன்.. (எல்லாம் நேரம்... அவங்க வேலையையும் நாமளே பாக்க வேண்டியிருக்கு!!..). போன் செஞ்சு கேட்டவங்க, அப்படியொரு குண்டைத்தூக்கிப்போடுவாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.
விஷயம் என்னான்னா,.. அன்னிக்கு காலைல டியூட்டியில இருந்தவங்க,.. நாங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கறதையே டாக்டர்கிட்ட சொல்லாம இருந்திருக்காங்க.உடனே, நானே நேரடியா டாக்டர்கிட்ட பேசி, ரெண்டு நாளைக்கப்புறம் அப்பாயிண்ட்மெண்டை அவர்கிட்டயே உறுதிசெஞ்சுக்கிட்டு, அப்றமா பழைய வரவேற்பாளினியை லேசா டோஸ்விட்டுட்டு வந்தேன்.அவங்க சார்பா இவங்க மன்னிப்பு கேட்டாலும், 'மாஃபி.. இந்தியில எனக்கு புடிக்காத ஒர்ர்ரே வார்த்தை'ன்னுட்டு கிளம்பி வந்துட்டோம்.
அப்றமா, டாக்டர் கிட்ட போயி செக்கப் செஞ்சப்ப, B12ங்கற விட்டமின் குறைபாடு இருக்குமோன்னு தோணுது. எதுக்கும் இரத்தப்பரிசோதனை செஞ்சுடுங்கன்னு எழுதிக்கொடுத்தாரு. அங்க இருக்கற லேபோட லட்சணம் தெரிஞ்சும், இப்பவாவது குறையையெல்லாம் சரிசெஞ்சுருப்பாங்கன்னு நம்ம்பி,.... லேபுக்கு போனா,.. பையரை விட்டுட்டு, ஜாலியா கையைக்கட்டிக்கிட்டு அங்கியும் இங்கியும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கற எங்கிட்ட ஊசியும் கையுமா ரத்தம் எடுக்கவர்றாங்க.. (எனக்கெதிரா உள் நாட்டு சதி நடக்குதோ???) எனக்கு அழறதா சிரிக்கறதான்னு தெரியலை.
'ஏங்க.. பேஷண்டோட பேரை படிச்சுப்பாக்கமாட்டீங்களா??..பேஷண்ட் யாருன்னுகூட செக் பண்ண மாட்டீங்களா'ன்னு அழாக்குறையா கேட்டேன். தப்பு எம்மேலதானாம்.. நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவெச்சு ரத்தத்தோட மாதிரியை எடுப்பாங்களாம். (அது பேஷண்டா இல்லைன்னாக்கூடவா :-))))). ரிப்போர்ட் வந்ததும் போன்செஞ்சு சொல்லுவோம். நீங்க வந்து வாங்கிக்கலாம்ன்னு சொல்லிட்டு போன் நம்பரை அவங்க தப்பா எழுதிக்கிட்டதும், அதை ஒருவாரத்துக்கப்புறம் நான் போனப்ப கண்டுபிடிச்சு டோஸ்விட்டப்ப,.. எங்கிட்டயிருந்து வாங்கிக்கட்டிக்கிட்டதும் இடைச்செருகல் :-))
ஒருவாரத்துக்கப்புறம் ரிப்போர்ட்டை வாங்கிக்கிட்டு, டாக்டர்கிட்ட போனா,.. பி12 குறைச்சலா இருக்கு. இங்கிருக்கற பொதுமருத்துவர்கிட்ட நான் அனுப்பினேன்னு சொல்லி, ரிப்போர்ட்டை காமிங்க, மருந்து கொடுப்பார்ன்னு சொல்லி அனுப்பிவெச்சார். பொதுமருத்துவரும் ஊசிபோடணும்ன்னு சொல்லி, எழுதிக்கொடுத்தார். அங்கிருந்த மருந்தகத்துல சிரிஞ்ச் உட்பட வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதுல விட்டமினோட அளவு குறைச்சலா இருக்குதுன்னுட்டு சிஸ்டரையே சரியான மருந்தை வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்பிவெச்சார். மருந்து மட்டும் போதும்.. புதுசிரிஞ்ச் அவங்களே கொடுப்பாங்கன்னு சொன்னதால நான் வாங்கின சிரிஞ்சை திருப்பிக்கொடுத்தேன். ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே :-))
அடுத்து நடந்ததுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம்..
நான் : "மொத்தம் எவ்ளோங்க ஆச்சு??.."
மருந்தாளுனர் : "104 ரூபா ஆச்சுங்க.."
நான் : (குழப்பத்தோட)"சிரிஞ்சோட விலை எட்டு ரூபாயை இதுல கழிச்சுக்கச்சொன்னேனே.. செய்யலையா ?.."
மருந்தாளுனர் : "அட!.. ஆமால்ல. இதோ கழிச்சுடறேன்... ம்ம்ம் ஆங்... இப்போ, 196 ரூபா தரணும் நீங்க.." (இவரு எந்த ஊர்ல கணக்குப்பாடம் படிச்சார்ன்னு தெரியலியே )
ஊசியே போடவேணாம் போங்க.. :-)))). இத்தனைக்கும் அந்த ஆசுத்திரியில எங்கூரு பெரியதலையின் மருமகள் நிர்வாக இயக்குனர்களில் ஒருத்தரா இருக்காங்க. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கிட்ட இவ்ளோ அலட்சியமா நடந்துக்காம அவங்களுக்கு உதவறது, மருத்துவர்களுக்கு மட்டுமான கடமை இல்லைதானே??. அங்கிருக்கறவங்களுக்கும் அந்தக்கடமை உண்டுதானே!!.. அங்கேயுள்ள லட்சணம் ஓரளவு தெரிஞ்சிருந்தும் அங்கே ஏன் போனீங்கன்னு உங்க அடிமனசுல கேள்விகள் வருதுல்ல.. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதில்லையா,.. அதேமாதிரி அங்கேயுள்ள டாக்டர்கள் நல்லபடியாத்தான் சேவை செய்யறாங்க. இந்த பரிவார தேவதைகள்தான் இப்படி :-))
