Sunday, 14 December 2025

சாரல் துளிகள்


அறியாமலே போய்விட்ட கண்ணீருக்கு எங்ஙனம் ஆறுதலளிப்பது? மலராமலே உதிர்ந்து விட்ட மொட்டுகளின் நறுமணத்தை எங்ஙனம் திறப்பது? முகிலுள்ளிருக்கும் மதியை எங்கிருந்தோ நோக்கியிருக்கும் அல்லியின் தவத்தை யாரே கலைக்கவும் கூடும். பிரிந்திருந்தும் முழுமை கொண்டிருப்பவற்றின் பூரணத்துவத்தைப் புரிந்தவர்தான் யார்.

பறவைகளெல்லாம் தனக்காகத்தான் வந்தன என எண்ணி ஏமாந்தது இறுதியில் தானியங்களை இழந்து தனித்து விடப்பட்ட வயல்.

தனது காலில் இடித்துக்கொள்ளாதவரையில், பாதையிலிருக்கும் இடையூறைப்பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. தான் பாதுகாப்பாய் இருக்கும் வரையிலும் இன்னொருவரின் குடையிலிருக்கும் பொத்தல்களைப்பற்றி அக்கறை கொள்வதுமில்லை. அனைவருக்கும் பொதுவாகப்பொழிந்த வெயிலும் மழையும் எல்லை மீறிய ஓர் தினத்தில் கோர்த்துக்கொண்டன அத்தனை கரங்களும், பாகுபாடுகளை மறந்து.

நடக்கும் வழியெங்கும் பூக்கள் மட்டுமே இருக்க வேண்டும், முட்கள் கூடாதென்பது ஆசை. இலைகள் கூட இருக்கக்கூடாதென்பது பேராசை.

அத்தனை ஊசிகளால் தைத்து ஓர் மரகதக்கம்பளத்தைப் போர்த்துகிறது மழை.

எங்கோ ஒரு வனாந்திரத்தின் அந்தகாரத்தில் யாருக்காகவும் அன்றி, தனக்காக மட்டும் பூத்திருக்கும் மலருக்குக் கம்பீர மணம்.

இரையை இறுக்கும் மலைப்பாம்பைப்போல் இவ்வாழ்வை இறுக்கித் திணறச்செய்கின்றது பித்தேறிய மனது. 

பாலைப்பூக்களென கொஞ்சங்கொஞ்சமாய் உதிர்ந்து படியும் நேசத்தால் இளகுகின்றன அன்பின்மையின் இறுகிய சொற்கள்.

சொல்லின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள முயலாமல், மேலோட்டமாகப் பொருள் கொள்வதென்பது, உள்ளிருக்கும் பருப்பின் ருசியை அறிய முற்படாது காயின் தோலை ருசிப்பதாகும். 

சற்றுத் தாமதமாகவே உதிக்குமாறு நிலவிடம் வேண்டிக்கொண்டது குழந்தை. நிலாச்சோறு ஊட்டும் அம்மை இன்னும் வேலையிலிருந்து வரவில்லையாம்.

LinkWithin

Related Posts with Thumbnails