Sunday 23 June 2024

சாரல் துளிகள்..


வானவில்லை வரைந்து முடித்தபின் வண்ணங்குழைத்த தூரிகையைச் சற்றே உதறியது மேகம். வண்ணத்துளிகள் படிந்த சிறகுகளை ஒவ்வொரு பூவிலும் ஒட்ட வைத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள்.

நட்சத்திரங்களை இழந்த வானம் கலங்காதிருக்க, மேகங்கள் மட்டும் ஓரமாய்ப்போய் அழுது விட்டு வருகின்றன.

வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு தன்னியல்பு கழன்று, இறுதியில் நமக்கே நாம் அன்னியராகத் தெரிகிறோம். சிலர்  அதை பக்குவம் என்கின்றனர், சிலர் அனுபவப்பாடம் என்கின்றனர், சிலரோ திக்குத்தெரியாத உலகில் அப்போது, பழைய தன்னைத் தேடி அலைகின்றனர்.

இன்னொருவரின் அடியொற்றிச் செல்வதுதான் எவ்வளவு சௌகரியமாயிருக்கிறது! வழிசமைத்துச் செல்லும் கால்களில் கல்லும் முள்ளும் குத்துவதை மட்டும் பிறர் காண்பதேயில்லை.

ஊரென்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும்? என எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள். எத்திசையில் நகர்வது என குழம்பிக்கொண்டேயிருந்தால் முதல் அடியைக்கூட எடுக்க முடியாது.

நேற்றைய சூரியனின் கதகதப்பில் இன்றைய தானியத்தைக் காய வைக்க முடியாது. காலங்கடந்த பின் ஆற்றாமையைத்தவிர வேறேதும் எஞ்சுவதில்லை.

நினைவுகள் சொட்டி நனைந்த வெளியெங்கும் அரும்பும் மொக்குகளை மலர வைக்க முயல்கிறது அதே பௌர்ணமி இரவு, வெடித்துப்பரவுகின்றன  ஓராயிரம் பௌர்ணமி நிலாக்கள்.

ஒளிந்து பிடித்து விளையாடும் குழந்தையைப்போல் மலைக்குகைகளுக்குள் மறைந்து மறைந்து விளையாடுகிறது ரயில்.

சிங்கத்தின் பிடரியையும் யானையின் மத்தகத்தையும் கூட தொட்டுவிட்டு மீண்டுவிடலாம் போலிருக்கிறது, மழையைத்தின்று வெயிலை அருந்தி எரிமலைச்சரிவில் விளையாடும் இந்த மனதை மீட்டுக்கொண்டு வருவதுதான் பெரும்பாடு.

அவரவர் கால்தடங்களைப்பதித்துச்சென்ற மணல் வெளியில் தன் தடத்தையும் வரைந்து சென்றது அலை.

LinkWithin

Related Posts with Thumbnails