Tuesday, 2 October 2018

வீதிவலம்.. (நெல்லையப்பர் கோவில்)

சிறு கோவிலோ பெரிய கோவிலோ… அதைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் நடந்தே பார்த்து ரசிப்பது பிடித்தமான ஒன்று. கோவிலை வலம் வந்தாற்போலவும் ஆயிற்று, சுற்றியுள்ளவற்றைப் பார்வையிட்டாற்போலவும் ஆயிற்று என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதுவும் அவ்வீதிகள் ரதவீதிகளாக அமைந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ரதவீதிகளுக்கென்றே ஒரு அமைதியான அழகு இருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, தரிசனம் முடித்து வெளியே வந்ததும் ரதவீதிகளில் உலா வந்தோம்.

கீழரத வீதியில் தெற்கு நோக்கி நடக்கும்போது, நெல்லையப்பர் கோவிலின் எதிரிலிருக்கும் உணவகத்தையொட்டினாற் போலிருக்கும் இருட்டுக்கடையை அறியாதவர் இருக்க முடியாது. பகல் முழுவதும் பூட்டிக்கிடக்கும் கடை மாலை ஆறு மணியளவில் திறந்து வெகு விரைவிலேயே மூடிவிடும். அக்குறுகிய கால இடைவெளிக்குள் அல்வாவை வாங்கி விட வேண்டுமென்று பெருங்கூட்டம் காத்துக்கிடக்கும். முன்பு மாதிரி முண்டியடிக்காமல் இப்பொழுதெல்லாம் மக்கள் வரிசையில் நின்று வாங்கிச்செல்ல ஆரம்பித்திருப்பதால் அப்பகுதியில் நெரிசலும் தள்ளுமுள்ளும் குறைந்திருக்கிறது. நல்ல விஷயம்தான். 
 நெல்லை ஜங்க்ஷனிலிருக்கும் லஷ்மி விலாஸ் இனிப்பகம்

ஜங்க்ஷனிலிருக்கும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.
கீழரத வீதியிலேயே இன்னும் சற்று நடந்தால் வலப்பக்கம் சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட் உள்ளது. உள்ளே நுழைந்து கொஞ்சம் உடங்குடிக்கருப்பட்டியும் சின்ன வெங்காயமும் வாங்கிக்கொண்டு முறுக்கு வாசனை அழைத்த வழியில் மேலே நடந்தோம். மூன்றடிக்கு மூன்றடி இருந்த அந்தக் குறுகிய இடத்தில் விறகடுப்பில் கைமுறுக்குகள் வெந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து நடத்தும் கடை அது. வாசனையே பிரமாதமாக இருந்ததால் கொஞ்சம் கைமுறுக்கு வாங்கிக்கொண்டோம். எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு மாறாக சுவையாகவே இருந்தது. அடுத்த தடவை செல்லும்போது இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த மார்க்கெட் வீதியில் பார்க்க ஏதுமில்லாததால் திரும்பி நடந்து ரதவீதிக்கே வந்தோம். 
கோவில் வாசல்.

நெல்லையப்பர் கோவில் ராஜகோபுரம்

கீழ ரத வீதியும் தெற்கு ரதவீதியும் சந்திக்குமிடத்தை வாகையடி முக்கு என அழைக்கிறார்கள். அங்கிருக்கும் வாகைமரத்தின் கீழ் கோவில் கொண்டிருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவளாம். கோவிலின் வெளியே இருந்த கடையில் மும்பையில் பொங்கல் சமயம் மட்டுமே காணக்கிடைக்கும் கருப்பு கரும்பின் ஜூஸ் கிடைத்தது வெயிலுக்கு இதமாக இருந்தது. வாகையடி முக்கிலிருக்கும் லாலா கடை, இனிப்புக்கும் பலகாரங்களுக்கும் பெயர் போனதென்று உள்ளூர் மக்கள் சொல்லக்கேள்வி. அங்கிருந்து தெற்கு ரதவீதியிலேயே சில தப்படிகள் நடந்தால் உள்ளூரில் அல்வாவுக்கிணையாகப் புகழ் பெற்ற “திருப்பாகம்” என்ற இனிப்பு விற்கப்படும் கடையொன்று இருக்கிறது. ஒரு சில மளிகைக்கடைகளைத் தவிர அவ்வீதியில் குறிப்பிட்டுச்சொல்லும்படியாக ஏதும் காணப்படவில்லை. 
வாகையடி முக்கு.

தெற்கு ரதவீதி முடிவடைந்து மேற்கு ரதவீதி ஆரம்பிக்கும் முக்கில் சந்திப்பிள்ளையார் கோவில் இருக்கிறது. இரு வீதிகளும் சந்திக்கும் இடத்தில் கோவில் கொண்டிருப்பதால் அவருக்கு அக்காரணப்பெயர். கோவில் திறந்திருக்கும் சமயமானால் உள்ளே சென்று வணங்கலாம். அவ்வாறில்லையெனில் வெளியில் நின்றே மானசீகமாக வணங்கி தோப்புக்கரணமிட்டு குட்டிக்கொண்டு நகரலாம். எவ்வாறாயினும் அவர் அருள் பாலிப்பார். அவர்தான் கருவறையிலும் இருப்பார், கோபுரத்திலும் இருப்பவராயிற்றே. 
மேலரத வீதியில் சிறிதும் பெரிதுமாக நகைக்கடைகள் அதிகமும் காணப்படுகின்றன. வீதியிலிருந்து பிரிந்து செல்லும் சந்துகளுக்கு சமயப்பெரியவர்களான அப்பர், சுந்தரர் இன்னும் பலரின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. “முடுக்கு” என்று தெற்கத்தி மக்கள் அழைக்கும் சந்துகளில் ஒரு சிலவற்றில் பொற்கொல்லர்களின் கடைகள் இருக்கின்றன. ஒரு சமயம் நெல்லை சென்றிருந்த போது ஒரு நகையை ரிப்பேர் செய்ய வேண்டியிருந்தது. பெரிய கடைகளில் ரிப்பேர் வேலைகளை எடுப்பதில்லை எனக்கூறி, அங்கிருந்த பணியாள் ஒருவர் கை காட்டிய போதுதான் பொற்கொல்லர்களின் பட்டறைகள் அங்கிருப்பதை அறிந்தேன். எதிர்பார்த்ததை விட திருப்தியாகவே செய்து கொடுத்தனர். வீதிவலத்தால் கிடைத்த பலன்களில் இதுவுமொன்று.

இலக்கிய மணம் கமழும் பெயர்களைத்தாங்கியுள்ள மேலரத வீதியில் அமைந்திருந்திருக்கிறது அடுக்கு சுடலைமாடன் கோவில். இக்கோயிலில் அய்யன் சுடலைமாடன் பீடம், 21 படிகள் கொண்டு அடுக்கடுக்காக பிரமிடு  போன்ற அமைப்புடன் உள்ளதால் அடுக்குச்சுடலை என்ற காரணப்பெயர் கொண்டது. இவ்வீதியிலிருந்து உட்செல்லும் சுடலைமாடன் கோவில் தெரு மிக முக்கியமானது. //தமிழகத்தின் முக்கியப் படைப்பாளிகளும் அரசியல் தலைவர்களும் வந்து சென்ற சிறப்புடையது. இத்தெருவில்தான் திரு. தி.க.சி. ஐயா அவர்கள் வசித்து வந்தார். தெருவின் இறுதியில், உயர்ந்த அந்தக் காரை வீட்டின் சந்துக்குள் சென்றால், பெரிய வானவெளி தென்படும். அந்தப் பெரிய வளவினுள் கடைசியாய் இருக்கும் வீட்டில் தி.க.சி ஐயா இருந்தார்.//(வரிகளுக்கு நன்றி நாறும்பூ நாதன் அண்ணாச்சி) அவரது தனயனும் மனதை வருடும் எழுத்துக்குச் சொந்தக்காரருமான வண்ணதாசன் ஐயா, கலாப்ரியா அண்ணாச்சி, போன்றோர் வசித்ததும் இவ்வீதியில்தான். சுடலைமாடன் கோவிலிலிருந்து வடக்கு நோக்கி நடந்தால் சற்றுத்தொலைவில் வரும் வைரமாளிகை உணவகத்தை சுகாவின் எழுத்தில் வாசகர்கள் தரிசித்திருக்கக்கூடும்.
மேலரத வீதியும் வடக்கு ரத வீதியும் சந்திக்கும் முக்கிலிருக்கும் பஸ் ஸ்டாப்பின் எதிரேயிருக்கும் டீக்கடையில் டீ நன்றாக இருக்கும் என்ற அரிய தகவலை இங்கே பதிவு செய்வது அதி முக்கியமானதாகும். இவ்வளவு நேரமும் நடந்த களைப்பைப் போக்க சூடாக டீ அருந்தி விட்டு வலத்தைத் தொடர்வது முக்கியம். ஏனெனில் ஆரெம்கேவி, போத்தீஸ், ராம்ராஜ் போன்ற ஜவுளிக்கடல்களும், சின்னச்சின்ன ஜவுளிக்கடைகளும் ஒரு சில நகைக்கடைகளும் இருக்கும் ஆபத்தான இப்பகுதியைக் கடக்க மிகுந்த மனத்துணிவும் உடற்தெம்பும் தேவை. லிஸ்டும் நாலைந்து கோணிகளும் தேவையான பணமும் கொண்டு வந்தால் ஒரு கல்யாணத்துக்குத் தேவையான நகை, மளிகை, ஜவுளி என எல்லாப்பொருட்களையும் இந்த ஒரு வீதியிலேயே வாங்கி விடலாம். வற்றல் வடகத்துக்கென்று பிரத்தியேகமாக இருந்த கடையில் மோர் மிளகாய், சீனியவரைக்காய் வற்றல், மிதுக்கு வற்றல், பாகற்காய் வற்றல் என ஒவ்வொன்றும் அணி வகுத்திருந்தது என் போன்ற நாக்கிற்கு அடிமையானவர்களுக்கு கண் கொள்ளாக்காட்சி. அங்கிருந்து வாங்கி வந்த மிதுக்கு வற்றல் செம ருசி. ரோஜாக்களுக்குப் போட வாங்கிய கடலைப்பிண்ணாக்கு எங்களுடன் மும்பைக்குப் பயணித்தது. ஆனால், வந்தபின் மழையில் நனைந்து வீணானது தனிக்கதை. ரயிலில் கட்டுச்சோறு கட்டுவதற்கான சில்வர் ஃபாயில் டப்பாக்கள் வற்றல் வடகம் கடையிலேயே கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. ஏனெனில் ஒவ்வொரு சமயம் இதெல்லாம் நெல்லையில் எங்கே கிடைக்கும் எனத்தெரியாமல் தேடியலைந்த சிரமம் எனக்குத்தான் தெரியும். 
ஆரெம்கேவியின் புதிய கிளை வண்ணாரப்பேட்டையில் திறந்தாலும் பழைய கடை இன்னும் இயங்கி வருகிறது. கைராசி உள்ள கடை என அக்கம்பக்கம் கிராமத்தார் இன்னும் இதைத்தான் தேடி வருவதாக முன்பொருமுறை அங்குள்ள பணியாளர் சொன்ன ஞாபகம். அவர்களுக்காக பட்டுப்புடவைப்பிரிவு இங்கும் இயங்குகிறது. அருகிலேயே ராயல் டாக்கீசை இடித்துக்கட்டப்பட்ட போத்தீஸ் கம்பீரமாக நிற்கிறது. டீ மற்றும் சிறுதீனிகள் விற்கும் கடைகள், பூ, பழங்கள் விற்கும் வண்டிகள், கரும்பு ஜூஸ், லொட்டு லொசுக்கு சாதனங்கள் விற்பவர்கள் என எப்பொழுதும் இந்த வீதி ஜே ஜே என இருக்கிறது. சீசன் சமயங்களில் கண்ணாடிப்பெட்டிக்குள் மின்னும் நாவல் பழம் வண்ணதாசன் ஐயாவை நினைவு படுத்தியதென்னவோ உண்மை. போத்தீஸின் எதிரே விற்றுக்கொண்டிருந்த பட்டாணி சுண்டல் சூடும் சுவையுமாக இருந்ததில் மகிழ்ச்சி. ஒரு பொட்டலம் வாங்கிக் கொறித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு எத்தனை நேரமானாலும் நடக்கலாம். மல்லி, பிச்சி போன்ற பூக்களுக்கு அலந்து கிடக்கும் மும்பை வாழ்க்கையில் உழன்ற என் போன்றவர்களுக்கு அவற்றைக் கூடை கூடையாகப் பார்ப்பதிலேயே மனம் நிறைந்து விடும்.
வீதிவலம் இங்கே நிறைவுற்றது
ராயல் டாக்கீஸ் முக்கிலிருந்து வலப்பக்கம் திரும்பி, கீழ ரத வீதிக்குள் நுழைந்தால் ஆண்டி நாடார், வேலாயுதம் நாடார் பாத்திரக்கடல்கள் வரவேற்கின்றன. பித்தளை, எவர்சில்வர் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக்கடைகள். எத்தனை கடைகள் வந்தாலும், ஆண்டி நாடார் கடையின் பித்தளைப்பாத்திரங்களுக்கு இன்றும் மவுசு இருக்கிறது. பட்டாணிக்கடலையைக் கொறித்துக்கொண்டே மெல்ல நடந்து கோவில் வாசலை வந்தடைந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டபின் கோவிலின் எதிரில் மண்டபத்திலிருக்கும் வளையல், சுவாமி அலங்காரப்பொருட்கள் மற்றும் கொலு பொம்மைக்கடைகளைப் பார்வையிட்டு வேண்டியதை வாங்கிக்கொண்டு கூட்டுக்குத் திரும்பினோம். 

இருட்டுக்கடை அல்வா வாங்கவில்லையா? எனக் கவலைப்படும் சமூகத்திற்கு… அதெல்லாம் ஜங்ஷனில் லஷ்மி விலாசிலேயே வாங்கியாயிற்று. லஷ்மியும் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்சும் ஜங்க்ஷனில் எதிரெதிரே இருப்பது எத்தனை வசதியாயிருக்கிறது தெரியுமா?.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான வீதி உலா.

இது போன்ற கோவில் நகரங்களில் இருக்கும் விஷயங்கள் என்றைக்கும் ஸ்வாரஸ்யம். திருவரங்கம் செல்லும்போது இப்படி கேமராவுடன் சென்று படங்கள் எடுப்பது எனக்கும் வழக்கமாக இருக்கிறது!

செந்தமிழ்மூர்த்தி said...

மீண்டும் வரவேற்கிறோம்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

செந்தமிழ் மூர்த்தி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails