Friday, 7 July 2017

சின்னஞ்சிறு மனிதர்கள்.

எத்தனை வயதானாலும் சரி, மனிதன் எப்போதும் தன் நினைவுக்கிடங்கில் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருவது அவனது குழந்தைப்பருவ நினைவுகளாய்த்தானிருக்கும். வளர்ந்தபின் தூக்கம் தொலைத்த இரவுகளில் கள்ளங்கபடமற்ற, சுமைகளற்ற அந்தப் பருவத்தை நினைத்துப் பார்ப்பதும், இயல்பே. "குழந்தையாவே இருந்துருந்தா எவ்ளோ நல்லாருந்துருக்கும்" என்ற பெருமூச்சினூடே நம்முடைய ஏக்கங்களையும் வெளியிட்டுக்கொள்கிறோம்.

உண்மையில் குழந்தைகளிடமும் அந்தந்த வயதுக்குரிய கவலைகளும் ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.  விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை, பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு விட்டாள்(ன்), அப்பா அம்மா குட்டிப்பாப்பாவையே அதிகம் கவனிக்கிறார்கள், நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு பருப்பு, எண்ணெய் எல்லாம் யார் கொண்டு போய் கொடுப்பார்கள், அப்பா வாங்கி வந்த இனிப்பில் தம்பிக்கு, தங்கைக்கு  ஒரு விள்ளல் அதிகம் கிடைத்து விட்டது என்று எத்தனையோ உலகமகாக்கவலைகளால் நாமும்தானே பாதிக்கப்பட்டிருந்தோம். நெல்லிக்காய் கொடுத்து நாம் தாஜா செய்து வைத்திருந்த ஃப்ரெண்டை, கலர் சாக்பீஸ் கொடுத்து தட்டிக்கொண்டு போன எதிரியை நினைத்து எத்தனை நாள் கறுவியிருப்போம். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பிறரறியாமல் நம்மை நறுக்கென்று கிள்ளி வைத்த எதிரியை, இமை தாண்டா நம் கண்ணீர் கண்டு பதறி, சமயம் பார்த்து தலையில் குட்டி பழி வாங்கிய நம் தோழமையை "மை ஃப்ரெண்டு" என்று தோள் சேர்த்து அணைத்திருப்போம். இப்படி நாளொரு கவலை, பொழுதொரு வருத்தம் என்று இருந்திருந்தாலும் நம் எனிமீஸ்களை பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசுடன் மன்னித்து விடும் பெருந்தன்மையும் நமக்கிருந்தது. அதே பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசு நம் எதிரிகளுக்கும் இருந்தது என்பது வேறு விஷயம்.

ஆனால் இன்றைய குழந்தைகளின் நிலையே வேறு. எதற்கெடுத்தாலும் டென்ஷன் டென்ஷன் என்று குழந்தைப்பருவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. அவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்களை அலைக்கழிக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு விடுவார்கள். இந்தச் சின்னஞ்சிறு மனிதனுக்கு இத்தனை பெரிய கவலையா என்று சிரிப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் புரியும். காலை எழுந்தவுடன் படிப்பு,.. பின்பும் படிப்பு, மேலும் படிப்பு என்றே நாளைக்கழிக்க வேண்டியிருக்கிறது. இதை விட்டால் இருக்கவே இருக்கிறது விளையாட்டு. விளையாட்டு என்றவுடன் மைதானத்திலும் தெருவிலும் ஓடியாடி விளையாடுவார்கள் என்று எண்ணிக்கொண்டால் நீங்கள் அந்தக்காலத்து ஆள் என்று அர்த்தம். இருந்த இடத்தை விட்டு இம்மி கூட அசையாமல் கம்ப்யூட்டரில் விளையாடுவார்கள் என்று பதில் சொன்னால் உங்களுக்கு ஒரு சபாஷ் கொடுத்துக்கொள்ளுங்கள்.

மதிப்பெண் போட்டியைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர் நீச்சல் போட்டுப்போட்டு இந்தப்பிஞ்சு உள்ளங்கள் களைத்துத்தான் விடுகின்றன. இப்பொழுதெல்லாம் கோடை விடுமுறைகளையும் விட்டு வைப்பதில்லை. கராத்தே, நீச்சல், டான்ஸ் , ஓவியம், கிரிக்கெட், மியூசிக் என்று ஆயிரத்தெட்டு வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்த்து விட்டு விடுகிறார்கள்.  அதையாவது முறைப்படி முழுப்பயிற்சி கொடுக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. குறுகிய காலப்பயிற்சி என்ற பெயரில் வெறும் இரண்டு மாதம், மூன்று மாதம் போய்வந்து கற்றுக்கொள்ளும் ஓவியம் அல்லது நடனத்தில் என்ன முழுமை இருக்க முடியும்? இசைக்கருவிகளை மீட்ட முழுவதுமாக அறிந்து கொள்ளுமுன் பயிற்சிக்காலம் முடிந்து விடும்.

வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் கற்றுக்கொடுக்கப்பட்ட அந்த ஒரே ஒரு பாடலை அக்குழந்தை வருடமுழுவதும் விருந்தினர் முன் அரங்கேற்றும் பாவம். ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டி கற்றுக்கொள்ள வைத்த அக்குழலும் பியானோவும் நிச்சயமாக பெற்றோருக்கு இனிமைதான். வரும் விருந்தினர்தான் பாவம். பூனை முனகும் ஒலியைக்கூட ஆஹோ ஓஹோவென்று ரசிக்கும் பாவனையில் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியொரு கொடுமைக்கு ஆட்பட்ட அவர் மேலும் சில மாதங்களுக்காவது அப்பக்கம் எட்டிப்பார்க்கத் துணியாரென்பது திண்ணம். இத்தோடு நின்று விடுவதில்லை.. வருடம் முழுக்க கல்விக்கூடங்களுக்குப் போய் வந்த குழந்தைகள் விடுமுறையில் மேல் வகுப்புகளுக்கான  பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார்கள். அங்கேயும் ஹோம் வொர்க் போன்றவை உண்டாம். என் தோழியின் பையன் சொன்னபோது "அடப்பாவமே.." என்றிருந்தது. வளரும் வயதில் குழந்தைகள் எதையும் சீக்கிரம் கிரகித்துக்கொள்வார்கள், இது கற்றுக்கொள்ளும் வயது என்பதெல்லாம் சரிதான். அதற்காக இப்படியா?!!!!!  முன்பெல்லாம் விடுமுறை வந்தால் குழந்தைகள் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி, மற்ற உறவினர்களின் பிள்ளைகளோடு லூட்டியடித்து, பொழியும் வெயிலையெல்லாம் தாங்கள் வாங்கி உடல் கறுத்து வந்தாலும், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், உறவு பேணுதல், பெரியோரை மதித்தல் என நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொண்டு வந்தார்கள். இப்பொழுதோ,. அந்த நல்ல பழக்கங்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் காணக்கிடைக்கின்றன.  

குழந்தைகளுக்குக் கதை சொல்லுதலைப் பற்றி நாம் யோசித்தே ஆக வேண்டும். அப்பொழுதெல்லாம் கதை நேரமாக சாப்பாட்டு நேரம் இருந்தது. பாட்டியின் கதையோடு இரண்டு கவளம் சாதம் கூடுதலாக உள்ளே இறங்கும். இல்லையென்றால் தாத்தா பாட்டியின் மேல் கால், கைகளைப் போட்டுக்கொண்டு 'உம்' கொட்டிக்கொண்டு குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டு விழித்திருக்க, கதை சொன்ன தாத்தா பாட்டிகள் தூங்கி விடும் இரவுகளும் உண்டு. சில சமயங்களில் குழந்தைகளையே கதை சொல்லவும் தூண்டும்பொழுது அவர்களும் நன்றாகக் கதை விடுவார்கள் :-)) இது குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்ப்பதாகவும் இருந்தது. அப்பொழுதெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும் நடக்கும். அதிலும் கூட குழந்தைகளை நல்ல நீதிக்கதைகளைச் சொல்லச்சொல்வது வழக்கம். இதனால் மேடைக்கூச்சமில்லாமல் பத்துப்பேருக்கு முன்னால் பேசவும், தன் கருத்துகளைத் தயங்காமல் எடுத்துரைக்கவும் பயின்றார்கள். பிள்ளைகளும் வளரும்போதே நல்ல பழக்கங்களுடன் வளர்ந்தார்கள். இந்த நீதிபோதனை வகுப்புகளின் அருமையை உணர்ந்ததால்தான் பள்ளிகளில் மறுபடியும் நீதிபோதனை வகுப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. நல்லது கெட்டது சொல்லித்தர, சரியான முறையில் வழி நடத்த ஆளில்லாத நிலையில் நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் வளரும் இளம்பிள்ளைகளுக்கு அத்தகைய வகுப்புகள் அவசியமும் கூட.
வால்: நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழா ஆண்டு மலரில் இடம் பெற்றது.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கட்டுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான பதிவு
இக்காலக் குழந்தைகள் இழக்கிற
பொக்கிஷங்களை நினைத்து
மனம் சிலகணம் விம்மி ஓய்கிறது

ஹுஸைனம்மா said...

அருமை அக்கா....

கீதமஞ்சரி said...

நல்லதொரு அலசல்.. இன்றைய பெற்றோரின் அவசரத்தையும் குழந்தைகளின் அவதியையும் அப்படியே படம்பிடித்துக்காட்டும் கட்டுரை.

LinkWithin

Related Posts with Thumbnails