"சிறகு விரிந்தது"
என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான்.
வாசித்தலென்பது ஒரு சுகானுபவம்.. மழையில் நனைவதைப்போல. அது எழுத்துகளாகவும் இருக்கலாம், வாழ்வியலாகவும் இருக்கலாம், சக மனிதர்களாகவும் இருக்கலாம். அவ்வாறு வாசிக்கப்பட்டவற்றில் சில கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டாலும் சில துளிகள் மட்டும் எப்படியோ விதையாய் விழுந்து முளைத்து வேரோடி கவிதையாய் முளைத்து விடுகின்றன.
கவர்ந்த காட்சிகளையும் எண்ணங்களையும் அடைந்த அனுபவங்களையும் கதை, கவிதை, கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் என்னுடைய வலைப்பூவான “அமைதிச்சாரல்” தளத்திலும், கவிதைகளுக்கெனத் தனியாக “கவிதை நேரம்” என்றொரு வலைப்பூவும் நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே..
ஏன் கவிதைகள்?.. சமூகம் மற்றும் சம மனிதர்கள் மீதான பார்வைகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் பேசவும் கவிதை ஒரு வசதியான வடிகால். பக்கம் பக்கமாகப் பன்னிப்பன்னிச் சொல்வதை விட சில வரிகளிலேயே சுருங்கச்சொல்லி விளங்க வைத்து விடவும் முடிகிறதே.
ஒவ்வொரு கவிதையையும் வெளியிடும்போதெல்லாம் வாசித்துப் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்கள் அனைவரின் ஆதரவே இந்நூல் வெளியாவதற்கு முழு முதற்காரணம். உங்கள் அனைவருக்கும் மற்றும் கவிதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
இது என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு. அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியாகிறது. சென்னையில் எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவில் அகநாழிகைப் பதிப்பகத்தாரின் ஸ்டாலிலும் அகநாழிகை புத்தக உலகத்திலும் கிடைக்கும். அவர்களிடம் போன் மூலமாகவும் ஆர்டர் செய்து வரவழைத்துக்கொள்ளலாம். ஆன்லைன் விவரங்கள் பிறகு பகிர்கிறேன்.
ஸ்டாலுக்குப் போகும் வழி:"இரண்டாவது நுழைவு பாதையான மா.இராசமாணிக்கனார் பாதையின் ஆரம்பத்திலேயே இடது புறம் இரண்டாவது கடையாக இருக்கிறது." என்று வாசுதேவன் குறிப்பிட்டிருக்கிறார்.
அகநாழிகை புத்தக நிலையத்தின் முகவரி:
புத்தகம் எப்படி வெளியாகப்போகிறதோ என்ற கலவையான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், மிகக் குறுகிய கால அளவே இருந்தபோதிலும் சிறந்த முறையில் இக்கவிதைத்தொகுப்பை வெளிக்கொணர்ந்து கைகளில் தவழ விட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தாரையும் திரு. பொன். வாசுதேவன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எனது நன்றிகள். அட்டைப்படத்திலிருப்பது என் காமிராவில் பிடிபட்ட குருவிதான் :-)
தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் அணிந்துரை அளித்து உற்சாகப்படுத்திய "வல்லமை" மின்னிதழின் நிறுவனர் திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கல்லூரிக்காலத்தில் கவிதைப்போட்டியொன்றில் பரிசு பெற்ற “விடிய மறுக்கும் இரவுகள்” என்ற எனது கவிதைதான் முதல் விதையாய் விழுந்து எங்கள் தமிழ்ப்பேராசிரியர் திரு. நடராஜன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் வளர ஆரம்பித்து, வலைப்பூவாய்க் கிளை பரப்பினாலும் கணவரும் குழந்தைகளும் கொடுத்த உற்சாகத்தால்தான் இன்று கவிதைத்தொகுப்பாய் மலர்ந்து நிற்கிறது. கணவரை எப்போதோ பெயரில் கூட்டுச் சேர்த்துக்கொண்டாயிற்று, ஆகவே தூண்டுகோலாய் இருக்கும் எனது குழந்தைகள் பாஸ்கர், சுருதி இருவருக்கும் இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.
இதற்கு மேல் நான் என்ன சொல்ல?.. என் எழுத்துகள் பேசட்டும்.
சிறகு விரித்த என் பயணத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.
14 comments:
வாழ்த்துக்கள் சகோதரி, மேன்மேலும் சிறக்கட்டும் தங்கள் எழுத்துப்பணி.
மகிழ்ச்சி:)! தொகுப்பாக வாசிக்கக் காத்திருக்கிறேன், விரிந்த சிறகுகளுடன் உயர உயரப் பறந்து மேலும் பல சிகரங்கள் தொட நல்வாழ்த்துகள் சாந்தி!
மிக்க மகிழ்ச்சி
வெளியீடுகள் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
VALTHUKKAL
உளங்கனிந்த வாழ்த்து
முதல் புத்தக வெளியீடு என்பது மிகவும் மகிழ்ச்சியான தகவல். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
நூலின் தலைப்பே அருமை.
மேலும் பல நூல்கள் வெற்றிகரமாக வெளியிட என் அன்பான வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
மனமார்ந்த வாழ்த்துகள்......
புத்தகமாக வாசிக்க காத்திருக்கிறேன்....
தொடர்ந்து அசத்த நல்வாழ்த்துக்கள் சாந்தி ! நிச்சயம் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
விரிந்த சிறகு
எழுத்து வானில்
தொடர்ந்து
பறக்கட்டும்
புதுப்புது
நூல்களை
வாரி வழங்கட்டும்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
த.ம.5
என் முதல் புத்தகத்தின் தலைப்பு மட்டுமல்ல, தொடரும் பயணத்திற்கான ஆயத்தமும்தான். //
நன்றாக சொன்னீர்கள்.
தொடரடடும் உங்கள் வெற்றிப்பயணம்.
வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி... மேலும் பல உயரங்களைத் தொட மனமார்ந்த வாழ்த்துகள்...
மிக்க மகிழ்ச்சி. தொடர வாழ்த்துகள்
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
கவிதைத் தொகுப்பை அவசியம் வாங்கிப் படித்து கருத்திடுகிறேன்& உங்களின் நூல் வெளிவர மிக விரும்பியவன் என்ற முறையில். உங்களின் பயணம் தொடர்ந்து மென்மேலும் பல வெற்றிச்சிகரங்களைத் தொட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் சாரல் மேம்! (சென்னை பு.கா. வருவீங்களா? புக்கில ஆட்டோகிராப் வாங்க ஆசை!)
Post a Comment