Friday 8 June 2012

அரசாங்கத் துரோகத்துலேர்ந்து தப்பிச்சேன்..

எங்கூட்டு மரம் ஜனவரியில்.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்ன்னு அரசாங்கமே சொல்லுது. மீறினா அரசாங்கத்துக்குச் செய்யற துரோகமாயிடாதோ.. அதான் நம்மால முடிஞ்ச ஒண்ணை வளர்ப்போம்ன்னு ஆரம்பிச்சிருக்கேன்.

மும்பை வாசம் வாழையிலைச் சாப்பாட்டை மறக்கடிச்ச இத்தனை காலமா, அதை எப்பத்தான் கண்ணுல பார்ப்போம்ன்னு ஏக்கமா இருக்கும். புள்ளையார் சதுர்த்திக் காலம் நெருங்கியதும் மார்க்கெட்ல கண்ணுல தட்டுப்பட ஆரம்பிச்சுரும். ஒரு கட்டுல மூணோ நாலோ இலைகளை வெச்சுக் கட்டியிருப்பாங்க. ஒரே ஒரு இலை வேணும்ன்னாலும் தனியா வாங்கிக்கலாம். அதுக்குத் தனி ரேட்டு. நாஞ்சில் பகுதிகள்ல வாழையிலைக் கட்டுகளை 'பூட்டு'ன்னு சொல்லுவோம். ஒரு பூட்டுல அஞ்சுலேர்ந்து ஆறு இலைகளை வெவ்வேறு அளவுகள்ல வெச்சுக் கட்டியிருப்பாங்க. அதுவும் நல்ல இளம் இலைகளா தளதளன்னு இருக்கும். இங்கே கிடைக்கிறது கொஞ்சம் முத்தல்தான்.. இருந்தாலும் இதுவாவது கிடைக்குதேன்னு திருப்திப் பட்டுக்கிட வேண்டியதுதான்.

நம்மூட்லயே வளர்த்தா எப்ப வேண்ணாலும் இலை பறிச்சுக்கலாமேங்கற பேராசை இருந்தாலும் அபார்ட்மெண்டில் எங்கேயிருந்து அதுக்கு இடம் ஒதுக்கறது?.. பால்கனியில் வளர்க்க முடிஞ்சா நல்லாருக்குமேன்னு இருந்தேன். நம்ம துளசி டீச்சர் வீட்ல தொட்டியில் வளரும் வாழைமரம் பார்த்ததும் ஒரு நம்பிக்கை குருத்து விட்டுச்சு :-)

நர்சரியில் போய்ப் பார்த்தப்ப கட்டை, நெட்டை, செந்துளுவன்னு நாஞ்சில் பகுதியில் செல்லமா அழைக்கப்படும் சிவப்பு வாழை, நேந்திரம்ன்னு நாலஞ்சு வகைகள் இருந்துச்சு. இதுல நெட்டை ஆறடிக்கு மேல வளருமாம். பால்கனியில் வெச்சாத் தாங்காது. கொஞ்சம் பலமா காத்தடிச்சாலே முறிஞ்சுரும். ஆனா நாளப்பின்னே பழம் பறிக்கணும்ன்னா சுலபமா இருக்கும். படிக்கட்டுகளேறி மேல் மாடி வீட்டுக்குப் போயி அங்கேயிருந்து கையை நீட்டுனா, கை மேல் பழம் கிடைச்சுரும். அங்கே உட்கார்ந்து அரட்டையடிச்சுட்டே முழுங்கிட்டு வரலாம். நம்மூட்டு பழக்குலையை கவனமாப் பார்த்துக்கறதுக்காக அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துட்டாப் போச்சு. குட்டை ரகம் அஞ்சடி அளவுல வளரக்கூடியது. நம்ம வீட்டை விட்டுத் தாண்டாது. கஷ்டமோ நட்டமோ இங்கேயே இருந்து அனுபவிச்சுக்கறேன்னு சொல்ற வகை. தொட்டியில் வளரப் போவதால காத்துக்கும் தாங்கும். நமக்கு இதான் சரின்னுட்டு வாழைக்கன்னு, அதுக்கு வேண்டிய ஆர்கானிக் உரம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். செடி வளர்க்கத் தோதா நம்மூட்டு பழைய அரிசி டப்பா ரெடியா இருந்துச்சு.

வாழையை வளர்க்க ஆரம்பிச்சாச்சு. அதுவும் தளதளன்னு வளர ஆரம்பிச்சுருக்கு. வாழைப்பழம் கிடைக்குதோ இல்லியோ இலைக்கு ஆச்சுன்னுதான் வளர்க்க ஆரம்பிச்சுருக்கேன். சின்ன வயசில் தாத்தா வீட்டு வாழைத்தோப்புக்கு போனப்பல்லாம் "தாய்க்கன்னில் எப்பவுமே இலை அறுக்காதே. அது குலை தள்ளுவதை தாமசப்படுத்தும். எப்பவுமே பக்கக்கன்னில்தான் இலையறுக்கணும்"ன்னு சொல்லுவாங்க. அதை அப்படியே கேட்டுக்கிட்டு, பக்கக்கன்னுலதான் இலை நறுக்கிட்டு வந்த ஞாபகம். தொட்டியில் வளரும் வாழைக்கு ஏது பக்கக்கன்னு வரப்போவுதுன்னு கொஞ்சம் கவலையோட இருந்த எனக்கு சின்னதா முளைச்சு வந்துருக்கும் ரெண்டு குட்டிக்கன்னுகள் காட்சி கொடுத்து சந்தோஷப் படுத்தியிருக்கு. ஆனா, தாய்வாழை ஒரு குறிப்பிட்ட அளவு வளர்றவரைக்கும் பக்கக்கன்னுகளையும் நறுக்கி விட்டுரணுமாமே!!. பாவம்தான் குழந்தைகள்..

இங்கே நவி மும்பையில் முதல் தளத்துல இருக்கும் ஒரு வீட்டில் வாழைத்தோட்டமே வெச்சிருக்காங்க. மொதல்ல ஒரே ஒரு கன்னு வெச்சிருந்துருப்பாங்களா இருந்துருக்கும். அப்றம் அது வளர்ந்து வரச்சே பக்கக் கன்னுகள் முளைச்சு கிட்டத்தட்ட ஆறேழு மரங்கள் வளர்ந்து நிக்குது. கூட்டமா இருந்தா அது தோட்டம்தானேன்னு நானா மனசிலாக்கிக்கிட்டேன் :-). சிக்னல்ல நின்னுட்டிருந்தப்ப கார்லேர்ந்து எடுத்ததால மங்கலா இருக்கு, சிரமம் பார்க்காம கொஞ்சம் உத்துப்பார்த்துக்கோங்க ப்ளீஸ்.
வாழைத்தோட்டம்..
வாழையின் அடி முதல் நுனி வரைக்கும் எல்லாப் பாகங்களுமே ஏதாவதொரு வகையில் மனுஷனுக்குப் பயன் படுது. ஆனா, இது உண்மையில் மரம் கிடையாது, புல் வகையைச் சேர்ந்தது :-) இது விதையில்லாமல் வளரக்கூடிய தாவரங்களில் ஒண்ணு. கிழங்கின் துண்டை பூமிக்குள் புதைச்சு வெச்சாப் போதும், வளர ஆரம்பிச்சுரும்.

பூமிக்குள்ளே இருக்கும் பகுதிதான் வாழையின் உண்மையான தண்டுப்பகுதியாம். அப்ப வெளியே நம்ம கண்ணுக்குத்தெரியறது தண்டு இல்லையா?.. அது போலித்தண்டுன்னு சொல்றாங்க. இதுலயுமா அசல் போலின்னு ஆகிப்போச்சு?!!!. தண்டுலேர்ந்து வளர்ற இலையுறைகள் ஒண்ணையொண்ணு மூடிப்பொதிஞ்சு இருக்கறதால அதைப் பார்க்கறப்ப தண்டு மாதிரியான தோற்றம் தருது. இதில் தடிமனா இருக்கும் இலையுறைகளை வாழைமட்டைன்னும், அதையே காஞ்சு போச்சுன்னா வாழைத்தடைன்னும் சொல்லுவோம். கிராமங்கள்ல இந்த வாழைத்தடை ஒரு நல்ல எரிபொருள். மண்ணெண்ணெய் உபயோகப்படுத்த தேவையில்லாமலேயே சட்னு பத்திக்கும். இதைப் பதப்படுத்தி எடுக்கப்படும் நார்லேர்ந்து புடவையும் நெய்யப்படுதாம். வீட்ல வாழைமரம் இருந்தா பூக்கட்டறதுக்கும் அதுலேருந்தே நார் கிழிச்சுக்கலாம். நூல் வெச்சுக்கட்டறப்ப பூக்களோட காம்பு அறுந்து போகற மாதிரி இதுல ஆகாது. பூவும் ரொம்ப நேரம் வாடாம இருக்கும்.

வாழைத்தண்டுச் சாறையோ, பொரியலையோ அடிக்கடி சாப்பிட்டு வந்தா சிறுநீரகக் கற்கள் கரைஞ்சு போயிருமாம். டயாபடீஸ் நோயாளிகளுக்கும் நல்லது. வாழைத்தண்டை நறுக்கறப்ப லேசா நூல் மாதிரி வரும். தண்டை வட்ட வட்டமா நறுக்கறப்ப, ஒவ்வொரு முறையும் டக்ன்னு விரலைச்சுழற்றி அந்த நூலை விரல்ல சுத்தி வெச்சுக்குவாங்க. அப்றம் அதைத் திரியாக்கி விளக்கேத்தவும் பயன்படுத்தறதுண்டு.

வாழைப்பூ உசிலியின் அருமை பெருமைகளை அறியாத நாக்கு உண்டா?.. சுவை நரம்புகள்தான் உண்டா?. அதே மாதிரி வாழைக்காய் பஜ்ஜி பிடிக்காதவங்க இருக்க முடியுமா என்ன?.. பொண்ணு பார்க்கும் வைபவம் அன்னிக்கு இவங்கதானே உண்மையான வி.ஐ.பி :-) அந்த கல்யாணம் திகைஞ்சு வந்து நிச்சயம் செஞ்சுக்கறப்ப கொஞ்சம் மேக்கப் போட்டுக்கிட்டு வந்து, பரிசத்தட்டுல பழமா உக்காந்துருப்பாங்க. தினமும் சாப்பிட்டப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு வாழைப்பழம் சாப்பிட்டா நல்லதாம்.. யாருக்கு?. கடைக்காரருக்கும் நமக்கும் :-))

பொதுவா வாழைப்பூவுல முதல் சீப்புக்காய்கள் வந்த மூணு மாசத்துல முழுக்குலையும் காய்ச்சுத் தயாராகிரும். நல்லாக் காய்ச்சு அப்றம் மரத்துலயே பழுத்த பழத்தோட ருசியே தனி. ஆனா, அது வரைக்கும் விட்டு வெச்சா சந்தைக்கு வந்து வித்து முடியறதுக்குள்ளே எல்லாம் உதிர்ந்து போய் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் நஷ்டமாகிரும்.. தாங்காது. அதனால முக்கால் விளைச்சல் வந்ததுமே வெட்டிருவாங்க. வயல்லேர்ந்து களத்து மேட்டுக்கு ஆட்கள் தலைச்சுமையாக் கொண்டாந்து சேர்ப்பாங்க. வந்து சேரும் ஒவ்வொரு வாழைக்குலையிலும் தண்டுப்பகுதியின் மேலும், விவசாயி ஏதாவதொரு அடையாளத்தோட தயார் செஞ்சு வெச்சுருக்கும் ஒரு இரும்புக்குழாயை வெச்சு ஒரு அழுத்து,.. சக்ன்னு அடையாளக்குறி பதிஞ்சுரும். அது வெட்டிய இடத்துலேர்ந்து வெளியாகும் வாழைச்சாறு கொஞ்ச நேரத்துல காய்ஞ்சதும், அடையாளம்" பளிச்சுன்னு தெரியும். பூக்கள், நட்சத்திரம், அதுவுமில்லைன்னா தன்னோட பெயர்ன்னு ஒவ்வொருத்தரும் ஒரு அடையாளம் வெச்சுருப்பாங்க. சிலர் அந்த இரும்பு அடையாளத்து மேல கருப்புச் சாயம் பூசிட்டு, அப்றமா மார்க் செஞ்சுக்குவாங்க. சந்தையில் வந்து சேர்ந்து விக்கிற வரைக்கும் நம்ம பொருள் பாதுகாப்பாவும் இருக்கும். இதை எழுதிட்டிருக்கும்போது எங்க குடியிருப்பில் விளைஞ்ச வாழைக்காய்களை வீட்டுக்கு ரெவ்வெண்டுன்னு கொடுத்துட்டுப் போனார் செக்யூரிட்டி :-)

முந்தியெல்லாம் வீடுகள்ல விசேஷம் வருதுன்னா சந்தையிலிருந்தோ, தங்களோட சொந்தத் தோட்டத்துலேர்ந்தோ வாழைக்குலையைக் கொண்டாந்து ஊத்தம் போடுவாங்க. அதுல நிறைய முறைகள் இருக்குது. வாழைக்காய்களை ஒரு பானையில் நிரப்பி, பானைக்குள் ஊதுபத்திக்கட்டை ஏத்தி வெச்சுட்டு தட்டு போட்டு நல்லா இறுக்கி மூடிரணும். ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா நல்லாப் பழுத்திருக்கும். இதுவும் ஒரு முறை. ஆனா, இப்பல்லாம் அதுக்கும் பொறுமையில்லாம ரசாயனம் வெச்சுப் பழுக்க வைக்கிறாங்க. சட்ன்னு பார்த்தாத் தெரியாதபடிக்கு ரசாயனப் பொட்டலங்களை வாழைச்சீப்புகளுக்கு உள்ளே மறைச்சு வைக்கிறாங்க. கண்டிப்பா உடலுக்குக் கேடுதான் தரும் இப்படிப்பட்ட வாழைப்பழங்கள்.

வாழைப்பழத்துல பழவகை, காய்வகைன்னு ரெண்டு இருக்காம். சில வகைகள் கறிக்கு நல்லாருக்குமாம். ஆனா பழம் ருசியா இருக்காதாம். இதுகளைக் காய்வகைன்னு சொல்றாங்க. நாஞ்சில் பக்கங்களில் அவியலுக்கு எல்லா வகை வாழைக்காயும் சேர்க்க மாட்டாங்க. பேயன் அல்லது சிங்கன்னு சொல்லப்படும் தனி வகைதான் உபயோகப்படுத்துவோம். பழ வகைகள்ல செந்துளுவனைத் தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புல புது ரத்தமே ஊறும், அவ்வளவு சத்து. அதே மாதிரி ஏத்தம்பழம்ன்னு சொல்லப்படும் நேந்திரம்பழம் காயா எரிசேரியிலும், பழமா 'பழம்பொரி'யிலுமாக ரெண்டு அட்டகாசமான ருசிகளைக்கொடுக்குது.
எங்கூட்டு மரம்.. ஜூனில்..
வாழையிலை நம்மூர்ல சாப்பாட்டுத்தட்டாப் பயன்படுத்தப்படுது. அதுவும் விருந்துச்சாப்பாடுன்னா அது வாழையிலையில்தான் பரிமாறப்படணும்ங்கறது சம்பிரதாயம். அதுல சாப்பிட்டா இருக்கற மணமும் ருசியும் தனியாச்சே. ஊர்லேருந்து வரப்ப கட்டுச்சோறு கொண்டாரதா இருந்தா, வாழையிலையில்தான் வேணும்ன்னு கண்டிப்பாச் சொல்லிருவேன். வாழையிலையில் சாப்பாட்டை அப்படியே வெச்சுக்கட்டாம, இலையைத் தணல்ல லேசா வாட்டிட்டு அப்றம் பேக் செஞ்சா இலையும் கிழியாது, சாப்பாட்டோட ருசியும் இன்னும் அருமையாயிருக்கும். எங்க வீட்லயும் இப்பத்தான் கொஞ்சம் பெரிய இலைகள் வர ஆரம்பிச்சுருக்கு. தளதளன்னு இருக்கறதைப்பார்க்கறப்ப நறுக்க மனசு வர மாட்டேங்குது... இலையப்பம் செஞ்சு சாப்பிடணுங்கற ஆசை வேற மனசுக்குள் அலையடிக்குது..

33 comments:

ராமலக்ஷ்மி said...

அழகா வளர்ந்துட்டிருக்கு. இலையப்பம் சாப்பிட கிளம்பி வர்றோம்:)!

அறியாத பல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

வாழையிலையில் சாப்பிட்டால், சாப்பாட்டிற்கே ஒரு ருசு கூடிடும்....

இன்னிக்கு வீட்டு கீழே இருக்கும் பூங்காவில் போய் ஒரு இலை அறுத்துடவேண்டியது தான்....

உங்க வீட்டு மரம் காய்ச்ச உடனே இங்கே ஒரு சீப் பார்சல்.... :)

இராஜராஜேஸ்வரி said...

வாழைபோல் வாழ்க !
அருமையான வாழைக்கு வாழ்த்துகள் !

தி.தமிழ் இளங்கோ said...

// இங்கே நவி மும்பையில் முதல் தளத்துல இருக்கும் ஒரு வீட்டில் வாழைத்தோட்டமே வெச்சிருக்காங்க. //

நீங்களும் உங்கள் வீட்டு மாடியில் வாழைத் தோட்டம் ஒன்று போட்டு விடுங்கள். சென்னையில் கூட ஒருவர் மாடியில் வீட்டுத் தோட்டம் போட்டு அவரது பேட்டியையும் பத்திரிகையில் போட்டு இருந்தார்கள். கட்டுரை நடை அருமை, எளிமை. வாழ்க வாழையுடன்!

துளசி கோபால் said...

ரொம்ப அழகா வளர்ந்துருக்கு. சுத்திப்போடுங்க. என் கண்ணு பட்டுருக்கும்.

நம்மூட்டு மரத்துக்கு என்னமோ நோய் வந்துருச்சு போல:( இலைகளில் ஓட்டைகள் விழுந்து பரவி ஓரங்களில் காய்ஞ்சு போகுது. 'மனசை திடப்படுத்திக்கிட்டு முளைச்சுச் சுருண்டு வரும் ரெண்டுஇலைகளை விட்டுட்டு மொட்டை அடிச்சுட்டேன். ப்ளே கேர்ள் ஸைன் மாதிரி முயல் காதுகள் ரெண்டு இப்போ!

இனி கடவுள் விட்ட வழின்னு இருக்கேன்.

வாழைத் தகவல்கள் அருமை. பலதும் தெரிந்துகொண்டேன்.

பால்கனி ஓரமா வைக்காம கொஞ்சம் சுவர் பக்கம் வச்சுருங்க. வேகக்காத்து அடிச்சாலும் சமாளிச்சுக்கும்.

அமுதா கிருஷ்ணா said...

ஹை அருமையாய் வளர்ந்திருக்கே.

மாதேவி said...

வாழைத்தோட்ட சொந்தக்காரிக்கு :)) முதலில் வாழ்த்துகள். செழித்து வளர்க.

இங்கு ஒரு இலை 30 ரூபாக்கு வாங்குவோம். கிராமத்தில் வீட்டைச்சுற்றி இருக்கும்போது அருமை புரியலை.

Nithi Clicks said...

வாழையை பற்றிய கட்டுரை அருமை....வாழையைப்பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.....படங்களும் அருமை....வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் வாழைமரத்திற்க்கும்

ஹேமா said...

வாழைமரம்கூடத் தொட்டித்தாவரமாப்போச்சு.உங்க வாழைமரம் அழகா வளர்ந்திருந்தாலும் கவலையாவும் இருக்கு சாரல்.வாழ்த்துகள் இன்னும் குட்டிகள் போட !

CS. Mohan Kumar said...

Vaazhai arumai. Miga Magizhchi.

pudugaithendral said...

பயணத்துக்கு போகும் போது வாழைச்சறுகுல சாப்பாடு சுத்தி எடுத்து போவது, வாழைப்பூ மடலில் சுடச்சுட ரசம் போட்டு சாப்பிடுவதுன்னு கொசுவத்தி சுத்து. :))

வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

வாழைத் தகவல்கள் அருமை,

பால கணேஷ் said...

வாழை மரங்களைப் பாக்கவே அழகா இருக்கு. அதைவிட வாழையைப் பற்றிய பல புதுத் தகவல்களை உஙக மூலமாத் தெரிஞ்சுக்கிட்டேன். அருமை. தோட்டம் பல்கிப் பெருக என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

உங்க வீட்டு வாழை, வாழையடி வாழையாக வாழ வாழ்த்துகள்!! :-))))

//இலையைத் தணல்ல லேசா வாட்டிட்டு அப்றம் பேக் செஞ்சா இலையும் கிழியாது/

புது டிப்.

மோகன்ஜி said...

வாழை பற்றி சுவையான பதிவு இது. வாழை மென்மைக்கு அடையாளம். ராத்திரி கேட்ட பாடல் மீண்டும் நினைவிலாடுது.

தாழையாம் பூ முடிச்சு
தடம் பார்த்து நடை நடந்து
வாழையிலை போல் வந்த பொன்னம்மா..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?

வீட்டுக்கு வந்தா வாழையிலைல விருந்து வைப்பீங்க தானே?

T.N.Elangovan said...

இந்தப் பதிவைப் பார்த்தவுடன் மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களில்(?) வரும் கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.

"மண்ணில் கால் பதித்து,
மாநிலத்தில் வேரோடி,
வீசும் புயற்காற்றை விழும் வரைக்கும்
நின்றெதிர்ப்பேன்.
என் கன்றெதிர்க்கும்.
என் கன்றுக்கு கன்றெதிர்க்கும்"

வாழ்த்துக்கள் வாழைத்தோட்டம் உருவா(க்)க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ஆஹா!!.. இலையப்பம் சாப்பிட எப்போ வரீங்க :-)
வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ஒண்ணென்ன?.. ரெண்டு சீப்பு தாராளமா அனுப்பி வைக்கிறேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இளங்கோ,

ஆமா,.. அந்தப் பேட்டியை நானும் வாசிச்ச நினைவு இருக்கு. வாழை, கொய்யான்னு பழ வகைகளோட, காய்கறிகள் கீரைகள்ன்னு கலக்கலா இருந்துச்சு தோட்டம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

உங்கூட்டு வாழையும் பொழைச்சு நல்லா வளரும் பாருங்களேன்..

சுவர் பக்கம் வைக்கலாம்ன்னா கண்ணாடிச் சுவராப்போச்சே. அதை வேற திறந்துட்டுத்தான் பால்கனிக்கும் போகணும். இன்னும் கொஞ்சம் உசரமா வளந்தப்புறம் நகர்த்தி வைக்கலாம்ன்னு இருக்கேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

நன்றிங்க. உங்கூட்டுலயும் தோட்டம் நல்லா செழிச்சப்புறம் எங்க கூட பகிர்ந்துக்கோங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கூகிள்சிறி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

என்னாது??... 30 ரூபாய்க்கு வாழையிலையா.. இது ரொம்பவே டென் மச்சா இருக்குதே. இங்கேயும் சீசன் இல்லாத சமயங்கள்ல ஏழெட்டு ரூபாய்க்கு ஒரு இலை கிடைக்குதுங்க. என்ன இருந்தாலும் ஊர்ல மலிவாக் கிடைக்கற மாதிரி ஆகுமா...

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நித்தி,

ரொம்ப நன்றிங்க வாழ்த்துகளுக்கும் வாசிச்சதுக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

கடல் மாதிரியான தனி வீட்ல வாழ்ந்த மனுஷனே இப்ப புறாக்கூட்டு அறைகள்ல வசிக்கற காலத்துல தோட்டத்துல வளர்ற வாழை தொட்டித்தாவரமானதுல ஆச்சரியமென்ன. போன்ஸாய் ஆகாம இருந்தாச் சரி :-)

உங்க அக்கறைக்கு மிக்க நன்றி ஹேம்ஸ்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் குமார்,

மிக்க நன்றிங்க,. வாசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

வாழைப்பூ மடல்ல சுடச்சுட ரசம் சாப்பிட நான் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கணும் போலிருக்கே. பூ வரட்டும் வெச்சுக்கறேன் :-))

வாசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காஞ்சனா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

மிக்க நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இந்த டிப்பு நம்மூர்ல எல்லோரும் கடைப்பிடிக்கறதுதான். நாங்க ரெயில்ல மும்பை திரும்பி வர்றப்ப கட்டுச்சோறு இப்படித்தான் கட்டுவோம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் அண்ணா,

//மென்மைக்கு அடையாளம்//

ஆமாம்.. ஒரு காத்துக்கே தாங்காதுதான்.

விருந்து கண்டிப்பா உண்டு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இளங்கோவன்,

அருமையான கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails