Tuesday, 8 February 2011

அட்சிங்கு..



 நண்பனுடன் லயித்துப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு உருவம் தொம்மென்று முன்னால் வந்து குதித்ததும் திடுக்கிட்டுத்தான் போனான் காசிநாதன். அனிச்சையாக டக்கென்று ஓரடி பின்னால் நகர்ந்து, நண்பனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு ஏறிட்டபோது,  ஈயென்று இளித்துக்கொண்டு முன்னால் நின்றான் அந்தப்பையன்....

"பாத்துடே.. குத்தாலத்து கொரங்குக மாதிரில்லா குதிக்கே.." என்று அதட்டவும் இன்னும் பெரிதாகப் பற்களைக் காட்டி, "ஹெ..ஹெ.." என்று இளித்தபடி, கைகளை முன்னால் நீட்டி இல்லாத ஹேண்டில்பாரை பிடித்திருப்பதுபோல் பாவனை செய்துகொண்டு..'பிர்ர்ர்..பிர்ர்.பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று சத்தமெழுப்பியபடி ஓடத்தயாரானான்.

"எடே.. போறதுக்கு முன்னால அண்ணனுக்கு ஒரு சல்யூட்ட கொடுத்துட்டு போடே.."

சட்டென்று விறைப்பானவன், நெற்றியில் கை வைத்துக்கொண்டு.. வலது காலை உயர்த்தி, தரையில் ஓங்கியறைந்து 'அட்சிங்கு' என்று கத்தியபடி சல்யூட் அடித்தபின் தன்னுடைய வண்டியை கிளப்பிக்கொண்டு ஓடியே விட்டான்.

மேடையில்லா நாடகம்போல் நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காசி, "யாருடே அது?.." என்று கேட்டான் நடையைத் தொடர்ந்து கொண்டே.

"அவனா.. இங்கனதாம் சும்மா சுத்திக்கிட்டிருப்பான். யாரு, எவருன்னெல்லாம் ஒரு விவரமும் எங்களுக்கு தெரியாது. ஒரு நாளு இங்கன நின்னுக்கிட்டு அளுதுட்டுருந்தான்.  பயலுக்கு தமிழு தெரியாது போலிருக்கு. நம்ம பக்கத்து ஆளுக மாதிரியும் தெரியல. விசாரிச்சா அவனுக்குப் பதில் சொல்லத் தெரியல.. எந்த மொழியில விசாரிக்கிறதுன்னு எங்களுக்கும் புரியல. போலீசுக்கும் சொன்னோம்.. அவங்க கூட போக மாட்டேன்னுட்டான். சரி.. இங்கியே கெடந்துட்டுப் போட்டும்ன்னு விட்டுட்டோம்.."

"யாருமேவா தேடி வரல.. "

"ம்ஹூம்.. அப்பாம்மா கூட கன்னியாகுமரி வந்தவன் வழி தப்பியிருப்பாம்ன்னு செலபேரு சொல்லுதாங்க.. வீட்டை விட்டு ஓடியாந்திருப்பாம்ன்னு செலபேரு சொல்லுதாங்க.. யாருக்கு தெரியுது.."

"பாத்தா பத்துப்பன்னெண்டு வயசிருக்கும் போலிருக்கே. பள்ளிக்கூடத்துக்கு போகாமயா இருந்திருப்பான். இங்கிலீசுலயாவது கேட்ருக்கலாமுல்ல.."

"என்னத்த கேக்குறது!!.. வரும்போதே பயலுக்கு கொஞ்சம் மண்டைக்கு வழி கெடையாது.."

"அப்டீன்னா!!.."..

"வட்டுன்னு இந்த ஊர்ல சொல்லுவோம். டாக்டர்கள கேட்டா, மனநிலை பாதிக்கப்பட்டவன்னு சொல்லுவாங்க. அவனை பாத்தேயில்ல.."

ஆனால், அந்த கோணல் சிரிப்பையும்,..'அட்சிங்கு' என்று சத்தமிட்டபடி வைக்கும் சல்யூட்டையும் தவிர அவனுக்கும், இந்தியாவின் ஏழைக் கிராமத்துச் சிறுவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை. வெயிலிலும் மழையிலும் அலைந்து கருத்த தேகம், ஒன்றிரண்டு கிழிசல்களுடன் கூடிய அழுக்கான உடைகள் இதெல்லாம் பொதுச்சொத்தல்லவா..

"நீயும் அவனை மாதிரி இந்த ஏரியாவுக்குப் புதுசுதானே.. போகப்போக ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் நல்லாத் தெரிஞ்சிக்கிடுவீங்க.."என்று நக்கலடித்த கதிரேசனைத்தொடர்ந்து அறைக்கு சென்றான்.

பின்னிரவின் அமைதியில், தூக்கம் வராமல் பல நினைவுகளுடன் புரண்டு கொண்டிருந்தபோது, அந்தப்பையனையும் தன்னையும் ஒப்பிட்டு நண்பன் சொன்னது காசிக்கு நினைவுக்கு வந்தது. 'வாஸ்தவம்தான்.. ரெண்டு பேருக்கும் குடும்பத்துடன் சம்பந்தம் கிடையாது. கிடைத்த இடத்தில் ஒண்டிக்கொண்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு உயிர் வாழ்கிறோம். ஆனால், அவன் வீட்டை விட்டு வந்திருக்கிறான். நான் சித்தியின் மறைமுக உத்தரவின் பேரில், எங்களிடையேயான பூசலை சமாளிக்க முடியாமல் அப்பாவால் விரட்டப்.. தப்பு.. தப்பு.. அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன்..' நினைத்துக்கொண்டு தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

ஆனால், சித்தியின் 'அன்பில்' திளைக்கும் பாக்கியம் கிடைக்கப்பெறாதவன் ஆகையால், 'அட்சிங்கு' பத்திரகாளியம்மன் கோயிலின் முன்திண்ணையை தன்னுடைய அரண்மனையாக அமைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பகலெல்லாம் எங்கே சுற்றினாலும் இரவில் தன்னுடைய சப்ரமஞ்சத்துக்கு வந்து விடுவான். அந்த ஏரியா மக்கள்.. குறிப்பாக பெண்கள்.. சாட்சாத் அன்னபூரணிகள். அவன் வயிறு வாட விடுவதேயில்லை.

அவனைப்பார்க்கும்போதெல்லாம், தனிக்குடித்தனம் போன,.. வேலை நிமித்தம் வெளியூரிலோ வெளிநாட்டிலோ பிரிந்து வாழும், மற்றும் இளமையிலேயே பறி கொடுக்க நேர்ந்த பிள்ளைகளின் நினைப்பு சில தாய்மாரை இம்சிக்கும். 'என்பிள்ளையும் இப்படித்தானே ஆதரவில்லாம பசியோட பட்டினியோட வெளியூர்ல கஷ்டப்படும்'.. என்ற நினைப்பில் பெற்ற வயிறுகள் பிசையும்.

அவனை சல்யூட் போட வைப்பதில் குஞ்சுகுளுவான்கள் முதல் வயசானவர்கள் வரைக்கும் அலாதி பிரியம். 'டேய்.. சிங்கு' என்று குரல் வந்தால் போதும்... அங்கேயே நின்று கொண்டு..'அட்சிங்கு' என்று கத்தியபடி சல்யூட் வைத்து விட்டுத்தான் நகர்வான்.அவனுக்கும்.. அந்த மனசிலும் ஒரு பொருள் மேல் பிரியம் இருக்கத்தான் செய்தது. தோசையைக்கண்டால் பயல் உயிரையே விட்டு விடுவான். வேறு என்ன கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்.

இதில்தான் ஒரு கூத்தாகி விட்டது. வடக்குத்தெரு நாகராஜன் தன்னுடைய பிள்ளையின் முதல் பிறந்தநாளின் போது, பாவம் என்று பரிதாபப்பட்டு.. அட்சிங்கை வெளிவாசலில் இருந்த 'படுப்பிணை' என்று பேச்சு வழக்கில் மாறிவிட்ட படுப்புத்திண்ணையில் உட்கார வைத்து வாழையிலையில் சோறு போட்டான்.

எல்லாப் பதார்த்தங்களும் பரிமாறி முடிக்கும் வரை வட்டச்சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், கடைசியில் வாழையிலையை ரெண்டு கைகளாலும் சுருட்டிப்பிடித்து, அனைவரும் பதைபதைக்கும்படி சாக்கடையில் எறிந்தான். "டே..டே.. என்ன வேலை பாத்தே!!.. சோத்தை ஓடையிலயா கொட்டுதே.." என்றபடி அடிக்கப்பாய்ந்த நாகராஜனைத் தடுக்க நாலுபேர் வேண்டியிருந்தது. "அட்சிங்கு..அட்சிங்கு.." என்று கத்தியபடி கைகால்களை உதைத்துக்கொண்டு, சிறுபிள்ளை போல இன்னும் சத்தமாக அழுதான் பயல். "இவேன் கூறுவாடு தெரிஞ்சும் சோத்தைப்போடுதீங்களே.. டே,  இந்தா.." என்றபடி காலையில் மீந்த ரெண்டு தோசைகளைக் கொண்டு வந்து ஒரு கரம் நீட்ட, பிடுங்கிக்கொண்டு ஓடினான். வேறெங்கே போவான்!! தன்னுடைய அரண்மனைக்குத்தான்...

தன்னையும் பயலையும் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதாலேயோ என்னவோ!!.. காசிக்கு, அவனையறியாமலேயே சிங்கின்மேல் ஒரு இனம்புரியாத பற்று இருந்தது.  பரீட்சை முடிந்ததும் தற்காலிகமாக 'கலெக்டர்' வேலையையும் தேடிக்கொண்டான்... பில் கலெக்டர் உத்தியோகம்!!. அதனாலென்ன??.. கடைகளில் அவனைப்பார்த்ததும் கலெக்டர் வர்றாருன்னுதானே சொல்லுறாங்க. வேலையிடத்துக்கும், தங்குமிடத்துக்கும் பயணம் செய்வது கஷ்டமாக இருந்ததால், பக்கத்திலேயே ஒரு ரூம் பார்த்துப் போய்விட்டான். அதன்பின் வேலைப்பளுவும், புதிதாய்ச் சேர்ந்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ளும் அவசியமும் சேர்ந்து கொள்ள.. இந்தப்பக்கம் வருவது குறைந்து, கடைசியில் நின்றே போய் விட்டது.

 ஆறேழு மாதங்களுக்குப்பின் ஒரு நாள்,.. கதிரேசனைப் பார்த்து வரலாமென்று கிளம்பிய காசிநாதன், ஏனோ திடீரென்று தோன்றியதில், ஒரு சட்டையும் வாங்கிக் கொண்டான். கதிரேசனின் வீடு மிகவும் மாறியிருந்தது. இன்னொரு அறையையும் வாடகைக்கு விட்டிருந்தார்கள்.. 'ஆச்சிக்க அடியந்திரத்துக்கு வராம இருந்திட்டியே மக்கா' என்று குறைபட்ட அவனது அம்மாவிடம், 'இல்லம்மா.. கொஞ்சம் சோலியிருந்தது' என்று மழுப்ப.. 'என்னவோப்பா!!.. வந்து போயி இருக்காண்டாமா!!..' என்றபடி மிக்சர்தட்டை வைத்து விட்டு நகர்ந்து விட்டார்கள். விடுபட்ட கதைகளையெல்லாம் பேசி முடித்தபின், "இந்தச் சட்டையை அட்சிங்குட்ட குடுத்திடறியா?.." என்று நீட்டினான். "அட்சிங்கா..அவன் என்ன ஆனானோ!! யாருக்குத் தெரியும்" என்று சற்று அலட்சியமாகக் கதிரேசன் சொல்லவும், "என்னடா சொல்றே.." என்றான்.

"ஓ.. ஒனக்கு தெரியாதுல்லா!!.., போனமாசம் ஒரு நாள் வலுத்த மழை பெஞ்சுச்சுல்லா.. அப்ப பத்ரகாளிம்மன் கோயிலு செவுரு இடிஞ்சி, திண்ணைல படுத்திருந்த அட்சிங்கு மேல விழுந்துடிச்சி. பயலுக்க அவயம் கேட்டு, ரெண்டொருபேரு ஓடிப்போயி பாத்துருக்காங்க. நல்ல அடி பாத்துக்கோ..  யாரு பெத்த பிள்ளையோ!! பாத்துட்டு சும்ம இருக்கமுடியுதா?.. ஒடனே சர்க்கார் ஆஸ்பத்திரிக்கி தூக்கிட்டுப்போயி போட்டோம். இத்த செவுருன்னதால சின்னக் காயங்களோட போச்சு. ஆனா, நல்ல ஊமையடி பாத்துக்கோ. பின்னே, டாக்டர் தெரிஞ்ச பயன்னதால, நல்ல ஒபகாரம் செஞ்சாரு பாத்துக்கோ. கெட்டுப்போட்டு, ஒரு நாளைக்கு அங்கனயே தங்க வெச்சு அனுப்பிடலாம்ன்னு சொல்லிட்டாரு. சின்னப்பையன்லா.. கொஞ்சம் கெவனமாப் பாத்துக்கிடுங்கன்னு சொல்லிட்டு வந்தோம்.

மறுநாளைக்குக் காலைல ஊசி போடப் போனவரு, ஆளைக்காணாம.. வார்டு, ஆஸ்பத்திரில மூலைமுடுக்குன்னு எல்லாம் தேடிப்பாத்துட்டு, எங்க கிட்ட சொல்லிட்டாரு. பய இங்கன வந்துருப்பாம்ன்னு நாங்களும் ரெண்டு நாளு பொறுத்துப்பாத்தோம். ஆளு அட்ரசையே காணோம். எங்கன போனானோ.. " எனவும் ஆயிரம் மின்சார ஊசிகள் உடம்பில் பாய்ந்தது போல் இருந்தது அவனுக்கு.

"இதுகளுக்கெல்லாம் ஏது நிரந்தர இடம்.. மனுசனோட ஆன்மாவை மாதிரிதான்.. இதுகளும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கூடு. இன்னிக்கிருந்த இடம் நாளைக்கில்லை.." என்று வெற்றிலையுடன் வார்த்தைகளையும் சேர்த்து துப்பினார் வீட்டுக்கார தாத்தா. எங்கேயோ கேட்ட உபன்யாசத்தை கூர் தீட்டிக்கொள்ள இன்றைக்கு என்னுடைய கழுத்துதான் கெடைச்சிருக்கு போலிருக்கு என்று எண்ணிக் கொண்டு எழுந்தான். ரூமுக்குத் திரும்பிப் போகும் போது ஆற்றுப்பாலத்தின் மீது ஆட்டோ போய்க்கொண்டிருந்தபோது ஏனோ நிறுத்தச்சொன்னான். சுவரின் பக்கமாகச் சாய்ந்து நின்று கொண்டு சுழித்தோடும் நதியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். கவரிலிருந்து சட்டையை வெளியே எடுத்து, ஒரு நிமிஷம் அதில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். பின் ஒரு பெருமூச்சுடன் சட்டையைத் தண்ணீரில் விட்டெறிந்தான்.. நீரின் ஓட்டத்தில் அது அடித்துச்செல்லப்படுவதைச், சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு.. ஏனோ சத்தமாய் அழத்தோன்றியது..

55 comments:

எல் கே said...

அட்சிங்க்க்கு ஒரு சல்யூட் . வட்டார மொழில கலக்கல்

R. Gopi said...

நல்லா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

மனசை அப்பிடியே பிழிய வச்சிட்டீங்களே மக்கா.....

பா.ராஜாராம் said...

அமைதிச் சாரல், ரொம்ப நல்லாருக்கு!

எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள் இப்படி அட்சிங்குகள், அரிக்கிட்டுகள், ஊரை விட்டு நகர்ந்து, ஊர் வந்து இலவச ட்ரை சைக்கிள் பெற்று 'ராசாண்ணே' மூர்த்திண்ணே, மதிண்ணே' என பெயரோடு அண்ணே போட்டுக் கோண்டு மண்ணோடும் மனசோடும் தங்கிப் போய் விடுகிறார்கள்.

எவ்வளவு காலம் கழித்து போனாலும் மறக்காமல் அண்ணேனுடன் பெயரை கோர்த்துக் கொள்கிறார்கள். 'வெறும் அண்ணே போதுமேடா' என பார்வையாலேயே இறைஞ்ச வேண்டியதாகிறது, அழைத்தவனின் பெயர் மறந்து போய்விட்ட நமக்கு.

அழத்தோன்றினாலும், சிரித்தே நகர்கிறோம்.

என்னை என் அறிக்கிட்டுவிடம் சேர்த்தீர்கள். நன்றி அமைதிச்சாரல்!

Prathap Kumar S. said...

அட... இன்னொரு நாஞ்சில் நாடன்...:)

கதைபடிக்கும்போது நாஞ்சிலின் இடலாக்குடி ராசா கதை ஞாபகம் வந்துச்சு... சுட்டதுன்னு சொல்லலை... அந்த கதைக்களம் மற்றும் நம்முரு வட்டாரமொழி அதுமாதிரி இருந்துச்சு. அந்த கதையை இங்க படிச்சுப்பாருங்க நல்லாருக்கும். நாஞ்சில் நாஞ்சில்தான்....

http://nanjilnadan.wordpress.com/2010/10/27/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/

உங்க கதையும் சூப்பர்...:))

Chitra said...

மனதை கனக்க வைக்கும் கதை.

Prabu M said...

அத்தனை கதைகளிலும், நிஜத்திலும் அட்சிங்குகளின் முடிவு இந்த ரகத்தில்தான் அமைய முடியும்... ஆனாலும் ஒரு நிஜ அட்சிங்குவைப் படைத்து... வட்டார வழக்கில் கண்முன்னே ஒவ்வொரு மனிதரையும் ரத்தமும் சதையுமாக உருவப்படுத்த முடிந்தது... நல்ல கதை... கால் ஊன்றமுடிந்த குளத்தில் கழுத்தளவுத் தண்ணீரில் நடந்துகடந்த உணர்வுன்னு சொல்லலாம்.... ஆழம் நீளம் அகலம் எதுவுமே கூடாமல் குறையாமல் அழகா கொடுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள் :)

ஹேமா said...

சாரல்...வாசிக்கும்போது உங்கள் எழுத்தின் பின்னால் மனம் நெகிழ்ந்து கரைந்து வருகிறது !

Philosophy Prabhakaran said...

இந்தக்கதையை எழுதிய உங்களுக்கு எனது அட்சிங்கு...

Vidhya Chandrasekaran said...

ரொம்ப நல்லாருக்கு...

குறையொன்றுமில்லை. said...

அருமையான நெகிழ்ச்சியான கதை. உங்களுக்கு ஒரு ராயல் அட்சிங்கு.

ஹுஸைனம்மா said...

வட்டார வழக்குல கதை நல்லாருக்கு.

'பரிவை' சே.குமார் said...

மனதை கனக்க வைக்கும் கதை. ரொம்ப நல்லாருக்கு.

ராமலக்ஷ்மி said...

நம்ம பக்க வட்டார வழக்கினை அப்படியெ அழகாகக் கொண்டு வந்துள்ளீர்கள், எழுத்து நடையில் காட்சி கண்முன் விரியும் வண்ணமாக. நெகிழ்வான நல்ல கதை சாரல். வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

கதை அருமை சாரல்,அட்சிங்கு கதாபாத்திரப் படைப்பு மனதை தொட்டது.பாபநாசம் பக்கம் விகே புரத்தில் எங்களுக்கு ஒரு நண்பர் அவர் பேச்சு தான் நினைவு வந்தது.மொழி நடை அருமை சாரல்.

Pranavam Ravikumar said...

அருமையான கதை!

ADHI VENKAT said...

வட்டார வழக்குல உருக்கமான கதை நல்லா இருக்கு.

Menaga Sathia said...

கதையும்,எழுத்து நடையும் கலக்கல்..

வெங்கட் நாகராஜ் said...

மனதை கனக்க வைக்கும் கதை.

டக்கால்டி said...

Arumaiyaa irukkunga..

மாதேவி said...

நெகிழ்சியான கதை.

நானானி said...

நல்லாத்தாம்ல இருக்கு கத.
நம்மூரு ஆத்தங்கரையில நின்னு பேச்சு கேட்டாப்லதானிருக்கு.

ஆன கடசில மனசு வலிக்கி.

Anisha Yunus said...

arumaiyana kathai. unga uru bashaiyum kalakkal. paavamaa irukku antha paiyanai niaccaa... ithu nijamillaiye?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க... மனதை தொடும் வண்ணம் இருக்குங்க...

இந்த மாதிரி நிறைய கேரக்டர்...இருப்பாங்க. போல இருக்கு.. எனக்கும் பழைய ஞாபகம் ஒன்று வருதுங்க..

பகிர்வுக்கு நன்றி..

Ahamed irshad said...

Good Post..

வல்லிசிம்ஹன் said...

தொலைந்த ஆத்மாக்களுக்கு ஆறுதல் கிடைக்கட்டும். உருக வைத்துவிட்டீர்கள் சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

இணையத்தொடர்பு சரியில்லாதனால உடனே பதிலளிக்க முடியலை. அனைவரும் மன்னிக்கவும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

சல்யூட்டுக்கு அட்சிங் சார்பா நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபி,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில் மனோ,

ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பா.ரா அண்ணா,

ரொம்ப நாளுக்கப்புறம் உங்க வருகை..


//அழத்தோன்றினாலும், சிரித்தே நகர்கிறோம்//

எவ்ளோ அழகா சொல்லிட்டீங்க.. யாரையாச்சும் பார்க்கிறப்ப, இவங்களைப்பெத்தவங்க மனசு என்ன பாடுபட்டுருக்கும்ன்னுதான் தோணுது.பகீர்ன்னு இருக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

இடலாக்குடி ராசா மறக்கமுடியாத நபராகிட்டாரு.

ரெண்டுபேரும் வெவ்வேறு ஆட்கள்ப்பா. நம்மூரு நடையில் இருந்ததால் ஒரேமாதிரி தோணுது :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரபு,

அழகான விமர்சனத்துக்கு ரொம்ப நன்றிப்பா :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

அருமையான ஊட்டத்துக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரபாகரன்,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்.

கதையை ரசித்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரவிகுமார்,

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வானதி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க டக்கால்டி,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

அன்றாடம் இதுமாதிரி நிறைய சந்திக்கிறோமே :-(

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு,

நாஞ்சில் நாட்டு மொழிநடை உங்களுக்கு பிடிச்சிருக்குதா.. ரொம்ப சந்தோஷம்.

பெயரைத்தவிர மற்ற அனைத்தும் நிஜமில்லீங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

//இந்த மாதிரி நிறைய கேரக்டர்...இருப்பாங்க. போல இருக்கு//

நிச்சயமா,.. தனக்கான தனியுலகில் எப்பவும் சஞ்சாரிச்சுக்கிட்டு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

தொலைஞ்சவங்களை பார்க்கிறப்ப தொலைச்சவங்களோட நிலையும் கூடவே வந்து மனக்கண்முன்னால் நிக்குது :-(

கோமதி அரசு said...

பின் ஒரு பெருமூச்சுடன் சட்டையைத் தண்ணீரில் விட்டெறிந்தான்.. நீரின் ஓட்டத்தில் அது அடித்துச்செல்லப்படுவதைச், சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு.. ஏனோ சத்தமாய் அழத்தோன்றியது..//

கதை பெருமூச்சையும் கண்களில் நீரையும் வரவழைத்தது.

இமா க்றிஸ் said...

கதை மனதைத் தொட்டது. 'அருமை' என்பதற்கும் மேல்... உங்கள் எழுத்துநடை.
வட்டாரவழக்கும் ரசிக்கும்படி இருந்தது.
பார்ராட்டுக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails