Tuesday, 15 February 2011

டிட்வாலா பிள்ளையார்..

பெரியவரை பார்த்து ரொம்ப காலமாச்சு.. போய்ப்பார்க்கணும்ன்னு நெனைச்சாலும் கடமைகள் காலைக்கட்டிப்போட்டு வெச்சுருக்குதே. முந்தியெல்லாம் நினைச்சுக்கிட்டா ஒடனே பாத்துட்டு வந்துதான் அடுத்த வேலை. இப்போ முடியறதில்லை.. ரொம்ப நாளா சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருந்தோம். பெண் தன்னோட அசைன்மெண்டுக்காக கோயில்களையும், பெண்ணின் தோழி மும்பையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களையும் பத்தி மாதிரிவலைத்தளங்கள் தயாரிக்கிறாங்க. இதுக்கு பெரியவரோட ஊர் ரொம்ப பொருத்தமாச்சே... அங்கே கூட்டிட்டு போனா என்ன??.. களையெடுத்தமாதிரியும் இருக்கும் , அப்படியே மச்சினனுக்கு பொண்ணு பாத்தமாதிரியும் இருக்கும்ன்னு நம்ம தரிசனத்தையும் நடத்திக்கலாம்.ஒரே கல்லுல மூணு மாங்கா :-)))

சன்னிதிக்கு போறதுக்கு முன்னாடியே போட்டோவடிவில் தரிசனம் :-)
பெரியவர் இருக்குறது 'டிட்வாலா'ன்னு ஒரு ஊர்ல. இது மஹாராஷ்ட்ராவில் கல்யாணுக்கு பக்கத்துலதான் இருக்கு. கல்யாணிலிருந்து 'முர்பாட்'க்கு போறபாதையில் இடதுபுறம் ஒரு கிளைச்சாலை பிரிஞ்சு போகும். அதுலே சுமார் ஏழுகிலோமீட்டர் போனா 'டிட்வாலா' வந்துடும். இங்கேதான் நம்ம பெரியவர்.. அதாவது பிள்ளையார், கோயில் கொண்டிருக்கார்.
கோயிலின் பின்புறத்தோற்றம்.
மும்பையிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தூரத்துல இந்தக்கோயில் இருக்குது. இங்கே மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ்லேர்ந்து அஸன்காவ், கஸாரா போகும் ரயில்கள் மூலமாவும் வரலாம். டிட்வாலா ஸ்டேஷனிலிருந்து கோயிலுக்கு குதிரைவண்டிகளும் ஆட்டோரிக்ஷாக்களும் சவாரி வருது.
இது கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட ஏரியான்னாலும், வளர்ச்சிப்பணிகளெல்லாம் இன்னும் முழுசா வந்தடையலை. சுத்துமுத்தும் பக்காவான கிராமங்கள்தான்.. ஒண்ணு ரெண்டு டாபாக்களைத்தவிர நல்லதா ரெஸ்டாரண்டுகள் எதுவும் கிடையாது. கோயிலுக்கு எதிர்த்தாப்ல சுமாரா ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குது. டீ+வடாபாவ் பரவாயில்லாம கிடைக்கும். முன்னெல்லாம் கரும்புஜூஸ் கடைகள் நிறைய இருக்கும். இப்போ எதையும் காணலை..

இந்தக்கோயில் இதிகாசக்காலங்களுக்கு முற்பட்டதுன்னு சொல்றாங்க. முன்னொரு காலத்துல தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியா இந்த ஊரு இருந்திச்சாம். ஆரண்யம்ன்னா காடுன்னு அர்த்தம். அந்தக்காலங்கள்ல யாரோட தொந்தரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை வேணும்ன்னா முனிவர்களெல்லாம் காட்டுக்கு போயிடறது வழக்கம். அப்படித்தான் கண்வ மகரிஷியும் ஒரு குடில் அமைச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தார். அப்பதான் விஸ்வாவும், மேனகாவும் தங்களுக்கு வேண்டாம்ன்னு நெனைச்சு தூக்கிப்போட்ட 'சகுந்தலை' அவருக்கு கிடைச்சாள். (தொட்டில் குழந்தை திட்டத்துக்கு முதல் பங்களிப்பு??). அவளை தன்னோட பெண்ணாவே வளத்துக்கிட்டு வர்றார். அதுக்கப்புறம் சகுந்தலையும் துஷ்யந்தனும் காந்தர்வ மணம் செஞ்சுக்கிட்டதும், துர்வாசரின் சாபம் காரணமா அவன் அவளை மறந்து ஏற்றுக்கொள்ள மறுத்ததும் வரலாறு.

இப்படியாகிப்போச்சேன்னு வருத்தத்துல சகுந்தலை இருந்தப்பதான், கண்வ மகரிஷி, ' பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டி அவரை வழிபடு.. உன்னோட எல்லா கவலைகளையும் அவர் தீர்த்து வைப்பார்'ன்னு மகளுக்கு ஆறுதல் சொன்னார். அவளும் அதேமாதிரி வழிபட்டு வந்திருக்கா. காலப்போக்குல சாபவிமோசனம் கிடச்சு, துஷ்யந்தனுக்கு மனைவி, பிள்ளையின் ஞாபகம் வந்து உடனே தேடி வந்துட்டான். அப்புறம் அதே பிள்ளையார சாட்சியா வெச்சு.. மறுபடியும் முறைப்படி கல்யாணம் செஞ்சு, தன்னோட நாட்டுக்கு கூட்டிப்போனான். முன்னொரு காலத்துல 'பரதன்' என்ற மன்னன் அரசாண்டதாலதான் நம்ம நாட்டுக்கு பாரதம்ன்னு பேரு வந்துச்சுன்னு சொல்றாங்களே.. அந்த பரதன் வேற யாருமில்ல. இவங்களோட பிள்ளைதான். இந்த பரதனோட வழித்தோன்றல்கள்தான் நம்ம பாண்டவாஸ்+கௌரவாஸ்..

சகுந்தலை வழிபட்டு வந்த பிள்ளையார் கோயில் காலப்போக்குல அழிஞ்சு மண்மூடி அங்கே ஒரு குளமும் உருவாகிடுச்சு. ரொம்ப காலத்துக்கப்புறம், அதாவது முதலாம் மாதவ்ராவ் பேஷ்வா என்கிற குறுநிலமன்னர் அந்தப்பகுதியை ஆட்சி செய்யும்போது, நாட்டுல உண்டான தண்ணீர்ப்பஞ்சத்தை போக்க இந்தக்குளத்தை தூர்வாரியிருக்காங்க. குளத்துலேர்ந்து தண்ணீர் வந்துச்சோ இல்லியோ, பழைய கோயிலின் இடிபாடுகள் வந்துருக்கு. கூடவே பிள்ளையாரும் வந்துருக்கார். அவருக்கு ஒரு கோயிலை, முதலாம் மாதவ்ராவ் பேஷ்வாவும், அவரது தளபதியான ராமச்சந்திர மெஹந்தலேயும் கட்டியிருக்காங்க. குளத்தோட வேலைகள் நடந்துட்டிருந்தப்பவே இதிகாசக்காலத்து பிள்ளையார் மறுபடியும் காணாம போயிட்டார்ன்னும், இப்ப இருக்கிற பிள்ளையார், பேஷ்வா பிரதிஷ்டை செஞ்சதுன்னும் இன்னொரு கருத்தும் நிலவுது.

இந்தக்கோயிலும் காலப்போக்குல சிதைஞ்சுடவே, 1965-66ல் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகி இப்ப இருக்கிற கோயில் கட்டப்பட்டிருக்கு. ரெண்டுவருஷம் முன்னாடிதான் கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கோயிலை இன்னும் விரிவாக்கியிருக்கு. கோயிலோட பின்புறம் பாசிபிடிச்சுப்போய் பாழடைஞ்சு கிடந்த குளத்தையும் சரிசெஞ்சு , படகுச்சவாரியெல்லாம் நடக்குது. குளத்துக்குப்பக்கத்துலயே வண்டிகளை நிறுத்தவும், காலணிகளை பாதுகாக்கவும் வசதி செஞ்சிருக்காங்க. அங்கங்க முளைச்சுக்கிடந்த பூஜைப்பொருள் விக்கிற கடைகளையும் ஒரு கட்டிடத்துக்குள்ள ஒழுங்குபடுத்தியிருக்காங்க.
பழைய நுழைவாயில்.
புதிய நுழைவாயில். கார் பார்க்கிங்கும் இங்கேயே இருக்குது.
குழாய்த்தண்ணீரில் கால்களை சுத்தம் செஞ்சுக்கிட்டு கோயிலுக்குள் நுழைஞ்சோம். கூட்டமில்லாத நேரம் அதனால வரிசையில் நிற்க தேவையில்லாம, நேரடியா கருவறைக்கே போயிட்டோம். (வடக்கே, ரொம்பவே கூட்டமாயிருக்கும் சில கோயில்களைத்தவிர, மற்றகோயில்களில் கருவறைக்குள் நாமே விக்கிரகத்துக்கு பூஜை செய்யலாம்). இடுப்பளவு உசரத்துல ஒரு மேடை. அதுல ஜம்ன்னு ஒக்காந்துட்டிருக்கார். பெரியவர்.செந்தூரம் பூசிய திருவுருவம். சிம்பிளான அலங்காரத்தில் அழகா இருக்கார். இதுவே சதுர்த்தி, சதுர்த்தசி, அங்காரக சதுர்த்தி தினங்கள்ன்னா அலங்காரமும் கூட்டமும் அமளிதுமளிப்படும். 

நாம கொடுக்கற பூஜைத்தட்டிலிருக்கும் தேங்காய், மாலை, இத்யாதிகளை அதுக்குன்னு வெச்சிருக்கும் பாத்திரங்களில் போட்டுட்டு, அதுலேர்ந்தே கொஞ்சத்தை எடுத்து பிரசாதமா தர்றாங்க. மறுபடியும் தரிசிக்கணும்ன்னா, வெளிப்பக்கம் வந்து கர்ப்பக்கிரகத்தின் எதிரே இருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்துக்கலாம். கூட்டமில்லாத நாட்களில் கருவறையிலும் சிலபேர் உக்காந்துப்பாங்க. கருவறைக்கு எதிரே இருக்கற மண்டபத்துல ரெண்டுபக்கமும் மாடிக்கு படிக்கட்டுகள் போகுது. மேலேறிப்போனா, அங்கிருந்தும் கம்பிஜன்னல் வழியா மூலவரை தரிசிக்கலாம். 

வெளியே கோயிலுக்கு இடதுபக்கத்துலயே சின்னதா ஸ்டால் ஒண்ணு இருக்குது. புத்தகங்கள், பிள்ளையார் பொம்மைகள், விக்கிரகங்கள், பூஜைப்பாத்திரங்கள் இப்படி எல்லாமும் இருக்கு. விலைதான் ஆகாயத்துல நிக்குது.. வெளியே கடைகள்ல கிடைக்கிறதைவிட நாலுமடங்கு விலை.  கோயிலுக்கு முன்புறம் சின்னதா ஸ்தூபி ஒண்ணு இருக்குது. அகல் ஏத்திவெச்சுக்கறமாதிரி சின்னச்சின்னதா மாடங்கள்... பண்டிகைக்காலங்கள், பூஜைசமயங்களில் விளக்கேத்திவெச்சா அவ்வளவு அழகா இருக்கும்.
பக்கத்துலேயே சின்ன கிணறு ஒண்ணு இருக்குது. அதுல வழக்கம்போல பூக்கள், மாலைகள்ன்னு மிதக்கும் குப்பைகள். ரொம்ப வருஷமாவே இப்படித்தான்... சுத்தப்படுத்தி வெச்சாலும் நம்ம மக்கள் விட்டுவைக்கணுமே!! அதுல கிடக்கும் ரெண்டு ஆமைகளை வேடிக்கை பாத்துக்கிட்டு பசங்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்க. இப்ப புதுசா ஒரு சம்பிரதாயம் ஆரம்பிச்சிருக்காங்க.. என்னவா??.. கிணத்துக்குள்ள காசை விட்டெறியறதுதான். ஏன்?னு கேட்டா, 'எல்லோரும் செய்யறாங்க.. நாங்களும் செய்யறோம்'ன்னு பதில்வருது :-)))
கோயில் தினமும், காலைல அஞ்சுலேர்ந்து இரவு ஒன்பதுமணிவரைக்கும் தரிசனத்துக்காக திறந்திருக்கும். சங்கடஹர சதுர்த்தி தினங்களில், காலை நாலுமணிலேர்ந்து இரவு பதினொரு மணிவரையிலும், அங்காரக சதுர்த்தி தினங்களில் இருபத்து நாலுமணி நேரமும் திறந்திருக்கும். (அதாவது,திங்கள் இரவு பன்னிரண்டுமணிலேர்ந்து செவ்வாய் இரவு பன்னிரண்டு மணிவரைக்கும்) இதுக்கிடையில், மதியம் ஒருமணிலேர்ந்து ரெண்டுமணிவரைக்கும், அப்புறம் சாயந்திரம் ஆரத்திக்கான ஏற்பாடுகளுக்காக ஆறுலேர்ந்து ஆறேமுக்கால்வரைக்கும் நடை சாத்தியிருக்கும். பொதுவாவே கோயில்களின் தரிசன நேரங்களை தெரிஞ்சிக்கிட்டுப்போனா, ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

23 comments:

sakthistudycentre-கருன் said...

யாத்திரை அருமை...

sakthistudycentre-கருன் said...

கோயிலைப் பற்றிய தகவலுக்கு நன்றி...
ரொம்ப நாளா தேடிகிட்டிருக்கிற ஒரு தகவல் நண்பரே...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

லேபிள் ஆங்கிலத்துலயும் போடுங்க சர்ச் பண்றவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

Chitra said...

சுத்தப்படுத்தி வெச்சாலும் நம்ம மக்கள் விட்டுவைக்கணுமே!!

.... :-(

Chitra said...

nice photos....

... well-written. Thank you.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல புகைப்படங்களுடன் அருமையான தகவல் பகிர்வு. மிக்க நன்றி.

ஹேமா said...

ஆன்மீகப் பயணமும் அதை எங்களோடு பகிர்தலும் நன்று சாரல் !

நசரேயன் said...

//கார் பார்க்கிங்கும் இங்கேயே இருக்குது//

நீங்க கார் வைத்து இருக்கீங்கன்னு நம்புறேன்

அமைதிச்சாரல் said...

வாங்க சக்தி,

மஹாராஷ்ட்ர மக்களுக்கு பிள்ளையார் இஷ்டதெய்வம். அதுவும் இது மும்பைக்கு பக்கத்துல இருக்கறதுனால, அடிக்கடி போறதுண்டு..

அமைதிச்சாரல் said...

வாங்க ஷங்கர்,

ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்ததுக்கு நன்றி :-)

தகவல்களுக்கு ஆங்கிலம்,இந்தி,மராட்டியிலயும் நெறைய தளங்கள் இருக்குது. அதான் இங்கே தமிழ்ல மட்டும்..

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

முன்னெல்லாம் மாசத்துக்கொருக்கா போவோம். முதல்தடவை சுத்தமா இருக்குமிடம் அடுத்ததடவை அடையாளமே மாறிப்போயிருக்கும். அசுத்தமா இருந்தாத்தான் ஒரு அன்னியோன்னியம் மக்களுக்கு வருதோ என்னவோ :-))

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

பார்க்கவேண்டிய கோயில்ப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

மிக்க நன்றி ஹேமா :-)

அமைதிச்சாரல் said...

வாங்க நசரேயன்,

கற்பூரபுத்திப்பா உங்களுக்கு. உங்க நம்பிக்கை வீண்போகலை :-))))))))

கோவை2தில்லி said...

புகைப்படங்களுடன் கூடிய கோயிலை பற்றிய அழகான தகவல்கள். சந்தர்ப்பம் எப்போது கிடைக்குதோ பார்க்கலாம்.

raji said...

புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் அருமை
பகிர்வுக்கு நன்றி

மாதேவி said...

ஒரே கல்லில் பலமாங்காய் எங்களுக்கும் கிடைத்தது :) தர்சனம்.

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

நிச்சயமா கூடிய சீக்கிரம் சந்தர்ப்பம் கிடைக்கணும்ன்னு வாழ்த்திக்கிறேன். கிடைச்சா விட்டுடாதீங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

வருகைக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

நன்றிங்க..

எல் கே said...

பெரியவரை நான் கடத்தி விட்டேன். காஞ்சிபுரத்தில் ஒரு இடத்தில செங்கல அடுக்கி இருந்தது கேட்டா எல்லாரும் பண்றாங்க நானும் பண்றேன்னு பதில் வந்தது. எல்லா ஊரிலும் இப்படிதானா ??

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

சில ஊர்கள்ல பிரார்த்தனையா அப்படி செய்வதுண்டுன்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன்.உதாரணமா.. சொந்தவீடு இத்யாதி.

இது ரெண்டுவருஷம் முன்னாடி போயிருந்தப்ப கூட பார்க்கலை. இப்பத்தான் புதுசா.. பிரார்த்தனைக்கு காரணம் இனிமேத்தான் கண்டுபிடிப்பாங்களோ என்னவோ :-))))

கோமதி அரசு said...

இப்ப புதுசா ஒரு சம்பிரதாயம் ஆரம்பிச்சிருக்காங்க.. என்னவா??.. கிணத்துக்குள்ள காசை விட்டெறியறதுதான். ஏன்?னு கேட்டா, 'எல்லோரும் செய்யறாங்க.. நாங்களும் செய்யறோம்'ன்னு பதில்வருது :-)))//

திருநாகேஸ்வரத்தில் ஒரு கிணத்தை குபேர கிணறு இதில் காசு போட்டால் லட்சுமியின் அருள் பார்வை கிடைக்கும் என்று போட சொல்கிறது கோவில் நிர்வாகம். பாதிகிணறு நிரம்பிக் கிடக்கிறது.
மக்களின் ஆசைகளை காசு ஆக்குகிறது கோவில் நிர்வாகம்.

வைத்தீஸ்வரன் கோவில் ஜாடாயூ குண்டத்தில் காசு போடுங்கள் என்று கேட்டு வாங்குகிறது கோவில் நிர்வாகம்.

அமெரிக்காவிலும் தண்ணீர் உள்ள இடங்களில் காசு போடுவது வழக்கமாய் இருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails