Saturday 17 December 2011

கலர்ஃபுல் மாசம் கொண்டு வரப் போகுது பரிசு..


மார்கழி பொறந்தாச்சு..தெனமும் வாசல்ல புள்ளியை வெச்சு ரெண்டு கம்பியை இழுத்துட்டு நானும் கோலம் போட்டேன்னு பெயர் பண்ணிட்டு வர்றவங்க கூட இந்த மாசம் முழுசும் தெனமும் என்னென்ன புதுப்புது வகையில கோலம் போடலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க.

கோலங்கள் நம்ம மக்களோட வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடிக்கு இழையோடுது.. கோலங்கள் சீரியலைச் சொல்லலை. நிஜமான கோலத்தைச் சொல்றேன். இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பகுதியிலயும் அவங்கவங்க வழக்கப்படிக் கோலம் போடறாங்க. தமிழ் நாடுன்னா புள்ளி வெச்ச, வைக்காத இழைக்கோலங்கள், கேரளான்னா அத்தப்பூக்கோலம் அப்றம் வட மாநிலங்கள்ன்னா ரங்கோலின்னு ஒவ்வொரு பகுதியோட பேரைச் சொல்றப்பவும் அந்தப் பகுதிக்குண்டான கோலங்களும் சேர்ந்தேதானே ஞாபகம் வருது.
அத்தப்பூக்களம்ன்னு சொல்லணுமா என்ன :-)
கேரளாவோட பூக்கோலத்துக்கு வடக்கே ரொம்பவே வரவேற்பு. அலுவலகங்கள்லயோ அல்லது பள்ளிக் கூடங்கள்லயோ ஒரு விழா நடந்தா பூக்கோலம் போட்டு அசத்தறாங்க. ரங்க்ஸோட ஆப்பீஸ்ல எப்ப புதுவருசக் கொண்டாட்டம் நடந்தாலும், அத்தப்பூக்கோலம் போட்டு நடுவுல நம்மூட்டு வெளக்கை ஏத்தி வெச்சு முக்கியமான அதிகாரிகள் அஞ்சு பேரை வெளக்கேத்தி வைக்கச் சொல்றது வழக்கம். ஒருக்கா ஆரம்பிச்சு வெச்சது இங்க உள்ளவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி அப்றம் வருசா வருசம் மத்த பிரிவுகள்ல இருக்கறவங்களும் அதே மாதிரி காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம தென்னிந்திய இழைக்கோலங்களை இங்கே இருக்கறவங்க ரொம்பவே அதிசயிச்சுப் பார்ப்பாங்க. அதெப்படி விரல் நடுங்காம அவ்ளோ தெளிவா கோடுகள் வருதுன்னு அவங்களுக்கு அதிசயம். இங்கேயும் புள்ளிக் கோலங்கள் போடறதுண்டு. என்ன செய்வாங்கன்னா, வேணுங்கற அளவுல சதுரமா ப்ரவுன் பேப்பர் ஒண்ணை வெட்டியெடுத்துக்குவாங்க. அதுல ஸ்கேல் வெச்சு அளவெடுத்து புள்ளிகளை வைப்பாங்க. அப்றம் அந்தப் புள்ளிகள் மேல துளையிட்டுக்குவாங்க. ச்சார்ட் ரெடி. செம்மண் பூசிக் காய விட்டு தயாரா வெச்சிருக்கற இடத்துல இந்தப் பேப்பரை வெச்சுட்டு அந்தத் துளைகள்ல கோலமாவை ஒவ்வொரு சிட்டிகையா வைப்பாங்க. அம்புட்டுத்தேன். அப்றம் பேப்பரை எடுத்துட்டு ரெண்டு ரெண்டு புள்ளியா இணைச்சு கோலம் போடுவாங்க. இதுக்காகவே தீவாளி சமயங்கள்ல பேப்பர்+கோலமாவு+கலர்ப்பொடி பாக்கெட்டுகள் அடங்கிய ‘கோலம் கிட்’ ஒண்ணு மார்க்கெட்டுகள்ல கிடைக்கும்.

நம்மூர்ல விசேஷங்களுக்கு பச்சரிசி மாவால கோலம் போடுறது சம்பிரதாயம். வாசல்ல போடற கோலங்கள் வீட்டுக்குள்ள துர்சக்திகள் நுழையாதபடிக்கு காவல் காக்குதுங்கறது ஐதீகம். வீட்டுக்குள்ள நுழையப் பார்க்கற சக்திகள் அந்த இழைகள்ல மாட்டிக்குமோ என்னவோ.. ஆனா, அமாவாசையன்னிக்கு மட்டும் கோலம் போடாம விட்டு வைக்கிறது வழக்கமாம். ஏன்னா பித்ருக்கள் வீட்டுக்குள்ள வரணுமேன்னு சொல்லுவாங்க. கேள்விப் பட்டது ரைட்டா இல்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அதேமாதிரி நல்ல விசேஷங்கள் நடக்கறப்ப போடறதுக்குன்னு தனி வகைகளும் ‘அல்ல’ விஷயங்கள் நடக்கறப்ப இன்னொரு வகைகளும் இருக்காம். நல்ல விசேஷங்கள் நடந்தா கண்டிப்பா ரெட்டை இழைக்கோலம்தான் போடறது வழக்கம்.
சன்ஸ்கார் பாரதிக்கோலம்
நம்மூர் இழைக்கோலங்கள் அப்றம் அத்தப்பூக்கோலம் மாதிரியே இங்கே ‘சன்ஸ்கார் பாரதி’ங்கற கோல வகை ரொம்பவே பிரசித்தம்.இதுவும் கிட்டத்தட்ட நம்மூர் இழைக்கோலம்தான். இந்தக் கோலம் போடப் புறப்படறதே ஒரு போருக்கு புறப்படற மாதிரி இருக்கும். கோலமாவு அடங்கிய பொட்டலங்கள், நாலஞ்சு அளவுகள்ல சாய் வடிகட்டிகள், ரெண்டு மூணு சல்லடைகள், மண்ணெண்ணெய் ஊத்துற புனல் அப்றம் நீளமான நூல்ல கட்டிய சாக்பீஸ்ன்னு ஏராளமான உருப்படிகளோட கிளம்புவாங்க.

நூல்ல கட்டிய சாக்பீஸை எடுத்துக்கிட்டு கோலம் போடத் தேர்ந்தெடுத்த இடத்துல நூலோட நுனியை தரையோட அழுத்திப் பிடிச்சுக்குவாங்க. இன்னொருத்தர் அடுத்த நுனியில் இருக்கற சாக்பீஸை வெச்சு உக்காந்திருக்கறவரைச் சுத்தி பிரதட்சிணம் வந்து அளவா அழகா ஒரு வட்டம் போட்டுக்குவாங்க. இது நம்ம கணக்குப் பாடத்துல உபயோகப்படுத்தற காம்பஸை அடிப்படையாக் கொண்டதுன்னு கொள்க. இதான் அடிப்படை.இனிமே டிசைனைப் பொறுத்து அங்கங்க அரை வட்டங்களும் வளையங்களும் பூக்களோட டிசைன்களும் வரையப்படும். அப்றம் ஒவ்வொரு பகுதியா கலர்ப்பொடி கொண்டு நிரப்புவாங்க. பெரிய பகுதிகளுக்கு சல்லடையும் சின்ன பகுதிகளுக்கு டீ வடிகட்டிகளும் உபயோகப் படுத்துவாங்க. கலர்ப்பொடியை நிரப்பி லேசா தட்டிக்கிட்டே இருந்தா அழகா எல்லா இடங்கள்லயும் ஒண்ணு போல கலர் நிரம்பும்.இப்டி மொதல்ல கலரை நிரப்பினப்புறம் வெள்ளைக் கோலமாவை புனல்ல எடுத்துக்கிட்டு அங்கங்க இழைகளால அலங்கரிப்பாங்க.

ரொம்பவே  எக்ஸ்பர்ட்டுகளுக்கு புனல் தேவைப்படறதில்லை. அப்றம் எப்படிக் கோலம் போடுவாங்க?.. சொல்றேன். சின்னக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டறப்ப அஞ்சு விரல்களையும் எப்படிக் குவிச்சு வெச்சிருப்பீங்க?.. ஆங்.. அதேதான். கை நிறைய அள்ளிய கோலமாவை குவிச்சு வெச்ச விரலிடுக்கு வழியா வழிய விடுங்க.. ஜூப்பர். இப்ப நீங்களும் சன்ஸ்கார் பாரதி எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்க.
அரிசியில் கலர் கொடுத்துப் போட்ட கோலம்

உப்புடன் கலர் கலந்து போட்ட கோலம்

தண்ணிக்குள்ள கோலம்

ஹை.. நம்மூருக் கோலம்
இது போக நீர்மேல் கோலம், தண்ணிக்குள்ள கோலம், காய்கறிக் கோலம், உப்பு, அரிசி, தானியங்களால போட்ட கோலம்ன்னு வகை வகையா இருக்கு. ஆயிரம்தான் இருந்தாலும் பசுஞ்சாணியைக் கரைச்சுத் தெளிச்சு, தூசு தும்பு போகப் பெருக்கிய மொசைக் மாதிரியான மண்தரையில் வெள்ளை வெளேர்னு மினுங்கற கோலத்துக்கு ஈடு இணையாகுமா?.. வெள்ளிச் சரிகையிட்ட பச்சைப் பட்டுப்புடவை மாதிரி அட.. அட.. அட..என்னவொரு அழகு. விடிகாலைல எழுந்து கோலம் போடுறதுங்கறது உடலுக்கும் மூளைக்கும் நல்லதொரு பயிற்சியாச்சே. கவனமா எண்ணி புள்ளி வெச்சு அதெல்லாத்தையும் இணைச்சு அழகான கோலமாக்குறதுங்கறது லேசுப்பட்ட காரியமா என்ன!!

கலர்ப்பொடிகள் அப்பல்லாம் தீவாளி, பொங்கல் சமயங்கள்ல மட்டுந்தான் யாவாரத்துக்கு வரும். அது கிடைக்காத சமயங்கள்ல எல்லாம் குங்குமம், மஞ்சப்பொடி, அப்றம் பச்சைக் கலருக்கு இலைகளை அரைச்செடுத்த சாறு, நீலக்கலருக்கு சொட்டு நீலம் இல்லைன்னா பேனாவுக்கு ஊத்தற இங்க்ன்னு வெரைட்டி காட்டுவோம்..ஈரமான கோலமாவுல இந்தக் கலர்கள் ஈஸியா கலந்துடும். அப்றம் ஒரு வாணலியில இந்த மாவைப் போட்டு லேசா வறுத்துக்கிட்டே இருந்தா நல்லாக் காய்ஞ்சு அழகா கலந்து வந்துடும். வாணலியை வீணாக்கியதுக்காக வாங்கிய திட்டெல்லாம் கோலத்தோட அழகுக்காக வாங்கிய பாராட்டுகள்ல மறந்தே போயிடும்.

இப்பல்லாம் கோலம் போடுற கலை கொஞ்சம் கொஞ்சமா அருகிக்கிட்டே வருது. ஒரு காலத்துல அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகளும் கோலம் போட ஆசையா கத்துக்கிட்டாங்க. இப்பல்லாம் எதுக்கும் டைம் இல்லைன்னு ஓடிடுதுங்க.ஏதோ பண்டிகை சமயங்கள்லயாவது கோலம் போட ஹெல்ப் செய்யுதுங்களேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். அதுவுமில்லாம இருக்கற அவசர யுகத்துல காலைலயும் சாயந்திரமும் வாசத்தெளிச்சு கோலம்போட யாருக்கு நேரமிருக்கு?.. அதனால ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிடறாங்க. அதுவும் அடுக்கு மாடிக்குடியிருப்புன்னா கேக்கவே வேணாம். நம்மூட்டு ஸ்டிக்கர்ல பாதியை பக்கத்தூட்டு ஸ்டிக்கர் மறைச்சுட்டு இருக்கும்.

இவ்ளோ அழகான கலையை அழிய விடலாமா?.. அதனாலதான் உதயம் இன் மற்றும் தமிழ் நண்பர்கள் இணைய தளங்கள் சேர்ந்து ஒரு போட்டியை அறிவிச்சுருக்காங்க. உங்களுக்காக வல்லமையில் வெளியான அறிவிப்பு இதோ. உதயத்தோட தளத்துலயும் அறிவிச்சுருக்காங்க. விதிமுறைகளும் அங்கேயே இருக்குது. ஜனவரி 10 போட்டிக்கான கோலங்களை அனுப்பறதுக்கான  கடைசி நாளு. கலர்ஃபுல்லானதொரு போட்டியில் கலந்துக்கிட்டு கலக்குங்க.. பரிசெல்லாமும் கூட அறிவிச்சுருக்காங்க. ஜமாய்ங்க.

வெற்றி பெற வாழ்த்துகள்.

டிஸ்கி 1: படங்களெல்லாம் இணையத்தில் சுட்டவை.

டிஸ்கி2: வல்லமையில் பொங்கல் மலருக்காக கட்டுரைகள், கதைகள், கவிதைகள், புகைப்படங்கள், உங்க வீட்டுக் குட்டீஸின் கைவண்ணங்கள் வரவேற்கப் படுகின்றன என்பதை துணையாசிரியர்ங்கற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவிச்சுக்கறேன். விருப்பமுள்ளவங்க vallamaieditor@gmail.com  என்ற ஈ மெயில் முகவரிக்கு அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் வல்லமையின் சிறப்பிதழில் வெளியாகும். வெளியானப்புறம் உங்க ப்ளாகிலும் போட்டுக்கலாம்ன்னு சொல்லத் தேவையில்லை இல்லையா :-)



25 comments:

ஹுஸைனம்மா said...

கோலம் போடுவது ஒளிந்துகொண்டிருக்கும் திறமைகளை வெளிக்கொணரவும், (சிலருக்கு) மன அழுத்தத்திற்கு வடிகாலாகவும் அமையும். கோலங்களை நான் மிகவும் ரசிப்பேன். (சீரியலைச் சொல்லலை)

//நூல்ல கட்டிய சாக்பீஸை//
ஓ, இப்படித்தான் வட்டம் போடுவாங்களா?

எனினும் ஒரு ஆதங்கம், உணவுப் பொருளில் கோலம் போடுவதைத் தவிர்க்க முடிந்தால் நல்லது - அவற்றைத் தின்னுமளவு ஜீவராசிகள் இல்லாத இடங்களில்.

கோமதி அரசு said...

கோலங்கள் எல்லாம் அழகு சாந்தி.
மார்கழி கலர்ஃபுல் மாசமாய் கொண்டு வந்து விட்டது.

ஹேமா said...

சாரல்...பார்க்க அழகாய்த்தான் இருக்கு.போட்டி போடுறவங்க கோலம் போடட்டும்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அழகு .அருமை.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி கோலங்களும் அதுபற்றிய விளக்கங்களும் நல்லா சொல்லி இருக்கே. இங்க நம்வீடு வாசலே ஒரு சதுர அடிதான் கோலம் ஸ்டிக்கர்தான்.
தாணாவரும்போது தீபாவளி சமயம் ரங்கோலிதான். மறுமகளுக்கு கோலம் போட வராது. நான் போட்டுட்டுவேன் அவள் கலர் பொடிகளால் நிறப்பிடுவா. கல்ர் பொடியுடன் புழுங்க அரிசி மிக்ஸ்பண்ணினா நல்லா வரும். எததனை கலர் கோலம் பார்த்தாலும் நம்ம ஊரு வெள்ளைக்கோலப்பொடி கோலம் அழகுதான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாக்கோலங்களும் மிகவும் அழகாகவே உள்ளன.

இருப்பினும் என்னை மிகவும் கவர்வதாக உள்ளது 2 ஆவது கோலமாகிய கேரளாவின் பூக்கோலமே.

அது அழகோ அழகு.

பூச்சூடிய மகளிர் போல பூக்களால் போடப்பட்ட கோலமல்லவா.

அதனால் தான் அத்தனை அழகு! ;)))) vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 5

ராமலக்ஷ்மி said...

அற்புதமான கோலங்கள். அவற்றைப் பற்றி அழகான விளக்கங்கள். ஊர்நாட்கள் நினைவுக்கு வந்து விட்டன.

ஷைலஜா said...

கைவண்ணம் இங்கே கண்டேன் அருமை அமைதிச்சாரல்!

Yaathoramani.blogspot.com said...

கோலங்களும் விளக்கங்களும் மிக மிக அருமை
குறிப்பாக மலர்க் கோலம் அரிசிக் கோலம் உப்புக் கோலம்
மார்கழித் திங்கள் என்றாலே
குளிருக்கு மட்டுமா
கோலத்திற்கான மாதமும் அல்லவா
மனம் கவர்ந்த அருமையான பதிவு
த,ம 6

RAMA RAVI (RAMVI) said...

கோலங்கள் மிக அழகு.கோலங்கள் பற்றிய தங்களின் விளக்கமும் சிறப்பாக இருக்கு.

Vidhya Chandrasekaran said...

கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்க. நமக்கெல்லாம் கோலம் போடறதப் பார்க்கிறதோட சரி.

பாச மலர் / Paasa Malar said...

நலல் தகவல்களுடன் அழகான கோலங்கள்.....உலர் தேங்காய்த் துறுவல்..Desicated coconut / cocout powder இதிலும் வண்ணங்கள் கலந்து கோலங்கள் போடுவதுண்டு...

Asiya Omar said...

பகிர்ந்த கோலங்கள் அழகு.நானும் சிறுவயதில் கோலத்திற்கு என்று நோட்டு போட்டு வரைந்து பழகியதும்,நேர் புள்ளி,ஊடுபுள்ளி வைத்தெல்லாம் பெரிய பெரிய கோலமாக போட்டது நினைவு வருகிறது.அந்த நோட்டு இருந்தால் போட்டியில் கலந்து கொள்ளலாம்,இப்ப கொஞ்சம் மறந்த நிலையில்....

ஸ்ரீராம். said...

கோலங்களும் விளக்கங்களும் மிக அருமை. என்ன இருந்தாலும் நம்ம ஊருக் கோலம் அதாங்க கடைசிப் படம்தான் டாப்! டீ வடிகட்டியில் தட்டுவது, புனல் வழியே விடுவது போன்ற விவரங்கள் புதிது!

துளசி கோபால் said...

எட்டாப்பூ படிக்கும்போது எந்த நோட்புக்கைத் திருப்பினாலும் கடைசி பக்கங்களில் ஆரம்பிச்சுக் கோலமே கோலம்தான்.

நம்ம வீட்டு வாசலில் இடம் கிடக்குன்னாலும் ஸ்டிக்கர் கலாச்சாரத்தை மீறாமல் ஒட்டிட்டேன்.

சன்ஸ்கார் பாரதி , இப்பத்தான் முதல்முதலா கேள்விப்படறேன்.

அவசரக்கோலமுன்னு அள்ளித்தெளிக்காமல் சூப்பர் அலசல் கோலங்களைப்பற்றி.

கொசுவத்தி ஏத்தியிருக்கு:-)

ADHI VENKAT said...

கோலங்கள் பற்றிய அழகான பகிர்வு. சிறு வயதில் அக்கம் பக்கம் அக்காக்களுடன் சேர்ந்து பெரிய பெரிய கோலங்கள் போட்டு விட்டு ஒவ்வொருவர் வீடுகளுக்கும் சென்று யார் கோலம் அழகாக இருக்கிறது என்று பார்த்த ஞாபகம்.

இங்கும் தினமும் சின்ன கோலமாவது அரிசி மாவில் காலையில் போடும் வழக்கமுண்டு. பண்டிகை நாட்களில் செம்மண் இட்ட கோலங்கள். பொங்கல், தீபாவளி, கார்த்திகை, புத்தாண்டு சமயங்களில் கலர் கோலங்களும் போடுவதுண்டு. தில்லியின் கடுங்குளிரிலும் ஸ்வெட்டர், சாக்ஸ், ஸ்கார்ஃப் சகிதமாக கோலம். இதுவரை ஸ்டிக்கர் ஒட்டியதில்லை.

pudugaithendral said...

மார்கழி மாதம் கோலம் இதெல்லாம் ஒரு கொசுவத்தி எல்லோருக்கும் சுத்தும். இப்ப எங்க அம்ருதாம்மா கோலம் போடறதுல ரொம்ப இண்ட்ரஸ்டட் ஆகிட்டாங்க. அவங்க போட நாங்க வேடிக்க பாக்குறோம். :)

இராஜராஜேஸ்வரி said...

அழகுக் கோலப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

கே. பி. ஜனா... said...

கோலங்கள் பிரமாதம்!

கே. பி. ஜனா... said...

கோலங்கள் பிரமாதம்!
என்னுடைய சமீப பதிவு. 'மழையின் வர்ணங்கள்' (கவிதை) http://kbjana.blogspot.com/2011/12/blog-post_19.html

Shakthiprabha (Prabha Sridhar) said...

இப்பதிவையும், ஓடமும் ஓர் நாள் கதையையும் வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

மேலிருக்கும் சுட்டி இணைத்த பதிவுக்கானது.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே அருமை! பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது... பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

சாந்தி மாரியப்பன் said...

ரொம்பவே சுறுசுறுப்பா பதில் போடறதுக்கு எல்லோரும் மன்னிக்கணும் :-))

ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதிலளிக்க முடியாம கை வலி சதி செய்யுதுப்பா :-(

ஆகவே , கருத்துரையிட்ட நட்புகள் அத்தனை பேருக்கும் அத்தனை முறை நன்றி சொல்லிக்கிறேன். நன்றி.. நன்றி.. நன்றி :-))

சாந்தி மாரியப்பன் said...

கோலப்போட்டியில் கலந்து அனுப்ப ஆரம்பிச்சிட்டீங்களா மக்கள்ஸ்..

LinkWithin

Related Posts with Thumbnails