Monday, 19 February 2024

"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பு வெளியீடு.


"நல்லாச்சி" கவிதைகளை எழுத ஆரம்பிக்கும்போது ஆச்சி இப்படி அழுத்தமாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்வாள் என அறியவில்லை. சொல்ல நினைப்பவற்றை போகிற போக்கில் பேத்தியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வேடிக்கையும் விளையாட்டுமாகச் சொன்னபடி, அனைத்தும் அறிந்த அனுபவஸ்தியானாலும் பேத்தியின் முன் எதுவுமே தெரியாதவளாய் திருதிருவென விழித்துக்கொண்டு அவள் வந்தபோதே தெரிந்து விட்டது நல்லாச்சி தனிக்காட்டு ராணியாகத்தான் வலம் வரப் போகிறாளென. 

சில வருடங்களுக்கு முன் துளித்துளியாக எழுத ஆரம்பித்தாலும் ஒருகட்டத்தில் சற்றேறக்குறைய தினமுமே அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சுடுபாதையில் குளிர்தருவாக அவளே ஆறுதலளித்தாள். முன்னட்டையை அலங்கரிக்கும் என் அம்மாவின் அம்மா "பொன்னம்மாச்சி" எனக்கு உந்துதலாக இருந்தாலும் என்னைச்சுற்றியிருந்த பல்வேறு நிஜமும் கற்பனையுமான ஆச்சிகளும் இந்நூலில் நடமாடுகிறார்கள். 

எனக்கு இந்த வருட பொங்கல் பரிசாக அமைந்திருக்கும் "நல்லாச்சி" கோதை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. மிக்க நன்றி தேனாச்சி. பபாசியின் துணைத்தலைவர் திரு. புருஷோத்தமன் கைகளில் "நல்லாச்சி"யைக் கண்ட தருணம் மகிழ்வானது, மறக்க முடியாதது.

எனது முதல் கவிதைத்தொகுப்பான "சிறகு விரிந்தது" வெளியான சமயம் என்னால் போக இயலாத சூழல், ஆகவே இந்தத்தடவை எப்படியும் சென்னை புத்தகத்திருவிழாவுக்குச் செல்ல வேண்டுமென்று கிளம்பி விட்டேன். ஜனவரி 16ம் தேதி மாலை எழுத்தாளர் கலாப்ரியா அண்ணாச்சியின் திருக்கரங்களால் "நல்லாச்சி" எனும் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பு இனிதே வெளியிடப்பட்டது. தோழிகள் ஜெயந்தி நாராயணன், வல்லபா ஸ்ரீநிவாசன், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் நட்புகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

புத்தகத்தை வாங்க கோதை பதிப்பகத்தின் 9080870936 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Thursday, 15 February 2024

சங்க காலத்து வெயில் - கலாப்ரியா


நவீன கதைமுகங்களில் மிக முக்கியமானவர் ‘சோமசுந்தரம்’ என்ற இயற்பெயர் கொண்ட “கலாப்ரியா” அண்ணாச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார். நவீன கவிதைகளின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அப்போதைய கவிதைகளின் வெகுஜனப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்ததில், இன்றைய புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. "சங்க காலத்து வெயில்" எனும் இந்நூல் உட்பட  கவிதைத்தொகுப்புகள், கட்டுரைத்தொகுப்புகள், நாவல்கள், சிறுகதைத்தொகுப்பு என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

கலாப்ரியாவின் கவிதைகள் முற்றிலும் சிறப்பானவை, தனித்துவம் கொண்டவை, பெரும்பாலான கவிதைகள் தன்னளவில் வெளிப்படையான காட்சிவடிவமும், அகத்தே உள்ளோட்டமாகக் காத்திரமான குறியீடும் கொண்டவை.

“சித்தார்த்தா
என்றழைத்த
முதுகுரல் கேட்டுத்
திரும்பிய புத்தன்
சிரித்துக்கொள்கிறான்
சொல்லைத் தாண்ட முடியாது
ஞானத்தால் என்று”

“கடலின் மேல்மட்டத்திற்கு
வரும்போதெல்லாம்
ஆகாயத்தின் உயரம்
பார்த்துப் பயந்து
வேகமாய் ஆழம் புதைகிறது
மீன்”

“நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை”
போன்ற கவிதைகளை உதாரணமாகச்சொல்லலாம்.

“இலக்கியவாதியின் சட்டி
கையைச் சுடுவதே இல்லை
அவன் கைகள்
விட்டு விடுவதுமில்லை”
என்ற கவிதையில்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்.

வென்றவர்களைப்பற்றி மட்டுமே இவ்வுலகம் எப்போதும் பேசும், ஆனால், தோல்வியுற்றவர்களை அது நினைவில் வைத்திருப்பதில்லை, சொல்லப்போனால், அவர்களைச் சித்திரத்திலிருந்தே முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விடுகிறது. அத்தகைய உலகில், இசை நிற்கிறபோது இசை நாற்காலி விளையாட்டிலிருந்து விலகும் நாற்காலியைக் குறித்து வருத்தம் யாருக்கேனும் உண்டா? என கவிஞர் வினவும்போது அந்த நாற்காலி சற்றே ஆறுதல் கொண்டிருக்கும்.

கலாப்ரியாவின் கவிதைகளில் காட்சிகளாய்த் திரண்டு விரிகிறது உலகம். தான் கண்டவற்றை, உணர்ந்தவற்றை அப்படிக்கப்படியே அதிகப்படியான வர்ணனைகள், வெற்று அலங்காரச்சொற்கள் ஏதுமின்றி எளிய வாக்கியங்களில் வாசகனுக்குக் கடத்துபவை அவரது கவிதைகள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எளிய வரிகளுக்குப் பின்னால் ஒவ்வொரு திறப்பாகத் திறந்து கொண்டு புதிய தரிசனம் கிடைக்கிறது.

“ஊர் திரும்பும்போது
பார்வையில் பட்டால்
மகிழ்ச்சியை வழங்கும்
ஊரைப்பிரிகையில்
வருத்தம் பகிரும்
மைல் கற்களால்
வேறென்ன செய்ய முடியும்
நின்று கொண்டேயிருப்பதைத்தவிர” மேலோட்டமாக எளிதாகத் தோன்றும் இக்கவிதையின் மைல் கற்கள் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க அச்சித்திரம் மறைந்து, கவிதை சொல்லும் கதையால் மனம் அலைவுறுகிறது. 

“ரசிக்கப்படும் போதெல்லாம்
செதுக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதன்
பேர்தான் கலையோ” எனில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மானுட வாழ்க்கைக்குக் கலையும் இன்றியமையாதது.

Tuesday, 6 February 2024

ராஜவனம் - ராம்தங்கம்


சிங்கப்பூரின் “மாயா இலக்கிய வட்டம்” நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்ற இக்குறுநாவலின் ஆசிரியர் ராம்தங்கம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பரவலாகக் கவனம் பெற்று வரும் இளம் படைப்பாளி. சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத்தொகுப்புகள், வரலாற்று நூல்கள், பயண நூல்கள் என இவரது படைப்புகளும் பெற்ற விருதுகளும் ஏராளம். "திருக்கார்த்தியல்" என்ற தொகுப்புக்காக இவ்வாண்டின் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதாளர்.

காடு எத்தனையோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்து ஒளித்து வைத்திருக்கிறது. புறத்தே அது ஒன்றாகக் காட்சியளித்தாலும் அகத்தே அது இருப்பது வேறொன்றாக. அதை அறிய, காடு நமக்குச் சொல்லவருவது என்னவென்று புரிந்து கொள்ள அதனிடம் சரணாகதி அடைவதன்றி யாதுளது? அப்படியொரு காடுதான் இங்கே ராஜவனமாகப் பரந்து செழிப்புற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் நெல்லை மற்றும் கன்யாகுமரி மாவட்டத்திலுமாகப் பரவியிருக்கும் மேற்கு மலைத்தொடரின் வனாந்திரத்தைக் கதைக்களமாகக்கொண்டுள்ள இந்நூலில் நுழைந்த சில நிமிடங்களிலேயே காடு நம்மைத் தன்னுடன் இணைத்துக் கரைத்துக்கொள்கிறது.

பொதுவாக வனாந்திரங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் சாகசப்பயணம் செய்வதில் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த நாட்டமுண்டு. குமரி மாவட்டத்தில் உள்ள காளிகேசம் அருவி, கீரிப்பாறை எஸ்டேட், கோதையாறு அருவி போன்ற இடங்களுக்கு இளைஞர்கள் குழுக்களாக தத்தம் வாகனங்களில் பயணம் செய்வதைக் கண்டிருக்கிறேன். கன்யாகுமரி மாவட்டத்தில் பாயும் நந்தியாற்று நதிமூலம் தேடி கோபாலும் அவனது நண்பர்களும் அப்படித்தான் பயணிக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியின் வர்ணனைகளும், பட்டியலிடப்படும் கானுயிர்களும், தாவரங்களின் பெயர்களும் வியப்பூட்டுகின்றன.

கல்குளம் தாலுகா பகுதியில் பரந்திருக்கும் அக்காட்டை முற்ற முழுக்க அறிந்தவராயிருந்தால் மட்டுமே இத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க முடியும். எழுத்தாளர் ஜெயமோகனின் “காடு” நாவலிலும் அவரது பல சிறுகதைகளிலும் குமரி மாவட்டத்தின் காட்டைப்பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் அது அளித்த தரிசனம் வேறு, ராம்தங்கத்தின் ராஜவனம் அளிக்கும் தரிசனம் முற்றிலும் வேறு. காடு பெருக, நிலைத்திருக்க யானைதான் முக்கியமான காரணம் என்பர். காட்டின் உண்மையான அரசன் என்றே அதைச் சொல்லலாம். அப்பேர்ப்பட்ட யானையைத் தந்தங்களுக்காக அழிக்கும் கொடூரர்கள் கையாளும் வழிமுறைகள், முக்கியமாகப் “பன்னிவெடி” பதற வைக்கிறது.

காட்டின் அபாயங்களைப்பற்றி அறிந்தும், அசட்டுத்துணிச்சலுடன் நதியின் பிறப்பிடத்தை அறியச்சென்ற கோபால் ஒரு கட்டத்தில் மறைந்த தன் தந்தையைப்பற்றி முழுதாக அறிந்து கொள்கிறான். காட்டுக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்து அவரது ஆத்மார்த்தமான வழிகாட்டல் அவனுக்கு அமைகிறது. சுற்றுச்சூழல், வனவிலங்குகள், மற்றும் மலையில் வசிக்கும் காணிமக்களின் மேல் பெரும் பரிவு கொண்ட அவரது மறுபக்கம் காணிகளால் அவனுக்குக் காட்டப்படுகிறது. காணிகளுக்கு அப்பெயர் எப்படி வந்தது? அவர்களது வாழ்வியல், சடங்குகள், உணவுகள், சட்டத்துக்குப் புறம்பாக வனத்துள் நடைபெறும் அவச்செயல்கள் என பல தகவல்கள் அறியத்தரப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தின் தமிழுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏற்கனவே தமிழும் மலையாளமும் கலந்துதான் அது பேசப்படுகிறது எனினும், ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதிரியாக என உச்சரிப்பும் வழக்கும் சில கிலோமீட்டர்களுக்குள்ளாகவே ஒவ்வொரு வகையாக மாறுபடும். நாவலின் கதைக்களமாகக் கல்குளம் தாலுகா அமைந்திருப்பதால் அம்மக்கள் பேசும் மலையகத்தமிழையே நாவலின் மக்கள் பேசும் வட்டார வழக்காக அமைத்திருப்பது பெருஞ்சிறப்பு. நாகர்கோவிலில் பள்ளியிலும் கல்லூரியிலும் உடன்பயின்ற தோழிகளின் தமிழை மீண்டுமொரு முறை கேட்டதுபோல் உணர்ந்தேன். கன்யாகுமரி மாவட்டத்தின் காணி மக்களின் மொழியும் சிறப்புற உறுத்தலின்றி அமைந்துள்ளது.

சுமார் ஒன்றரை வருட தேடல், வாசிப்பு, பயணங்கள் போன்றவற்றால் இந்நூல் உருவானதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூலை வாசிக்கும்போது அந்த உழைப்பு தெளிவாகப் புலப்படுகிறது. ராஜவனத்தில் உலாவுபவர் புத்துணர்ச்சியோடு வெளிவருவது உறுதி.

வெளியீடு: வம்சி பதிப்பகம்.

Sunday, 4 February 2024

மரம் விடு தூது - ந. பரந்தாமன்


சிப்பியின் மேல் எவ்வளவோ துரும்புகளும் மணற்துகள்களும் படிந்தாலும் ஏதோவொன்றுதான் நல்முத்தாக விளைகின்றது. காணும் காட்சிகள், தோன்றும் எண்ணங்கள் யாவற்றையும் கவிதைக்களமாய்க் காண்பது கவிஞனின் மனம். அவற்றில் கவிமனதில் ஆழமாய்ப்பதிந்து உயிர்த்து ஒரு சிலவே கவிதைகளாய்ப் பிறக்கின்றன. அப்படிப் பிறந்த 119 கவிதைகளை "மரம் விடு தூது" என்ற முத்துமாலையாய் நம் முன் வைத்திருக்கின்றார் புதுவையைச் சேர்ந்த கவிஞர் ந. பரந்தாமன்.

ஒவ்வொரு கவிதையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டுள்ளது. அன்றாட வாழ்வின் நுணுக்கமான கூறுகள், உணர்வு வெளிப்பாடுகள், அங்கலாய்ப்புகள் என அத்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கின்றன. ஆறுதல், கட்டம் போட்ட நோட்டு போன்ற கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை. "ஒரு கவிதை நூலை வாசிக்கும்போது இதுவரை காணாமல் போயிருந்த நான் கிடைக்கப்பெற்றேன்" என்ற வரியில் கவிதைக்கும் வாசகனுக்குமுள்ள தொடர்பைக் கூறுகிறார். "அந்தோ என் ஓய்வுக்காலம் ஏதேனும் சட்டம் இயற்றப்படுமா (முதிய)குழந்தைத் தொழிலாளர் தடுப்புக்காக" என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. விருப்பப்பட்டுச் சுமக்கிறவர்கள் மத்தியில் வலிந்து சுமை ஏற்றப்பட்டுச் சுமக்கும் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள்தானே. மொழிச்சிடுக்குகளுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அதிகம் சிக்கிக்கொள்ளாமல் எல்லையற்ற சுதந்திரத்துடன் புரண்டோடும் இவரின் மொழி இன்னும் சற்றுக் கூர்மை பெறின் பெருங்கவனம் பெறும். "கவிஞன் மென்மையானவன் அவன் எழுதும்
தாளை விட.." எனக்கூறும் இந்த மென்மையான கவிஞனிலிருந்து வீரியமிக்க கவிதைகள் பிறக்கட்டும்.

மரம் விடு தூது (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர்: ந. பரந்தாமன்
வெளியீடு: படி பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

Saturday, 3 February 2024

சாரல் துளிகள்


அலைகளற்ற கடலாய் நிச்சலனமாயிருக்கும் மனதில் பாளம் பெயர்த்து எழுந்தமையும் பழம்நினைவால் பிறக்கும் சுனாமியை ஆற்றுப்படுத்துகிறது அறிவின் கரம்.

விலக்கி விலக்கிப்போனாலும், குளத்துப்பாசி போல் நெருங்கிச்சூழ்ந்து வருபவை கழிவிரக்கமும், குற்றவுணர்வும், பழியுணர்வும். விலக்கிக் கரை சேர்பவர் சிலர், அமிழ்ந்து கிடப்பதே சுகமென எண்ணி மூழ்கிப்போகிறவர் ஒரு சிலர் எனில்  மீட்க வருபவரையும் சேர்த்து மூழ்கடிக்கும் சிலருமுண்டு.

உணர்ச்சி வேகத்தில் அறியாமல் உதிர்க்கும் சொற்களே கூட ஒருவரைச் சிக்க வைக்கும் தூண்டிலாகி விடுவதுண்டு. 

அன்பே வலையாய் ஆதரவுச்சொற்களே இரையாய் அக்கறையே மாயையாய் விரித்து வைக்கும் வேடனிடமிருந்து, புலி வேடமிட்டு சாதுர்யமாய் நழுவித்தப்புகிறது மான்குட்டி.

உணர்வு பூர்வமாகச் சிந்திப்பவரை விட அறிவு பூர்வமாக, தர்க்க பூர்வமாக, பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுப்பவர் எவ்வகையான புதிய சூழலையும் சமாளித்து தீர்வு காண்பார்.

கூடவே செல்லும் எஸ்கலேட்டர் படிக்கட்டுகளாக நாம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம், ஆனால் உண்மையில், உபயோகித்தபின் அங்கேயே விட்டுச்செல்லப்படும் சாதாரண படிக்கட்டாகவோ அல்லது எட்டி உதைக்கப்படும் ஏணியாகவோதான் இருக்கிறோம். 

பொங்கிப்பெருக்கெடுக்கும் வெள்ளமும் உள்ளமும் ஒன்றே. அத்தனைக்கும் பின் கசடற நிர்மலமாய் அமைதியாய் தெளிந்திருக்கும்.

பட்டத்தின் வாலைப்போல் சீராக இருப்பதைவிட்டு, அதன் நூல்கண்டைப்போல் ஏன் இந்த வாழ்க்கை தன்னைச் சிக்கலாக்கிக் கொள்கிறது? பொத்திப் பாதுகாக்கும் கரங்களை விடுத்து முரட்டுக் கரங்களையே ஏன் அந்த நூல்கண்டு சென்றடைகிறது? விலகிச்செல்வதைச் சீண்டாத கரங்கள், தம்மைச் சரணடைபவற்றைச் சிதைக்கும் கொடூரம் கொள்வது ஏன்? மாயக்கயிற்றால் விரல்களை ஆட்டிப்படைக்கும் மனமல்லவோ சூத்ரதாரி. திருத்தப்படாத தீர்ப்புகளுக்குப்பின் சிதைந்து கிடக்கிறது நூல்கண்டு.

துரத்தித் துரத்திக் குரைத்துக் களைத்து விழும் நடுநிசி நாய்களைக் கண்டுகொள்ளாமல் தனக்கான உயரத்தில் கம்பீரமாகப் பெருஞ்சத்தத்துடன்  பறந்து செல்கின்றன விமானங்கள். பதில் கிடைக்கப்பெற்றும் புரிந்து கொள்ளாத ஞமலிகள் அடுத்த விமானத்தைத் துரத்த ஆரம்பிக்கின்றன.

குறை சொல்வதை மட்டுமே  நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் செவி சாய்த்துக்கொண்டேயிருந்தால் பறத்தல் முடங்கி சிறகுகள் கருகி இறுதியில் நடையற்றுக்கிடக்க நேரிடும்.

Wednesday, 24 January 2024

நாழிக்கூழும் நாழி மிளகாயும் - சி. அன்னக்கொடி


மனிதனின் வாழ்வை சமுத்திரமெனக்கொண்டால், அவ்வாழ்வின் சில துளிகளை, கால் நனைத்து நிற்கும் நமக்கு ருசிக்கக்கொடுக்கும் அலைகள்தாம் சிறுகதைகள் எனக்கொள்ளலாம். சக மனிதர்களை அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள, அவர்களின் வாழ்வியலின் வண்ணச்சித்திரத்தின் ஒரு துளியையாவது அறிதல் வேண்டும். இங்கே, அப்படி துளித்துளியாய் வரைந்ததுதான் இந்த சிறுகதைத்தொகுப்பு.

முற்றிலும் கிராமத்து வாழ்வைப் பேசும் கதைகளே இந்நூலில் செறிந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் அத்தனையும் ஒன்றுக்கொன்று இழைந்து வருபவையே. தொகுப்பை முற்றிலுமாக வாசித்து முடிக்கும்போது ஒரு கிராமத்துக்கே போய் யுகயுகமாக வாழ்ந்துவிட்டு வந்த உணர்வை அளிக்கிறது. வழக்கறிஞர் சி. அன்னக்கொடி அவர்களால் முற்ற முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் மொத்தம் இருபத்து மூன்று சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

வீட்டிலுள்ள மனிதர்களிடம் பாசம் வைத்திருப்பதைப்போலவே, ஏன் அதற்கு ஒரு படி மேலாகவே தாங்கள் வளர்க்கும் ஆடுமாடுகளிடம் பாசம் வைத்திருப்பவர்கள் கிராமத்து சம்சாரிகள். அவ்வாறே அஃறிணைப்பொருட்களிடமும், பற்று மிகக் கொண்டவர்கள். தங்களுக்குச் சொந்தமானவற்றை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நகரத்து மக்களுக்கு உலக்கை ஒரு சாதாரணப்பொருள். அதுவே கிராமத்திலிருப்பவர்களுக்கோ ஒரு தெய்வத்துக்குச் சமமானது. விவசாயியின் குடும்பத்தில் தப்பித்தவறி சுளவு, உலக்கை, போன்றவற்றில் தெரியாத்தனமாகக் கால் பட்டு விட்டால் கூட தொட்டு வணங்கச்செய்வார்கள். அப்படியோர் உலக்கை ஒரு குடும்பத்தையே பிரிக்கவும் அதே போல் இணைக்கவும் செய்கிறது. எல்லாம் பற்று செய்யும் மாயம்.

உறவு முறைக்குள் இருப்பவர்களோ இல்லாதவர்களோ.. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் இடக்குப்பேச்சுகள் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன. அப்பச்சிகளின் பெருமை பேசும் அப்பத்தாக்கள், அப்பத்தாக்களிடம் எசலும் பேரப்பிள்ளைகள், பெரியவர்களுக்குப் பட்டப்பெயர் வைக்கும் சிறிசுகள், முதலில் வைக்கப்பட்ட பெயர்களுக்காக வருந்தி, அதன்பின் மகிழும் சைக்கிள் தாத்தா, மகளைத் தேடியலைந்து வீட்டுக்குத் திரும்பும்போது அந்த வருத்தத்திலும், உப்புக்கண்டத்துக்காக ஒரு ஓரமாக மகிழும் தகப்பன், செத்துப்பிழைத்து பகை தீர்க்கும் கற்பகம் என நாம் காணும் சித்திரங்கள் அனேகம். 

தனித்தனிச் சிறுகதைகள்தாம் எனினும், மொத்தமாக வாசித்து முடியும்போது ஒரு உணர்வுக்குவியலான திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. வெள்ளந்தி மனிதர்கள்தான் எனினும் அவர்களுக்கேயுரிய சாமர்த்தியமும் சில கதைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. முக்கியமாக பொங்கக்கூட்டம், சகுனம் போன்ற சிறுகதைகள். திருடித்தின்பதுதான் ருசி என்பார்கள் சிறுவர்கள். அந்த சித்தாந்தம் பெரியவர்களுக்கும் உண்டு என்பதை கள்ளப்பனை, ஏப்பம் போன்ற கதைகளில் நிறுவி நம்மைப் புன்னகைக்க வைக்கிறார் ஆசிரியர். கத்தரிக்காய் ரசமும் மிக ருசிக்கிறது. 

கஷ்டப்பட்டு, கடன்பட்டு, கருமாயப்பட்டு விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மனப்பொருமல் தூத்தலாய்த் தெறிக்கும்போது, நாமும் உச்சுக்கொட்டுகிறோம். பாசம், கருணை, பழி வாங்கல் என அந்த மனிதர்களின் உணர்வுகளுடன் நாமும் இரண்டறக்கலக்கிறோம்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கரிசல் மண்ணின் வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும், தொகுப்பின் மொழி சற்றே மதுரை மண்ணின் வட்டார வழக்கையும் பிரதிபலிக்கிறது. வாசித்து நெடுநேரமான பின்னும் கதை மாந்தர்களைப்பற்றி நம்மைச் சிந்திக்க வைப்பது இந்நூலின் வெற்றி எனக்கொள்ளலாம்.

நூல் – நாழிக்கூழும் நாழி மிளகாயும்
ஆசிரியர் – சி. அன்னக்கொடி
வெளியீடு – கோதை பதிப்பகம்

Monday, 8 January 2024

முஹூர்த்தக்கால் எனும் பந்தக்கால்..


ஒரு வீட்டில் கல்யாணம் நடக்கப்போகிறதென்றால் தேதி நெருங்கும்போது, "காலு என்னைக்கி ஊணுதாவோளாம்?" என்று சொந்தக்காரர் சொக்காரன்மார் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வர். 'பந்தக்கால் எனும் முஹூர்த்தக்கால்' ஊன்றும் வைபவத்தைத்தான் அவர்கள் அப்படிக் கேட்பார்கள்.

வீடு கட்டும்போது மற்ற எல்லா வாசல்களையும் விட நிலைவாசல் எனும் தலைவாசலை ஊன்றும்போது மட்டும் அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, மாவிலைத்தோரணம் கட்டி பூஜை செய்து ஊன்றுவது மரபு. அவ்வாறே திருமணப்பந்தலை அமைக்கத்தொடங்கும்போது ஊன்றப்படும் முதல் காலுக்கும் பூஜை செய்து ஊன்றும் வழக்கம் வந்திருக்கலாம். இப்படி முஹூர்த்தக்கால் ஊன்றி விட்டால் அதன்பிறகு திருமணம் முடியும்வரை எந்த துக்க நிகழ்வுகளிலும் மணவீட்டார் கலந்து கொள்ளக்கூடாது.

சவுக்கு, மூங்கில் போன்ற நீண்ட கம்புகளையோ அல்லது பால்மரத்தின் நீண்டதொரு கிளையையோ எடுத்துவந்து, மேல்பிசிறில்லாமல் தேய்த்துவிட்டு, முழுவதும் மஞ்சள்பூசிக் காய விடுவார்கள்.  அதன்பின் நல்ல முஹூர்த்தநேரத்தில் குடும்பத்தில் மூத்தவர் அதில் மாவிலைக்கொத்தைக் கட்டுவார். பின் அதற்கு பூமாலை அல்லது மல்லிகைச்சரத்தின் ஒரு துண்டைச்சூட்டுவர். வெற்றிலைபாக்குடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கட்டும் வழக்கம் சில பகுதிகளில் உண்டாம். பின் மஞ்சள் குங்குமமிட்டு.. பெண்கள் குலவையிட கற்பூரம் காட்டுவார்.

அவருக்குப் பின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து மஞ்சள் குங்குமமிட்டு குலவைச்சத்தத்துடன் கற்பூரம் காட்டி வணங்குவார்கள். இது முடிந்ததும் வீட்டின் வடகிழக்கு மூலையில் பந்தக்காலை ஊன்றவோ அல்லது ஏதேனும்  பிடிமானத்துடன் சேர்த்துக் கட்டவோ செய்வார்கள். பெரும்பாலும் இச்சடங்கு திருமணத்திற்கு நாலைந்து நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் "தாலிக்குப் பொன்னுருக்கு"ம்போது நிகழும். பெண் வீட்டில் நிச்சயதார்த்த தினத்தன்று நிகழும். ஒரு சிலர் திருமணம் நிகழும் தினத்தில் எல்லாச்சடங்குகளுக்கும் முன்னால் இதைச்செய்வதுமுண்டு. இம்மூன்று தினங்களிலும் செய்வதானால் இதற்கெனத் தனியாக முஹூர்த்தம் பார்க்க வேண்டாம் அல்லவா?. இதேபோல், திருமணச்சமையலுக்காகப் போடப்படும் கோட்டையடுப்புக்காக, ஒரு சில கற்களையும் பூஜை போட்டு எடுத்து வைத்துக்கொள்வதுமுண்டு.

சமீபத்தில் மகளின் சக ஊழியரின் கல்யாணத்தில் கலந்து கொண்டபோது ஒரு நாற்காலியில் ஜவ்வரிசி மற்றும் அரிசி அப்பளத்துடன் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுங்கிளையொன்று கவனத்தை ஈர்த்தது. கிட்டே நெருங்கிப்பார்த்தால்... மாங்கிளை.

அட!!.. முஹூர்த்தக்கால்.

நடப்படும் முஹூர்த்தக்கால் பால்மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையாக இருந்தால் அதை குளக்கரையிலோ அல்லது ஆற்றங்கரையிலோ நட்டு வைப்பது தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வழக்கம். அப்படி நடப்படும் கிளை செழித்து விருட்சமாகவே வளர்ந்து விடுவதுமுண்டு. மணமக்களும் அவ்வாறே வாழ்வில் செழித்து விளங்க வேண்டுமென்பதற்காகவே இப்பழக்கம் வந்ததாகவும் சொல்வார்கள். இதைச்சாக்கிட்டு ஊரெங்கும் மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழல் பசுமையாக இருக்கவும், மழை பெய்யவும் உதவுவதாகவே நாம் எடுத்துக்கொள்வோம். இந்த முஹூர்த்தக்கால் நடும் வைபவம் வடநாட்டிலெல்லாம் இருக்காது என்றுதான் இவ்வளவு நாட்களாய் நினைத்துக்கொண்டிருந்தேன், மும்பையில் அதுவும் மராட்டியர்களிடமும் இந்த வழக்கம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. 

எது எப்படியோ?!! உலகின் எந்தப்பகுதியாய் இருந்தால் என்ன? மனிதவாழ்வில் ஒவ்வொரு படிநிலைகளிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என இயற்கையோடு ஒன்றியே ஒவ்வொன்றையும் அமைத்திருப்பது விளங்குகிறது. ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் இயற்கையிலிருந்து வெகு தூரம் விலகிச்செல்லும் போது அதற்கான விலையையும் கொடுக்க நேர்வதுதான் யதார்த்தம்.

LinkWithin

Related Posts with Thumbnails