பாம்பே அல்வா என்று பெயரிடப்பட்டிருப்பதால் இது பாம்பேயாக இருந்து மும்பையாக மாறியிருக்கும் ஊரைத்தான் தாயகமாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை வாசிக்கத்தெரிந்த சிறுகுழந்தை கூட சொல்லிவிடும். அதேபோல், சைனாக்ராஸ் எனப்படும் அகர்அகரை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டிருப்பதால் இந்த அல்வாவை சைனாவிலோ, பாம்பே அல்வா என்ற நாமகரணம் கொண்டிருப்பதால் மும்பையிலோ செய்ய வேண்டுமென்ற அவசியமுமில்லை. எந்த ஊரில் செய்தாலும் அல்வா.. அல்வாதான்.
கோபால் பல்பொடி மாதிரியே இதுவும் ஆசியாவின் ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, சைனா, போன்ற நாடுகளில் புகழ்வாய்ந்தது. அகர் அகர் உடல்சூட்டைத்தணிக்கும் குணம் கொண்டது. ஆகவே இதில் அல்வா, புடிங் என்று வகைவகையாகச் செய்து அசத்தலாம். இளசான தேங்காயின் நறுக்.. நறுக்கையும் வழுவழுப்பையும் கொண்டிருக்கும் இந்த அல்வாவை வெயில் காலங்களில் மட்டுமல்லாது எல்லாக்காலங்களிலும் கொடுத்து மகிழலாம். என் வீட்டினருக்கு அல்வா கொடுப்பதென்று முடிவெடுத்து விட்டால் அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன். உடனே ஓடிவிடுவேன்.. பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு :-) நினைத்த போதெல்லாம் அல்வா செய்து கொடுத்து மகிழத்தான் கிட்ஸ் கம்பெனிக்காரர்கள் உடனடி மிக்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களே. அதில் ஒன்றிரண்டு பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு வருவது வழக்கந்தான் :-)
முதன்முறை இந்த அல்வா செய்யப்போய் அது எனக்கு அல்வா கொடுத்த கதையும் உண்டு. கடைசித்தம்பியின் திருமணத்தின்போது அவனுக்கு என் கையால் அல்வா செய்து கொடுக்க வேண்டுமென்ற ஆசையில் மும்பையிலிருந்தே பாக்கெட் வாங்கிப்போயிருந்தேன். எவ்வளவு நேரம் காய்ச்ச வேண்டுமென்று தெரியாமல் நானே குத்து மதிப்பாக ஒரு கணக்கைப்போட்டுக்கொண்டு காய்ச்சிய பாலில் அல்வாமிக்ஸை மிக்ஸிவிட்டு அது கரையும் வரையில் கிளறி, பாயசம் மாதிரியே இருக்கிறதே என்று மனதில் கடைசி வரையில் தோன்றிக்கொண்டே இருந்த எண்ணத்தைத் தூக்கிக்கடாசி விட்டு, அல்வாக்கலவையை தட்டில் கொட்டிவிட்டேன். அதுவானால் இறுகாமல் விழித்துக்கொண்டே இருந்தது. சரி, விடியும் வரைக்கும் விட்டு வைத்தால் இறுகிவிடும், டிபனுடன் பரிமாறலாமென்று எண்ணி, ஒரு தட்டைப்போட்டு மூடி வைத்து விட்டேன். விடிந்து பார்த்தால் தட்டிலிருந்ததில் பாதியைக்காணோம்.மீதி இன்னும் பாஸுந்தி மாதிரியே இருக்கிறது.
ஆஹா!!.. ருசியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது, வீட்டிலிருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் மீதம் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விழுந்தது மண். இரவோடு இரவாக உலா வந்த பூனையார் டேஸ்ட் பார்த்துவிட்டு மீதியை எங்களுக்கு விட்டு வைத்திருந்தார் :-) ஆகவே கிண்டிய அல்வாவை கடைசியில் குப்பையில் கடாச வேண்டியதாகப்போயிற்று. அதன்பின் அகர் அகர் அல்வா முயற்சியில் இறங்கவேயில்லை. சமீபத்தில் மகள் அழகாக பக்குவமாகச் செய்து பரிமாறினாள்... ஜூப்பர். கொஞ்சம் கெட்டியான பாயாசம் அளவுக்கு வரும்வரை சுமார் பத்து நிமிடங்களுக்காவது கிளறிக்கொண்டே இருக்க வேண்டுமாம், இதுதான் ரகசியம். அவ்வளவுதான்.. விட்ட பைத்தியம் மறுபடி பிடித்துக்கொண்டது எனக்கு. அரை லிட்டர் பால் மீந்தாலும் போதும். டின்னரில் தட்டில் அல்வா இருக்கும். உடலுக்கும் நல்லதாயிற்றே..
பாக்கெட்டைப் பிரித்து..
கொதித்த பாலில் அல்வா மிக்ஸைக்கொட்டிக்கிளறி..
தட்டில் ஊற்றி..
துண்டு போட்டால்..
அல்வா ரெடி..
துருவித்தூவிய பாதாம் மாயமாய் மறைந்த விந்தையென்ன என்று திகைக்க வேண்டாம். அது போன மாதம்.. இது இந்த வாரம் :-)
என்னதான் அதிலேயே ஸ்கிம்டு பால்பவுடர் இருந்தாலும் 80கிராம் பாக்கெட்டுக்கு அரை லிட்டர் பாலைக் காய்ச்சிச் சேர்த்துச் செய்தால் அருமையாக வருகிறது. பாதாம், ஏலக்காய், குங்குமப்பூ, பிஸ்தா என்று எல்லாமும் இருப்பதால் பார்ட்டிகளுக்கு ஏற்ற டெஸர்ட்டாகவும் இருக்கிறது. உலர்பழங்கள், பால் சாப்பிடப்பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படிச் செய்து கொடுத்து சத்தை உள்ளே தள்ளிவிடலாம்.
இப்பொழுது ஏன் அல்வா கொடுக்கிறேன் என்று இந்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.. கேட்காவிட்டால்?... ஹி..ஹி.. நானே சொல்லி விடுவேனாக்கும் :-)))
என்னுடைய புகைப்படப்பதிவுகளைப்பற்றிய பேட்டி குங்குமம் தோழி இதழின் "கண்கள்" பகுதியில் வந்தது தெரிந்ததே.
அந்தப்பேட்டி இப்பொழுது மே மாதம் எட்டாம் தேதி வெளியான தினகரன் நாளிதழிலும் மறுபதிப்பு ஆகியிருக்கிறது. கண்டெடுத்துச்சொன்ன புகைப்படப்பிரியன் அதிபர் சகோதரர் "மெர்வின் அன்டோ" அவர்களுக்கும், புகைப்படப்பிரியன் பக்கத்தில் அறிவித்த சகோதரர் "சுந்தரராஜன்"அவர்களுக்கும் வாழ்த்திய அனைவர்க்கும் எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவிக்க வேண்டாமா!! ஆகவேதான் அல்வா கொடுத்து நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.
தினகரன் நாளிதழின் மகளிர் பகுதியில் எனது நேர்காணலை வாசிக்கச் சொடுக்குங்கள் சாட்டையை.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1792

