பெங்களூரில் நம்ம
மக்கள் நிறையப்பேர் இருந்தாலும் எல்லோரையும் சந்திக்க நேரம் வாய்க்கலைன்னாலும் ஒண்ணு
ரெண்டு பேரையாவது சந்திக்காம போக மனசு வரலைன்னு சொன்னேன் இல்லையா. பெங்களூர்ன்னா மொதல்ல ஞாபகத்துக்கு நம்ம ராமலக்ஷ்மிதான் வராங்க.:-) இருக்கும் அவகாசத்தில்
மினி சந்திப்பாகவாவது இருக்கட்டுமேன்னு நினைச்சு ராமலக்ஷ்மியிடம் பேசினேன்.
வல்லமை மின்னிதழோட
நிறுவனர் அண்ணா கண்ணன், தமிழில் புகைப்படக்கலையைக் கற்றுத்தரும் ஆசிரியர்களில் ஒருவரான
ஜீவ்ஸ் என்ற ஐயப்பன் கிருஷ்ணன், அப்றம் “நிசப்தம்” என்ற வலைப்பூவை எழுதி வரும் வா.மணிகண்டன்
இவங்களோட பணியிடங்கள் ஒரே வளாகத்தில் இருப்பதால் அங்கியே சந்திப்பை வெச்சுக்கலாம்ன்னு
நேரமும் குறிச்சோம்.
ஞாபகார்த்தம்.. :-)
சந்திப்பு அன்னிக்கு
எதேச்சையா மெயில் செக் செஞ்சப்பத்தான், லால்பாகிலும் சந்திக்கலாம்ன்னு கொடுத்திருந்த
ஆலோசனை கண்ணுல தட்டுப்பட்டுச்சு. ஆஹா!!.. வட போச்சே.. அங்கே போயிருந்தா நிறையப் படங்கள்
சுட்டுக்கிட்டு வந்துருக்கலாம். நிறைய டிப்ஸ் கிடைச்சுருக்கும். இப்படியொரு அரிய சந்தர்ப்பம்
இனிமே எப்ப வாய்க்கப் போகுதுன்னு தெரியலை :-)
தம்பி துணையாய்
வர அன்னிக்குச் சாயந்திரம் கிளம்பினேன். இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமப்படலை. ரிசப்ஷனில்
இன்னாரைப்பார்க்கணும்ன்னு சொன்னதும் ரிஜிஸ்டரில் விவரங்கள் பதியச்சொல்லி விசிட்டர்ஸ்
பாஸ் கொடுத்தாங்க. வாங்கிட்டு காத்திருக்கும்போது ஜீவ்ஸ் வந்தார். அவரோட ஃப்ளிக்கர்
தளத்திலும், சமீபத்துல “பிட்”டிலும் புகைப்படத்தைப் பார்த்திருந்ததால் கண்டுபிடிக்கச்
சிரமப்படலை. உணவகத்தில் போய் செட்டிலானதும் அரட்டை ஆரம்பம்..
வல்லமையின் சார்பாக புகைப்படக்குழுமம்
ஒண்ணைத்தொடங்கலாம்ன்னு ஆலோசனை சொல்லி அதுக்கு என்னைப் பொறுப்பாளரா நியமிக்கப் பரிந்துரைத்த
சகோதரர் ஜீவ்ஸுக்கு பெங்களூரில் வெச்சுச் சொன்னது மட்டுமன்றி இங்கேயும் நன்றி சொல்லிக்கக் கடமைப்பட்டிருக்கேன். கூடவே என்னை நம்பிப் பொறுப்பை ஒப்படைச்ச அண்ணா கண்ணனுக்கும் நன்றி சொல்லிக்கிறேன் :-)
காமிராக் கண்ணால்
கண்டு ரசிச்ச காட்சிகளை மற்றவர்களுடனும் பகிர்ந்துக்கிட்டு நிறை குறைகளை அலசறது மூலம்
தங்களோட திறமையை இன்னும் மெருகேத்திக்க நினைக்கும் புகைப்பட ஆர்வலர்களின் துணையோட குழுமம் வெற்றிகரமா
இயங்கிக்கிட்டு வருது. ஆரம்பிச்ச அன்னிக்கே பதினேழு உறுப்பினர்கள் சேர்ந்தது ரொம்பவே
உற்சாகத்தைக் கொடுத்தது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. புகைப்படக் கலையில்
ஆர்வமும், ஃப்ளிக்கரில் அக்கவுண்டும் இருக்கும் அனைவரும் இதுல கலந்துக்கலாம். அக்கவுண்ட்
இல்லைன்னா ஆரம்பிச்சுட்டு குழுமத்துல சேர்ந்து நீங்க எடுத்த படங்களைப் பகிர்ந்துக்கிட்டுக்
கலக்குங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு
அண்ணா கண்ணனும் வந்து கலந்துக்கிட்டார். கலகலன்னு அரட்டை ஜமா சேர்ந்துருச்சு. மூன்றாமாண்டில்
அடியெடுத்து வைத்திருக்கும் வல்லமை, புகைப்படக்கலை, அப்றம் வல்லமையின் புகைப்படக் குழுமம்
என்று அலசிக் காயப்போட்டுக்கிட்டு இருக்கும்போது ராமலக்ஷ்மியும் வந்து விடவே அவங்களும்
பேச்சில் கலந்துக்கிட்டாங்க. வல்லமை மின்னிதழின் முதல் வல்லமையாளர் விருதை வென்ற அவருக்கு
அதற்கான பரிசும் வழங்கப்பட்டது. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வா.மணிகண்டனும் சந்திப்பில்
கலந்துக்கிட்டார்.
எல்லோரையும் நேர்ல
பாக்கறது இப்பத்தான் முதல் முறைன்னாலும் ஏதோ எல்லோரோடயும் ரொம்ப நாள் பேசிப்பழகியிருந்த
மாதிரியே தோணுச்சு. சுருக்கமாச் சொன்னா நிறைவான சந்திப்பு, அருமையான நண்பர்கள். ராமலக்ஷ்மிக்கு
ஒரு ஸ்பெஷல் நன்றி :-)
இதுக்கு முன்னாடி பெங்களூர் போனதுக்கும், இந்தத்தடவை போயிருந்ததுக்கும் நிறைய வித்தியாசம் கண்கூடாத்தெரியுது. மெட்ரோ ரயில் நிறைய மரங்களைப் பலி வாங்கியிருக்குது. பலன்,... ஊருக்கே ஏ.சி போட்டது மாதிரி குளுகுளுன்னு இருக்கும் பெங்களூரில் ஏ.சி பஸ்கள் நிறைய ஓடுது. ரோட்டோட ரெண்டு பக்கமும் குல்மொஹர் மரங்கள்
குடை மாதிரி கவிஞ்சு நிற்க, தரையில் கொஞ்சம் கூட வெய்யில் படாத இடங்களுக்குப் பெயர்
போனது பெங்களூர். அந்தப்பெருமையைக் கொஞ்சம் கொஞ்சமா இழந்து வருதோன்னு தோணுது. இப்பல்லாம்
அந்த மாதிரிச் சாலைகள் அங்கங்கே அரிதாத்தான் இருக்குன்னு உடன்பிறப்பு சொன்னார்.
மறுநாள்
கிளம்பி பஸ்ஸைப்பிடிச்சு பயணம் வந்துட்டிருக்கும்போதும் நல்ல மழை. ஹுப்ளி வரைக்கும்
மழை துணையாய் வந்தது. இங்கே நல்லா வெயிலடிச்சுட்டிருந்த மும்பையில் இருந்த பொண்ணுக்குப்
போன் செஞ்சு சொல்லி, “எஞ்சாய்..”ன்னு காதுல புகையோட வந்த பதிலை வாங்கிக்கிட்டேன்.