Thursday, 30 December 2010

நினைவில் நின்றவை..

'ஏதாவது ஒன்றை பெறவேண்டுமானால் ஒன்றை இழக்கத்தான் வேண்டும்'ன்னு சொல்லுவாங்க. ரொம்ப கரெக்ட். பழைய வருஷத்தை இழந்தாத்தான் புதுவருஷம் கிடைக்கும்.. 2010 போனாத்தான் 2011 வரும்.. வெங்காயத்தை வெட்டினாத்தான் பஜ்ஜி சாப்பிடமுடியும். இந்தமாதிரி தத்துவமெல்லாம் வருஷக்கடைசி ஆகும்போதுதான் எக்கச்சக்கமா கொட்டுது. உங்களுக்கு தெரிஞ்ச தத்துவங்களையும் எடுத்துவுடுங்க :-)))))

புதுவருச கொண்டாட்டத்துக்கான இறங்குமுக எண்ணிக்கை அதான் கவுண்டவுன் இஸ்டார்ட் ஆகிடுச்சு. நாளைக்கு சாயங்காலத்துலேர்ந்து ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இங்கே, அனேகமா ஒவ்வொரு அபார்ட்மெண்டுலயும் விழாக்கள் நடைபெறும். விருந்தும் இருக்கும். அதனால புதுவருஷத்தை கொண்டாடுறதுக்குன்னு ஸ்பெஷலா வெளியே எல்லாம் போறதில்லை.

இப்படித்தான், 2002 டிசம்பர் 31ஐ கொண்டாடணும்ன்னு நாங்க ஆறு பெண்கள் சேர்ந்து, ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சோம். அப்புறம், நிதி வசூலிச்சு அபார்ட்மெண்ட் மொத்தமும் கொண்டாடலாம்ன்னு திட்டம் விரிவாச்சு. அபார்ட்மெண்டில் பொதுவா ஒருத்தருக்கொருத்தர் அவ்வளவு ஈஸியா அறிமுகம் ஆகமாட்டாங்க. அதனால, ஒரு ஐடியா செஞ்சோம். குழந்தைகளோட கலை நிகழ்ச்சிகள் முடிஞ்சதும், ஒவ்வொரு குடும்பமா முன்வந்து, தன்னையும் குடும்பத்தினர்களையும் அறிமுகப்படுத்திக்கணும்ன்னு சொன்னதுக்கு ரொம்பவே வரவேற்பு கிடைச்சது. அப்படியே கையோட ஒரு நினைவுப்பரிசும் கொடுத்ததும் அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம் . மொட்டைமாடியில் விழா நடந்துச்சு. கேட்டரிங்கில் சொல்லி டின்னரும் ஏற்பாடாகியிருந்தது.

காத்து சும்மா பிச்சுக்கிட்டு போகுது. மார்கழிக்குளிருக்கு கேக்கவா வேணும். எல்லோரும் குளிரில் நடுங்கிக்கிட்டிருக்க, நான் குளிரிலும் கைவலியிலும் நடுங்கிக்கிட்டிருந்தேன். ஏன்னா, முந்தின நாள்தான் பாத்ரூம் தரையில் சிந்தியிருந்த ஆலா கரைசலில் கால்வழுக்கி கையை உடைச்சுக்கிட்டேன். எலும்பு முறியாம தசை மட்டும் முறிஞ்சு, முழங்கையிலிருந்து மணிக்கட்டுவரைக்கும் அங்கங்கே ஸ்பீட்ப்ரேக்கர்மாதிரி வீக்கங்கள். ஆனாலும், விடாப்பிடியா விழாவில் கலந்துக்கிட்டேன். இப்பவும் டாக்டரிடம் போகும்போது எப்போ அடிபட்டுச்சுன்னு கேட்டா, ஞாபகசக்திக்கு போட்டுக்கிட்ட முடிச்சுமாதிரி, நினைவுவர்றது அந்த புத்தாண்டுதான். அதுக்கப்புறம் எத்தனையோ புத்தாண்டுகள் வந்தாலும் இன்னிக்கும் எங்க பில்டிங்கில் அந்த முதல்புத்தாண்டைதான் பாராட்டுறாங்க.

இன்னொரு சமயம்,.... அப்ப, நாங்க அலிபாக்கில் இருந்தோம். அந்தத்தடவை நியூ இயர் கொண்டாட்டத்தை நாங்க நண்பர்கள் மட்டும் தனியா கொண்டாடலாம்ன்னு கலந்துபேசி முடிவெடுத்தோம். ரங்க்ஸோட ஃப்ரெண்ட்ஸ் , நாங்க, அப்புறம் மேலதிகாரின்னு மொத்தம் ஆறு குடும்பங்கள். ரெண்டு ஜீப்புகள்ல புறப்பட்டோம். குட்டீஸெல்லாம் நண்டும் சுண்டுமா இருந்த சமயம். எங்கே போகலாம்ன்னு மட்டும் முடிவெடுக்கலை.

அலிபாக்கை சுத்தி நிறைய கடற்கரைப்பிரதேசங்கள் உண்டு. அப்படியே போயிக்கிட்டிருப்போம். எங்கே தோணுதோ அங்கே வண்டியை நிறுத்திக்கலாம்ன்னு பேச்சு. கொறிக்கிறதுக்கு ஏதாவது வேணுமில்லையா.. கொஞ்சம் பொரி, பொரிகடலை, நிலக்கடலை, ஓமப்பொடி, வெங்காயம்( அப்ப கிலோ ஒரு ரூபாய்க்கு வித்தது.. ஹூம்..), கொத்தமல்லி இலைன்னு பேல்பூரி செய்ய தேவையான எல்லாத்தையும் வாங்கி பாக்கெட் போட்டுக்கிட்டோம்.

வண்டியில போயிக்கிட்டிருக்கும்போதே, பேசிப்பேசி கடைசியில, 'மாண்ட்வா' போகலாம்ன்னு முடிவாச்சு. அங்கே பீச்சும் நல்லாருக்கும். அதேமாதிரி கடலுக்குள் கொஞ்சதூரம் நடந்து போகிறமாதிரி ஒரு பாலமும் உண்டு. அன்னிக்கு, பாலத்துல எக்கச்சக்க கூட்டம். சில இடங்களில் ஸ்டவ் வெச்சு, சமையல் நடந்துக்கிட்டிருக்குது. 'குடிமகன்'கள் வேணுங்கிறதையெல்லாம் வாங்கிட்டு வந்து அங்கியே சமைச்சு சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்றுக்கிட்டிருந்தாங்க.

நாங்க, பக்கத்துல இருந்த ஜெட்டில(jetty) அடைக்கலமாகிட்டோம். கொண்டுபோயிருந்த பெட்ஷீட்டுகள், நியூஸ்பேப்பர்களெல்லாம் விரிப்புகளாக அவதாரமெடுத்துச்சு. பக்கத்துல மணல்ல 'bonfire' ரெடிசெஞ்சது குளிருக்கு இதமாயிருந்தது. கொண்டுபோயிருந்த பெரிய பாத்திரத்துல, பேல்பூரிக்கான பொருட்களைக்கொட்டி, எலுமிச்சை சாறு கலந்து ரெடிபண்ணோம். பேச்சும் சிரிப்புமா, கடல்காத்தோட குளிர்ல நடுங்கிக்கிட்டே கொண்டாடிய புத்தாண்டு இன்னிக்கும் பசுமையா நினைவிருக்கு.

ஒவ்வொருத்தரா ட்ரான்ஸ்பர் ஆகி வெவ்வேறு ஊர்களுக்கு போயிட்டாலும், சிலகுடும்பங்கள் மட்டும் அவ்வப்போது சந்திச்சுப்போம். அதுமாதிரி சமயங்களில், அலிபாக் வாழ்க்கையை பத்திதான் கூடுதலும் பேசிப்போம். முக்கியமா, எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பண்டிகைகளையும் விழாக்களையும்.. எத்தனையோ புத்தாண்டுகள் வந்தாலும் இது ரெண்டையும் மறக்கவேமுடியாது..

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Wednesday, 29 December 2010

காலி செஞ்சுட்டேன்..

ரொட்டி, சப்பாத்தி செய்யறதுகூட கஷ்டமில்லீங்க.. அதுக்கு சைடிஷ் செய்யறதுதான் நொள்ளைபிடிச்சது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வெரைட்டியா இருக்கணும். ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ன்னு பின்னூட்டம் போடறது வேண்ணா நல்லாருக்கும். ஆனா, சைடிஷ் மட்டும் குறைஞ்சது ஒருவாரத்துக்கப்புறம்தான் ரிப்பீட் ஆகணும்.

காலையில எந்திருக்கும்போதே சப்பாத்தியோட முகத்தில முழிக்கிற எங்கூர்க்காரங்களுக்கே இது ஒரு சவால். மதியம் டப்பாவுக்கு, ராத்திரிக்குன்னு ஒரு நாளைக்கு ரெண்டுவிதம். இதுல, ரிப்பீட்டும் ஆகாம பாத்துக்கணும். என்னதான் வீட்டுல உள்ளவங்க டிமாண்ட் செய்யலைன்னாலும் நமக்குன்னு ஒரு கெத்து இருக்கில்ல... அதை விட்டுக்கொடுக்க முடியுமா :-)))).

இப்ப சொல்லியிருக்கிற கறி செய்றதுக்கு ரொம்ப சிம்பிளானது. பேச்சிலர்கள்கூட கஷ்டமில்லாம செஞ்சுடலாம். இப்ப இதை செஞ்சு டேஸ்ட் பாருங்க. அப்பப்ப இதைமாதிரி கறிவகைகளை எடுத்துவுடறேன்.

ஒரு காலிஃப்ளவர், ரெண்டு உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் சீரகம், மூணு பச்சைமிளகாய், அரைகிண்ணம் நறுக்கிய கொத்தமல்லி இலை, அரைகப் ஊறவைத்த கடலைப்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள், 1டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் கரம்மசாலா, தேவைக்கேற்ப உப்பு இருந்தா இதை ஈஸியா செஞ்சுடலாம்.

 பருப்பு ஊறவைக்க நேரமாகுமேன்னு நினைக்கவேண்டாம்.  கொதிக்கவைத்த தண்ணீரை ஃப்ளாஸ்க், அல்லது ஹாட்பேக்கில் விட்டு அதுல பருப்பைப்போட்டு மூடிவெச்சுடுங்க. ஜஸ்ட்... பதினஞ்சு நிமிஷத்துல ஊறிடும். அதுக்குள்ள, நீங்க காய் நறுக்கி, மசாலா அரைச்சு வெச்சுட்டு, சப்பாத்தியை ரெடிபண்ணுங்க.. இல்லைன்னா வேற வேலை ஏதாவது இருந்தா பாத்துட்டு வாங்க.

காலிஃப்ளவரை சின்னச்சின்ன பூக்களாக உதிர்த்து வெச்சுக்கோங்க, உருளைக்கிழங்கை ஒரு இஞ்ச் அளவுக்கு துண்டுபோட்டுக்கோங்க.
சீரகம், கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய், மஞ்சள், கரம்மசாலா இதையெல்லாம் நல்லா மசிய அரைச்சு வெச்சுக்கோங்க.

இப்ப, அடுப்பில் சூடாகிக்கிட்டிருக்கிற கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்களையும், கடலைப்பருப்பையும் லேசா வதக்குங்க. அப்புறம் அரைச்சுவெச்ச மசாலாவை போட்டு நல்லா கிளறிவுடுங்க. பச்சைவாசனை போனதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைகப் தண்ணீரும் ஊத்தி, தேவையான அளவு உப்பும் போடுங்க. இப்ப, இதை குக்கரில் ரெண்டுவிசில் வரும்வரை வேகவிடுங்க. ப்ரஷர் பேனில் செய்யறதாயிருந்தா அப்படியே மூடிபோட்டு வெயிட்டை போட்டுடலாம்.


அவ்வளவுதான்... வெந்ததும் அதை மறுபடி ஒரு நிமிஷம் கொதிக்கவெச்சா இன்னும் ருசியாயிருக்கும். விரும்பினால் பச்சைப்பட்டாணியும் கூடுதலா சேர்த்துக்கலாம். இப்ப சீசன்தானே...

டிஸ்கி: விருந்து எதுக்குன்னு சொல்ல மறந்துட்டேனில்ல..... தமிழ்மணம் முதல்சுற்றில், 'பாறையில் ரெண்டுமண்டபம்' , அப்புறம், 'குழந்தைகள் பலவிதம்' ரெண்டும் தேர்வாகி ரெண்டாம் சுற்றுக்கு போயிருக்கு. வாக்களித்த அனைவருக்கும் நன்றி...Friday, 24 December 2010

விழுதுகள் இருக்கும்வரை...

'பன்னிரண்டு.. பதிமூணு.. பதினாலு.....'

ஒரு பழைய துப்பட்டாவை ரெண்டாக மடித்து, தரையில் விரிக்கப்பட்டிருந்தது. துணிகளை ஒவ்வொன்றாக எண்ணிப்போடப்போட அவனும் கூடவே உதடுபிரியாமல் எண்ணிக்கொண்டிருந்தான். கணக்கு தப்பிவிடக்கூடாதே!!.. அப்புறம் ஒரு துணி குறைஞ்சாலும் வீட்டுக்காரங்ககிட்டயும், முதலாளிகிட்டயும் திட்டு வாங்க வேண்டிவருமே.

'பதினஞ்சு'.. என்ற முத்தாய்ப்புடன் கடைசி துணியும் போடப்பட்டதும், துப்பட்டாவின் முதல் ரெண்டு நுனிகளையும் சேர்த்து குறுக்காக இழுத்துக்கட்டிவிட்டு, மறு நுனிகளையும் இழுத்துக்கட்டி முடிச்சுப்போட்டான். பின்,.. நுனியில் ட்வைன் நூலில் கட்டப்பட்டிருந்த சின்ன அட்டைத்துண்டில் முந்தைய எண்ணை பேனாவால் அழித்துவிட்டு '15'  என்று எழுதி சுழித்தான். மூட்டையை தூக்கி சைக்கிள் காரியரில் வைத்துக்கொண்டே, ' நாளைக்காலைல கொண்டாந்து தந்துடுப்பா' என்ற குரலுக்கு தலையசைத்துவிட்டு கடையை நோக்கி சைக்கிளை மிதித்தான்.

டேபிளின் ஒரு ஓரத்தில், கணக்குப்புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த வேலு, கண்ணாடியினூடாக கண்களை மட்டும் நிமிர்த்தி அவனைப்பார்த்துவிட்டு எழுதுவதை தொடர்ந்தார். அருகே போனவன், அன்றைக்கு எடுத்துவந்த துணிகளின் விவரத்தை ஒவ்வொன்றாக சொல்லச்சொல்ல, புத்தகத்தில் வீட்டு நம்பரையும் அதற்கு நேராக துணிகளின் எண்ணிக்கையையும் எழுதிக்கொண்டு அதன் பக்கத்தில் வசூலிக்கவேண்டிய பணத்தையும் எழுதிவைத்தார். கணக்கில் அவர் எப்பவுமே கறார். ஒரு ரூபாய் என்றாலும் அடுத்தவன் காசு அவர்கிட்ட வைத்துக்கொள்ளமாட்டார். அந்தப்புத்தகத்தைத்தான் அயர்ன் செய்யப்பட்ட துணிகளை வீடுகளில் டெலிவரி கொடுக்கும்போது பசங்களிடம் கொடுத்துவிடுவார். இன்னிவரைக்கும்,... ஒரு துணி தொலைஞ்சதுன்னோ, பணவிஷயத்திலோ ஒரு குழப்பமும் வந்ததில்லை.

'மீரா ட்ரை க்ளீனர்ஸ்'.. அவருடைய மூத்த பெண்ணின் பெயரால் தொடங்கப்பட்ட கடை. துணிகளுக்கு பெட்டிபோட்டுக்கொடுப்பது, விலையுயர்ந்த புடவைகளை உலர்சலவை செய்து கொடுப்பது, மற்றும் விரும்பிக்கேட்பவர்களுக்கு துணிகளை ஸ்டார்ச் செய்து கொடுப்பது என்று தொழிலை விஸ்தரித்திருந்தார். இன்றைக்கு ஓரளவு வசதி வந்துவிட்டபோதிலும் ஆரம்பத்தில் கைவண்டியில் சென்று பெட்டிபோட்டுக்கொடுத்த காலத்தை அவர் என்றுமே மறந்ததில்லை. படித்துமுடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் சோறுபோட்ட தெய்வமல்லவா அது.

அப்போது ஒருதடவை ஊருக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அவரது அம்மா, ' எப்பா!!.. இவனையும் ஒன்னோடவே பட்டணத்துக்கு கூட்டிட்டுப்போயி ஒரு வழியை காமிச்சு விடேன். ஒனக்கு புண்ணியமா போவும்' என்று வைத்த வேண்டுகோளை தட்டமுடியாமல் போகவே கையோடு கூட்டிவந்தார். வந்தபின்தான் பட்டணத்துவாழ்வும், எவ்வளவோ அலைந்தபின்னும் வேலை கிடப்பது குதிரைக்கொம்பு என்ற நிதர்சனமும் புரிபட, மேற்கொண்டு என்னசெய்வது என்று புரியாமல் திகைத்து நின்றார். திரும்பவும் எந்தமுகத்தை வைத்துக்கொண்டு ஊருக்கு போவது. அம்மா ஊர்க்காரர்கள் முகத்தில் எப்படி விழிப்பாள் என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. அப்போதெல்லாம் எந்நேரமும் வீட்டிலிருக்கப்பிடிக்காமல் பக்கத்திலிருந்த மைதானத்துக்குப்போய் போகிறவருகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம்.

அப்படி போனதில்தான் அங்கே ஒரு இஸ்திரி வண்டியை வைத்திருந்த நீலகண்டன் பழக்கமானான். அவனுடன் உட்கார்ந்துகொண்டு பேசிப்பொழுதைப்போக்கியதில் இந்தத்தொழிலின் நெளிவுசுழிவுகளை நன்றாகவே கற்றுக்கொண்டுவிட்டார். புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் வந்ததாம்... வேலுவுக்கு வேப்பமரத்தடியில் ஞானம் வந்தது. யாரையும் ஏமாற்றக்கூடாது.. பொய்சொல்லக்கூடாது.. திருடக்கூடாது... மற்றபடி ஆகாயத்துக்குக்கீழே எந்தத்தொழிலும் இழிவானதல்ல என்று முடிவு செய்தார். உறவினரிடம் சொல்லிவிட்டு சில நாட்களிலேயே அவரும் ஒரு மொபைல் இஸ்திரிக்கடையை ஆரம்பித்துவிட்டார். அந்த ஏரியாவில் நல்லபெயர் கிடைத்தது... ஒரு நாள் வங்கிக்கடனுதவியுடன் ஒரு கடையையும் திறந்துவிட்டார்.

கடைன்னா எதுவும் பெரிசா கிடையாது.. பத்துக்கு பன்னிரண்டில் ஒரு அறை. அதில் ரெயில்வே பெர்த்தை முக்காலளவு அளந்து நறுக்கியமாதிரி நாலு மேசைகள். முன்பக்க மேசை சமயத்தில் கல்லாவாகவும் அவதாரம் எடுக்கும்.ரெண்டு அங்குல உயரத்தில்,..பருத்திப்பஞ்சடைத்த முண்டுமுடிச்சில்லாத மெத்தைகள் அதன்மேல். அதுக்குமேல மெத்தைக்கு உறைபோட்டமாதிரி ஒரு வெள்ளைத்துணி. ஒவ்வொரு மேசையின் மேலயும் ஒரு இஸ்திரிப்பெட்டி. அதன் தொப்புள்கொடிமாதிரி நீண்டுசெல்லும் ஒயர் மேலேயிருக்கும் மின்சார இணைப்பில் போய் முடியும். பகலில் வேலையிடமாயிருக்கும் மேசைகள் இரவானால் அங்கே வேலை செய்யும் பையன்களுக்கு சப்ரமஞ்சமாகிவிடும்.

சாயந்திரம் துணிகளை சரிபார்த்து அடுக்கிக்கொண்டிருந்தபோது, அவர் மகன் வந்தான். எப்போதாவது அத்திபூத்தமாதிரி எட்டிப்பார்ப்பான். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன் என்று சொல்லுவார்கள். இவன் தோழனாகவும் இல்லை.. மகனாகவும் இல்லை. அப்பா செய்யும் தொழில் என்னவோ அவனுடைய கவுரவத்தையே குலைப்பதாக அவனுக்கு நினைப்பு. ' இந்தக்காசில்தான் உங்களையெல்லாம் படிக்கவெச்சேன், வளர்த்திருக்கேன். எது உன் உடம்பை வளர்த்ததோ அதை கேவலமா நினைக்காதேடா' என்று ஒரு நாள் பொரிந்துவிட்டார். ஆனாலும், அப்போது அந்தப்பணம் மட்டும் அவனுக்கு வேண்டியிருந்தது.

"அண்ணாச்சி...." தலையை சொறிந்துகொண்டு வந்து நின்றான் பையன்களில் ஒருத்தன்.

"என்னடா...??"

" நம்மூர்ல அம்மன் கோயில்ல பூக்குழி எறங்குதாகல்லா.. அதுக்கு போகணும். ஒரு பதினஞ்சு நாளு லீவு வேணும்"

"அண்ணாச்சி... இப்பத்தான் அம்மை போன் பேசுனா... 'கண்ணுக்குள்ளயே நிக்க.. ஒரு எட்டு வந்து மொகத்தைக்காட்டிட்டு போ..' அப்டீன்னு அழுவுறா.." இன்னொருத்தன் வாய்க்குள்ளயே முனகினான்.

"ஏண்டா... பூக்குழிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே.. அதுக்குள்ள ஏன் பறக்கறே.. எனக்கும்தான் அது சாமி... கையில இருக்கிற வேலையை முடிச்சுக்கொடுத்துட்டு, எல்லார்ட்டயும் லீவுசொல்லிட்டு, அப்புறம் போகும்போது எல்லோரும் ஒண்ணுமண்ணா போலாம் சரியா...??"

பையன்கள் ஒருத்தருக்கொருத்தர் முகத்தைப்பார்த்துக்கொண்டு அப்படியே நின்றார்கள்.எல்லோருக்கும் பின்னால் நின்றுகொண்டிருந்த நாராயணன் முன்னால் வந்தான்.. 'இல்ல அண்ணாச்சி.. நாங்க வேலையை விட்டே போப்போறோம். உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தயங்கித்தான் ஊருக்கு போனப்புறம் அங்கிருந்தே தகவல் சொல்லலாம்ன்னுதான் நெனைச்சேன். பரவால்ல.. எங்க கணக்கை தீர்த்துடுங்க. நாங்க வேற வேல செஞ்சு பொழச்சிக்கலாம்ன்னு முடிவெடுத்துருக்கோம்...'

"இப்படி திடீர்ன்னு வந்து கேட்டா எப்படிடா...??. இங்க வேலையெல்லாம் அப்படியப்படியே கிடக்குதுல்லா.. ரெண்டு நாளு முன்கூட்டியே சொல்றதுக்கென்ன??.. நான் ஏதாவது வேறஏற்பாடு பண்ணியிருப்பேன்லா...."

ஒன்றும் சொல்லாமல் அவர்கள் நிற்பதை பார்த்ததுமே,.. ஏற்கனவே பேசித்தான் செய்கிறார்கள். இவர்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று புரிந்துபோனது. 'சரிடா... எங்கிருந்தாலும் நல்லாருங்க. உங்க சம்பளத்தை நான் உங்க வீட்டுக்கே அனுப்பிடுறேன். பேங்குக்கு போயித்தான் எடுத்தாரணும்..' என்று சொல்லவும், காத்திருந்தவர்கள் போல ஏற்கனவே தயாராக இருந்த உடமைகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

கடையினுள் பார்வையை சுழற்றிய வேலுவுக்கு மலைப்பாக இருந்தது. பெட்டி போடப்படவேண்டிய துணிகள் மலைமாதிரி குவிந்து கிடந்தன..டெலிவரி செய்யப்படவேண்டியவை பக்கத்து அலமாரியில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பார்க்கப்பார்க்க அவர்மனதில் உணர்வுகள் போட்டிபோட்டுக்கொண்டு வந்தன.

'இப்படி திடீர்ன்னு தனியாவிட்டுட்டானுகளே..' என்றது ஒரு மனசு.

'வாடிக்கையாளர்களெல்லாம் கோவிச்சுப்பாங்களே.. நேரத்துக்கு டெலிவரி தரணுமே. இத்தனை நாளு இல்லாம இப்பப்போயா கெட்டபேரு வாங்கணும்..' என்று இன்னொரு மனசு பதட்டப்பட்டது.

அலைபாய்ந்துகொண்டிருந்தவர்,. படீரென்று எழுந்தார்.. ' போங்கலே... நீங்கல்லாம் இல்லேன்னா நானொண்ணும் ஓய்ஞ்சு போகமாட்டேன். இன்னும் என் கையில தெம்பிருக்கு. உழைக்க மனசுல வலுவிருக்கு.ரெண்டு நாளு ராத்திரி பகல்னு வேலை செஞ்சா எல்லாத்தையும் சரிசெஞ்சுற மாட்டனா. மொதலாளியாயிட்டாலும் நான் இன்னும் தொழிலாளிதாம்...'.. பரபரவென்று துணிமூட்டையொன்றை அவிழ்த்துக்கொட்டி, துணியொன்றை எடுத்து தண்ணீரை ஸ்ப்ரே செய்துவிட்டு, இஸ்திரிப்பெட்டியின் பட்டனை ஆன் செய்தார்.

பக்கத்து டேபிளிலும் பெட்டி ஆன் செய்யப்படுவதைப்பார்த்து திரும்பிப்பார்த்தார். இந்தக்களேபரத்தில் அவர் கவனிக்காமல் போன அவர்மகள் துணிகளை உதறிப்போட்டுக்கொண்டிருந்தாள்.. ஒரு புன்னகையுடன் அவளைப்பார்த்துவிட்டு திரும்பியவர் கண்களில்..  அவர் மகன் கடைக்குள் வந்து சட்டையை கழட்டி ஆணியில் தொங்கப்போட்டுவிட்டு, முன் பக்க மேசையில் நிற்பது தெரிந்தது...

என் விழுதுகள் இருக்கும்வரை நான் பட்டுப்போகமாட்டேன்... அந்த ஆலமரம் சொல்லிக்கொண்டது மனசுக்குள்.....

டிஸ்கி:  என்னுடைய வலைப்பூ நேற்றுடன் முதல்வருடம் முடிவடைந்து இன்று இரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வுக்காக எழுதப்பட்டது சற்றே பெரிய இந்த சிறுகதை. ஒரு வருடமாக இதைப்போலவே பொறுமையுடன் என்னுடைய எழுத்துக்களை வாசித்ததற்கும், பின்னூட்டமிட்டு ஆதரவளித்ததற்கும்,.. பின் தொடர்ந்து ஊக்குவித்ததற்கும் ஒரு வார்த்தையில் அடக்கிச்சொல்லிவிட முடியாத நன்றிகள்..Wednesday, 22 December 2010

இப்படியும் நடக்குமோ!!!..

'கிடைச்சிருக்கிற தகவல் சரிதானா??.. உறுதிப்படுத்திக்கிட்டீங்களா'

'நூறுசதவிகிதம் உண்மைதான்.. இந்தமுறை நாம ஏமாறமாட்டோம் சார்'

'போனதடவைமாதிரி அங்க போனப்புறம் ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சது... அப்றம் உங்க எல்லாருக்கும் இருக்குது'

'இல்ல்ல சார்..'

'ஜீப்பை ரெடி பண்ணச்சொல்லுங்க.. ஆயுதமெல்லாம் பக்காவா எடுத்து வெச்சிட்டீங்கல்ல'

'எல்லாம் ரெடி சார்.'

'ஓ.கே... ஜீப்புல ஒரு பத்துபேர் போதும்... பில்டிங்கை சுத்தி மத்தவங்களை நிப்பாட்டுங்க.. முக்கியமா பால்கனி பக்கம். அங்கிருந்து கீழே குதிச்சு தப்பிச்சு போயிட வாய்ப்பிருக்கு'

' நம்ம கபாலி கிட்டயிருந்து மீன்பிடிக்கிற வலையை இரவல் வாங்கிட்டு வந்துருக்கேன் சார்'

'அய்யோ... என் புத்திசாலி'  வழிச்சு முறிச்சதில் படபடன்னு உடைஞ்சு போகுது திருஷ்டியெல்லாம்.

'கமான்.. ஃபாலோ மீ'

தடதடவென எல்லோரும் ஏறிக்கொண்டபின் எல்லோரும் ஏறியாச்சான்னு உறுதிப்படுத்தியபின் அதிகாரி ஏறி உட்கார்ந்தார்.

'உய்ங்..உய்ங்..உய்ங்....'

'சைரனை நிறுத்துங்கப்பா.. உஷாராகிடப்போறாங்க'

வண்டி மெதுவாக கட்டிடத்தின் முன் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து எல்லோரும் இறங்கினார்கள்.

'நாலு பேரு அப்படி போங்க.. நாலுபேரு இப்படி போங்க.. மீதியிருக்கிறவங்க என்பின்னாடி வாங்க'

டிங்க்.... டாங்..... அழைப்புமணி அடித்தது.

கதவை திறந்த பெண், வாசலில் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்துவிட்டு.'யெஸ்' என்றாள்.

'மேடம்... உங்க வீட்டுல சட்டவிரோதமா பதுக்கல்பொருள் இருக்கிறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு. சோதனை போட வந்திருக்கோம்' என்றார் ஆபீசர்.

'அதுக்கு ஏன் பழைய பேப்பர் வாங்குறவரையும் கூட்டிட்டு வந்திருக்கீங்க.. எங்க வீட்டுல அப்படி எதுவும் பதுக்கி வைக்கலை.. நம்புங்க'

பின்னால் திரும்பிப்பார்த்தவர் ஜெர்க்கானார். நீ போப்பா என்று பேப்பர்காரரை அனுப்பிவிட்டு, 'பாவிப்பசங்க.. வழக்கம்போல காலைவாரிட்டாங்க' என்று மனதுக்குள் பொருமியபடியே,

'மேடம்.. நாங்க O.C.+B&Iலேர்ந்து வந்திருக்கோம்' என்றபடி அடையாள அட்டையை எடுத்து நீட்டினார்.

வேறுவழியில்லாமல் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டியதாயிற்று அந்தப்பெண்ணுக்கு.

நேராக பால்கனிக்கு சென்று அங்கிருந்து கீழே நின்றுகொண்டிருந்த மற்றவர்களுக்கு குரல்கொடுப்பதற்காக சென்றவர் கண்களில் அது பட்டுவிட்டது.

'ஹெ..ஹெ..ஹெ.. என் கழுகுக்கண்ணுலேர்ந்து எதுவுமே தப்பமுடியாது' என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டவர், வீட்டின் உள்புறமாக திரும்பி

'எதுவுமே பதுக்கிவைக்கலைன்னு சும்மாதானே சொன்னீங்க...அப்படீன்னா இது என்னாது!!!.. அரசாங்கத்துக்கு தெரியாம இதையெல்லாம் வளர்க்குறது சட்டப்படி விரோதம். கவர்மெண்டைதவிர யாருக்கும் இதை வெச்சுக்கிற உரிமை கிடையாது. இதை இப்பவே நீங்க அரசாங்கத்துக்கிட்ட சரண்டர் பண்ணனும்'

அடடா!!.. தப்பிக்க முடியாதோ..

'ஆப்பீசர்.. ஆப்பீசர்... இந்த ஒரு வாட்டி மன்னிச்சு விட்டுடுங்க.. இனிமே தெரிஞ்சு, இந்த தப்பை செய்யமாட்டேன், ப்ளீஸ்'

'அதெல்லாம் முடியாது..இதை கொண்டுபோறதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை'

'வேண்ணா, உங்களுக்கும் பங்கு தரேன் ஆப்பீசர்... ப்ளீஸ்'

'ம்ம்.. சரி. ரொம்ப கெஞ்சி கேக்குறதுனால மன்னிச்சு விட்டுடறேன். அறுவடையானதும், ஒழுங்கா எங்கவீட்டுக்கு அனுப்பிவைக்கணும். புரிஞ்சதா!!

'சரி ஆப்பீசர்.'


எவ்வளவோ ரகசியமாத்தான் இவனை வெச்சி பாதுகாத்துக்கிட்டு வர்றேன்.. யாரு போட்டுக்குடுத்ததுன்னு தெரியலியே....


டிஸ்கி: தலைப்பை மறுபடியும் படிங்க :-)))))

Monday, 20 December 2010

இசை மழையில்...

மெல்லிய மாலை நேரம்.. இருள் கவிந்தும் கவியாமலும் ஒரு பிஞ்சுப்பொழுது, அரவங்கள் அடங்கத்தொடங்கும் முன்னிரவு,.. கனமான இருட்டைப்போர்த்தி உறங்கும் அமைதியான இரவு.. எந்நேரமென்றாலும் இசையையும் பூசிக்கொண்டவுடன் அழகாகவே ஆகிவிடுகின்றன.   ஊரே உறங்கும் ஜாமத்தில் அமைதியான சூழலில் நமக்கு பிடிச்ச பாடல்களை நமக்கு மட்டும் கேட்கும்படியான ஒலியில் ரசிப்பது ஒரு தனியின்பம்.. ..

அதிலும் பெண்குரல்களில் பாடல்கள் கேட்பதென்பது இன்னும் அழகான அனுபவம். மூளையின் ஞாபகஅணுக்களில் உறைந்திருக்கும்,  தாலாட்டுப்பாடல்களை நினைவுபடுத்துவதால் கூட இருக்கலாம். காதுல மாட்டுன ஹெட்போனோட நம்மையறியாமலேயே தூங்கிப்போவோம். தேனின் எந்தத்துளி மிகவும் இனிப்பானது என்று அடையாளப்படுத்த முடியாது.. அதுமாதிரிதான் பாடல்களும்.. பெண்குரல்களில் ஒலிக்கும் பிடித்தமான பத்து பாடல்களை தொகுத்து வழங்கி தொடர்கிறேன் சகோ எல்.கே அழைத்த இந்த தொடர்பதிவை.. இந்த கொண்டாட்டமான இடுகைக்கு இன்னுமொரு விசேஷம் இருக்குது கடைசி பத்தியில்...

இசையின் பெருமையை இதைவிட அழகாக விளக்கிவிடமுடியுமா!!! இளையராஜாவின் இசையில் கங்கை அமரனின் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சுஜாதா.

1.ஒரு இனிய மனது.. சுஜாதா.
http://www.youtube.com/watch?v=_JVxurtGIhI&feature=related

ஒருவித குழந்தைத்தனமான குரல், ஸ்ரீதேவிக்கு நல்லாவே பொருந்திப்போகுது..
2.மலர்களில் ஆடும் இளமை எஸ்.பி. ஷைலஜா.
http://www.youtube.com/watch?v=L3UY8SQi378

கவிஞரின் வரிகளும் ஜென்சியின் காந்தக்குரலும்.. லாங்ட்ரைவ் செய்யும்போது கேக்க இன்னும்அருமையா இருக்கு..
3.அடிப்பெண்ணே.. ஜென்சி.
http://www.youtube.com/watch?v=cmQZ9GMt71M&feature=related

ஜானகியம்மாவின் எல்லாப்பாடல்களுமே பிடிக்கும். குழந்தைக்கும், குடுகுடு பாட்டிக்கும் ஏத்தமாதிரியான மேஜிக் குரல் அவரோடது. அதென்னவோ முன்னிரவுகளில் இவரோட பாடல்கள் இன்னும் கொஞ்சம் ஜெகஜ்ஜாலம் காட்டுது :-)). இந்த ரெண்டு பாட்டுகளும் சும்மா சாம்பிளுக்காக..
4.புத்தம் புது காலை--- எஸ். ஜானகி
http://www.youtube.com/watch?v=pwr17VHk8GY&feature=related

சின்னச்சின்ன-- எஸ். ஜானகி
5.http://www.youtube.com/watch?v=h4QtTt3iYOk&feature=related

இனிமையும், சின்னதா ஒரு கம்பீரமும் இழைஞ்சுருக்கும் இவரோட குரலில் எல்லாப்பாடல்களுமே அருமையானவை.லிஸ்ட் போடறதாயிருந்தா ஒரு இடுகை பத்தாது :-)))
6. நாளை இந்த வேளை பார்த்து.. பி. சுசீலா.
http://www.youtube.com/watch?v=Znr9PHjFkks

இந்தப்பாடலை முணுமுணுக்காதவர்களே இருக்கமுடியாது. கண்ணதாசனின் சாகாவரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒண்ணு.
7.நினைக்கத்தெரிந்த மனமே... பி.சுசீலா.
http://www.youtube.com/watch?v=-lTpkK9ZOj0&feature=channel

பஞ்சாமிர்தத்தில் மறைஞ்சு நின்னு லேசா தலைகாட்டுமே, அப்படியானதொரு தேனின் தித்திப்பு இவங்க குரலில். அதில் இந்தப்பாடல் ரொம்பவே விசேஷம்.
8.மேகமே.. மேகமே.... வாணி ஜெயராம்.
http://www.youtube.com/watch?v=0CBlDFmDnac&feature=related

தமிழில் சித்ராவின் ஆரம்பக்கட்டப்பாடல்களில் அசத்தலான இதுவும் ஒண்ணு.
9.பூவே பூச்சூடவா... சித்ரா.
http://www.youtube.com/watch?v=TCjh5h-ZaRI


10.கண்ணாமூச்சி ஏனடா... சித்ரா.
http://www.youtube.com/watch?v=cb5444i2bwg&feature=fvw

வடக்கே திரையிசையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர். இசையென்பது மொழிக்கெல்லாம் அப்பாற்பட்டது.. இவரோட குரலும் அப்படித்தான்
11.ஆராரோ.. ஆராரோ..... லதா மங்கேஷ்வர்.
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=19803&br=medium&id=3700&songname=Aaraaro&page=movies

ஒவ்வொரு வரிகளா மேற்கோள் காட்டத் தேவையில்லாதபடிக்கு எல்ல்லோருடைய சின்னச்சின்ன ஆசைகளையும் சேர்த்துவைத்திருக்கிறது இந்தப்பாடல்.
12.சின்னச்சின்ன ஆசை... மின்மினி
http://www.youtube.com/watch?v=Czhkrwzqvww

பத்துன்னு சொல்லிட்டு பன்னிரண்டு பாடல்களை தொகுத்திருக்கேன்.. ஆட்டம்... பாட்டுன்னு கொண்டாட்டமா இருக்கிற இது என்னோட 100- ஆவது இடுகை.
Friday, 10 December 2010

அடைக்கோழி..

அப்படித்தான் ரிஷிகேஷுக்கு அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் பட்டப்பெயரிட்டிருந்தார்கள். குடிவந்து ஒருமாதமாகியும், அங்குள்ள தன்வயதொத்த சிறுவர்களுடன் விளையாடுவதோ, இல்லை.. பேசிக்கொள்வதோ கூட கிடையாது. பள்ளி விடுமுறையில் மற்ற பசங்களெல்லாம், அதகளம் செய்துகொண்டிருக்க, இவன் மட்டும் வீட்டுக்குள்ளேயே கிடப்பது சற்று வினோதமாகவே இருந்தது .  விடுமுறையின் ஆரம்பத்திலேயே இந்தவீட்டுக்கு வந்துவிட்டதால், ஸ்கூலுக்கு போகும்போதும் அவனைப்பார்க்கமுடிவதில்லை

"டேய்.. அவங்க வீட்டுல எப்பப்பார்த்தாலும் வீடியோகேம்ஸுலதான்,  விளையாடிக்கிட்டிருக்காண்டா"... குமார் வீட்டுக்காம்பவுண்டில் விழுந்த பந்தை எடுக்கும் சாக்கில் உளவு பார்த்து வந்து சொன்னான் நாத்ஸ் என்று காரணப்பெயரிடப்பட்ட நாதன். விடுமுறையை சாக்கிட்டு குளிக்காமல் கொள்ளாமல், எந்நேரமும் விளையாடிவிட்டு வியர்வை வாசத்துடன் இருப்பதால் அந்தப்பெயர்.

"அவங்கப்பா, கெவர்மெண்டுல பெரிய உத்தியோகஸ்தர் தெரியுமா!!.. கொஞ்ச நாளைக்குத்தான் இங்க இருப்பாங்களாம். அப்றம் கோட்டர்ஸ் கிடைச்சதும் காலிபண்ணிட்டு போயிடுவாங்களாம். கோட்டர்ஸ்ன்னா, நாம இருக்கோமே, அது மாதிரியில்ல,.. பெரிய பங்களாவே கிடைக்குமாம்".. அவங்கம்மாவும், குமாரின் அம்மாவும் பேசிக்கொண்டதை, இங்கே ஒப்பித்தான் சரவணன்.

"அப்புடியா!!.. அதாம் பய பவுர்ல திரியுதானா??" .. அரை டவுசரிலிருந்து முழுடவுசருக்கு அப்போதுதான் பிரமோஷன் வாங்கியிருந்த ஒரு விடலை முணுமுணுத்துக்கொண்டான்.

குமாரின் அம்மாவும், அப்பாவும் கூட எவ்வளவோ சொல்லிச்சொல்லிப்பார்த்து சலித்துவிட்டார்கள். மற்ற பசங்களுடன் சும்மா பேசிப்பழக.. கொள்ளக்கூடாதா என்று ஆதங்கப்பட்டாலும் ஒன்றும் பிரயோசனமில்லை.

வீட்டில், ஒன்று கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் மூழ்கியிருப்பான், இல்லையென்றால், டிவி அலறும். எதுவுமில்லையென்றால், அப்பாவுடைய காரை வரச்சொல்லி நூலகத்துக்கு போய்விடுவான். அங்கே அவனுக்கென்று ஒரு அமைதியான இடமுண்டு. அங்கே, நாலாவது அலமாரி அவனுக்கு மிகப்பிடித்தமானது. அதற்க்கும், சுவருக்குமிடையே வசதியாக அமர்ந்துகொண்டு அலமாரியிலிருக்கும் காமிக்ஸ், குழந்தைகளுக்கான நூல்கள் என்று தன்னுடைய உலகத்துக்குப்போய்விடுவான்.

'த்தடார்'.. பசங்கள் அடித்த பந்து, குமாரின் அறைஜன்னலோரம் வந்து விழுந்தது. "டேய்.. போயி எடுத்தாடா".. என்று விரட்டப்பட்டான் இருப்பவர்களிலேயே பொடியன் ஒருவன்.

"நானா,.. ஐயோ.. மாட்டேன்"

 "இப்ப நீ எடுத்துட்டு வரல, அப்றம் ஆட்டத்துல சேர்க்கமாட்டேன்"

பயந்துகொண்டே மெல்ல ஜன்னலுக்கருகில் வந்து, பந்தை எடுத்துக்கொண்டு திரும்பியவன், ஆர்வக்கோளாறில், மெல்ல ஜன்னலுக்கருகில் வந்து, உள்ளே எட்டிப்பார்த்தான். யாரையும் காணவில்லை,... கம்ப்யூட்டர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. மெதுவாக,  உள்ளேபார்த்து உரத்த குரலில்,"அடைக்கோழி" என்று கத்திவிட்டு ஓடினான். காம்பவுண்டுக்கு வெளியே வரும்போது திரும்பிப்பார்த்தான்.., ஜன்னலில் ஒரு பையனின் சிவந்தமுகம் தெரிந்தது.

"ஏய்ய்ய்.. எல்லோரும் ஓடிடுங்க.. அடப்பாவி, இப்படி எல்லாத்தையும் மாட்டிவிட்டுட்டயே" என்று திட்டியபடி அனைவரும் பாதுகாப்பான தூரத்தில் பதுங்கிக்கொண்டு குமார்வீட்டு வாசலை எட்டிப்பார்த்தார்கள். யாரும் திட்டுவதற்கு வரவில்லை.

வீட்டினுள் இருந்த குமாருக்கும் ஏக்கமாகவே இருந்தது.. கூடவே கழிவிரக்கமும். பசங்களிடம் பேச முயற்சிக்கும் ஒவ்வொரு கணமும் ஏதோவொன்று அவன் நாவை கட்டிப்போட்டுவிடும். இப்போதும், பந்தை எடுக்கவந்தவனைப்பார்த்து புன்னகைத்துவைக்க எண்ணி, அந்தமுயற்சியின் தோல்வி கோணல்களாக நெளிந்தது. மனதளவில் எப்போதோ பட்ட காயங்கள் இன்னும் ஆறாமல், இன்னும் வலித்துக்கொண்டேயிருந்து.. கூண்டைவிட்டு வெளியே வரத்துடிக்கும் அவனை இன்னும் உள்ளே இழுத்துப்போட்டது. தன்னுடைய தனிமையை மறக்க நூல்களையும், கேம்ஸையும் நண்பர்களாக்கிக்கொண்டுவிட்டான்.

"ஐயோ.. அம்மா" அலறியபடி விழுந்துகிடந்த சுபாஷின் அலறல் அவனை நினைவுக்குக்கொண்டுவந்தது. மற்றவர்கள் உதவியுடன் சமாளித்து எழுந்து நின்ற சுபாஷின் முழங்காலிலிருந்து, கொடகொடவென்று ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கீழே பதிந்து கிடந்த கண்ணாடித்துண்டின் கைங்கர்யம்.. ரத்தத்தை பார்த்ததும், பயத்தில் அவனுக்கு லேசாக தலைசுற்றத்தொடங்கியது.

 'விழுந்து வெச்சிடாதேடா'..

'சீக்கிரம் எங்கவீட்டுக்கு கொண்டாங்க'..  என்று யாரோ அழைப்பது போல் கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள், சுபாஷை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டிருந்தவர்கள்.

ஜன்னலில் குமார்தான் அவர்களை சத்தம்போட்டும், கைகளை ஆட்டியும், கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தான்.

அனைவரும் தயக்கமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டாலும்,  அவர்களையறியாமல் மெல்ல வீட்டை நோக்கி நகர்ந்தார்கள்.

"கதவு திறந்துதானிருக்கு,.. உள்ளே வாங்க"

மெல்ல கைவைத்ததும் கதவு திறந்துகொண்டது. தயக்கத்துடன் உள்ளே வந்தவர்கள், அங்கிருந்த பெஞ்சில் சுபாஷை வசதியாக அமரச்செய்துகொண்டிருந்தபோது, உள்ளிருந்து முதலுதவிப்பெட்டியுடன் வந்தான் குமார்.

"காலை நல்லா நீட்டிவை" என்று சொல்லியபடி தன்னுடைய சக்கர நாற்காலியை வாகாக தள்ளியபடி சுபாஷிடம் சென்று, டெட்டால் நீரால் காயத்தை சுத்தம் செய்தான்.

"காயம் ரொம்ப ஆழமா இருக்கும் போலிருக்கே" துடைக்கத்துடைக்க வந்து கொண்டிருந்த ரத்தத்தை கட்டுப்படுத்த ஒரு கை நிறைய பஞ்சை எடுத்து, "இதை நல்லா அழுத்திப்பிடிச்சுக்கோ" என்றபடி பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்தான்.

"ம்.. ஆஹ்ங்" உளறியபடி வாங்கிக்கொண்ட சரவணன் தன்னுடைய நண்பர்கள் குழாமை மெல்ல ஓரக்கண்ணால் பார்த்தான். அனைவர் முகமும் பேஸ்தடித்தமாதிரி இருந்தது.

'இதுதான் அவன் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதற்கு காரணமா.. விளையாடாவிட்டாலும் சும்மாவாவது பேசிப்பழகலாமே.. என்ன போச்சு!!!'.. மனதில் தோன்றியதை கேட்டுவிட்டான் சுபாஷ்.

"என்னவோ!! திடீர்ன்னு தோணுச்சு. ஒருத்தன் எம்மனசுல உண்டாக்கிய காயம்,.. இன்னிக்கு நீ பட்ட காயத்தால ஆறத்தொடங்கிடுச்சுன்னு வெச்சுக்கோயேன்.. அதிருக்கட்டும்,..  எங்கப்பா ஆட்டோ அனுப்பியிருக்கார். இப்ப வந்துடும், அங்கிள் கொடுக்கிற ட்ரீட்மெண்டுல சீக்கிரமே சரியாயிருவே..  எங்கப்பாவோட ஃப்ரெண்டு ஒரு டாக்டர், தெரியுமா!!" புன்சிரித்தபடி, சுபாஷின் ரத்தம்வழிந்துகொண்டிருந்த,.. போலியோவால் மெலிந்திருந்த காலில் கட்டுப்போட்டுவிட்டு,

"ஃப்ரெண்ட்ஸ்??".. என்று நீட்டிய கையை,

"ஃப்ரெண்ட்ஸ்!..." என்று நாலைந்து கைகள் பதிலுக்கு நீண்டு பற்றிக்கொண்டன.

அடைக்கோழி, தானிருந்த காலியிடத்தைவிட்டு மெதுவாக எழுந்து, சோம்பல்முறித்து,  புதுவுலகைப்பார்த்தது.


Monday, 6 December 2010

பேரன்புமிக்க பெரியோர்களே!!!!..

ஆகவே,.. என் இனிய தமிழ்மக்களே!!. இது நாள்வரை என்னுடைய இலக்கியக்காவியங்களை (மொக்கைகள்ன்னு ஆருப்பா கூவுறது??.. இந்தாப்பா, அவரை கொஞ்சம் நல்ல்ல்லா கவனியுங்க) பெரியமனசு செஞ்சு படிச்சு ரசிச்ச உங்களுக்கு இன்னொரு தலையாய கடமை காத்திருக்கிறது.

தமிழ்மணம் என்றொரு சாம்ராஜ்யத்தில் விருதுக்கிரீடங்களை வெல்ல ஒரு அரியவாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டியிருக்கிறது. அதாவது, உங்கள் சார்பில் எனக்கு :-)). எல்லாப்போட்டிகளிலும் நான் கலந்துகொண்டால் முதல்பரிசு எனக்கே கிடைப்பது உறுதி என்று கிளிஜோசியம் சொல்லிவிட்டது. என்றாலும், மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நான் மூன்றே மூன்று தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறேன். ஆகவே, என்னை டெபாசிட் இழக்கச்செய்யாமல், வெற்றியடையச்செய்யுமாறு வாக்காளர்களாகிய உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தொகுதி எண் -1.
படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

1.கணக்குகள் தப்பலாம்.
2.எதிர்காத்து.


தொகுதி எண்-2 

பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
குழந்தைகள் பலவிதம்


தொகுதி எண்-3
பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
பாறையில் ரெண்டுமண்டபம்.

இதில் ரெண்டு கவிதைகளுக்குமிடையே உட்கட்சி பூசல் இருப்பதால், ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்க உதவுமாறு கேட்டுக்கொல்கிறோம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்தான் தேர்தலில் நிறுத்தப்படவுள்ளார். ரெண்டுமே நல்லாயில்லை என்று சொல்லும் உண்மையாளர்களுக்கும், ரெண்டுமே நல்லாருக்கு என்று நட்பை பெருமிதப்படுத்துபவர்களுக்கும் அவர்களின் கம்ப்யூட்டருக்கு 'bug' அனுப்பப்பட்டிருக்கிறது . சந்தேகமாயிருந்தால் மைக்ரோசாப்ட் word-ல் blank document ஒன்றை திறந்து அதில் =rand (200,99) என்று டைப் செய்து, எண்டர் தட்டவும். உதவிய chetan-க்கு நன்றி :-)). ஆகவே ஏதாவதொன்றை மட்டும் தேர்வு செய்பவர்களுக்கு bug-ஐ எப்படி சமாளிப்பது என்று டிஸ்கியில் சொல்லிக்கொடுக்கப்படும் :-)

கடைசியாக ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேர்தல்கள் வரலாம் , போகலாம். கிரீடங்களும் கைமாறிக்கொண்டே இருக்கலாம். மக்களின் இதயத்தைவிடவா பெரிய பதவி கிடைத்திடப்போகிறது. நம்முடையது ஓட்டுக்களுக்கும், பதவிகளுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு நட்புவலையன்றோ!!!

ஒரு ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..

டிஸ்கி: bug-ன்னு சொன்னதும் நிறையப்பேருக்கு பக்குன்னு ஆயிடுச்சா. அது ஒண்ணுமில்ல. chetan bhagat-ன் One night @ the callcentre புத்தகத்தில் இதைப்படிச்சேன். சும்மா டைப் செஞ்சு பாருங்க. திடீர்ன்னு கம்ப்யூட்டர்ல 500-க்கும் மேற்பட்ட text வந்தா, அதைப்பார்த்து பயந்துடாதீங்க. அது M.S.WORD கூட இலவசமாவே கிடைக்கிற bug. தேர்தல்ன்னா இலவசமெல்லாம் கொடுக்கணுமில்ல.. மத்தபடி எனக்கு இந்த bug அனுப்பி சூனியம் வைக்கவெல்லாம் தெரியாது. அதனால, புல்டோசரெல்லாம் அனுப்பாதீங்க :-))
Wednesday, 1 December 2010

ஐயாம் ரிட்டர்ன்ஸ்...

வணக்கம்... ஹாய்... ஹலோ... நல்லாருக்கீங்களா?. சின்ன வெக்கேஷனா இருக்கும்ன்னுதான் நினைச்சேன்.. ஒரு லாங்ஹாலிடேயா ஆகிட்டுது.

அன்னிக்கு திடீர்ன்னு பயங்கரமா, புயல்மாதிரி காத்து வீச ஆரம்பிச்சுது.. தமிழ் நாட்டுல பயங்காட்டிக்கிட்டு இருந்த 'ஜல்' திசைமாறி இங்கே வீச ஆரம்பிச்ச மாதிரியானதொரு காத்து.. 'தடால்'ன்னு ஒரு சத்தத்தோட பால்கனியில இருந்த பூந்தொட்டி கீழேவிழுந்து உடையுது. போயி சுத்தம் பண்ணலாம்ன்னா கண்ணாடிக்கதவை திறக்கமுடியாம அந்தப்பக்கமிருந்து பயங்கரமான வேகத்தோட வீசுது. ஒரு வழியா ரெண்டுமணி நேரத்துக்கப்புறம் ஓய்ஞ்ச பேய்க்காத்து, இண்டர்னெட்டுக்கான ஒயர்களையெல்லாம் பிடுங்கிப்போட்டுட்டு போயிருந்தது.

ஒருவழியா நாலஞ்சு நாளா போன்பண்ணி, அவங்க உசிரை வாங்கினப்புறம் ஆட்கள் வந்து சரி செஞ்சுட்டுப்போனாங்க. இந்த இடைவெளியில கம்ப்யூட்டருக்கு காய்ச்சல் வந்துட்டது. நெட் கனெக்ஷன் இருக்குது.. ஆனா, இல்ல. அதாவது லாகின் செய்ய முடியலை. safe modeல் மட்டும்தான் வலைதிறக்குது. டாக்டர் கிட்ட கொண்டுபோனாத்தான் சரியாகும் போலிருக்கு.  ரெகுலரா வலைப்பக்கம் வரமுடியலை. சரி செஞ்சப்புறம் வழக்கமான அட்டெண்டென்ஸ் தொடரும்.

*************************

இந்ததடவை பிட்போட்டியில் முதல்முறையாக என்னுடைய பங்களிப்பு இரண்டாம் இடத்தை வென்றுள்ளது.. வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி..


*************************
இந்த இடுகையை ஞாபகமிருக்கா... சாக்லேட் என்றபெயரில் அல்வா கொடுப்பதைப்பத்தி எழுதியிருந்தேன்.. நாம கொடுத்தாலும் வாங்குறாங்களான்னு பரிசோதிச்சு பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தேன். சோதனையா, பர்சிலிருந்து காசை எடுக்கிறப்ப அம்பது காசு நாணயமும் சேர்ந்து வந்துடும்.. பிறகென்ன?? சாக்லெட் கொடுக்க வாய்ப்பே இல்லாம இருந்திச்சு.

போனவாரம், ஷாப்பிங் போனப்ப ,  பில்லை மானிட்டரில் பார்த்ததுமே சாக்லெட்டை எடுத்து ரெடியா வெச்சுக்கிட்டேன். ரெண்டு ரூபா அம்பது காசு இருக்குமான்னு கேட்டப்ப, ரெண்டு ரூபாய் நாணயத்தையும், அம்பது காசுன்னு சொல்லி சாக்லெட்டையும் கொடுத்தேன். மறுபேச்சு பேசாம வாங்கிப்போட்டுக்கிட்டார் பணியாளர். ஹைய்யா!!, வெற்றி..

*************************

ஒரு நாள் மார்க்கெட்டுக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது, சுமைகள் கூடிப்போனதால் ஆட்டோவில் போயிடலாம்ன்னு தோணிச்சு. அங்கே நின்னுக்கிட்டிருந்த ஆட்டோக்காரர் கிட்ட, வாடகையை விசாரிச்சப்ப முப்பது ரூபாய் ஆகும்ன்னார். ஷாக்காயிட்டேன்..  "இங்கே, பக்கத்துல இருக்கிற இடத்துக்கு முப்பது ரூபாயா??.. அதுவுமில்லாம, வரும்போது இருபது ரூபாய்தானே கொடுத்தேன்"ன்னு கேட்டப்ப,

அமைதியா சொன்னாரு..."கூடை வெச்சிருக்கவங்களுக்கெல்லாம் முப்பது ரூபாய்தாங்க"

"என்னாது!!"

"நெசமாத்தாங்க.. பாக்கெட்டுகளை இங்கியே விட்டுட்டு வர்றதாயிருந்தா இருபது ரூபாய்க்கே சவாரி வரும்"

(அப்ப, லக்கேஜு கிட்ட அட்ரஸை சொல்லிட்டா, தானாவே வீட்டுக்கு நடந்து வந்துடுமா......... டவுட்ட்ட்ட்ட்டு) , -- எனக்குத்தான்.

போய்ய்ய்ய்யான்னுட்டு அடுத்தாப்ல நின்னுட்டிருந்த ஆட்டோவுல இருபது ரூபாய் கொடுத்து வீடு வந்து சேர்ந்தோம். ஆட்டோவுல வரும்போது நினைச்சு நினைச்சு ஒரே சிரி....  நாங்க பேசிக்கிட்டதை, மொழிபுரியாததால மௌனமா கேட்டுக்கிட்டிருந்த அம்மாகிட்ட வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொன்னேன். பசங்களும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னோட இருபத்தோரு வருஷ மும்பை வாழ்க்கையில், இதுவரை லக்கேஜுக்கு பணம்கேட்ட ஆட்டோ ட்ரைவரை பார்த்ததேயில்லை. குறையை தீர்த்துவெச்ச இறைவனுக்கு நன்றி :-)LinkWithin

Related Posts with Thumbnails